எறிபத்த நாயனார் .
கருவூரில் மாசி ஹஸ்த நக்ஷத்திரத்தில் அவதரித்த் எறிபத்த நாயனார் சிவனடியார்களுக்கு திருத்தொண்டு புரிவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவர் தன் கையில் எப்பொழுதும் 'மழு' என்னும் ஆயுதம் தாங்கியிருப்பார்.
ஒரு சமயம் கருவூரிலேயே வசித்து வந்த முதுபெரும் சிவதொண்டரான'சிவகாமியாண்டார்' என்பவர், அதிகாலையில், திருக்கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்காக புத்தம்புது மலரினை பறிப்பதற்கு முன், தன் வாயிலிருந்து உமிழ்நீர்த் துளிகள் எதுவும் மலர்களில் சிந்தி அதன் தூய்மை கெடாவண்ணம் துணியினால் தன் வாயினைக் கட்டிக் கொள்வார். பின் வாசம் நிறைந்த மலர்களை அழகிய மாலையாகத் தொடுத்து தள்ளாடியவாறு கோயிலுக்குச் சென்று சிவபிரானின் 'திருப்பள்ளியெழுச்சிக்கு' முன் சேர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அச்சமயம் அந்நகரை ஆண்ட ' புகழ்சோழ நாயனாருடைய' பட்டத்து யானையை கவனித்துக் கொள்ளக்கூடிய பாகர்கள் ஐவர், மஹாநவமி நாளன்று காவிரியில் யானையைக் குளிப்பாட்டி யானையை கட்டுக்குள் வைக்கும் விதமாக யானை மேல் ஒருவரும் யானையின் முன்பாக இருபக்கங்களில் இருவரும், பக்கவாட்டில் இருவருமாக பாகர்கள் புடைசூழ வெகுவேகமாக அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது பட்டத்து யானையானது செல்லும் வழியில் தனக்கு முன்பாக தலையில் பூக்கூடையுடன் தள்ளாட்டத்துடன் சென்று கொண்டிருந்த வயது முதிர்ந்த சிவகாமியாண்டாரிடமிருந்து பூக்கூடையை தன் துதிக்கையினால் பறித்து தரையில் விசிறி எறிந்து தன் வழியே சென்றது. பாகர்களும் இதை பொருட்படுத்தாமல் அலட்சியத்துடன் விரைந்தனர்.
யானையின் இச்செயலால் மனம் பதறிய சிவகாமியாண்டார், வருத்தமும் இயலாமையும் ஒன்றுசேர, தேவரீருக்குச் சாத்தும் படியான இந்த மலர் மாலை பயன்படாமல் போனதே என ஓலமிட்டு அழுதார்.
அச்சமயம் அங்கு வந்த எறிபத்தர், விவரம் அறிந்து யானை சென்ற திசை நோக்கி விரைந்து, யானையை கட்டுப்படுத்த ஒன்றுக்கு ஐந்து பாகர்கள் இருந்தும், அதை சரிவர கட்டுக்குள் வைக்கத் தவறியதோடு, சிவத்தொண்டுக்கு இடையூறு விளைவித்த அவர்களின் அலட்சிய போக்குக்கு தண்டனையாக, தன் கையில் வைத்திருந்த மழு ஆயுதத்தால் யானையின் துதிக்கையை துண்டித்தும், யானை பாகர்கள் ஐவரது உயிரையும் கொய்தார்.
தன் பட்டத்து யானையும் பாகர்களும் கொல்லப்பட்ட செய்தியை கேட்ட மன்னன், இது ஏதோ எதிரி நாட்டவரின் வேலையாக இருக்கும் என்றெண்ணி, தன் படைவீரர்களுடன் அவ்விடத்திற்கு வந்தார்.
வந்த இடத்தில் கோபத்துடன் 'ஏறு' போல் மழு தாங்கி நின்றிருக்கும் எறிபத்தரை கண்ட மன்னன், இப்பேர்ப்பட்டசிவனடியாரான இவரா! இத்தகு வேலையைச் செய்திருப்பார்!! எனின், சிவ அபராதம் காரணமாகவே இவ்விதம் நிகழ்ந்திருக்கும் என்று ஊகித்து, பட்டத்து யானையையும் அதன் பாகர்களையும் சரியானபடி நிர்வகிக்காத அரசனான நானே!, முதல் குற்றவாளி! தானே சிவ அபராதி!. ஆகையால் தாங்கள் என்னையும் தண்டித்து, இந்த சிவ அபராதத்திலிருந்து என்னை காப்பாற்ற வேண்டும்.
தங்களது மங்களப் பொருளான, மழுவால் தீண்டுவதற்கு கூட தான் அருகதையற்றவனானேன். எனவே, எனது வாள் கொண்டு என்னைத் தண்டியுங்கள்! என்று மண்டியிட்டு வேண்டினார்.
மன்னனது சிவபக்தியைக் கண்டு, தான் அவசரப்பட்டு விட்டோமோ?! என்று மனம் வருந்தி, மன்னனின் உடைவாளை வாங்கி தன் கழுத்தைத் தானே அறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முனைந்தார் எறிபத்தர்.
அது கண்டு மனம் பதறிய மன்னன் அவரைத் தடுத்து நிறுத்த, அப்பொழுது விண்ணிலிருந்து அசரீரி ஒலித்தது. தங்கள் அனைவரது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டவே, இப்படியொரு திருவிளையாடலைப் புரிந்தோம் என்றதொடு, உடன் சிவகாமியாண்டரின் பூக்கூடையில் திரும்பவும் தூய்மையான மலர்கள் நிரம்பின. கூடவே யானையும் பாகர்களும் உயிர் பெற்று எழுந்தனர்.
எறிபத்த நாயனாரும் மன்னனிடம் அன்பு கொண்டு, தாங்கள் யானை மீதேறிச் சென்று என்னை மகிழ்வுறச் செய்யுங்கள் என்றார். மன்னனும் எறிபத்தரின் பாதங்களில் விழுந்து வணங்கி, தன் பரிவாரங்களுடன் அரண்மனை திரும்பினார்.
எறிபத்த நாயனாரும் அடுத்து வந்த காலங்களில் பல சிவ தொண்டுகள் புரிந்து, சிவ கணங்களுள் ஐக்கியமானார்.
இத்திருநாளில் இந்த நிகழ்வினை நினைவு கூர்ந்து இறைகருணையை உலகுக்கு உணர்த்தும் விதமாக, சாங்கோபாங்கமாக நிகழ்த்தி மகிழ்வர்.



Nice information Vasanthi 💐🙏
ReplyDeleteThanksnna. Namaskaram.
Delete