Sunday 12 March 2023

அகோரவீரபத்திரர்- ஸ்வேதாரண்யம் 14.3.2023 யக்ஞ பூர்த்தி.

 



புதன் தலம் என போற்றப்படும் "ஸ்வேதாரண்யம்" தமிழில் 'திருவெண்காடு'. "யக்ஞ பூர்த்தி" வரும் செவ்வாய் மார்ச் 14 ஆம் தேதி. ஸ்வேத என்றால் வெண்மை . ஆரண்யம் - காடு.


    மருத்துவன் எனும் அசுரன் சிவனைக் குறித்து தவம் செய்து, அத்தவத்தின் பயனாய் அவனுக்கு காட்சியளித்து, ஒரு சூலத்தையும் வழங்கி, அதை நல்ல முறையில் பயன்படுத்தும்படியாக அறிவுறுத்தி அருளினார் சிவபெருமான். 


ஆனால், சூலத்தின் மஹிமையால், அவனுக்கு கர்வமே மேலோங்க, தேவர்கள் முதல் அனைவரையும் துன்புறுத்தினான். இதனையறிந்த சிவபிரான், அவனை அடக்க, 'நந்திகேஸ்வரரை' அனுப்பினார். ஆனால், மருத்துவன் நந்தியையும் மதிக்காமல், சிவனிடமிருந்து பெற்ற, அந்த மாய சூலத்தை நந்தியின் மேல் ஏவினான். அந்த சூலம் நந்தியின் உடலில் ஒன்பது இடங்களில் துளையிட்டுச் சென்றது. 



இதனால், சினங்கொண்ட சிவபிரானின், ஈசான்ய முகத்திலிருந்து "அகோரமூர்த்தி" வெளிப்பட்டார். இத்தகைய உருவத்தைக் கண்டதும் நடுநடுங்கி, அவரது காலில் சரணாகதி அடைந்தான். மருத்துவன். சிவபிரானின் 64 உருவங்களில் அகோரமூர்த்தி 43 வது உருவம் ஆகும். இந்த நிகழ்வு நடந்தது ஒரு மாசி மகம் நக்ஷத்திர நாளில். 







அதனைத் தொடர்ந்து, மாதங்க முனிவரின் மகளாக "மாதங்கி" எனும் நாமத்துடன் அவதரித்த அம்பிகை, இத்தலத்து இறைவனை நோக்கித் தவமிருந்து கரம் பற்றினாள். பிரம்ம தேவனுக்கு 'வித்தையை'க் கற்பித்ததால், தேவி "பிரம்மவித்யாம்பிகை" யாக அருள் பாலிக்கிறாள். அதனால் இத்தேவியை வணங்க கல்வி மேண்மையருள்வாள் என்பதுடன், 


சாபத்தின் காரணமாக, ஆணும் பெண்ணும் அல்லாத ,அலியாக மாறவும், தன் சாபம் தீர இத்தலத்து இறைவனை நோக்கி தவம் இருந்து சாபம் நீங்க பெற்றதோடு, நவகிரகங்களில் ஒருவராகவும் உயர்வு பெற்ற கல்வி, கலைச் செல்வத்தை அருளும்  புத பகவானின் தலமாகவும் அமைந்ததில் கூடுதல் சிறப்பாகும்.


மாசி மகத்து உற்சவம் மாசி 'பூசத்தன்று கொடியேற்றத்தில் துவங்கி, சுவேதாரண்யேஸ்வரர், பிரம்மவித்யாம்பிகை 'திருக்கல்யாணம்" வைபவம் என களைகட்டும் உற்சவமாக வருகிற செவ்வாயன்று தேய்பிறை அஷ்டமி திதியில்  " யக்ஞ பூர்த்தி " ஆகிறது.


Friday 10 March 2023

சங்கடஹர சதுர்த்தி.10.3.2023 வெள்ளிக்கிழமை

 


மாசி 26 ஆம்தேதி, 10.3.2023 வெள்ளிக்கிழமை இன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி..

எங்கு திரும்பினாலும், மரத்தடியிலோ அல்லது மாடத்திலோ எளிமையாக அமர்ந்து, அருள் புரியும் வினாயகர், அனைவராலும் விரும்பப்படுபவர் என்றால் அது உண்மை.

கணேச புராணத்தில் வினாயகப் பெருமான், நான்கு யுகத்திலும் நான்கு அவதாரம் எடுத்தாகக் கூறுகிறது. முதலாவதான கிருதயுகத்தில், அவரது 'திரு நாமம் ''மஹா கடர் '' என்பதாகும். 
இரண்டாவது, திரேதாயுகத்தில் "மயூரேசர்'' என அழைக்கப்பட்டார். 
 மூன்றாவதான துவாபர யுகத்தில், ''கஜானனன்' என்பது அவரது திரு நாமம் ஆகும். 
நான்காவதான கலியுகத்தில் தான், வினாயகர், பார்வதி பரமேஸ்வரனுக்கு  மகனாக அவதரித்து 'விக்ன விநாயகராக'', அற வழியில் நடக்கும் தன் பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் தடைகளை   அகற்றுபவர் என்றும் தனக்கு மேல் தலைவன் இல்லாதவன் எனவும் பொருள்பட  அருள் பாலிக்கிறார். 
இதையும் தவிர, விநாயகர் பூஜையில் இடம்பெறும் 'ஷோடச  நாமாவளி'  எனும் பதினாறு நாமங்களும் அவரது பதினாறு அவதாரங்களைக் குறிப்பதாகும். அதில் ஒன்பதாவது நாமமாக இடம் பெறும் 'தூமகேது' .இந்த அவதார நோக்கத்தை அறிவோம்!
இந்த நாளில் கண்ணீர் புகை முதல் பலவித ரசாயண வேதியியல் பொருட்களால் ஆன அணுகுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு, போர் நடக்கிறது அல்லவா?. அதை முன்பே நடத்திக் காட்டிய சரித்திரமே இது!. 
         முன் நாளில் 'விகுதி' எனும் அரசன் தான் இந்திரப் பதவியை அடையும் ஆசையில், அவன் செய்த அடாத செயல்களைப்   பொறுக்க முடியாமல், ஒரு முனிவர் அவனைப் புகையாகப்  போகும்படி சபித்தார். அவனே 'தூமகேது" என்ற பெயருடன் புகை அசுரனாகப் பிறந்தான்.
தூமம் என்றால் புகை. கேது என்றால் கொடி.  'கொடிய விஷ வாயுவைத் தனது ஆயுதமாக வைத்திருந்தான். தன்   எதிரியை அழிக்க, அவன் தன் வாயிலிருந்து , கொடிய புகையைக் கக்க, அது காற்றில் கொடி போல் பரவி, அனைவரையும் மூச்சுத் திணற வைத்து  அவர்களை எமலோகததிற்கு வழியனுப்பி வைக்கும். இதன் காரணமாக இவன் 'தூமாசுரன்' என அழைக்கப்பட்டான்.
        இவனது இக்கொடுமைக்கு அஞ்சிய நல்லோர் மற்றும்   முனிவர்களின் வேண்டுதலுக்கு  இணங்கி,  அரசன் மாதவன் மற்றும் அவன் மனைவி சுமுதையின் மகனாக 'விஷ்ணுவின் அம்சமாக பிறக்கும் குழந்தையால், அவன் அழிவு நேரும் என அசரீரி ஒலித்து முனிவர்களின் கவலைக்கு ஆறுதல் அளித்தது.       இதை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த தூமாசுரன், தன் படைத் தளபதியை அழைத்து, நள்ளிரவில் அத்தம்பதி அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களைக் கொன்றுவிட ஏவினான்.
   நிறை மாத கர்ப்பிணியாக இருந்த, அரசியைக் கண்டு   மனமிரங்கினான் படைத்தளபதி அப்பாவியான அவர்களைக் கொல்ல மனமின்றி, எப்படியோ தலைமறைவாக உயிர் பிழைத்து வாழட்டும் என்ற நல்லெண்ணத்தில், கட்டிலோடு அவர்களை காட்டிற்கு எடுத்துச் சென்று விட்டு விட்டான். வினாயகரின் பக்தர்களான அவர்கள், தன் நிலை உணர்ந்து தங்களை ரட்சிக்கும் படி பெருமானை வேண்டினர்.






தன் தளபதியின் செயலை ஒற்றர்கள் மூலம் அறிந்த தூமாசுரன், தானே அவர்களை அழிக்கப் புறப்பட்டான். 
அவன் சென்ற சமயம் வினாயகப் பெருமான், விஷ்ணுவின் அம்சமாக, குழந்தையாக, அன்னையின் மடியில் தவழ்ந்து, களித்தவாறு இவன் வருகைக்காகக் காத்திருந்தார்.
       குழந்தை பிறந்ததைக் கண்டு முதலில் திடுக்கிட்டாலும், சிறு குழந்தை தானே! இதனிடம் என்ன ஆற்றல் இருக்கமுடியும்? இதன் மேல் தனது முக்கிய ஆயுதமான புகையைக் கக்கினால், மூச்சுத் திணறி இறந்து விடும் என இறுமாப்புக் கொண்டான்.

ஆனால், நிகழ்ந்ததோ! அவன் கக்கிய புகையை எம்பெருமான், அனைத்தையும் தன் வாயினுள் விழுங்கி வைத்துக் கொண்டார். 
இவ்வளவு புகைகளைக் கக்கி தனக்குத் தான் சோர்வாக உள்ளதே தவிர, குழந்தையைச் சுற்றி புகை மூட்டமுமில்லாமல், குழந்தை அமைதியாக விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, அதிர்ந்து கலவரமானான்.






இதுவே தக்க சமயம் என்றெண்ணிய பெருமானும், தன் வாயில் அடக்கி வைத்திருந்த விஷப்புகையை அவன் மேலேயே கக்கினார். அந்த விஷப் புகைகள் அவனையும் அவனது சேனைகளையும் அழித்தது. அதனால், விநாயகப் பெருமான் "தூமகேது" என போற்றப்படுகிறார்.


Saturday 4 March 2023

ஹோலி பண்டிகை & காமதகனம் 2023

 


பங்குனி மாதம் முழுநிலவு நாளான பெளர்ணமி தினத்தன்று 'ஹோலி பண்டிகை' கொண்டாடப்படுகின்றது. இது இந்து மதத்தினரின் 'வசந்த உற்சவத் திருவிழாவாகும்.' பெளர்ணமி தினத்திற்கு முதல்நாள் நெருப்பு மூட்டி. உருவ பொம்மையை எரித்து 'ஹோலிகா தகனம்' அல்லது 'காம தகனம்' எனதீமையை அழிக்கும் சக்தியாக அதை வணங்குவர். 

அடுத்த நாள், வண்ணங்களை நீரில் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றி மகிழ்ச்சியாக விளையாடிக் களிப்பர். இந்த ஹோலிப் பண்டிகையைக் குறித்து மூன்றுவிதமான கதைகள் கூறுவார்கள்
முதலாவதாக, தன்னையே கடவுளாக வணங்கவேண்டுமென்று உலகையே அச்சுறுத்திய 'ஹிரண்யகசிபுவின்' ஆற்றல் தன் சொந்த மகன் பிரகலாதனிடம்' தோற்றுப் போனது. தனக்கு அடங்காத மகனை கொல்வதற்கு அவன்முயற்ச்சித்த பல வழிகளில் ஒன்று தீயிலிட்டுப் பொசுக்க நினைத்த செயல். அச்செயலுக்கு துணை நின்றவள் ஹிரண்யகசிபுவின் தங்கை 'ஹோலிகா' எனும் அரக்கி. அவள் நெருப்பினால் எரிக்கமுடியாத ஒரு போர்வையால் தன்னை பாதுகாத்துக் கொண்டு, தன் மடியின் மேல் தீ மூட்டி பாலகன் தப்பி ஓடமுடியாதபடி இறுகப் பிடித்துக் கொண்டாள். இறையருளால் போர்வை ஹோலிகாவிடமிருந்து நழுவி, பாலகன் பிரகலாதனைத் தழுவி சிறுவனைக் காப்பாற்றியது. உடன் அங்கு எரிந்து கொண்டிருந்த 'தீ'க்கு இரையானாள் அரக்கி ஹோலிகா. இதனைக் கண்ட மக்கள் தீமையின் அழிவினை, அவள் பெயராலேயே 'ஹோலி   பண்டிகையாக'க் கொண்டாடுகின்றனர்.

 சிவபெருமான் ஒரு புறம் தவத்திலும், 'மலயத்வஜன்' எனும் இமயமலை அரசனுக்கு மகளாகப் பிறந்த பார்வதிதேவி' சிவனை அடையும் பொருட்டு மற்றொரு புறம் தவ வாழ்க்கை மேற்கொள்ள, சிவாம்சத்தினால் பிறக்கும் குழந்தையால் தனக்கு மரணம் நேரவேண்டும் என்று வரம் பெற்ற மமதையில் 'சூரபத்மன்' அகில உலகையும் ஆட்டிப் படைத்து நடுநடுங்கச் செய்தான். சிவசக்தி ஒன்று சேர்ந்தால் தான் விடிவுகாலம் என்றுணர்ந்த தேவர்கள், 'மன்மதனை' ஏவினார்கள். ஆனால் மன்மதன் விட்ட அம்பினால் சிவபெருமான் கோபம் கொண்டு தன் நெற்றிக்கண்ணால் எரித்தார். பின், மன்மதனின் மனைவி ரதிதேவியின் உருக்கமான வேண்டுதலுக்கு மனமிரங்கிய பார்வதிதேவி ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படியும், உருவமற்ற அரூப நிலையை மன்மதனுக்கு அருளினாள்.

இந்நிகழ்வினை 'காமதகனம்' எனும் ஹோலி நெருப்பாக மக்கள் வழிபடுவதாக இரண்டாம்கருத்து நிலவுகிறது.

மூனறாவதாக, கிருஷ்ணன் ராதை முதலான கோபிகையருடன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, ராதை ஒரு கட்டத்தில் கண்ணனைப் பார்த்து,'கரிய நிறத்தவன்' என கேலி செய்ய, கண்ணன் யசோதையிடம் முறையிட்டான். உடனே யசோதை, ராதையின் முகத்தில் வண்ணப் பொடிகளை பூசச் செய்தாள். அதையொட்டி குறும்பும், கேலியுமாக  இந்த நிகழ்வு வசந்த காலத்தில் கொண்டாடப்படுகிறது.

ஹோலி தகனம் முடிந்த மறுநாள் பெளர்ணமியன்று இந்த வெற்றியைக் கொண்டாடும்விதமாக வண்ணக் கலவையை துப்பாக்கி போன்றதொரு நீண்ட குழலின் 'பைகாரிஸ்'  மூலம் மற்றவர்கள் மீது பீய்ச்சுவர். முந்தைய நாளில் மஞ்சள்,குங்குமம், வேப்பிலை, வில்வம் மற்றும் 'தேசு' எனும் பூக்களை உலர வைத்து அரைத்து வண்ணத்திற்கு பயன்படுத்தினர். இக்கலவை நீர், பருவ மாறுதல் காரணமாக ஏற்படும் காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு மருந்தாக விளங்கியது. ஆனால் தற்பொழுது மக்கள் இரசாயணக் கலவையை பயன்படுத்துகிறார்கள். இது உடல் நலத்திற்கு கேட்டினை விளைவிக்கும் கவலைக்கிடமான செயலாகும்.