Friday, 21 November 2025

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.

 

        முத்துஸ்வாமி தீக்ஷிதர்.

       MUTTHU SWAMI DEEKSHIDAR.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்களின் ஜயந்தி, பங்குனி மாத கிருத்திகை நக்ஷத்திரத்தன்று கொண்டாடப்படும்.

ராமசாமி தீக்ஷிதரும் அவர்தம் துணைவியாரான சுப்புலக்ஷ்மி அம்மையாரும் குழந்தை வரம் வேண்டி, வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார ஸ்வாமியை த்யானித்து, தவமான தவமிருந்து பிறந்த குழந்தை. அதனால் திருமுருகனது நாமமான " முத்துஸ்வாமி' என்ற பெயரையே தம் குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்தனர். இவருக்கு பின், இரு தம்பிகளும் ஒரு தங்கையும் பிறந்தனர்.

   முத்துஸ்வாமி அவர்கள், தன் தந்தையிடமே சங்கீதம்,  சமஸ்கிருதம், தெலுங்கு, காவியம்,  நாடகம் மற்றும் இலக்கணம் என அனைத்தையுமே கற்றுத் தேர்ந்தார்.

கர்நாடக சங்கீதம் தவிர, இந்துஸ்தானி சங்கீதமும் கற்றார். வீணை இசைப்பதிலும் வித்தகர்.

இவரது குரு. 'சிதம்பரநாத யோகி, ' முத்துஸ்வாமிக்கு " மஹாவித்யா" தீட்சை மந்திர உபதேசம் செய்ததோடு தன்னுடனேயே காசி விஸ்வநாதரை தரிசிக்கவும் அழைத்துச் சென்றார்.

அதுசமயம், தீக்ஷிதருக்கு கங்கையில் அழகிய 'வீணை' கிடைத்தது. அந்த வீணையின் 'யாழி' வழக்கத்ட்ஜிற்கு மாறாக மேல் நோக்கி இருந்தது. அத்துடன் அவ்வீணையில் 'ராமா' என்றும் பொறிக்கப்பட்டு இருந்ததாம்.

(தீக்ஷிதருக்கு கங்கையில் கிடைத்த வீணை)

இவரது அளப்பரிய ஞானம் கண்டு  மகிழ்வுற்ற குருவும் தன் இறுதிக் காலத்தில் தீக்ஷிதரிடம், திருத்தணி முருகனை தரிசித்து, அவன் அருள் பெற்று சங்கீதத்தை பரவச் செய்யப் பணித்தார்.
அவ்வண்ணமே, இவரும் திருத்தணி முருகனை தரிசிக்க மலைமேல் ஏறிச் செல்லும் போது, வயதானவர் ஒருவர் எதிரில் வந்து, 
முத்துஸ்வாமி! வாயைத் திற! 
என்று கூறி 'கல்கண்டை' வாயில் போட்டு மறைந்தார்.
கல்கண்டை மென்ற மாத்திரத்தில் மயில் மேல் முருகன் ஏறிச் செல்லும் காட்சியை தரிசனம் பெற்றார். அதன்பின், நாவண்மை பெற்றவராய் பற்பல அற்புத இசைப்பாடல்கள் புனைந்து பாடும் திறம் பெற்றார்.



அதன்பின், பல திருத்தலங்களுக்கும் சென்று அற்புதமான பாடல்களை இயற்றி, இசைத்தொண்டு புரிந்தார். இவரது பாடல்களில் அப்பாடலின் ராகத்தின் பெயரும், இவரது முத்திரையான 'குருகுஹ' என்ற பதமும் இடம் பெற்றிருக்கும்.
குஹனே குருவாக வந்து ஞானம் அளித்ததால், அதையே தன் முத்திரையாக வைத்துக் கொண்டார்.


மேலும் "ஷோடஸ கணபதி" என்று  பதினாறு கணபதிகள் பெயரில் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.
அதில், 
"வாதாபி கணபதிம் பஜே"
என்ற கிருதியும்,
" ஸ்ரீமஹா கணபதி
என்ற கிருதியும் உலகப் பிரசித்தி பெற்றவை.

இவரது பாடல்கள் அனைத்தும் புதிதாக சங்கீதம் கற்றுக் கொள்பவர்கள் எளிதாகப் பயிலும் வகையிலும், அதே சமயம் சங்கீத மேதைகள் தங்களது திறமையை எடுத்துக்காட்டும் வகையிலும் அமைந்திருப்பது இவரது கிருதிகளின் தனி சிறப்பம்சமாகும். இவரது கிருதிகளை  'இளநீர் போல தித்திக்கும்' என வர்ணிப்பர்.

இவரது தம்பி 'பாலு தீக்ஷிதர்' எட்டயபுர சமஸ்தான மன்னரிடம் சங்கீத வித்வானாக பணிபுரிந்து கொண்டிருந்தார். அச்சமயம் பாலுஸ்வாமிக்கு, மன்னரே திருமண ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினார். அத்திருமணத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு தம்பியைக் காண எட்டயபுரம் புறப்பட்டார். வழியில், மழையின்றி  பாளம்பாளமாக வெடித்துக் காணப்பட்ட வறண்ட நிலப்பகுதிகளைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தார்.
உடனேயே, அவ்விடத்திலேயே அம்பிகையை நினைத்து உருகி, அம்ருதவர்ஷிணி ராகத்தில் 
"ஆனந்தாம்ருதவர்ஷிணி என்ற பாடலை இயற்றிப் பாடினார். உடனே எங்கிருந்தோ கருமேகங்கள் திரண்டு மழை பொழிந்தது. மக்கள் மனம் மகிழ்ந்து அவரைக் கொண்டாடினர். மன்னரும் அவரைப் பணிந்து, எட்டயபுரத்திலேயே தங்கி தனக்கு 'குருவாகவும்', அரண்மனையின் வித்வானாகவும் இருக்க அன்போடு வேண்டினார். மன்னரின் வேண்டுகோளை ஏற்று முத்துஸ்வாமி தீக்ஷிதரும் தன் இறுதிக் காலம் வரை அங்கேயே வாழ்ந்தார்.

தீபாவளித் திருநாளில் மன்னன் தன் பட்டத்து யானைக்கு 'கஜபூஜை' செய்வது வழக்கம். அதற்காக, யானைப்பாகன் 'காங்கேயன்' எனும் அந்த யானையை நீராட்டுவதற்க்காக தெப்பக் குளத்திற்கு அழைத்துச் சென்றான்.
எப்பொழுதும் குளத்தில் குளித்து விளையாடி மகிழும் யானை, அன்று குளத்தில் இறங்க மறுத்து, நிலைகொள்ளாமல் தவித்து, சுடுகாட்டை நோக்கி ஓடி மணலில் புரண்டு பெருங்குரலெடுத்துப் பிளிறியது.

செய்வதறியாது திகைத்து நின்ற பாகன், உடனே விரைந்து சென்று மன்னனிடம் நடந்ததைக் கூறினான். இத்சிக் கேட்ட மன்னன்!  அதிர்ந்து, இது அபசகுனமாயிற்றே!! இதனால் என்ன தீங்கு நேரிடுமோ?! என அஞ்சினார். உடன் ராணியாரின் அறிவுரைப்படி, தனது குருவான முத்துஸ்வாமி தீக்ஷிதரை நாடி அதற்கான தீர்வினைக் காணச் சென்றார்.

அவரது வீட்டில், தீக்ஷிதர் இயற்றிய, " மீனலோசனி பாப மோசனி" என்ற கிருதியை சீடர்கள் பாட ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். மன்னனின் வருகையும், கலங்கிய முகமும் அவரது பரபரப்பையும் கண்டு, தீக்ஷிதர் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து, மன்னனின் கலக்கத்திற்கான காரணத்தை அறிந்தார்.
பின், மன்னனைப் பார்த்து, கவலைப்படாதே!  இந்த அபசகுனத்தால், உனக்கோ, உன் குடும்பத்திற்கோ, உன் நாட்டு மக்களுக்கோ எந்தவித தீங்கும் நேராது! யானை அமைதி பெற்று திரும்பும் என ஆசிர்வதித்தார்.
இதனால் மனம் நிம்மதி அடைந்தவராய், அரண்மனை திரும்ப, தீக்ஷிதர் கூறியபடி யானையும் அமைதி பெற்று அரண்மனை திரும்பியது.
மன்னனை அமைதிபெறச் செய்து அனுப்பிய பின், தீக்ஷிதர் தன் சீடர்களிடம், இன்று சதுர்த்தசி திதி. அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். அதனால் நீங்கள் " மீனாக்ஷி மேம்முதம் தேஹி" என்ற கிருதியைப் பாடுங்கள் எனக் கூறி, அதைக் கேட்டவாறே, அன்னலட்சுமி முன் ஏற்றிய தீபத்தின் ஜோதியோடு ஐக்கியமாகி விட்டார்.
தீக்ஷிதர் சித்தி அடைந்ததைக் கேட்ட மன்னன், அடக்கடவுளே! எங்களுக்கு எந்த தீங்கும் நேராது என்று கேட்டு நிம்மதி அடைந்த நான், தங்களை எப்படி மறந்தேன்? எனக் கதறினார்.
பின்,  வைதீக முறைப்படி அவருக்கான இறுதிக் காரியங்களை செய்து, 'அட்டகுளம் கரையில்' தீக்ஷிதருக்கு சமாதி எழுப்பி வழிபாடு செய்தார்.




1 comment:


  1. Tku vasanthi
    Soooo much full of new infos

    Wl tell this t my grandchildren

    ReplyDelete