Sunday 6 February 2022

ரதசப்தமி 8.2.2022

 


தை மாதம் 26 ஆம் தேதி பிப்ரவரி 8ஆம் தேதி செவ்வாய் கிழமை  அன்று "ரதசப்தமி". அன்று நாம் எருக்கு இலையில் அரிசியும் பெண்கள் அத்துடன் மஞ்சள் வைத்தும் தலையின் மேல் வைத்து குளிக்கவேண்டும்.  பெற்றோர் இல்லாத ஆண்கள் அரிசியுடன் எள்ளும் கலந்து வைத்து ஸ்நானம் செய்வது விசேஷம். 

காஷ்யப முனிவருக்கும், அதிதிக்கும் மகனாக பிறந்தவர் சூரியதேவன். சிவபெருமானை நோக்கி கடும் தவம் இயற்றி கிரகங்களின் தலைவனாகவும், பூவுலகிற்கு ஒளி தந்து ரட்சிக்கும் கண்கண்ட தெய்வமாகவும் விளங்கக்கூடிய வரம் பெற்றும், சிவபெருமானின் வலக்கண்ணாகவும் " சிவசூரியன்" எனவும் சிறப்பு பெற்றார்.

அவ்வண்ணமே, மஹாவிஷ்ணுவின்  இடக் கண்ணாகவும், "சூரிய நாராயணர்" என்ற சிறப்பும் பெற்றார். 

ஒருமுறை ஜலந்தரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக தன் சக்கராயுதத்தை ஏவினார். அரக்கனை அழித்த சக்கராயுதம், காவிரியில் நீராடி மஹாவிஷ்ணுவை தியானித்துக் கொண்டிருந்த பிரம்மதேவனின் கரங்களை அடைந்தது. அகமகிழ்ந்த பிரம்மதேவன் சக்கராயுதத்தை, அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அச்சக்கராயுதம் கோடி சூர்ய பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. 

தன் ஒளியை காட்டிலும் மிகுந்து ஒளிரும் சக்கரத்தின் மேல் பொறாமை ஏற்பட, அதனை விட தான் ஒளி மிகுந்தவன் என நிரூபிக்கும் வண்ணம், கர்வத்துடன் தன்  சக்தியை மேம்படுத்தினார் சூரியதேவன். ஆயினும் சக்கராயுதம் சூரியனின் ஒளி அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொண்டது. 

அதிர்ந்து தவறுணர்ந்த சூரியதேவன் மஹாவிஷ்ணுவை குறித்து தவமியற்றினார். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணுவும் சூரியனுக்கு, ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரம் கொண்ட தேரினை வழங்கினார். 



   உலகின் உறக்கத்தை களைத்து அசையும் சக்தியாக விளங்குவது "பத்மினி".



நோய்நொடியைக் களையும் அதிகாலை சக்தியாக விளங்குவது "உஷாதேவி"


சூரிய ஒளி மூலம் நாம் அனைத்து பொருட்களையும் உணரவைக்கும் சக்தியாக விளங்குவது "சம்ஞா தேவி".


வெளிச்சத்தால் தோன்றக்கூடிய நிழலின் சக்தியாக விளங்குவது "சாயாதேவி".



இப்படியாக சூரியதேவனின் ஒளிக்கற்றையின் வெவ்வேறு பரிமாணங்களாக சூரியனை விட்டு அகலாத சக்திகளாக விளங்குகின்றன.


கண்கண்ட தெய்வமாக திகழும் சூரியனை, சூரிய காயத்ரி, ஆதித்ய ஹ்ருதயம், சூரிய நமஸ்காரம் என தினமும் வழிபட ஆரோக்கியத்துடன் வளமான வாழ்வையும் அருள்வார். 


இந்த ரதஸப்தமி தினத்தில் தான் மஹாபாரத பீஷ்மரும் முக்தி அடைந்தார்.

தான் விரும்பும் நாளில் விரும்பும் வண்ணம் மரணம் சம்பவிக்கும் வரம் பெற்றவர் பீஷ்மர். ஆயினும் அந்திமக் காலத்தில் மிகுந்த நரக வேதனையடைந்தார், 



வியாச பகவானே, அவரிடம், ஒருவன் உடல், மனம் ,மொழி என இவற்றால் பிறருக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலும் , பிறர் செய்யும் தீமையை கண்டித்து தடுக்காமல் இருப்பதும் பாவமே !அனைத்து விதமான பலம் , அதிகாரப் பொறுப்புகளும் உனக்கு இருந்தும் திரௌபதியின் மானத்தைக் காக்க நீ முற்படாததால் தான் இத்தனை நரக  வேதனையடைகிறாய்.


 சூரிய தேவனே உன் பாபத்திற்கு விமோசனம் அளிப்பான். அதனால் சூரியனுக்கு பிரியமான எருக்க இலைகளை உன் உடல் முழுவதும் வைக்கிறேன். நீ அவரைப் பிரார்த்தித்து வணங்க, உன் உடல், மன வேதனை அகன்று முக்தியும் கிட்டும் என்றார். 



அதன் காரணமாகவே ரதசப்தமியன்று, எருக்க இலைகளை வைத்து குளிக்கும் வழக்கம் உண்டாயிற்று. 


கந்தர்வ பெண் சந்திரரேகை என்பவள், "கபிலமுனிவருக்கு" இன்னல் விளைவித்ததால் அவரால் சபிக்கப்பட்டு, அழகிய பெண்ணாக பூவுலகில் செந்தலை எனும் ஊரில் பிறந்து, அங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடலானாள். அவளது பக்தியில் மகிழ்ந்த இறைவனும் இதே ஸப்தமி திதியில் சந்திரரேகைக்கு "அர்த்தநாரீஸ்வரராக" காட்சியளித்து காவிரி தீர்த்தம் அளித்து சாபவிமோசனமும் வழங்கினார். 

No comments:

Post a Comment