Sunday 20 February 2022

வாயு பகவான்

 





நாம் உயிர் வாழ மிகவும் இன்றியமையாத ஒன்று காற்று. வாழும் ஒவ்வொரு உயிரின் உடலிலும் வெளியிலும் எங்கும் வியாபித்திருக்கும் இத்தகைய காற்றின் அதிதேவதையாக "வாயு பகவானை" வழிபடுகிறோம்.




வாயு என்றால் வீசுபவன் எனப்பொருள்.  வாயு பகவான் ஆதிபகவானின் மூக்கிலிருந்து பிறந்தவர் என்றும் ருத்ரனின் புதல்வன், இந்திரனுக்குக் பணியாளனாகவும், அக்னி தேவனின் உற்ற நண்பனாகவும் விளங்குவதாக 'ரிக் வேதம்' உரைக்கின்றது.




வாயுவின் புதல்வர்களாக அனுமனும், பீமனும் என்பது அனைவரும் அறிந்ததே!. வாயு பகவானுக்கு காற்றின் வீச்சை பொருத்த அளவில் பலவித பெயர்கள் உள்ளன. 


        அந்த வகையில் 'மருத்' என்ற இவரது பெயர் விளக்கம் புயல் என்பதாகும் 

        "மருத் இல்லை எனில் மரணம்"

 என்ற வாசகமும் உண்டு. புயல் போன்ற வாக்கு, மனம், புத்தி என அனைத்திலும் வேகமாக செயல்படுபவர் என்ற காரணத்தினால் வாயு மைந்தனான  அனுமனுக்கு 'மாருதி' என்ற சிறப்புப் பெயரும் உண்டாயிற்று. அதுபோலவே அடாவடியான பலமும், வேகமும் கொண்டு திகழ்பவன் 'பீமன்' என்றால் தந்தையின் வீரியம் இவர்களிடத்தில் பிரதிபலித்ததல்லவா?!! 


அதிவேகமாக சஞ்சரித்துக் கொண்டிருப்பவர் ஆனதால் 'ஆசுக' என்றும் வேதம் போற்றுகிறது. இதன் அடிப்படையிலேயே, நினைத்த மாத்திரத்தில் வேகமாக கவிதைகளை   புனைபவர்களை " ஆசுகவி" என புகழ்கிறோம்.


இலங்கை உருவானதற்கு காரணம் 'வாயு பகவான்' என்று பாகவத புராணம்  கூறுகிறது. நாரதர் வேண்டிக் கொண்டதற்காக 'மேரு மலையின்' சிகரத்தை தன் பலத்த காற்றால் தகர்த்து கடலில் விழச்செய்தாராம். அப்படி உருவானதே இலங்கை.


நம் உடலில் பத்துவித காற்று சுழன்று நம் நித்திய வாழ்விற்கு உதவுகிறது. நாம் நித்தம் இறைவனுக்கு நிவேதனம் செய்து வணங்கும் பொழுது முக்கிய ஐந்து வகையான காற்றினைக் கூறி நீரினை விட்டு வழிபாடு செய்வோம் அல்லவா?! 

ஓம் ப்ராணாய  ஸ்வாஹா

ஓம் அபானாய  ஸ்வாஹா

ஓம் வ்யானாய ஸ்வாஹா 

ஓம் உதானாய ஸ்வாஹா

ஓம் ஸமானாய ஸ்வாஹா

ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா 

அதாவது,



ப்ராணன் - தொப்புளிலிருந்து மேல் நோக்கி நெஞ்சிலிருந்து வெளிவரும் காற்று.


அபானன் : தொப்புளிலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் காற்று. இதுவே வேண்டாதவற்றை வெளியேற்ற உதவுவது.


வியானன் : உடல் முழுவதும் பரவி இருக்கும் காற்று. உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் உதவி புரிவது.


உதானன் : வயிற்றிலிருந்து மேல் நோக்கியும் வெளியிலும் செல்லக் கூடியதான கழுத்தின் தொண்டைப் பகுதியில் நிலை பெற்றிருக்கும்.   இக்காற்றே, ஒரு ஜீவன் தன் உடலை விட்டு உயிர் பிரிவதற்கு உதவுவது. 


சமானன் : நாம் உண்ட உணவையும் நீரையும் சம அளவில் கலந்து தக்க முறையில் செரிமானம் செய்ய உதவுகிறது.


இது தவிர அந்த ஐந்து காற்றிற்க்கும் உதவியாளனாக ஐந்து உப காற்றுகள் நாகன், கூர்மன், கிருகலன்,  தேவதத்தன், தனஞ்செயன் என்பன.

நாகன்: இதன் மூலம் நிகழ்வது வாந்தி, ஏப்பம் மற்றும் கை கால்களை நீட்டி மடக்க உதவுவது

கூர்மன்: இந்த வாயு கண்ணிமைகளை மூடி திறப்பதற்கும், உரோமங்கள்  சிலிர்க்கவும் செய்கிறது. 

கிருகலன் : கோபம் மற்றும் தும்மலின் காரணகர்த்தாவாகிறது. 

தேவதத்தன் : கொட்டாவி, வியர்வை மற்றும் சோர்வை உண்டாக்கும் வாயுவாகும்.

தனஞ்செயன்: நம் உடலை வளர்க்க உதவும் வாயு. அதிலும் குறிப்பாக இறுதியில் நம் உடலை விட்டு பிராணவாயு நீங்கிய பின்னும் இவ்வாயு பிரியாமல் இருந்து இரத்தத்தை உறையச் செய்து உடலையும் வீங்கச் செய்து பின் கபாலத்தை பிளந்து வெளியில் செல்லும். க



ஞானிகள் தன் யோக நிஷ்டையின் மூலம் பிராணன் உடலை விட்டு நீங்குவதற்கு முன்பாக இந்த தனஞ்செய வாயுவை கபாலத்தை பிளந்து வெளியேற்றுவார்கள்.    இதன்மூலம் மறுபிறவி தவிர்க்கப்படும் என்பது நியதி. 


இப்படியாக நமது உடல் இந்த பத்துவித வாயுக்களால் செவ்வனே இயங்குகிறது. 


மஹாபாரதத்தில், ஏழு வகை காற்று பற்றிய குறிப்புகள் உள்ளன. உயிர் வாயு எனும் ஆக்ஸிஜன் ஆவாஹன் எனவும், வானத்தில் உள்ள நீரை தாங்கி நிற்கும் காற்றாக ' விவாஹன்" என்றும், மேகத்தை மழையாக மாற்றக் கூடிய குளிர் காற்று 'உத்வாஹன்' என்றும், மழை பொழிவதற்கு காரணனாக "ப்ரவாஹன்" ஆகவும், பாலைவன வறண்ட நிலப்பகுதி காற்றாக 'சம்வாஹன்' எனவும் சூரிய சந்திரன் இவற்றிலிருந்து வீசப்படும் கதிர்கள். அதாவது தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளின் படி மின்காந்தக் கதிர்கள் புற ஊதாக்கதிர்கள் இவற்றைத் தாங்கும் 'பரிவாஹன்' ஆகவும் செயல்படுகிறார் வாயு பகவான்.



அஷ்ட திக் பாலகர்களில் வாயு பகவான் வடமேற்கு திசையின் அதிபதியாக விளங்குகிறார். அத்துடன் காளஹஸ்தியில் வாயுலிங்கமாக இவரது சிறப்பு விளங்குகிறது. திருவண்ணாமலையிலும் அக்னியின் உற்ற தோழனாக இவரது தொடர்பு அறியப்படுகிறது. சுவாதி நக்ஷத்திரத்தின் அதிபதியாகவும் கருதப்படுகிறார் வாயு பகவான்.


 




7 comments:

  1. Highly informative..divine.. kudos to your efforts in bringing all the celestial treasure information.i could understand your efforts and strains for compiling it...all the best.. looking forward for your further valuable epistles in the days to come..

    ReplyDelete
  2. Thankskka. Thanks a lot. 🙏🙏🙏Namaskaram.

    ReplyDelete
  3. Came to know a lot of unknown matters. Thank you so much.

    ReplyDelete
  4. Thanks 😅🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  5. Very good information Vasanthima.
    Stay blessed always.
    Vijaya from krishnagiri.

    ReplyDelete
  6. SUPER. Thank you very much for your valuable information.

    ReplyDelete
  7. Thank you so much. 😄🙏🙏🙏🙏

    ReplyDelete