Saturday 23 October 2021

ஸ்ரீரங்கம் டோளோத்ஸவம்

 அக்டோ. 24 ஞாயிற்றுக்கிழமை இன்றைய தினம் ஸ்ரீரங்கம் டோளோற்சவம் துவங்க இருக்கிறது. டோளா என்றால் ஊஞ்சல். 

சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இன்றி ஊஞ்சல் ஆடுவதில் மிகுந்த விருப்பம் கொள்வர். மனம் உடல் ஆரோக்கியத்தை தரவல்ல இந்த ஊஞ்சல் விளையாட்டில் எம்பெருமான் தாயாருடனும் ஆண்டாள் நாச்சியார் மற்றும் துளுக்க நாச்சியாருடன் எழுந்தருளி ஊஞ்சல் சேவை சாதிக்கும் நேரத்தில் மனமகிழ்வுடன் இருப்பார்கள். 
   இந்த ஊஞ்சல் சேவையை நாம் கண்குளிர தரிசிக்க நம் மனமும் இலகுவாகி மனமுருகி வேண்டுவதை ஸ்ரீரங்கனும் நிறைவேற்றி அருள் புரிவார் என்பது நம்பிக்கை. 
image.png
இத்தகைய திரு நாளில், திருவரங்கன் இங்கே எழுந்தருளிய சரிதத்தை அறிவோம்!!
    வைகுண்டத்தில் பிரம்மன் மஹாவிஷ்ணுவிடமிருந்து பள்ளிகொண்ட பெருமானது விக்ரகத்தை பெற்று, தான்  பூஜித்து வந்ததை சூரிய பகவானுக்கு அளிக்க, சூரியதேவன் வழிபட்டதோடு அவரது  குல வழித் தோன்றல்களாலும் பரம்பரையாக பூஜிக்கப்பட்டு, கடைசியாக  ராமபிரானும் அயோத்தியில் நித்தியம் வழிபட்டு வந்தார்
image.png
ராவணனிடம் இருந்து சீதையை மீட்பதில் விபீஷணன் பங்கு அளவிட முடியாதது. அதனால் ராமர், தன் நன்றியை தெரிவிக்கும் விதமாக தனது பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்ட விபீஷணணுக்கு தான் பூஜித்து வந்த பள்ளிகொண்ட பெருமானான ஸ்ரீமன் நாராயணனின் விக்ரகத்தை பரிசாக அளித்தார்.
image.pngimage.png
மிகுந்த மனமகிழ்வுடன் விபீஷணன் அதை  பெற்றுக் கொண்டு இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சூரிய வழிபாடான "சந்தியாவந்தனம்" செய்யும் காலம் நெருங்கியது. இலங்கைக்கு இந்த விக்ரகம் சென்றுவிட்டால் மீண்டும் அசுரர்களின் ஆதிக்கம் ஓங்கி விடும் என அஞ்சிய தேவர்கள், விநாயகரின் உதவியை நாட அவரும் அவர்கள் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, அங்கே ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் போல் விபீஷணன் பார்வையில் படும்படி நின்று கொண்டிருந்தார். காவிரிக் கரையோரம் இடைச்சிறுவனைக் கண்டு மனம் நிம்மதி அடைந்த விபீஷணன் அச்சிறுவனிடம், எனது இச்சிறு விக்ரகத்தை தரையில் வைக்காமல் கையில் வைத்துக் கொண்டிரு! நான் விரைந்து எனது நித்ய கடனை முடித்து வருகிறேன் என  வேண்டிச் சென்றார். 
 ஆனால், விபீஷ்ணன் காலம் தாழ்த்தியதால்,  விநாயகர் கையில் வைத்திருந்த சிலையை அவ்விடத்திலேயே வைத்து விட்டு மறைந்தார்.
image.png
தனது நித்ய கடமையை முடித்து வந்த விபீஷ்ணன், சிறுவனைக் காணாமலும், தன் விக்ரகம் தரையில் வைக்கப்பட்டிருந்ததோடு, பெரிய அளவில் உருமாறியும் இருந்தது கண்டு அதிர்ந்தான். எப்படியாகிலும் அதைப் பெயர்த்து எடுத்து இலங்கைக்குக் கொண்டு செல்லும் உறுதியுடன் அச்சிலையை பெயர்த்து எடுக்க முற்பட்டான்.
image.png
அங்கு நடந்ததை கேள்வியுற்ற, அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்த 'தர்மவர்ம சோழன்'  அங்கே விரைந்து வந்து விபீஷணனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றி சமாதானம் செய்தான். அச்சமயம் 'அசரீரியாக' எம்பெருமான், தான் இவ்விடத்திலேயே கோயில் கொள்ள விரும்புவதாகவும், ஆயினும் இலங்கையைப் பார்த்தவண்ணம் தெற்கு நோக்கியே வீற்றிருப்பதாகவும் வாக்களித்தார். வேறு எந்த வைணவத் தலங்களும் இல்லாத வகையில் ஸ்ரீரங்கம் மட்டும் தெற்கு திசை நோக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. வைகுண்டத்திலிருந்து நேரிடையாக பூமிக்கு வந்த சிலையாதலால், இத்தலம் "பூலோக வைகுண்டம்" என போற்றப்படுகிறது.
      அதன்பின், தர்மவர்ம சோழன் எம்பெருமானுக்கு கோயில் எழுப்பினான். அரங்கம் என்றால் தீவு என்றொரு பொருளும் உண்டு. காவிரி சூழ நடுவே பள்ளி கொண்டதனால், "திருவரங்கம்" என போற்றப்பட்டது.  
 பின்னாளில் காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட , இத்திருக்கோயில் ஆற்று மணலில் புதையுண்டது. தர்மவர்ம சோழனின் வழிவந்த  சோழ மன்னன் ஒருவன், இந்த ஆலயத்தை மீட்கும் பணியில் ஆவலோடு ஈடுபட்டான். புதைந்த இடத்தை அறியமுடியாமல் பல நாட்களான அவனது முயற்சியில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் 'கிளி' ஒன்று வேத மந்திரங்களை இசைப்பதைக் கேட்டு, திருவரங்கன் பூஜை காலத்தில், வேதியர் ஓதும் மந்திரங்களை தினமும் கேட்டதனால் இக்கிளியும் அதை ஓதுகிறது என யூகித்து, குறிப்பால் திருவரங்கன்  மணலில் புதையுண்டிருக்கும் இடத்தை உணர்ந்த மன்னன், சீரமைத்துக் கட்டியதனால், "கிளிவளவச் சோழன்' என போற்றப்பட்டான். அதன்பின் வந்த பாண்டிய, விஜய நகரப் பேரரசுகள் சார்ந்த அரசர்கள் இக்கோயிலை மேலும் புதுப்பித்துள்ளனர். உலகளவில் இரண்டாவது பெரிய வைணவக்  கோயில் என்ற பெருமையும் கொண்டது ஸ்ரீரங்கம்.
டில்லி சுல்தான் ஒருமுறை தமிழகத்தின் மீது படையெடுத்து செல்வங்களை எல்லாம் சூறையாடிச் சென்றதில் ஸ்ரீரங்க நாதர் சிலையும் அடங்கும். அச்சிலையை சுல்தான் தன் மகளிடம் அளிக்க, அச்சிலையின் அழகில் மயங்கியதோடு, எம்பெருமானின் பெருமைகளை அறிந்து அவரையே தனது மணவாளனாக வரித்தாள். ஸ்ரீரங்க நாதர் சுல்தானிடம் இருக்கும் செய்தியை அறிந்து குழுவாகச் சென்று, ஆடிப்பாடி சுல்தானை மகிழ்வித்து, எங்களது ரங்க நாதரை திருப்பித் த்ருமாறு வேண்டினர். அவரும் அவ்வண்ணமே தருவதாகக் கூறி, தன் மகளிடம் இருந்த சிலையை வலுக்கட்டாயமாக வாங்கி அவர்களிடம் ஒப்படைத்தார். 
image.pngimage.png
       ரங்க நாதரின் பிரிவைத் தாளாமல் டில்லி சுல்தான் இளவரசி 'சுரபானி' ஸ்ரீ ரங்கம் கோயிலை வந்தடைந்தாள். அவளது வருகை அனைவரையும் கலக்கமுறச் செய்தது. ஆம்! ஸ்ரீரங்கனை இங்கிருந்து எடுத்துச் செல்லவே வந்திருக்கிறாள் என நினைத்தனர்.  அதனால் ஸ்ரீரங்கனை மறைத்து வைத்தனர். ஸ்ரீரங்கனை காணமுடியாமல் அவ்விடத்திலேயே எம்பெருமானுடன் ஐக்கியமானாள். அப்பொழுது தான் உண்மை உணர்ந்து பட்டர்கள் முதல் பக்தர்கள் அனைவரும் தங்கள் செயலால் மனம் வருந்தினர்.
      ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஸ்ரீவில்லிப்புத்துர் கோதை நாச்சியார், திருவரங்கனையே மணாளனாக வரித்து அவருடன் ஐக்கியமானது போல், டில்லி சுல்தானின் மகள் ஸ்ரீரங்கனின் மேல் அளவில்லாத பக்தியுடன், தரிசிக்க வந்து,  தன் இன்னுடல் நீத்து, ஸ்ரீரங்கனுடன் ஐக்கியமானாள். அதனால், சுல்தான் இளவரசி 'துளுக்க நாச்சியார்' என வழிபடப்படுகிறாள்.
       இரண்டாவது பிராகாரத்தில் இடம் பெற்றிருக்கும் துலுக்க நாச்சியாரின் ஓவியமே வரையப்பட்டிருக்கும். இஸ்லாமிய வழக்கப்படி சிலை வழிபாடு இல்லாத காரணத்தால், சன்னதியில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment