Saturday 12 March 2022

காரடையான் நோன்பு. 14 . 3. 2022 திங்கட்கிழமை.

  



 பதிவிரதா தர்மம். - இது மேன்மையும் சிறப்பும் வாய்ந்தது. பதிவிரதா தர்மம் என்பது தன் கணவனின் மேல் இறுதி வரை மாறாத அன்பு கொள்வது. தன் கணவனுக்காக எதையும் செய்யத் துணிந்து கடும்  சோதனைகளையும்  முறியடிக்கும் வல்லமை கொண்ட பெண்கள் இன்றளவிலும் நம் பாரத மண்ணில் மங்காப் புகழோடு, போற்றப்படுகிறார்கள். 

அந்த வகையில், "சத்தியவான் சாவித்திரி" எனும் ஆத்மார்த்த தம்பதி பற்றிய கதை சிவபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கதையின் நாயகியான சாவித்ரியின் பதிவிரதா தர்மத்தை மஹாபாரதத்தில், "மார்கண்டேய மகரிஷி" பாண்டவர்களின் வனவாச சமயத்தில், திரௌபதிக்கு எடுத்துரைக்கிறார்.



 மத்திர தேசத்தை ஆண்ட 'அசுவபதி' மன்னனுக்கு திருமணம் ஆகியும் பல ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லாமல் மனம் வாடினார். நாரதரின் வழிகாட்டுதல் படி, சூரிய தேவனை நோக்கி கடும் விரதம் இருந்து, அழகிய பெண்குழந்தையைப் பெற்றார். சூரியனின் அருளால் பிறந்ததால் 'சாவித்திரி' என பெயர் சூட்டினர்.

    இல்லை என்ற சொல்லே அறியாத வகையில் சாவித்திரி விரும்பியதை எல்லாம், நொடிப் பொழுதில் நிறைவேற்றி வைத்து மிகுந்த செல்லமாக வளர்த்தனர்

இந்த நிலையில் சாவித்ரி பருவ வயதை அடைந்ததும், தனக்கான மணாளனை தானே தேர்வு செய்வதாக தந்தையிடம் கூறி அவரது அனுமதியுடன், தகுந்த பாதுகாப்புடன், பல நாடுகளுக்கும் சென்றாள். யாரையும் அவள் மனது விரும்பவில்லை. கடைசியாக ஊர் திரும்பும் சமயம், காட்டு வழிப் பாதையில் வந்து கொண்டிருந்தனர்.
அங்கே ஒரு கட்டிளங்காளையான இளைஞன் ஒருவன் வயதான கண் பார்வையற்ற தன் தாய் தந்தைக்கு பணிவிடை செய்து கொண்டிருப்பதைக் கண்டாள். கண்டதும் காதல் என்பது போல், அவனைப் பார்த்ததும் அவளுக்கு அவன் மேல் காதல் உண்டாயிற்று. தானே நேரிடையாகச் சென்று அவர்களை யார்?என வினவி, அவர்கள் கதையைக் கேட்டறிந்தாள்.  
சிறிதும் தாமதிக்காமல், நாடு திரும்பி காட்டில் கண்ட இளைஞன் "சால்வ தேசத்து" இளவரசன். சத்தியவான் என்பது அவன் பெயர். சால்வ மன்னருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டதினால், எதிரிகளால் நாடு கைப்பற்றப்பட்டு, காட்டிற்கு விரட்டப்பட்டார் எனவும்,  அவர்களது மகனான சத்தியவானே தான் விரும்பும் மணாளன், அவனையே எனக்குத் திருமணம் செய்து தாருங்கள் என தன் தந்தையிடம் உறுதியாகக் கூறினாள்.
இச்சமயத்தில் நாரத மகரிஷி அங்கு வரவும், நடக்கும் சம்பாஷணையின் மூலம் விவரங்களை ஊகித்து அறிந்து, சத்தியவான் வெகு விரைவில் இறந்து விடுவான் மகளே! என எச்சரித்தார்.
   அதுவும் எனக்குத் தெரியும். அவரது தாயிடன் இருந்து அறிந்து  கொண்டேன்  .  என்னைக் கரம் பிடித்த வேளை, என் தாலி பாக்கியத்தால், அவரது ஆயுள் நீட்டிக்கப்படலாமல்லவா?  என பிடிவாதம் பிடித்தாள்.
நாரதரும் அவளுக்கு ஆசி கூறி, மன்னனிடம், அவள் விருப்பப்படியே திருமணத்தை முடித்து வையுங்கள் சாவித்ரியின் மேன்மை வெளிப்படும். சர்வ மங்கலம் உண்டாகும் என அருளினார்.
அவ்வண்ணமே மனம் இல்லாமல், தன் மகளுக்கு    சத்தியவானுடனேயே திருமணம் முடித்து வைத்தார்.  சாவித்திரயும், தன் கணவன் குடியிருக்கும் காட்டுப்  பகுதிக்கு  சென்று அவன் குடிசையில் மனமகிழ்வோடு, பார்வையற்ற தன் மாமனார் மாமியாருக்கும் தக்க பணிவிடைகளைச் செய்து வாழ்ந்து வந்தாள்.

இப்படியாக, மகிழ்வுடன் காலம் கடந்து,சத்தியவானின் இறுதிக் காலமும் நெருங்கியது. மூன்று நாட்கள் முன்பு, தன் கணவனுக்காக "கௌரி விரதம்" இருந்து நோன்பு நூற்று, பிரார்த்தனை செய்தாள். கடைசி நாளன்று சத்தியவான் காட்டிற்கு விறகு வெட்டுவதற்காகச்  செல்ல, தானும் பிடிவாதமாக உடன் சென்றாள்.




கணவன் சத்தியவானின் முடிவுற்ற ஆயுளை எடுப்பதற்காக், எமதூதர்கள், ஆங்கே வந்தனர். அருகே சாவித்திரி இருந்ததால்  அவளது பதிவிரதா சக்தி அவனருகில் எமதூதர்களை நெருங்க விடாமல் தடுத்தது. அவர்கள் இதுபற்றி எமராஜனிடம் கூற, தானே நேரில் வந்து, தன் பாசக் கயிற்றை, சத்தியவானின் மேல் வீசி, உயிரைப் பறிக்க முயன்றார். அச்சமயம் சாவித்திரி, தன் கணவனின் உயிரை திருப்பித் தர கேட்க, 



அவள் கண்களுக்கு தான் புலப்படுவதை உணர்ந்த எமராஜனும், மஹாபதிவிரதையாக விளங்கும் தேவியே, என் கடமையைச் செய்யவிடு!. தடுக்காதே என்று, தன் வழியே சென்றார்.
   ஆயினும் , அப்பெண் தன்னைப் பின் தொடர்வதை அறிந்து எமதர்மர், பெண்ணே! உன் பதிபக்தி என்னை நெகிழச் செய்து விட்டது. உன் கணவன் உயிரைத் தவிர, வேறு ஏதேனும் வரம் கேள் தருகிறேன்!! என்றார்.
சிறிது சிந்தித்த சாவித்ரியும், சால்வ மன்னனாகிய தனது மாமனார் திரும்ப கண்பார்வை பெற்று, தன் நாட்டையும்  ஆள்வதோடு, என் வயிற்றில் பிறக்கும் அவரது பேரக் குழந்தைகளும் நாட்டை ஆள்வதைக் காணும் பேற்றினை அவருக்கு அளிக்கவேண்டும் என எமராஜனின் பாதம் பணிந்து வேண்டினாள். 





அவளது புத்தி சாதுர்யமான இந்த வேண்டுதலைக் கேட்டு அதிசயித்து, பெண்ணே! இந்த வையகம் உள்ளளவும் உன் புகழ் ஓங்கி நிலைத்திருக்கும். நீ கடைபிடித்த இவ்விரதத்தை வருங்கால சந்ததியினரும் , நோன்பிருந்து பயன் பெறுவர் என வாழ்த்தி சத்தியவானுக்கு உயிர்ப் பிச்சை அளித்து ஆசி வழங்கினார்.
       இதையே பங்குனி மாதப் பிறப்பன்று "காரடையான் நோன்பு" என திருமணமான பெண்கள், ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாது இருக்கவேண்டும் எனவும், கன்னிப் பெண்கள்  சத்தியவானைப்   போல் நல்ல குணவான் தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்றும் மஞ்சள் சரடினை கட்டிக்  கொண்டு   நோன்பு இருப்பர். 




நாளைய தினம் திங்கட்கிழமை மார்ச் 
14 அன்று, இரவு 11.53 மணிக்கு 
நடுநிசியில், 
 பங்குனி  மாதம் பிறக்க 
இருப்பதால், 
இரவு 8 மணியளவில்,  
நோன்பு நூற்றல் நலம்.


காரடையான் நோன்பு15.3.2023

புதனன்று, மாசியும் பங்குனியும் கூடும் புண்ணிய தருணத்தில், "காரடையான் நோன்பு" கடைபிடிக்கப்படுகிறது. இதை "காமாட்சி விரதம்" எனவும் கூறுவர். 
குறுகிய வாழ்நாள் கொண்டவன் என அறிந்தும், தான் காதலித்த 'சத்தியவானையே" பிடிவாதமாக மணந்து கொண்டாள் சாவித்ரி. தன் மாங்கல்யம் நிலைக்கவேண்டும் என்று மிகுந்த நம்பிக்கையுடன், காமாட்சி தேவியை விரதமிருந்து பூஜித்து வந்தாள். அந்த பூஜையின் பலனும், கண் தெரியாத தன் வயதான மாமனார், மாமியாரை மிகுந்த அன்போடு கவனித்து பராமரித்ததாலும், அவள் தன் கற்பின் திறத்தாலும் எமனுடன் வாதிட்டு, தன் மணாளன் உயிரை மீட்டு வந்தாள் சாவித்ரி.
இதனை அடிப்படையாகக் கொண்டே, நாமும் தம்பதியின் ஒற்றுமை மேலோங்கவும், ஆயுள் பலம், மாங்கல்ய பலம் வேண்டியும், கன்னிப் பெண்கள், நல்லதொரு கணவனும் கிடைத்திட வேண்டியும் இந்த "காரடையான் நோன்பினை" நூற்பர். 

அன்றைய தினம் பூஜையின் முடிவில், கார் அரிசியில் செய்த வெல்லம் மற்றும் உப்பு அடைகளையும் உருகாத கெட்டியான வெண்ணெயையும் அம்மனுக்கு நிவேதனம் செய்து, பின், மஞ்சள் நோன்புக் கயிற்றில் புது மலரினைக் கட்டி 'உருகாத வெண்ணெய் போல் ஒருக்காலும் என் கணவர் எனைப் பிரியாது இருக்கவேண்டும் என வேண்டிக் கொண்டு, கழுத்தில் கட்டிக் கொள்வர். அத்துடன் புதிதாக மாங்கல்ய சரடும் மாற்றிக் கொள்வர். "மாசி சரடு பாசி படியும்" என்பது சொல்வழக்கு. அதாவது, சரடு அழுக்கேறி பாசி படர்ந்தது போல் ஆனாலும், அந்த சரடு சக்தி வாய்ந்ததாக போற்றப்படுகிறது.

இவ்வருடம் மார்ச் 15 ஆம் தேதி புதனன்று அதிகாலை 5 மணிக்கு மேல் பங்குனி மாதம் பிறப்பதால், 5 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக நோன்புச் சரடினை நூற்று கட்டிக் கொள்ளவேண்டும். குறைந்த பட்சம் காலை 6.30 மணிக்குள்ளாவது கட்டிக் கொள்வது நலம். 



2 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்

    சாவித்திரி சத்தியவான் சாவித்திரி கதையை படித்து அவர்கள் இருவரின் மேன்மையான குணத்தை அறிந்தோம்.

    தம்பதியருக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள்.

    - V. Sugavanam

    ReplyDelete