Saturday 16 October 2021

ஐப்பசி துலா ஸ்நானம் மற்றும் அன்னாபிஷேகம்.

                   துலா ஸ்நானம் 2021

  • அக்டோபர் 18 ந்தேதி திங்கட்கிழமை  ஐப்பசி எனும் துலாம் மாதம் துவங்க இருக்கிறது.தராசு முள் போல் இரவும் பகலும் சமமாகக்  கொண்ட மாதமானதால் 'துலாம் மாதம்' என போற்றப்படுகிறது. [துலாம் - தராசு] 
ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடுவது பாபத்தை போக்கி புண்ணியத்தை  அருளுவதாகும். 
ஏனெனில், கங்கை யமுனை சரஸ்வதி போன்ற இன்னபிற புனித நதிகள் கூட இந்த மாதத்தில்  காவிரியில் புனித நீராடுவதாக ஐதீகம். 
ஒருமுறை கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் தங்களின் மேல் கறை படிந்து தங்கள் உடல் கருப்பாக மாறியதைக் குறித்து பிரம்மதேவனிடம் மனக் குறையை வெளிப்படுத்தினர். அதற்கு பிரம்மா, மக்கள் தங்கள் பாவத்தை போக்கிக் கொள்ள, புனித நீராடுவதன் விளைவே அப்பாவச் சுமைகள் கறை போல் உங்கள் மேல் படிந்துள்ளன. 
இப்பாவச் சுமையைப் போக்க, நீங்கள் துலா மாதத்தில் காவிரியில் புனித நீராடுங்கள் எனக் கூறியதன் பேரில், காவிரியில் நீராடி  தங்கள்  மேல் படிந்த  பாவக் கறைகளை போக்கிக் கொண்டனர். அதனால் காவிரி பாயும் அனைத்து தலங்களிலும்  நீராடுவதன் மூலம் கங்கை முதல் அனைத்து நதிகளிலும்  நீராடிய பலன் கிட்டும் என்பதே  இதன் கூடுதல் சிறப்பு.
ஆயினும், காவிரி துலா ஸ்நானத்திற்கு சிவாலயங்களில் சிறந்ததான மயிலாடுதுறையும், விஷ்ணு ஆலயங்களில் சிறந்ததான ஸ்ரீரங்கமும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. 
  ஒருமுறை, சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேத சாரத்தினை எடுத்து உரைத்தார். அச்சமயம், கவனம் சிதறி ஆங்கே நந்தவனத்தில், உலவிக் கொண்டிருந்த, மயிலின் அழகில் மனம் லயித்து இருந்தாள் அன்னை பார்வதிதேவி. இதனைக் கண்ட சிவனார், மயிலாகப் பிறக்கக் கட்டளையிட்டார். 
 உடன் மயிலாக மாறிய அன்னை, பூவுலகின் இத்திருத் தலத்திற்கு வந்து சிவபூஜையில் ஈடுபட்டார். அன்னையின் பிரிவைத் தாளாத இறைவனும்,  ரிஷப வாஹனத்தில் இத்தலத்தை நோக்கி பயணித்தார். இது கண்ட மற்ற தேவாதி தேவர்களும் தம்தமது வாஹனத்தில் ஐயனைப் பின் தொடர்ந்தனர். 
    அப்பொழுது நந்திதேவர் கர்வத்துடன் அனைவரை விடவும் அதிவேகமாக   விரைந்து இத்தல காவிரி  நதியின் நடுவே வந்து இறங்கினார். அவரது கர்வத்தை அடக்க எண்ணிய ஈசன், நந்தியை பாதாள உலகத்தில் அழுத்தி விட்டார். தவறுணர்ந்த நந்தி மன்னிப்பு வேண்டவே, அத்தலத்தில் இருந்து காவிரியில் நீராடும் பக்தர்களுக்கு அருள் புரியும்படி கூறி மறைந்தார்.
image.png
    மயில் வடிவில் தன்னை பூஜிக்கும் அன்னையின் பொருட்டு தானும் மயில் உருக் கொண்டு  'மயூர தாண்டவம்" ஆடி அன்னையை மகிழ்வித்து கரம் பற்றினார் ஈசன். மயில் பூஜித்த தலம் ஆதலால் 'மயிலாடுதுறை' எனவும் இறைவன் மயூர நாதன்' எனவும் அழைக்கப்படலாயினர். 
image.png
       அவ்வண்ணமே  விஷ்ணுவின் திவ்யத்  தலமான  ஸ்ரீரங்க நாதருக்கு, இந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் துலா ஸ்நானமாக   காவிரியில்   இருந்தே  தீர்த்தம் எடுத்து மேள தாளத்துடன் யானை மீதேற்றி  வேத கோஷங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் காவிரி நீர் எடுத்து வரும் குடம் முதல் குடை சாமரம், ஸ்ரீரங்கனை அலங்கரிக்கும் ஆபரணங்கள் வரை அனைத்துமே தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 
image.png
image.png
  
                       
                          அன்னாபிஷேகம்

அடுத்து, அக்டோ. 20. 2021புதன் கிழமையன்று ஐப்பசி மாத பௌர்ணமி திதியில் விசேஷமான 'மஹா அன்னாபிஷேகம்". 
பஞ்ச பூதங்களான நிலம், நீர் , நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் இவற்றால் ஆனது இவ்வுலகம். அவ்விதமே நாம் உண்ணும் உணவும் பஞ்சபூதங்களின் கூட்டமைப்பே.  அதனால் ஒரு பருக்கை சாதத்தை கூட நாம் வீணடிக்கக் கூடாது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. உலகின் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் எம்பெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக நீர், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் மற்றும் வாசனா திரவியங்களால் அபிஷேகம் செய்தபின், கடைசியாக ஈசன் திருமேனியில் பக்குவமாகச் சமைத்த அன்னத்தை சாற்றுகிறார்கள். 
image.png
"சோறு கண்ட இடமே சொர்க்கம் "  என்ற பழமொழியினை கேட்டிருப்பீர்கள். அதாவது, இவ்விதம் அன்னாபிஷேகம் செய்த லிங்கத் திருமேனியைக் 
காண்போருக்கு சொர்க்கம் கிட்டும்   என்பதே இதன் பொருள். 

No comments:

Post a Comment