Saturday 16 April 2022

சித்ரா பௌர்ணமி 2022

 


இன்றைய தினம் 16.4.2022 சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி. முழு நிலவை பார்ப்பது என்பது கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்வையும் புத்துணர்வையும் அளிக்கக்கூடியது.  ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி வருகிறது என்றாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஏனெனில், வருடத்தில் ஒரு முறை மட்டுமே  இந்த சித்திரை மாதத்தில் மட்டுமே முழு நிலவாக களங்கங்கள் இல்லாமல் சூரியன் மறையும் பொழுது, பிரகாசமான ஒளிக்   கிரணங்களுடன்  காட்சி அளிப்பதே இதன் சிறப்பு.   


இந்த நாளில் நம் பண்டைய தமிழ் மக்கள் தன் உற்றார், உறவினருடன் நதி நிலைகளில் பௌர்ணமி ஒளியில், அமர்ந்து உணவருந்தி, ஆடிப் பாடி மகிழ்வர்.

இந்த சித்ரா பௌர்ணமி நாளில், 'சித்ரகுப்த பூஜை' விசேஷமானது. இதையே பண்டைய நாட்களில் சித்திர புத்திர நயினார் நோன்பு' என நம் தமிழக மக்கள் பூஜித்தனர். யார் இந்த சித்திர குப்தர்? அவரது சரிதத்தை அறிவோம்!


சித்திரகுப்தர் நம் பாவ, புண்ணிய கணக்குகளை, குறித்து வைத்துக் கொண்டு உயிர்களது வாழும் காலம் நிறைவுற்றதும் எமதர்மனிடம், அவ்வுயிர்களது நற்பலன் அல்லது தண்டனை அதாவது, சொர்க்கமா? நரகமா? என்பது பற்றி எடுத்துக் கூறுவாராம்.


   சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரம் பௌர்ணமி கூடிய சுபதினத்தில் அவதரித்தவர். 'குப்தர்' என்றால் இரகசியம். நம்மைப் பற்றிய இரகசியங்கள்,நாம் மனத்தால் நினைக்ககூடிய நன்மை தீமைகளைக் கூட இவரிடமிருந்து மறைக்க இயலாது.அதனால் இவர் 'சித்திரகுப்தர்' என அழைக்கப்படுகிறார்


       இவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான கதைகளிலிருந்து ஒன்று:


           ஒருமுறை, அஷ்ட திக் பாலகர்கள் ( 8 திசைகளின் தலைவர்கள்) சிவன் பார்வதியை சந்திக்கச் சென்றனர். அனைவரும் மகிழ்வுடன் இருக்க, யமதர்மன் மட்டும் சோர்வுடன் இருந்தார். அது பற்றி எம்பெருமான் வினவ, ஐயனே! நான், தனி ஒருவனாக அனைத்து உயிர்களின் காலக் கெடு, அவற்றின்பாவ புண்ணிய கணக்குகள் குறித்து, அதற்கான பலன்கள் வழங்குவது என எனது வேலைப் பளு மிகுதியாக உள்ளது. அதனால் நம்பத் தகுந்த உதவியாளன் இருந்தால், என் வேலை எளிதில் நிறைவுறும். அதற்கு தாங்கள் தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டினார்.


  சிவபிரானும், காலம் கனியும் பொழுது, உனக்குத் தகுந்த உதவியாளன் கிடைப்பான் என உறுதி கூறி , அதற்கான  பொறுப்பை பிரம்மனிடம் ஒப்படைத்தார். முதலில் அப்பொறுப்பை நினைத்து திணறி பிரம்மன் தவித்தாலும், சூரிய தேவனைக் கண்டதும் அவர் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. அகில உலகையும் சுற்றி வரக் கூடிய இவனால் உருவாக்கப்படும் குழந்தையே இதற்குச் சரியான ஆள்  என நினைத்து மகிழ்ந்தார். 


   உடன், வானவில்லை அழகிய பெண்ணாக உருமாற்றி, அவளுக்கு 'நீளாதேவி' என பெயரிட்டு, சூரிய தேவனின் மனதில் தன் மாயையால் காதல் எண்ணத்தை உருவாக்கி, நீளாதேவியை மணமுடித்தார். 


 இவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு 'சித்திர புத்திரன் எனப் பெயரிட்டனர். சூரியனே அவருக்கு குருவாகவும் இருந்து பல கலைகளைப் பயில்வித்ததோடு, சிவபிரானைக் குறித்து தவம் இயற்றி அரிய பல வரங்கள் பெறும் படியும் அறிவுறுத்தினார். அவ்வண்ணமே அவரும், தவமியற்றி, சிவனாரிடமிருந்து, அறிவாற்றலும், அனைத்து சித்திகளையும் கைவரப் பெற்றார்.


 உடன் அதனை சோதிக்க எண்ணி, தானே படைக்கும் தொழிலை மேற்கொண்டார். இதனை அறிந்து பிரம்மன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர். பிரம்மன், சூரியனிடம் இதுபற்றி முறையிட, அவரும் சித்திர புத்திரனை அழைத்து, மகனே! 


உயிர்களின் இரவு பகலைக் கணக்கிட்டு,  ஒவ்வொரு உயிர்களின் வாழ்க்கையையும் நெறிபடுத்துபவன். எனவே, நீ அவர்களது பாவ, புண்ணியத்தை கணக்கெடுத்து, உனது அண்ணனான யமதர்மனுக்கு உதவியாக பணி செய்வாயாக! இதற்காகவே நீ படைக்கப்பட்டவன். படைப்புத் தொழில் உனக்கானதன்று. அது பிரம்மனது பணி. என வாழ்த்து கூறி எழுத எழுத தீராத ஏட்டுப் புத்தகத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார். 



      மற்றவர்களின் இரகசியத்தை அறிபவராகவும், அந்த இரகசியத்தை யாரும் அறியாதபடி இரகசியமாகக் குறித்து தக்க சமயத்தில் அதை வெளிபடுத்தி பலன்களை அளிப்பதனாலும் 'சித்திர குப்தர்' என பெயர் காரணமாயிற்று.


 ஆயினும் கிராமப்புறங்களில் இவருக்கு 'சித்திர புத்திரன் பூஜை' என்றே கொண்டாடுகின்றனர்.  இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தன் படம் வரைந்து, பூஜை திரவியங்களுடன் ஓலைச் சுவடி எழுத்தாணி இவற்றையும் வரைந்து, சக்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, பாயசம் இன்னபிற இனிப்பு வகைகளை நிவேதனம் செய்து, பூஜையின் இறுதியில் ஊர் பெரியவர் சித்திர குப்தனின் வரலாற்றை படிக்க, தங்களது பாவச் சுமையைக் குறைத்து, புண்ணிய பலனை அதிகரிக்கவும், நல்ல வாழ்வை அளிப்பதோடு, யமராஜனிடம் தனக்காக பரிந்துரைக்கவும் வேண்டிக் கொள்வர்.   இந்த நாளில் அன்னதானம் செய்வது நல்லது. 





8 comments:

  1. சித்ரகுப்தரின் வரலாறு தெரிந்து கொண்டோம்.

    Super

    இன்று வரும் நிலவில் மட்டும் களங்கங்கள் சிறிதும் இருக்காது என்றும் சித்ரா பௌர்ணமி யின் சிறப்பை அறிந்தோம்

    🙏🙏🙏

    ReplyDelete
  2. சித்ரகுப்தரின் வரலாறு தெரிந்து கொண்டோம்.

    - V. Sugavanam

    Super

    இன்று வரும் நிலவில் மட்டும் களங்கங்கள் சிறிதும் இருக்காது என்றும் சித்ரா பௌர்ணமி யின் சிறப்பை அறிந்தோம்

    🙏🙏🙏

    ReplyDelete
  3. Superb. Useful information. Tks for sharing.

    ReplyDelete
  4. Thanks. Thank you so much. 🙏🙏🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  5. Very good information on Chithra Pournami. God bless you.

    ReplyDelete
  6. சித்ரா பௌர்ணமிககு இப்படி ஒரு தாத்பரியம் இருக்கு ன்னும், சித்ரகுப்தன் அவரோட கதையும் தெரிஞ்சுண்டோம் க்கா.

    ReplyDelete
  7. நன்றி மிக்க நன்றி மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete