Sunday 6 March 2022

முதல் சிவன் கோயில்? & கடைசி அசுரன்?

 


ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமான் வேதங்களின் ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய "சிவஞான போதம் " எனும் நூலின் தத்துவ விளக்கத்தினை பார்வதிதேவிக்கு உபதேசிக்கலானார். ஒரு கட்டத்தில் பார்வதி தேவிக்கு மனம் லயிக்காமல் கவனம் சிதறியது. அதை கவனித்த சிவனார் கோபம் கொண்டு, கல்வியறிவில்லாத மீனவ குலத்தில் பிறப்பாய் என சாபமிட்டார். 



 அவ்வாறே, உமாதேவியும் பாண்டிய நாட்டில் புன்னை மர நிழலில் ஒரு பெண் குழந்தையாக கிடக்க, மீனவகுலத் தலைவனால்  கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள்.

   தன் தாய்க்கு நேர்ந்ததை சகியாத விநாயகரும், முருகனும் நந்திதேவரின் அனுமதியின்றி, அவர் தடுத்தும் கேளாமல் தந்தையிடம் நியாயம் கேட்டு வாதிட்டனர். 
இதற்கெல்லாம் காரணம் இந்த சிவஞானபோதமே என சுவடிகளை எடுத்து எறியவும், அவை கடலில் விழுந்து மூழ்கியது.  
சிவபிரான், குழந்தைகளின் இச்செயலை கண்டித்து, விநாயகரை விடுத்து முருகனிடம், பெரியோர்களை மதியாமல் எதிர்த்து பேசியதால், நீ பூவுலகில் "திருவாலவாய்" நகரில் ஒரு வணிகனின் மகனாக ஊமையாக பிறப்பாய் என சாபமிட்டார்.
 பின், நந்திதேவரிடம், என்னைக் காண வருபவர்கள் எத்தனை சக்தி படைத்தவராக இருந்தாலும், அவர்களை தடுத்து தக்க முறையில் கையாள வேண்டும்.  
 உன் பணியை திறம்படச் செய்ய தவறியதால், சிவஞானபோதம் கடலில் சென்று விழும்படி நேர்ந்தது. ஆகையால் நீ, கடலில் சுறாமீனாக மாறக்கடவாய்! என சபித்தார். 
விநாயகப்பெருமானை கடிந்து கொண்டதோடு விட்டுவிட்டு அவருக்கு சாபம் அளிக்காததன் காரணம்: 
விநாயகரை யாராலும் சபிக்க முடியாது. அவரை சபித்தவர் யாராக இருந்தாலும், அச்சாபம் சபித்தவரையே சென்றடையும் .

தன் கடமையை தவறியதை உணர்ந்து நந்திதேவரும் சுறாமீனாக மாறி வேதங்களைத் தேடி கடலில் சுற்றி அலைந்தார்.

  அவரது இத்தேடலுக்கு இடையூறாக, மீனவர்கள் வலைவீசி பிடிக்க முயன்றதால் எரிச்சல் அடைந்த நந்திதேவர், மீனவர்களின்  படகையும்  நாசம் செய்ததோடு, மீனவர்களையும் கடுமையாகத் தாக்கி விரட்டினார். 

இச்சமயத்தில் பார்வதிதேவியும், அழகிய பருவப் பெண்ணாக நன்கு வளர்ந்திருந்தாள். உடன், வளர்ப்புத் தந்தையான மீனவத் தலைவன், சுறாவின் கொட்டத்தை அடக்குபவர்க்கு, தனது மகளை திருமணம் செய்து தருவதாக அறிவித்தான். பல கட்டிளம் காளைகள் போட்டி போட்டு முயன்றும், பலன் இல்லை.!!

   அதுசமயம் பார்வதிதேவியும், தங்களின் குலதெய்வமான  சிவபிரானை துதித்து, தங்கள் குலத்தைக் காக்கவண்டும் என பிரார்த்திக்கவும், பார்வதி தேவியை ஆட்கொள்ள தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சிவபிரானும் மீனவனாக வந்து, மீனவத் தலைவனிடம் சபதம் செய்து, கடலில் சென்று வலைவீசி சுறாவாக அலைந்து கொண்டிருந்த நந்திதேவரை பிடித்து, தான் இட்ட சாபத்தை தானே விலக்கி சிவஞானபோதத்தோடு, நந்திதேவரையும் மீட்டெடுத்து, பார்வதி தேவியை கரம் பிடித்து, அனைவருக்கும் காட்சியளித்து அருளினார்.

இந்த நிகழ்வு நடந்த இடம் மதுரை - இராமநாதபுரம் வழித்தடத்தில் அமைந்துள்ள 'உத்திர கோச மங்கை' எனும் தலமாகும்



ருத்திரன் மங்கைக்கு உபதேசம் செய்த இடம் ஆனதால், இத்தலம் "உத்திர கோச மங்கை" என அழைக்கப்படுகிறது. 

இந்தத் திருக்கோயிலே உலகில் முதலில் தோன்றிய கோயிலாகக் கருதப்படுகிறது. அதற்கான பல சான்றுகளை வல்லுனர்கள் முன் வைக்கின்றனர்.
அவற்றில் சில,
1. நவகிரஹங்கள் பற்றி அறியப்படாத காலகட்டத்தில், சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் மட்டுமே இத்திருக்கோயிலில் இடம் பெற்றுள்ளனர்.


2.ஆதிகாலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக   உத்திரகோசமங்கையே இருந்ததாகவும், இந்த நிலத்தின் ஒரு பகுதி கடல் கொண்டதால், பின்னர் 'மதுரை' தலை நகரமாக மாற்றப்பட்டதாகவும் கல்வெட்டு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.


 3.அது தவிர, மண்டோதரி தலைசிறந்த சிவபக்தனையே தான் திருமணம் முடிக்க விரும்புவதாக காத்திருந்து, இத்தலத்து சிவனை வேண்டி, தலைசிறந்த சிவபக்தனான இராவணனை இத்தலத்திலேயே திருமணம் செய்ததாகவும் குறிப்புகள் உள்ளன. 




இராவணனே கடைசி அசுரனாக கருதப்படுகிறார். மஹாவிஷ்ணு இராவண வம்சத்துடனேயே அசுர குலத்தை முடித்து வைத்தார்.

அதற்கு அடுத்து வந்த யுகத்தில் இருந்து

   "குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்"

 என திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்றாற்போல், ஒவ்வொரு மனிதனுள்ளும், நற்குணம் அசுர குணம் இரண்டும் கலந்து விட்டது.  

"மிகை நாடி மிக்க கொளல்" 

என்பதில் எந்த குணம் அதிகளவில் தலைதூக்குகிறதோ, அதையே அவரது இயல்பாக கொள்கிறோம். 

4. மஹாவிஷ்ணுவும், பிரம்மனும்  அடிமுடி காண்பதற்கான நிகழ்விற்கு முன்பாகவே இது தோன்றியிருக்கலாம். ஏனெனில்,  தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால், சிவபூஜைக்கு பயன்படாமல் போகும் சாபம் பெற்றதல்லவா?

ஆனால் இத்திருக்கோயிலில் தாழம்பூ பூஜைக்கு சேர்க்கப்படுகிறது. அதனால், இது எந்த யுகத்தில் உண்டான கோயில் என்பது அறியப்படாததாக உள்ளது.

இச்சமயத்தில் யுகங்கள் பற்றிய தகவல்களையும் பதிலிட கடமைப்பட்டுள்ளேன். 

இந்த பூமியை ஆட்சி செய்பவர்கள் மன்வந்தரர்கள். 
மன்வந்தரரின் புத்திரர்கள் ஆனதால், நாம் மனிதன் என அழைக்கப்படுகிறோம். 14 மன்வந்தரர்களின் ஆட்சிக் காலம் பிரம்மனின் ஒரு நாளாக கருதப்படுகிறது. 

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என நான்கும் சேர்ந்து ஒரு சதுர் யுகம் எனப்படுகிறது.



இப்படியான 71 சதுர்யுகத்தை ஒரு மன்வந்தரர் ஆட்சி செய்கிறார். இதே கால அளவு தான் இந்திரன், தேவர்கள் ஆகியோருக்கும். 

இந்த அளவில் 14 மன்வந்தரர்களின் 71 சதுர் யுக மொத்த ஆட்சிக் காலம் பிரம்ம தேவனின் ஒரு நாளாக உள்ளது. பல கல்பங்களைக்  காணும் பிரம்மனின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.  அதன்பின் மகாப்ரளயம் ஏற்பட்டு, பிரம்மனும் இறைவனிடத்தில் ஒடுங்கி விடுவார். பின் அடுத்த உலக படைப்பில், வேறொருவர், தகுதியின் அடிப்படையில்  'பிரம்ம' பதவியை அடைவார்.  

    நாம் இப்பொழுது ஏழாவது மன்வந்தரரான "வைவஸ்வத மன்வந்தரரின், ஸ்வேத வராஹ கல்பத்தில், 28 ஆவது மஹாயுகத்தில்,  கலியுகத்தின் முதல் கால் பாகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

தற்பொழுது பிரம்மனின் வயது ஐம்பத்து ஒன்று. "த்விதீய பரார்த்தே" ஒரு ஐம்பது முடிந்து இரண்டாவது ஐம்பதின் தொடக்கம்" எனப் பொருள். இதைத் தான் நாம் விசேஷ காலங்களில்   சங்கல்பமாக கூறுகிறோம்.

   


    




அதுகாறும் மதுரை தமிழ்ச்சங்கத்தில் 48 புலவர்கள் இருந்தனர். அவர்கள் அகத்திய முனிவர் இயற்றிய "அகத்தியம் " எனும் இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டு பாடல்களைப் புனைந்திருந்தனர். 
அவர்களிடையே தங்களுடைய நூலே சிறந்தது என்று போட்டி ஏற்பட்டு, முடிவுக்கு வர இயலாமல் சண்டையாக வலுக்கும் நிலை ஏற்பட, ஐயம் கொண்ட அவர்கள், மதுரை "சொக்கநாத சுவாமியையே" தஞ்சமடைந்தனர்.
சொக்கநாதரும், திருவாலவாயில் வசிக்கும் வணிகன் தனபதியின் புதல்வன் ஊமையனான "ருத்ரசர்மன்" இதற்கு தீர்ப்பளிக்க உகந்தவன் என்று கூறியருளினார். அவ்வண்ணமே புலவர்களும், ருத்ரசர்மன் இல்லத்தை அடைந்து, அவன் தாயிடம் தாங்கள் அங்கு வந்த நோக்கத்தைக் கூறி, தங்கள் மகன் ருத்ரசர்மனை தங்களோடு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். 
வியப்பு மேலிட, வாய் பேச முடியாத என் மகனால் எப்படி தீர்ப்புக் கூறமுடியும் என வினவினாள் அவன் அன்னை. 
அதற்கு புலவர்களோ! அதை நாங்கள் அறிவோம்!! இது அந்த ஈசனான சொக்கேசனின் கட்டளை!!!.ஆகையால் தாங்கள் கருணைகொண்டு தங்கள் மகனை அனுப்பி வைக்கவேண்டும் என்றனர். 
இதைகேட்டு சொக்கநாதரின் கருணையை எண்ணி அகமகிழ்ந்து, தன் மகனை அனுப்பி வைத்தாள்.




 ருத்ரசர்மனும் அவர்களது பாடல்களை எல்லாம் தாளம் போட்டு ரசித்து கேட்டதோடு, 
"நக்கீரர், கபிலர் மற்றும் பாணர்" ஆகியோரது பாடல்களே சிறந்தவை என தீர்ப்பளித்தார். அத்துடன் நில்லாமல் மற்ற புலவர்களது பாடல்களில் உள்ள பிழைகளை திருத்தி அமைத்து கொடுத்து, அவர்களது பாடல்களை திரும்ப அரங்கேற்றினார். 
அதன்பின், சாபம் நீங்கப் பெற்றவராய் ருத்ரசர்மனாக பிறந்த முருகப்பெருமான் கைலாயம் ஏகினார். 




2 comments:

  1. ஆஹா ! எத்தனை தகவல்கள் !!

    நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம் !

    அருமை

    எத்தனை கஷ்டம் வந்தாலும் விநாயகரை மட்டும் திட்டி விடக்கூடாது என்று அறிந்தோம்

    - V. Sugavanam

    ReplyDelete
  2. நன்றி ப்ரோ.நமஸ்காரம்.🙏🙏🙏

    ReplyDelete