Sunday 1 March 2020

ஸ்ரீகச்சியப்பர் சிவாச்சாரியார் ஆராதனை. 3.3.2020 மாசி மாதம் 20 செவ்வாயன்று






              ஸ்ரீகச்சியப்பர் சிவாச்சாரியார் ஆராதனை.



4 ஆம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரை காஞ்சி மாநகரம் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது. அதன் பின் சோழ மன்னர்களால் கைபப்பற்றப்பட்டு "ஜெயங்கொண்ட சோழமண்டலம்" என்ற பெயருடன் திகழ்ந்தது. 
சோழர்களின் காலமே தமிழ் இலக்கிய வரலாற்றின் சிறந்த காலப் பகுதியாய் திகழ்ந்துள்ளது. 

  
மஹாபாரதம் இயற்றிய  "வேத வியாசரால்"  சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட 18 புராணங்களில் "ஸ்காந்தம்" சிறப்பு வாய்ந்தது.

வியாசர் இயற்றியதில் 17 புராணங்கள் சேர்த்து  மூன்று லக்ஷம் கிரந்த எண்களைக் கொண்டது. ஆனால் ஸ்காந்தம் மட்டும் ஒரு லக்ஷம் கிரந்த எண்கள் கொண்டதாக உள்ளது.  இந்த திருமுருகன் புகழ் பாடும் 'ஸ்காந்தம்' தமிழில் முருகனின் அருளால் தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியாரால் பாடப்பட்டது. கந்தபுராணத்தில் கூறப்படாத விஷயங்களே இல்லை என்ற சொலவடை உண்டு 
       பதினொறாம் நூற்றாண்டில் காஞ்சி ஸ்ரீகுமரக்கோட்ட முருகனுக்கு பூசாரியாக இருந்த காளத்தியப்ப சிவாச்சாரியாருக்கு அந்த முருகன் அருளால் பிறந்த அருட்குழந்தை தான் இந்த "கச்சியப்ப சிவாச்சாரியார்".  
       சிறுவயதிலேயே வேதாந்தம், ஜோதிடம், சமஸ்கிருதம், தமிழ் என பன்முகத் திறமையுடன் விளங்கிய கச்சியப்பர், தந்தைக்கு ஓய்வளித்து கந்தனுக்கு திருத் தொண்டு செய்யும் பணியை தாமே ஏற்றார். ஒரு திருநாள் அன்று திருப் பணி முடிந்து முருகனை கண்ணார தரிசித்தவாறே கோயிலிலிலேயே கண்ணயர்ந்து விட்டார். அப்பொழுது, முருகப் பெருமான் அவர்தம் கனவில் தோன்றி, வடமொழியில் உள்ள ஸ்காந்தத்தை தமிழில் "கந்த புராணம்" என பெயரிட்டு இயற்றுமாறு கட்டளையிட்டு, "திகடச் சக்கரம்" என முதல் அடியையும் இறைவனே கூறியருளினார்.image.png


     இவ்வளவு பெரிய சமுத்திரம் போன்ற பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்த முருகனின் அருள் திறத்தை வியந்தும், பணிவோடும், தினமும் நூறு பாடல்களாக இயற்றி, இரவில் அர்த்தஜாம பூஜை முடித்து, முருகன் சன்னதியில் வைத்துவிட்டு அடுத்த நாள் அதிகாலையில் சன்னதி திறந்து ஓலைச்சுவடியை எடுத்து பார்த்தால் அதில் உள்ள பிழைகள் திருத்தி எழுதப்பட்டிருக்குமாம்!.
         இப்படியாக 141 படலமாக 10,345 பாடல்களாக உருவான கந்தபுராணம் அரங்கேற்ற வேண்டிய நாளும் வந்தது. அனைத்து புலவர்களுக்கும் ஓலை அனுப்பப்பட்டது. கச்சியப்பரின் இந்த நூலைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த பெரும் ஞானிகள், கவிஞர்களோடு பாமரர்களும் ஆவலுடன் கந்தக்கோட்டத்தில் பெருந் திரளாய் குவிந்தனர்.    
 
கந்தபுராண ஓலைச்சுவடியை முறைப்படி பூஜித்து, கடவுள் வாழ்த்து பாயிரமான இறைவன் எடுத்துக் கொடுத்த "திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துள்ளான்" எனத் தொடங்கும் கணபதி துதியைப் பாடி விளக்கம் கூறினார் கச்சியப்பர். 

image.png

       அப்பொழுது அக்கூட்டத்தில் ஒரு வயோதிகப் புலவர், அவர் கருத்தை மறுத்து, திகடச் சக்கர என்ற சொல்லை திகழ் தசக்கர என்று  பதம் பிரித்தது இலக்கணப் பிழை. தொல்காப்பியத்தில் கூட இவ்விதி இல்லை. ஆரம்பமே பிழையாக உள்ளது என்றார். 
   இறைவனே கொடுத்த அடியில் பிழை இருக்க வய்ப்புள்ளதா?  என மனம் கலங்கினார் கச்சியப்பர். 

உடன் அப்பெரியவரே தொடர்ந்து முருகன் உரைத்த மொழியாதலால் அவரே இதற்க்கும் விளக்கம் கொடுப்பார். அதனால் பிழையோடு மேற்கொண்டு தொடர வேண்டாம். நாளை கூடுவோம் என்றார்

 அவ்வாறே, அடுத்த நாள், திரு நீறும், ருத்திராக்ஷமும்  தாங்கி ஒளி  பொருந்திய வசீகரத்தோடும், கம்பீரத்தோடும் ஒரு புலவர் அவையில் தோன்றி, "வீரசோழியம்" என்ற இலக்கண நூலில் இதற்கான இலக்கண விதி இருக்கிறது என்று அந்த ஓலைச் சுவடியையும் கொடுத்து கோடிட்டுக் காட்டி மறைந்தார். புலவனாக இறை தரிசனம் அனைவருக்கும் கிடைக்கப் பெற்று, அனைவரும் கச்சியப்பரைக் கொண்டாடினர்.இனிதாக அரங்கேற்றம் முடிந்து, கச்சியப்பரை ஓலைச்சுவடிகளோடு மக்கள் பல்லக்கில் ஏற்றி மேள தாளத்துடன்  ஊர்வலமாக வந்தனர். 

அன்னாரது, ஆராதனை மார்ச் மாதம் 3 ஆம் தேதி மாசி மாதம் 20 செவ்வாயன்று நடக்க இருக்கிறது.  


No comments:

Post a Comment