Saturday 9 October 2021

பெருமாளுக்கே நிபந்தனை விதித்த மேதாவி முனிவர்.

 


அக்டோ. 10ந்தேதி ஞாயிற்றுக் கிழமை இன்றைய தினம், பாதூர் கருட சேவை. கும்பகோணம் திருவாரூர் வழிப்பாதையில் அமைந்துள்ள வைணவ்த் தலமான 'நாச்சியார் கோயில்". இங்கு தாயாருக்கே அபிஷேக ஆராதனைகள் என அனைத்திலும் முதலிடம். ஏன் தெரியுமா? திருநறையூர் என்ற புராணப் பெயர் கொண்ட இத்தலம் 'நாச்சியார் கோயில்" என சிறப்புப் பெற்றதும் மேதாவி மஹரிஷி போட்ட நிபந்தனையே  காரணம்.

சுவாரஸ்யமான இக்கதையை அறிவோம் வாருங்கள்.
கடுந்தவங்கள் மூலம் ஞான நிலையை அடைந்து சதாசர்வகாலமும் பெருமாளையே துதித்த வண்ணம் இருந்த 'மேதாவி' எனும் மஹரிஷிக்கு, பெருமாளே தனக்கு மருமகனாக வந்தால் அது தனது பெரும் பாக்கியமாக இருக்கும் அல்லவா? என்ற ஆசை திடீரென உதித்தது.  . 
மகளே இல்லாத அவருக்கு மருமகன் எப்படி வருவார்? ஆயினும், அவரது ஆசையைப் பூர்த்திசெய்ய திருவுள்ளம் கொண்டார் எம்பெருமான். மஹாலக்ஷ்மி தாயாரும் எம்பெருமானின் திருவுளப்படி, மேதாவி மஹரிஷியின் நந்தவனத்தில் அழகிய பெண்குழந்தையாக, 'வஞ்சுள மரத்தடியில்' அவதரித்தாள்.
   வஞ்சுள மரத்தடியில் அக்குழந்தையைக் கண்டெடுத்த மஹரிஷி அகமகிழ்ந்து, 'வஞ்சுளவல்லி'என பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

     வஞ்சுள வல்லி பருவ வயதை அடைந்ததும்,  இதற்காகவே காத்திருந்தது போல் கருடாழ்வார், திரு நறையூரில் தாயார் வஞ்சுளவல்லியுடன் எம்பெருமானை சேர்த்து வைக்கும் வேட்கையுடன் தாயாரது லாவண்யம், அழகு அறிவு, பெருமை இன்னபிறவற்றையெல்லாம் பெருமானிடம் எடுத்துக் கூறி, தாயாரின் வருகையினாலேயே வைகுண்டமும் பொலிவு பெறும் என்று மஹாவிஷ்ணுவை தன் மேல் ஏற்றிக் கொண்டு அழைத்து வந்தார். 

 மஹாவிஷ்ணுவும், அந்தணராக  உருமாறி, மேதாவி மஹரிஷியின்   வீட்டிற்கு விருந்தாளியாக வந்தார்.விருந்தினர் யாராக இருந்தாலும் அவர்களை தக்க முறையில் கவனித்து மகிழ்விப்பது நமது தலையாய கடைமையல்லவா?. அதனால், வீடு தேடி வந்த அந்தணரை உபசரித்து அமுது படைத்தார் மஹரிஷி. அப்பொழுது, விருந்தினர் உணவு உண்ட பின், கைகளை அலம்புவதற்கு உண்டான இடத்தைக் காட்டி உதவி புரிய அவருக்கு நீர் எடுத்துத் தர தன் மகளைப் பணித்தார்.  அதுசமயம், விஞ்சுளவல்லியின் கரத்தைப் பற்றினார் அந்தணர்.
    இதைக் கண்டு அடாத செயலைச் செயுத அந்தணருக்கு சாபம் கொடுக்க கோபத்துடன் நிமிர்ந்தார் மஹரிஷி. உடன் அந்தணரும் மஹாவிஷ்ணுவாக காட்சியளித்து, தனக்கு அவரது மகளை திருமணம் செய்து தர வேண்டினார். இதனால், மிகவும் மனம் மகிழ்ந்தாலும், 
என்னதான்   தனது உற்ற தெய்வம் ஆனாலும், ஒவ்வொரு தந்தைக்கும்  தன் மகளிடத்தில் உள்ள வாஞ்சையை ஆங்கே அவரும் நிரூபித்தார்.
எம்பெருமானிடத்தில், ஒரு நிபந்தனை!  அனைத்திலும் என் மகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்றும், அத்துடன் இத்தலம், தன் மகளின் பெயரால் " நாச்சியார் கோயில்" என அழைக்கப்பட வேண்டும் என்ற அவரது நிபந்தனையை எம்பெருமானும் ஏற்றுக் கொண்டு, தாயாரை மணந்து கொண்டார். அதுமுதல் இத்திருத் தலம் "நாச்சியார்  கோயில்" என அழைக்கப்படலாயிற்று..     
   இன்றளவிலும் விழாக்காலங்களில் ஊர்வலத்தின் பொழுது, தாயார் திவ்ய அலங்காரத்துடன் இடுப்பில் 'சாவிக் கொத்து' சொருகப்பட்ட நிலையில், அன்னப் பட்சி வாஹனத்தில் முன்னே செல்ல, எம்பெருமான் கருட வாஹனத்தில் பின் தொடருவார். 
   இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், கல்கருட வாஹனத்தை  முதலில் நால்வர் மட்டுமே சுமந்து வரும் நிலையில், அடுத்தடுத்த தூரம் கடந்தபின், சிறிது சிறிதாக பாரம் கூடி எண்மர், பதினாறு, 32 , 64 மற்றும் 128 பேர் என  ஆட்களின் எண்ணிக்கை படிப்படியாக கூடிக் கொண்டே போகும். வீதிஉலா நிறைவு பெற்று, திரும்பவும் நிலைக்கு வரவர. அதே கிரமப்படி ஆட்களின் எண்ணிக்கை குறைந்து சன்னதி அடையும் பொழுது  நால்வராக  முடியும் அதிசயம் இன்றளவிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 
   இதுவும் கருடனது ஆழ்ந்த பக்தியை விளக்குவதாகவே உள்ளது. ஆம்! அன்னப் பறவையால் கருடனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதல்லவா?. தாயாரைப் பின் தொடர்ந்து தானே எம்பெருமான் செல்வதாக கொடுத்த வாக்கு தவறிவிட்டால்  என்னவாகும்? என்ற எண்ணத்தில், கருடாழ்வார், முதலில் இலகுவாக நால்வர் மட்டுமே தூக்கிச் செல்லச் செல்ல, பின் எடை அதிகரித்து பாரம் தாங்க முடியாமல் ஆட்களின் எண்ணிக்கையை கூட்டி, மெதுவாக செல்லும்படியாக தன்னை ஆக்கிக் கொண்டார். 
     இவரது, ஆழ்ந்த இத்தகைய பக்தியின் காரணமாகவே, வேறு எங்கும் காண இயலாத வகையில், கருடனுக்கு தனி சன்னதி மூலஸ்தானத்திற்க்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு 'திருவாராதனம்' சமர்ப்பித்த பின் இந்த கல்கருடனுக்கும்   ஆராதனம் நடக்கும்.

No comments:

Post a Comment