Friday 23 September 2022

கஜச்சாயை 23.9.2022.

                                                                     கஜச்சாயை


மஹாளய பக்ஷம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் 

இன்றைய தினம் 23 ஆம் தேதி வெள்ளி அன்று "கஜச்சாயை". அதாவது இந்த திரயோதசி திதியில் புண்ணிய தலங்களான "கயா, காசி மற்றும் இராமேஸ்வரத்திற்கு"ச் சென்று அனைத்து பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் ஆகும். 

     இந்த கயா க்ஷேத்ரம் புண்ணிய ஸ்தலமாக விளங்கியதன் பின்னணி கதையை அறிவோம்!.

ஒருமுறை கயாசுரன் எனும் அசுரன், மஹாவிஷ்ணுவைக்   குறித்து கடுந்தவம் மேற்கொண்டு, தவத்தின் பயனாய், விசித்திரமான வரத்தினை வேண்டினான்.

அதாவது, தன் உடல் புண்ணிய நதிகள், தேவர்கள், முனிவர், மனிதர்கள் என அனைவரைக் காட்டிலும் புனிதமானதாக விளங்கவேண்டும். அத்துடன், என் உடலைத் தொடுபவர்களும் புனிதம் அடையவேண்டும்  என்ற அரிய வரத்தைப் பெற்றான்.

அவனது இவ்வரத்தினால், மக்கள் அனைவரும் அவனது உடலைத் தொட்டு புனிதம் அடையவும், எமதர்ம ராஜனின் பணிக்கு வேலை இல்லாமல் போயிற்று. இதனால் பூமி பாரம் அதிகரித்தது. இதனால் செய்வதறியாது திகைத்த எமதர்மன் மற்றும் பிரம்மாவும், விஷ்ணுவிடமே இதற்கான தீர்வைக் கேட்க, அவரும், பிரம்மனிடம், யாகம் செய்வதற்கு, புனிதம் நிறைந்த உன் உடல் தேவை என, கயாசுரனிடம் கேட்கும்படி கூறினார்.

  ஒரு நல்ல காரியத்திற்கு தனது உடல் பயன்படுவதை அறிந்து மகிழ்வோடு இசைந்தான் கயாசுரன். உடன் பிரம்மதேவரும், வடக்கு, தெற்காக படுத்திருந்த கயாசுரனின் உடலில் வேள்வியைத் துவக்கினார். வேள்வியின் உச்ச நிலையில் நெருப்பின் தகிப்பை தாங்க இயலாமல், தலையை அசைத்து நெளிந்தான். 

அவன் தலை அசையாமல் இருக்க, அவன் தலையில் கல்லை வைக்கும்படி எமராஜனிடம் உத்தரவிட்டார். ஆயினும், அதையும் மீறி தலையை அசைத்தான். இதனால், பிரம்மா விஷ்ணுவின் உதவியை நாட, மஹாவிஷ்ணுவும் உலக நன்மை கருதி, அவன் மார்பில் தன் கதாயுதத்தை வைத்து அழுத்தியபடி, அவன் தலையில் தன் காலினை வைத்து அவனை அசையாமல் இருக்கச் செய்ததோடு, அவன் வேண்டும் வரம் யாது? எனக் கேட்டார்.


உண்மை நிலை புரிந்தவனாய், கயாசுரனும், இத்தலம் எனது பெயரால் விளங்கவேண்டும். அதோடு இங்கு வந்து பிண்டம் போட்டு, தன் முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்கள், திதி பெற்றவர்கள் என அனைவரது பாவங்களும் விலகி 'முக்தி' பெறவேண்டும் என கேட்டுக் கொண்டான். அவ்வண்ணமே வரம் அளித்த, விஷ்ணுவும், கயாசுரனை, பாதாள உலகிற்கு அனுப்பிவைத்தார்.  

அது முதல் இத்தலத்தில் பிண்டம் வைத்து, முன்னோர் வழிபாடு செய்வது புனிதம் தரும் செயலாகத் தொடரலாயிற்று

2 comments:

  1. கயா பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றிகள் பலப் பல !

    ஒவ்வொரு விஷயத்திற்கும் முன்னோர்கள் உதாரணம் புருஷர்களாக

    ReplyDelete