Friday 17 February 2023

12 . ஜோதிர்லிங்கங்கள் . மஹாசிவராத்திரி 18.2.2023 சனிக்கிழமை.

                     ஜோதிர் லிங்கங்கள்



18.2.2023 சனிக்கிழமையன்று மஹாசிவராத்திரி. மஹாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவிற்கும் ஜோதிஸ்வரூபமாய் காட்சியளித்தார் சிவபெருமான். சிவபெருமானுக்கு உகந்த இந்த விசேஷ தினத்தில், 12 ஜோதிர்லிங்கங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். ஜோதிர்லிங்கம் என்றால், பிரகாசமான ஒளிபொருந்திய லிங்கம் எனப்படும்.


1. காசி விஸ்வநாதர் :




விஸ்வம் என்றால் உலகம். அகில உலகையும் ஆள்பவர் என்ற பொருளில் "விஸ்வநாதர்" என அழைக்கப்படுகிறார். இந்த நகரம் சிவபெருமானால் உருவாக்கப்பட்டது. வாரணா மற்றும் ஹசி என்ற இரண்டு நதிகளுக்கிடையே இவ்வூர் அமைந்திருப்பதால், 'வாரணாசி' என்ற பெயரும் இத்ற்கு உண்டு. இங்கு சிவகதி அடையும் ஜீவனுக்கு சிவனே காதில் 'ராம நாமம்' ஓதுவதாக நம்பப்படுவதால் இது முக்தி ஸ்தலமாக திகழ்கிறது.


2. கேதார்நாத் : 






நர, நாரயணர்கள் சிவபெருமானை குறித்து தவம் செய்தனர். அவர்களுக்கு காட்சியளித்த சிவனிடம், தாங்கள் உலக நன்மைக்காக இவ்விடத்திலேயே தங்கிவிடவேண்டிக் கொண்டனர். அத்துடன் மகாபாரதப் போருக்குப் பின், தங்கள் உறவினர்களையே கொன்ற பாவத்தை போக்கிக் கொள்ள, பாண்டவர்கள் சிவபிரானை வழிபட கைலாயம் சென்றனர். அவர்களை சோதிக்க எண்ணிய ஈசன், காட்டெருமை உருவத்தோடு சண்டையிட்டார். அப்பொழுது பீமன் தன் கதாயுதத்தால், எருமையின் முகத்தில்  தாக்கி அதன் வாலைபிடித்து இழுத்தார். அந்த எருமையின் உடல் இருந்த இடத்தில் ஜோதிர்லிங்கம் உண்டாயிற்று. பின் சிவபிரான் அவர்களுக்கு காட்சி  கொடுத்து  பாவத்தை போக்கினார். 

3. ராமேஸ்வரம் :







 ராவணனைக் கொன்ற பாவம் தீரவும், எடுத்த காரியம் வெற்றியடைந்ததற்கு நன்றி கூறும் வகையிலும் சீதையுடன் 'சேது' கடற்கரையோர மணலில், சிவலிங்கம் அமைத்து பூஜித்தார் ராமபிரான். அதனால் இத்தலம் ராமர் + ஈஸ்வரன்  "ராமேஸ்வரம்" என்றும்  'ராமநாத சுவாமி' என இந்த ஜோதிர்லிங்கத்திற்கு பெயர் காரணமாகியது. 

4. மல்லிகார்ஜுனர் : 






சிவன் பார்வதி ஐக்கியமாகி லிங்க வடிவில் இருப்பதாக ஐதீகம். மல்லிகா என்பது அம்பிகையையும், அர்ஜுனா என்பது சிவனையும் குறிக்கும். இங்கு தான் நந்திகேஸ்வரர் தவம் இருந்து, சிவபிரானை சுமக்கும் ஆற்றல் பெற்றார்.         

5.நாகேஸ்வரர் :




பாம்புகளின் நகரமான இதன் அரசனாக 'தாருகா' இருந்தான். சிவபக்தர்களை சிறையில் அடைத்து துன்புறுத்தி வந்த நிலையில் , தன் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிவபிரானே அவனை அழித்து, பக்தர்களை விடுவித்தார். தாருகாவின் விருப்பப்படி அவ்விடம் தாருகாவனம் எனவும், சிவபிரான் 'நாக நாதர்' என திரு நாமம் தாங்கியும் விளங்குகிறார். 

6. த்ரியம்பகேஸ்வரர் : 






பிரம்மா விஷ்ணு சிவன் என மூவரையும் குறிக்கும் விதமாக முன்று லிங்க வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மனும், விஷ்ணுவும் ஈசனின் அடிமுடி காணும் கதையை நினைவு கூறும் வகையில், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று கடவுளர்களின் முகங்களையும் அமைந்திருப்பது முக்கியமாக குறிப்பிடவேண்டிய அம்சமாகும்.  


7.பீமசங்கரர் : 




கும்பகருணனின் மகன் பீமன் எனும் அரக்கன், இங்கு மக்களை துன்புறுத்தி வந்ததால், பிரிய தருமன் எனும் அரசன் சிவபிரானை வேண்டவும், சிவன் அவனை தன் சூலத்தால் அழித்து இங்கேயே கோயில் கொண்டார்.

8. க்ரிஷ்னேஸ்வரர் :




எல்லோரா குகையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகிய கட்டக்கலையும் சிற்ப செதுக்கல்களும் கொண்டது க்ருஷ்னேஸ்வர் கோயில். க்ருஷ்னேஸ்வர் என்றால் கருணையே வடிவானவர் எனப் பொருள்.

9.சோம்நாதர் : 





அழகினால் கர்வம் கொண்டு தேயும் படி சாபம் பெற்ற சந்திரன், சுயம்புவாக தோன்றிய இந்த ஈசனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்ற தலம் ஆனதால், {சோமன் என்றால் சந்திரன்}  'சோம நாதர்' என திரு நாமத்துடன் இறைவன் காட்சியளிக்கிறார்.


10.ஓம்காரேஸ்வரர் : 




முன் காலத்தில் விந்திய மலைஅரசன், ஓம்கார வடிவில் யந்திரம் செய்து அதைக்கொண்டு மண்ணெடுத்து லிங்கம் அமைத்து பூஜிக்க, மனம் மகிழ்ந்த ஈசனும் ஓம்காரேஸ்வர் மற்றும் அமரேஸ்வரர் வடிவில் காட்சி கொடுத்து அருளினார்.




11.மஹாகாலேஸ்வரர் : 

தூசனன் என்பவன் சாபத்தால் 'வேதாளமாக' மாறி, அனைவரையும் துன்புறுத்த, துறவிகளையும் எளிய மக்களையும் காக்கும் பொருட்டு, லிங்கத்தை பிளந்து கொண்டு ஆவேசமாக அந்த வேதாளத்தை அழித்தார். பக்தர்கள் ஒன்றுகூடி அவரை துதிக்கவும் சினம் தணிந்தவராய், பிளந்த சிவலிங்கம் ஒன்று சேர்ந்து, அங்கேயே  ஜோதிர்லிங்கமாக அருள் பாலிக்கிறார்.




12. வைத்திய நாத் : ராவணன் சிறந்த சிவபக்தன். ஒருமுறை, கடுந்தவம் மேற்கொண்டு சிவ தரிசனம் வேண்டி, தன் பத்து தலைகளையும் ஒவ்வொன்றாகக் கொய்து, காணிக்கையாக்க முனைந்தான். பத்தாவது தலையை கொய்ய முற்படும் போது ஈசன் தோன்றி வரமருளி அவன் மற்ற தலைகளையும் ஒட்டி வைத்தியம் செய்தார். இவரை வணங்கி வழிபட எப்பேர்ப்பட்டொ  கொடிய நோயும் தீரும் என்பது நம்பிக்கை. 

                   திருச்சிற்றம்பலம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻






Saturday 4 February 2023

தைப் பூசம். அனுமனுக்கு அருளிய முருகப்பெருமான்.

 




5.2.2023 ஞாயிற்றுக்கிழமை, தைப்பூசத் திரு நாள்.

மகர மாதம் எனப்படும் தை மாதத்தில், பௌர்ணமியும் பூச நக்ஷத்திரமும் கூடும் தினம் முருகனுக்கு உகந்த "தைப்பூச"த்  திரு நாளாகும்.
ஞானிகள், முனிவர்கள், தேவர்கள் தவிர அனைத்துக் கடவுளர்களும் கொண்டாடக்கூடிய ஒரு தெய்வம் யாரெனில், அது , 'குமரக்கடவுள்" தான்.
ஆம்! தமிழில் 
  "சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை,
  சுப்ரமணிய ஸ்வாமிக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை".
              என்று ஒரு பழமொழியே உண்டு. 
நம் தலைவிதியை எழுதும் பிரம்மனுக்கே பாடம் புகட்டியவன், தன் தந்தை ஈசனுக்கே 'ஞானோபதேசம்" செய்தவன், தாய்மாமன் ஆனதால் திருமாலின் மருமான் மட்டுமின்றி, வள்ளி, தெய்வானையை    மணந்ததால், திருமாலின் 'மருமகனாகவும் விளங்குபவன்.
ஆம்! அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரு பெண்கள் திருமாலின் ஆனந்தக் கண்ணீரிலிருந்து உதித்தவர்கள். அவர்களுக்கு தகுந்த மணாளன் முருகனே, என்றும், அதனால் அவர்கள் முருகனை மணமுடிக்கும் நோக்கத்தில் தவமிருந்தனர்.  
     தெய்வானை நியம நிஷ்டையுடன், தவமிருந்ததால், தேவேந்திரனின் மகளாக அடுத்தப் பிறவியில் பிறந்து, முருகப்பெருமானை கரம் பற்றினாள். ஆனால், வள்ளியோ, சிறிது விளையாட்டுத்தனத்துடன், நியம நிஷ்டைகளை  கடைபிடித்ததால், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக அவதரித்து, பின் முருகப்பெருமானை கரம் பற்றினாள்.
       அதுமட்டுமின்றி, ராமாயணத்தில், ராமரையும் இலக்ஷ்மணனையும், தன் வேள்வியைக் காக்கும் பொருட்டு அழைத்துச் சென்ற விஸ்வாமித்திர மகரிஷி, தாடகை முதலான அசுரர்களின் வதத்திற்குப் பின்,  சீதை சுயம்வரத்தில் பங்கு கொள்ள அயோத்தி இளவரசர்களான ராமன் மற்றும் இளவலுடன் செல்லும் வழியில், அவர்களுக்கு பயணக் களைப்பு தெரியாமல் இருக்க, பல வம்சாவளிக்    கதைகளை  கூறியவாறே செல்கிறார். 
அப்படி கூறிய கதைகளில் குறிப்பிடத்தக்கது, திருமுருகனின் அவதாரக் கதையாகும்.  "குமாரோத்பத்தி :"  என்ற தலைப்பில், திருமுருகனின் கதையை, அயோத்தி இளவரசர்கள் இருவரும், விஸ்வாமித்திரர் கூற, மிகுந்த ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்ததாக, வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 37 ஆவது ஸர்க்கமாக இடம் பெற்றுள்ளது.
   அதைவிடவும், கோசலை, ராமனிடம் ஆபத்துக் காலத்தில், சுப்ரமணிய ஸ்வாமியை வேண்டிக் கொள்ள எந்தவொரு தீங்கும் உனை நெருங்காது என அறிவுறுத்துகிறாள்.  
போரில் ராமன் எய்த அம்பு, முருகப்பெருமானின், 'வேல்" போல பிரகாசித்ததாக வால்மீகி இரு இடங்களில் உவமைப்படுத்துகிறார்.
கீதையில் பகவான் கிருஷ்ணன், சேனைத் தலைவர்களில், தான் 'ஸ்கந்தன்' என்றே கூறுகிறார்.
  இப்படிப்பட்ட இந்த கந்தபெருமான் அனுமனுக்கும் அருள் புரிந்தார் என்றால் அது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?!! அப்படி அருள் புரிந்த தலம், நம் தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற, கோவை மாநகரம் என்றால், வியப்பின் உச்சிக்கே சென்று விடுவீர்கள் தானே!!. ஆம்! அது உண்மையே. 
    இலக்குவன் பொருட்டு, அனுமன், சஞ்சீவி மலையை தூக்கி வந்தார் அல்லவா? அது சமயம் வரும் வழியில், அவருக்கு தொண்டை வறண்டு தாகம் மேலிடுகிறது. உடன் கீழே ஒரு சிறு குன்றில் இறங்கி, நீர்ச்சுனை எதுவும் கண்களுக்குப் புலப்படாததால்,
'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்பதுணர்ந்து, முருகப்பெருமானை மனமுருக வேண்டுகிறார். திருமுருகனும், அவர்பால் அன்பு கொண்டு மனமிரங்கி, தன் வேலால் ஓரிடத்தில் குத்தவும், நீர் பீறிட்டுப் பாய்ந்தது. தாகம் தணிந்தவராய், மீண்டும் முருகனுக்கு  நன்றி கூறி வணங்கி விடைபெற்றதாக தல வரலாறு கூறுகிறது. 



வாவி என்றால் ஊற்று. நீர்ச்சுனை என்று பொருள். ஹனுமனுக்காக தோற்றுவிக்கப்பட்ட ஊற்று என்பதனால், அவ்விடம் "ஹனுவாவி" என்று அழைக்கப்பட்டது காலப்போக்கில் மருவி 'அனுவாவி' என்றாயிற்று. அனுமக்குமரன் மலை என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
500 படிக்கட்டுகள் கொண்ட இந்த மலைக் கோயிலின்  முன்பாக 'இடும்பன் சன்னதி' உள்ளது. 


வினாயகர், முருகனின் படைத் தளபதியான வீரபாகுவும் இக்கோயிலில் வீற்றிருக்க, அனுமன் வடக்கு நோக்கி அருள் பாலித்த வண்ணம் விளங்குகிறார்.



திருமுருகனால் உருவான இந்த ஊற்று நீரையே அங்கு வாழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த ஊற்றின் ஆரம்பம் எங்குள்ளது என்பது இன்று வரை  அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட  இயலவில்லை. தித்திப்பாக, குளிர்ந்து இருக்கும் அந்த தண்ணீர், முருகனின் அருள் போல் இன்றளவும் வற்றாமல் இருக்கிறது என்று வியந்து பெருமிதத்துடனும் கூறுகின்றனர் அப்பகுதி வாழ் மக்கள்.
அந்த மலையின், தென் பகுதி வழியாக ஏறி இறங்கினால் மருதமலையை அடைந்து விடலாமாம்!