Friday 14 April 2023

ஸ்ரீரங்கம் வையாளி வேடுபறி உற்சவம்.

 




ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி முதல் இராபத்து உற்சவம் தொடங்கப்பெறும். இதில் எட்டாம நாள் உற்சவமான ' வையாளி வேடுபறி" அழகும், கம்பீரமும், விறுவிறுப்பான உற்சாகத்துடன் விளங்கக்கூடிய உற்சவமாகும். 


வையாளி - என்றால் குதிரையின் ஒருவித அணி நடை அழகு. 


தங்கக் குதிரை வாகனம்



ராப்பத்து விழாவின் 8 ஆம் நாளான நாளைய தினம் ஜனவரி 9 . 2023 திங்களன்று திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் கோயிலின் நான்காம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் மிக விமர்சையாக நடைபெற உள்ளது



வேடுபறி நிகழ்ச்சியையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளுவார். 


சோழமன்னன் தன் படைத்தளபதியான " கலியனின்" வீரத்தை மெச்சி, தன்குடையின் கீழிருந்த  ' திருமங்கையின்' மன்னனாக முடிசூட்டினார். அது முதல் திருமங்கை மன்னன் என அழைக்கப்பட்டார். இவரே 12 ஆவது கடைசி ஆழ்வார் ஆவார்.


 வைணவ குலப் பெண்ணான,  இவரது காதலி குமுதவல்லியின் வேண்டுகோளை ஏற்று பெருமாளை வழிபடத் துவங்கினார். நாளடைவில் இவரே ஸ்ரீரங்கனின் மேல் அளவில்லாத பக்தியுடன், கைங்கர்யம் செய்யத் தொடங்கி விட்டார்.


இதனால் அவரது ராஜ்ஜியம் சொத்து எல்லாம் கரைந்த நிலையில், பிச்சை எடுத்தும் அதில் போதிய அளவு பொருள் கிடைக்காததால், வழிப்பறி கொள்ளை செய்து, பெருமாளின் கைங்கரியத்தை தொடர்ந்தார். இந்நிலையில், இவரை ஆட்கொள்ளத் திருவுள்ளம் கொண்ட பெருமாள், தானே சர்வாலங்காரத்துடன் அவர்முன்


வரவும், அவரையும் வழிப்பறி செய்யலானார் திருமங்கை மன்னன்.


 எம்பெருமானும் குறும்புடன் மன்னனிடம் சிறிது நேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் 'ஓம்நமோ நாராயணாய' எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்டதே இந்த "வேடுபறி திருவிழா".



வையாளி என்பது குதிரையின் பல நடையழகுகளில் ஒன்று. ஒருவகையான அணி நடை அது. பாற்கடலின் அலைபோல மேலும் கீழுமாய் அரங்கனை குதிரை தாலாட்டும் அழகு நடை அது. பாற்கடலும் அரங்கனை இப்படித்தான் கொஞ்சும் போலும்.




வையாளியில் மூன்று நிலைகள் உள்ளன: தயாராகுதல், வேடுபரி (நேர் வையாளி), உச்சக் கட்டம் (கோண வையாளி)




தயாராகுதல்:


 குதிரை வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒத்திகை பார்ப்பது போல, தயார்நிலையை சோதனை முயற்சியாக பெருமாளை வலம் வருவார்கள். அடுத்து, 


வேடுபரி : எல்லாரும் தயாரானவுடன், பெருமாள் மணல்வெளியின் ஓர் பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு ஓட்டமெடுத்து விரைவார்


பின் அங்கிருந்து பெருமாள் மீண்டும் திரும்பி தொடங்கிய இடத்திற்கு விரைகிறார். பின் அங்கிருந்து மெதுவாக நடந்து மணல்வெளியின் நடுவிற்கு வந்து நிலை கொள்கிறார்.


வையாளி நடை போட்ட பின்னர், பெருமாள் கதம்ப மாலையிட்டு தூண்டில் சாய்ந்தார் ஒய்யாரமாக  பக்தர்களுக்கு காட்சி தருவார்.முத்துப்பாண்டியன் கொண்டையும் நெஞ்சில் நீலநாயகமும் தரித்திருக்கிறார். அதிக அணிமணிகள் வேட்டைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் எளிமையாக ஒரு காசுமாலை மட்டும் அவரது கழுத்தில் அழகுபெறுகிறது.




இதனையடுத்து, கோணவையாளியான உச்சக்கட்டத்தை தொடங்குவதற்காக மணல் வெளியின் மறுபுறத்திற்கு விரைகிறார். இதுதான் வேடுபரியின் உச்சக்கட்டம். கோணவையாளி என்பது பெருமாள் சற்றேறக்குறைய இருபது கஜம் பக்கவாட்டில் நகர்ந்து அங்கிருந்து அரைவட்டமடிப்பது. 


பரி என்ற சொல் பொன்னையும் குறிக்கும். 


இதன் தாத்பர்யம் என்னவெனில்,


வேடுபரி என்றால் பொன்னை வேட்டையாடுதல் என்றும் பொருள். திருமங்கை ஆழ்வார் இறைவனுக்காக பொன்னை வேட்டையாடினார். இறை வேட்கையால் பொன் வேட்டையாடிய அவரை ஆட்கொண்ட அந்த அன்பின் அனுபவமே இந்த வேடுபரி உற்சவம். 


இது ஸ்ரீரங்கத்தில் மட்டுமே நடத்தப்பெறும் உன்னதமான உற்சவம் ஆகும். 


பி.கு:  இந்த நிகழ்வை கனகதுர்கா கோயில் அர்ச்சகர்,  ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட உயர்திரு. ரகு குருக்கள் கூறக்கேட்டு அடியேனால் எழுதப்பட்டது. 


நன்றி.  வணக்கம்.



No comments:

Post a Comment