Sunday 19 July 2020

ஸோமவார பிரதக்ஷிண அமாவாசை 20.7.2020

20. 7.2020 திங்கட்கிழமை அமாவாசை. இதை ஸோமவார அமாவாசை என்றும் பிரதக்ஷிண அமாவாசை என்றும் கூறுவர். திங்கட்கிழமை அமாவாசை வருவது சிவனுக்கு உகந்த விசேஷமான நாளாகும். அனேகமாக வருடத்திற்கு இருமுறை மட்டுமே திங்கட்கிழமை அன்று அமாவாசை வரும்.இச்சமயம் கோயில், குளங்களில், நதிதீரங்களில் முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்யவேண்டும்., பொதுவாக , அனைத்து ஆலயங்களிலும் அரசமரமும் வேப்பமரமும் பின்னிப் பிணைந்தவாறு இருக்கும்.அதனைச் சுற்றி வினாயகர், அம்மன், முக்கியமாக நாகதேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். மரங்களின் அரசன் ஆனதால் இதை "அரச மரம் " என்றே கொண்டாடுகிறோம். இந்த ஸோமவார அமாவசையன்று அதிகாலை தலைமுழுகி, பயபக்தியுடன் அரசமரத்தை பால், சந்தணம், தேன், மஞ்சள் இன்னபிற மங்கல திரவியங்களைக் கொண்டு பூஜித்தும் வெற்றிலை பாக்கு பழங்கள் வைத்து நிவேதனம் செய்து, பின் 108 முறை வலம் வருவதால் பூர்வ ஜன்ம வினைகள் தீரும் வம்ச விருத்தி அத்துடன் நாகதோஷம் நிவர்த்தியாகும். இதைத் தவிர இதில் மருத்துவ குணமும் அடங்கியிருக்கிறது. குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கு இந்த அரச மரத்தை வலம் வருதல் ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். எப்படி எனில், அரசமரம் பகல் நேரங்களில் அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளிவிடும். வேப்பமரம் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை சுத்தப்படுத்தித் தரும்.இதன் காரணமாகவே வலம் வருவதால் சுத்தமான காற்று நம் உள் இழுக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் பெறும். அதிலும் பெண்களின் கர்ப்பப்பை விரிவடைந்து, அதில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு கர்ப்பப்பையும் பலம் பெறும். விரைவில் அவர்கள் தாய்மை அடையும் பாக்கியமும் அடைவர்.