Saturday 4 March 2023

ஹோலி பண்டிகை & காமதகனம் 2023

 


பங்குனி மாதம் முழுநிலவு நாளான பெளர்ணமி தினத்தன்று 'ஹோலி பண்டிகை' கொண்டாடப்படுகின்றது. இது இந்து மதத்தினரின் 'வசந்த உற்சவத் திருவிழாவாகும்.' பெளர்ணமி தினத்திற்கு முதல்நாள் நெருப்பு மூட்டி. உருவ பொம்மையை எரித்து 'ஹோலிகா தகனம்' அல்லது 'காம தகனம்' எனதீமையை அழிக்கும் சக்தியாக அதை வணங்குவர். 

அடுத்த நாள், வண்ணங்களை நீரில் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றி மகிழ்ச்சியாக விளையாடிக் களிப்பர். இந்த ஹோலிப் பண்டிகையைக் குறித்து மூன்றுவிதமான கதைகள் கூறுவார்கள்
முதலாவதாக, தன்னையே கடவுளாக வணங்கவேண்டுமென்று உலகையே அச்சுறுத்திய 'ஹிரண்யகசிபுவின்' ஆற்றல் தன் சொந்த மகன் பிரகலாதனிடம்' தோற்றுப் போனது. தனக்கு அடங்காத மகனை கொல்வதற்கு அவன்முயற்ச்சித்த பல வழிகளில் ஒன்று தீயிலிட்டுப் பொசுக்க நினைத்த செயல். அச்செயலுக்கு துணை நின்றவள் ஹிரண்யகசிபுவின் தங்கை 'ஹோலிகா' எனும் அரக்கி. அவள் நெருப்பினால் எரிக்கமுடியாத ஒரு போர்வையால் தன்னை பாதுகாத்துக் கொண்டு, தன் மடியின் மேல் தீ மூட்டி பாலகன் தப்பி ஓடமுடியாதபடி இறுகப் பிடித்துக் கொண்டாள். இறையருளால் போர்வை ஹோலிகாவிடமிருந்து நழுவி, பாலகன் பிரகலாதனைத் தழுவி சிறுவனைக் காப்பாற்றியது. உடன் அங்கு எரிந்து கொண்டிருந்த 'தீ'க்கு இரையானாள் அரக்கி ஹோலிகா. இதனைக் கண்ட மக்கள் தீமையின் அழிவினை, அவள் பெயராலேயே 'ஹோலி   பண்டிகையாக'க் கொண்டாடுகின்றனர்.

 சிவபெருமான் ஒரு புறம் தவத்திலும், 'மலயத்வஜன்' எனும் இமயமலை அரசனுக்கு மகளாகப் பிறந்த பார்வதிதேவி' சிவனை அடையும் பொருட்டு மற்றொரு புறம் தவ வாழ்க்கை மேற்கொள்ள, சிவாம்சத்தினால் பிறக்கும் குழந்தையால் தனக்கு மரணம் நேரவேண்டும் என்று வரம் பெற்ற மமதையில் 'சூரபத்மன்' அகில உலகையும் ஆட்டிப் படைத்து நடுநடுங்கச் செய்தான். சிவசக்தி ஒன்று சேர்ந்தால் தான் விடிவுகாலம் என்றுணர்ந்த தேவர்கள், 'மன்மதனை' ஏவினார்கள். ஆனால் மன்மதன் விட்ட அம்பினால் சிவபெருமான் கோபம் கொண்டு தன் நெற்றிக்கண்ணால் எரித்தார். பின், மன்மதனின் மனைவி ரதிதேவியின் உருக்கமான வேண்டுதலுக்கு மனமிரங்கிய பார்வதிதேவி ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படியும், உருவமற்ற அரூப நிலையை மன்மதனுக்கு அருளினாள்.

இந்நிகழ்வினை 'காமதகனம்' எனும் ஹோலி நெருப்பாக மக்கள் வழிபடுவதாக இரண்டாம்கருத்து நிலவுகிறது.

மூனறாவதாக, கிருஷ்ணன் ராதை முதலான கோபிகையருடன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, ராதை ஒரு கட்டத்தில் கண்ணனைப் பார்த்து,'கரிய நிறத்தவன்' என கேலி செய்ய, கண்ணன் யசோதையிடம் முறையிட்டான். உடனே யசோதை, ராதையின் முகத்தில் வண்ணப் பொடிகளை பூசச் செய்தாள். அதையொட்டி குறும்பும், கேலியுமாக  இந்த நிகழ்வு வசந்த காலத்தில் கொண்டாடப்படுகிறது.

ஹோலி தகனம் முடிந்த மறுநாள் பெளர்ணமியன்று இந்த வெற்றியைக் கொண்டாடும்விதமாக வண்ணக் கலவையை துப்பாக்கி போன்றதொரு நீண்ட குழலின் 'பைகாரிஸ்'  மூலம் மற்றவர்கள் மீது பீய்ச்சுவர். முந்தைய நாளில் மஞ்சள்,குங்குமம், வேப்பிலை, வில்வம் மற்றும் 'தேசு' எனும் பூக்களை உலர வைத்து அரைத்து வண்ணத்திற்கு பயன்படுத்தினர். இக்கலவை நீர், பருவ மாறுதல் காரணமாக ஏற்படும் காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு மருந்தாக விளங்கியது. ஆனால் தற்பொழுது மக்கள் இரசாயணக் கலவையை பயன்படுத்துகிறார்கள். இது உடல் நலத்திற்கு கேட்டினை விளைவிக்கும் கவலைக்கிடமான செயலாகும்.


1 comment:

  1. ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கான மூன்று விதமான காரணங்கள் உலாவி வருவதாக தாங்கள் குறிப்பிட்டு விளக்கியதன் மூலம் நாங்கள் பல்வேறு கதைகளையும் சரித்திரங்களையும் அறிய முடிகிறது.

    மார்ச் ஏழு செவ்வாய் அன்று

    - V. Sugavanam

    ReplyDelete