Sunday 12 March 2023

அகோரவீரபத்திரர்- ஸ்வேதாரண்யம் 14.3.2023 யக்ஞ பூர்த்தி.

 



புதன் தலம் என போற்றப்படும் "ஸ்வேதாரண்யம்" தமிழில் 'திருவெண்காடு'. "யக்ஞ பூர்த்தி" வரும் செவ்வாய் மார்ச் 14 ஆம் தேதி. ஸ்வேத என்றால் வெண்மை . ஆரண்யம் - காடு.


    மருத்துவன் எனும் அசுரன் சிவனைக் குறித்து தவம் செய்து, அத்தவத்தின் பயனாய் அவனுக்கு காட்சியளித்து, ஒரு சூலத்தையும் வழங்கி, அதை நல்ல முறையில் பயன்படுத்தும்படியாக அறிவுறுத்தி அருளினார் சிவபெருமான். 


ஆனால், சூலத்தின் மஹிமையால், அவனுக்கு கர்வமே மேலோங்க, தேவர்கள் முதல் அனைவரையும் துன்புறுத்தினான். இதனையறிந்த சிவபிரான், அவனை அடக்க, 'நந்திகேஸ்வரரை' அனுப்பினார். ஆனால், மருத்துவன் நந்தியையும் மதிக்காமல், சிவனிடமிருந்து பெற்ற, அந்த மாய சூலத்தை நந்தியின் மேல் ஏவினான். அந்த சூலம் நந்தியின் உடலில் ஒன்பது இடங்களில் துளையிட்டுச் சென்றது. 



இதனால், சினங்கொண்ட சிவபிரானின், ஈசான்ய முகத்திலிருந்து "அகோரமூர்த்தி" வெளிப்பட்டார். இத்தகைய உருவத்தைக் கண்டதும் நடுநடுங்கி, அவரது காலில் சரணாகதி அடைந்தான். மருத்துவன். சிவபிரானின் 64 உருவங்களில் அகோரமூர்த்தி 43 வது உருவம் ஆகும். இந்த நிகழ்வு நடந்தது ஒரு மாசி மகம் நக்ஷத்திர நாளில். 







அதனைத் தொடர்ந்து, மாதங்க முனிவரின் மகளாக "மாதங்கி" எனும் நாமத்துடன் அவதரித்த அம்பிகை, இத்தலத்து இறைவனை நோக்கித் தவமிருந்து கரம் பற்றினாள். பிரம்ம தேவனுக்கு 'வித்தையை'க் கற்பித்ததால், தேவி "பிரம்மவித்யாம்பிகை" யாக அருள் பாலிக்கிறாள். அதனால் இத்தேவியை வணங்க கல்வி மேண்மையருள்வாள் என்பதுடன், 


சாபத்தின் காரணமாக, ஆணும் பெண்ணும் அல்லாத ,அலியாக மாறவும், தன் சாபம் தீர இத்தலத்து இறைவனை நோக்கி தவம் இருந்து சாபம் நீங்க பெற்றதோடு, நவகிரகங்களில் ஒருவராகவும் உயர்வு பெற்ற கல்வி, கலைச் செல்வத்தை அருளும்  புத பகவானின் தலமாகவும் அமைந்ததில் கூடுதல் சிறப்பாகும்.


மாசி மகத்து உற்சவம் மாசி 'பூசத்தன்று கொடியேற்றத்தில் துவங்கி, சுவேதாரண்யேஸ்வரர், பிரம்மவித்யாம்பிகை 'திருக்கல்யாணம்" வைபவம் என களைகட்டும் உற்சவமாக வருகிற செவ்வாயன்று தேய்பிறை அஷ்டமி திதியில்  " யக்ஞ பூர்த்தி " ஆகிறது.


No comments:

Post a Comment