Friday 23 September 2022

கஜச்சாயை 23.9.2022.

                                                                     கஜச்சாயை


மஹாளய பக்ஷம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் 

இன்றைய தினம் 23 ஆம் தேதி வெள்ளி அன்று "கஜச்சாயை". அதாவது இந்த திரயோதசி திதியில் புண்ணிய தலங்களான "கயா, காசி மற்றும் இராமேஸ்வரத்திற்கு"ச் சென்று அனைத்து பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் ஆகும். 

     இந்த கயா க்ஷேத்ரம் புண்ணிய ஸ்தலமாக விளங்கியதன் பின்னணி கதையை அறிவோம்!.

ஒருமுறை கயாசுரன் எனும் அசுரன், மஹாவிஷ்ணுவைக்   குறித்து கடுந்தவம் மேற்கொண்டு, தவத்தின் பயனாய், விசித்திரமான வரத்தினை வேண்டினான்.

அதாவது, தன் உடல் புண்ணிய நதிகள், தேவர்கள், முனிவர், மனிதர்கள் என அனைவரைக் காட்டிலும் புனிதமானதாக விளங்கவேண்டும். அத்துடன், என் உடலைத் தொடுபவர்களும் புனிதம் அடையவேண்டும்  என்ற அரிய வரத்தைப் பெற்றான்.

அவனது இவ்வரத்தினால், மக்கள் அனைவரும் அவனது உடலைத் தொட்டு புனிதம் அடையவும், எமதர்ம ராஜனின் பணிக்கு வேலை இல்லாமல் போயிற்று. இதனால் பூமி பாரம் அதிகரித்தது. இதனால் செய்வதறியாது திகைத்த எமதர்மன் மற்றும் பிரம்மாவும், விஷ்ணுவிடமே இதற்கான தீர்வைக் கேட்க, அவரும், பிரம்மனிடம், யாகம் செய்வதற்கு, புனிதம் நிறைந்த உன் உடல் தேவை என, கயாசுரனிடம் கேட்கும்படி கூறினார்.

  ஒரு நல்ல காரியத்திற்கு தனது உடல் பயன்படுவதை அறிந்து மகிழ்வோடு இசைந்தான் கயாசுரன். உடன் பிரம்மதேவரும், வடக்கு, தெற்காக படுத்திருந்த கயாசுரனின் உடலில் வேள்வியைத் துவக்கினார். வேள்வியின் உச்ச நிலையில் நெருப்பின் தகிப்பை தாங்க இயலாமல், தலையை அசைத்து நெளிந்தான். 

அவன் தலை அசையாமல் இருக்க, அவன் தலையில் கல்லை வைக்கும்படி எமராஜனிடம் உத்தரவிட்டார். ஆயினும், அதையும் மீறி தலையை அசைத்தான். இதனால், பிரம்மா விஷ்ணுவின் உதவியை நாட, மஹாவிஷ்ணுவும் உலக நன்மை கருதி, அவன் மார்பில் தன் கதாயுதத்தை வைத்து அழுத்தியபடி, அவன் தலையில் தன் காலினை வைத்து அவனை அசையாமல் இருக்கச் செய்ததோடு, அவன் வேண்டும் வரம் யாது? எனக் கேட்டார்.


உண்மை நிலை புரிந்தவனாய், கயாசுரனும், இத்தலம் எனது பெயரால் விளங்கவேண்டும். அதோடு இங்கு வந்து பிண்டம் போட்டு, தன் முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்கள், திதி பெற்றவர்கள் என அனைவரது பாவங்களும் விலகி 'முக்தி' பெறவேண்டும் என கேட்டுக் கொண்டான். அவ்வண்ணமே வரம் அளித்த, விஷ்ணுவும், கயாசுரனை, பாதாள உலகிற்கு அனுப்பிவைத்தார்.  

அது முதல் இத்தலத்தில் பிண்டம் வைத்து, முன்னோர் வழிபாடு செய்வது புனிதம் தரும் செயலாகத் தொடரலாயிற்று

Friday 9 September 2022

நடராஜர் அபிஷேகம் (திருமஞ்சனம்). 9.9. 2022

    


  நடராஜர் அபிஷேகம்.

இன்றைய தினம் ஆவணி மாத சதுர்த்தசி திதி. 


அனைத்து சிவாலயங்களிலும் லிங்கத்திற்க்கே அபிஷேகம் ஆராதனை நடைபெறும். ஆனால் சிதம்பரம் தலத்தில் மட்டும் நடராஜரின் சிலைக்கு அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  நடராஜரின் நக்ஷத்திரம் அதிக உஷ்ணத்தை தரவல்ல  'திருவாதிரை' ஆகும். அத்துடன் அவர் தன் ஒரு   கரத்தினில் அக்னியைத் தாங்கியுள்ளார். உடல் முழுவதும் திரு நீறு வேறு தரித்திருப்பார். இதனால் சிவ்பிரான்   எப்பொழுதும் வெப்பம் சூழ விளங்குகின்ற காரணத்தால், நடராஜ மூர்த்திக்கு வருடத்திற்கு ஆறு முறை சித்திரை,ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி மற்றும் மாசி என இந்த ஆறு மாதங்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

   இதில் சித்திரையில் திருவோணம், ஆனியில் உத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை என நக்ஷத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அத் தினத்திலும்  மற்ற ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி என இந்த மூன்று மாதங்களில் மட்டும் வளர்பிறை சதுர்த்தசி திதியிலும்  திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. .   
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் தில்லையம்பலம் என போற்றப்படும் சிதம்பரம் நடராஜருக்கு அர்த்த ஜாமத்தில் அபிஷேகம் நடைபெறும். 


வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு மற்றும் அர்த்தஜாமம் என ஒரு நாளில் ஆறு பொழுதுகள் உள்ளன. பூவுலகின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுது.அந்த வகையில் தேவர்களின் வைகறைப் பொழுது மார்கழி மாதமாகும். அவர்களது அர்த்த ஜாமம் பொழுது புரட்டாசி மாதம் ஆகும்.  

நடராஜமூர்த்திக்கு ஐந்து நடன சபைகள் உள்ளன. சிவபெருமான் நடனம் ஆடும் கோலத்தில் எழுந்தருளியுள்ள தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்கள் சிதம்பரம், மதுரை,திருவாலங்காடு,திருநெல்வேலி மற்றும் திருக்குற்றாலம். தமிழில் சபையினை அம்பலம் எனக் கூறுவர். ஐந்து சபைகளிலும் ஐந்துவித நடனசபை மற்றும் தாண்டவம் [கூத்து] சிறப்பித்துக் கூறப்படுகிறது. 




சிதம்பரம் : பொன் சபை.அதாவது பொன்னம்பலம். பஞ்சபூத தலங்களுள் ஆகாயத் தலம். அகில உலகையும் அண்ட பேரண்டங்கள் என பிரபஞ்சத்தை  உருவாக்கிய எம்பெருமான் ஈசன், தான் ஆடும்   ஆனந்தத்  தாண்டவம் மூலம் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்குக் காரணமாயிருக்கிறார்.  பிரபஞ்சத்தின் மூலஸ்தானமாக இருக்கக் கூடிய தில்லை வனத்தில் (சிதம்பரம்) லிங்க வடிவு தாங்கி 'திருமூலட்டான நாதராய்" அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். 
    முதலில் திருமூலட்டான நாதரை தரிசித்த பின்னரே, நடராஜ மூர்த்தியை தரிசிக்கவேண்டும் என்பது நியதி. பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் முனிவர்களுக்காக அவர்  இங்கு ஆடிய திருநடனம் : ஆனந்த தாண்டவம். 

திருஆலவாய் எனப்படும் மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளியம்பலம், மதுரையை ஆண்ட இராஜசேகர மன்னன் பரதக் கலையை கற்றறிந்தவர். அதனால் நடனக் கலையில் உள்ள சிரமங்களை அறிந்தவர். பொதுவாக, நடராஜர் சிலை இடது காலைத் தூக்கியபடி இருக்கும். எம்பிரானுக்கு கால் வலிக்குமே என மனம் வருந்திய மன்னன், கால் மாறி ஆடும்படி வேண்டினார். தன் பக்தனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த நடராஜரும் இத்திருக்கோயிலில் வலது காலைத் தூக்கியபடி காட்சி தருகிறார். திரு நடனம் : சந்தியா தாண்டவம்,

திருநெல்வேலியில் தாமிர சபை. சந்தன சபாபதியாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் நடராஜ மூர்த்தியை தாமிர அம்பலத்தின் வழியாகக் காண கண் கோடி வேண்டும் அவ்வளவு அற்புத அழகோடு காட்சி தருவார். திரு நடனம் : முனி தாண்டவம்.

குற்றாலத்தில் சித்திர சபை. இங்கு நூற்றுக் கணக்கான கண்கவர் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டு அழகிய 'சித்திரக்கூடமாக' விளங்குகிறது. திருவிழா நாட்களில் நடராஜர் சிலை இங்கு எழுந்தருளப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். 'இக்கோயிலின் தல விருட்சம் 'குறும் பலா' . அதனால் இத்தல இறைவன் 'குறும்பாலீஸ்வரர்' எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் சங்கு வடிவில் அமைந்துள்ளதால் 'சங்குக் கோயில்' எனவும் அழைக்கப்படுகிறது. திரு நடனம் : திரிபுர தாண்டவம்.

திருவாலங்காட்டில் இரத்தின சபை. இத்தலத்தில் நடராஜருக்கும் காளிக்கும் இடையே நடனப் போட்டி நடைபெற்றது. வெற்றி தோல்வியை கணிக்க முடியாதபடி இருவரும் சமமான திறமையுடன் ஆடினர். அச்சமயம் நடராஜரது காதணி கழன்று கீழே விழவும், நடராஜர் நடனம் தடைபடாவண்ணம், தன் காலால் காதணியை எடுத்து, காலை உயரத்தூக்கி, காதில் அணிந்து கொண்டார். அவ்வாறு காலைத் தூக்கி ஆடத் தயங்கி, காளியும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். இங்கு ஆடக் கூடிய திரு நடனம் : ஊர்த்துவத் தாண்டவம்.