Saturday 2 October 2021

கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி.

 அக்டோபர் 5 தேதி செவ்வாயன்று  மிகவும் விசேஷமான    "கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி".

புரட்டாசி பௌர்ணமியை அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள் கிருஷ்ண பக்ஷம் மஹாளயமாக முன்னோர்களின் வழிபாட்டிற்க்கான நாட்களாக உள்ளன என்பது அறிந்ததே!. 
  அனைத்து நாட்களும் சிறப்பானது தான் என்றாலும், சில நாள் திதி கிழமை போன்ற கூட்டமைப்பு, அதிக நற்பலன்களைத் தருவதாக விளங்கும். அதிலும் சதுர்த்தசி திதி, சஸ்திர ஹத பிதுரு திதியாக உள்ளது. அதாவது, போரில் வீரமரணம், துர்மரணம், அகால மரணம் போன்ற இன்னபிற காரணங்களால், பெண் சாபம் போன்றவை வழிவழியாக, தலைமுறையாகத் தொடர்ந்து தீராத பிரச்னையாக இருக்கும். 
அத்தகைய பிரச்னைகளுக்கு, இந்த மஹாளய சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்ய, தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 அதிலும் அந்த சதுர்த்தசி திதி செவ்வாய்க்கிழமையில் அமைந்து வந்தால் கூடுதல் பலனாக அமைவது கண்கூடு. அந்த நாளை, "கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி" என சிறப்பிக்கப்படுகிறது. [கிருஷண என்றால் தேய்பிறை. அங்காரகன் செவ்வாயைக் குறிக்கும். சதுர்த்தசி 14 ஆம் நாள்.]    
image.png
  அங்காரகன் உடல், அணிந்திருக்கும் மாலை, ஆடை என அனைத்துமே  சிகப்பு நிறமாக உள்ளன. அதனால் "செவ்வாய்" என அழைக்கப்படுகிறார். பொதுவாக, செவ்வாய் கிழமையை   அனைவரும் சுப காரியத்திற்கு ஒதுக்கி வைப்பார்கள். உண்மையில் நவகிரகங்களில் தன்னை அண்டியவர்களுக்கு உடனடியாக பலன் வழங்குபவர் அங்காரகன் மட்டுமே. செவ்வாய் கிரக தெய்வம் முருகப் பெருமான் ஆவார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாயன்று முருகனையும், அங்காரகனையும் ஒருசேர வழிபட  செவ்வாய் தோஷ வீரியம் குறையும் திருமணத் தடங்கல்களும் விலகும் என்பது ஐதீகம்.
image.png
   இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இவர் சிவபெருமானின் மகனாவார். ஆம்! 
  அந்தகாசுரன் எனும் அசுரன் சிறந்த சிவபக்தன். சிவனாரிடம் தன் குருதி நிலத்தில் விழுந்தால், அதிலிருந்து பல்லயிரக்கணக்கான வீரர்கள் தோன்றும்படியான வரம் பெற்றிருந்தான். தன் பக்தன் ஆனாலும், தான் அளித்த வரத்தின் துணையினால், எளியோரைத்  துன்புறுத்துவதை சகியாத எம்பெருமான், அவனுடன் தானே போரிடலானார். போரின் முடிவில், சிவபெருமானது நெற்றிக் கண்ணிலிருந்து நீர் வழிந்து பூமியில் விழுந்து. அதிலிருந்து மங்களன் தோன்றினான். இதனால் பூமி இரண்டாக பிளவுபட்டு, அந்தகாசுரனின் இரத்தம் பூமியில் விழாவண்ணம் தன்னகத்தே கொண்டதனால் சிகப்பு நிறத்தவனாக விளங்கினான். 
பூமா தேவியால் வளர்க்கப்பட்டதனால் "பூமிகாரகன்" எனவும் போற்றப்படுகிறார். வளர்ந்த பின், சிவபிரானைக் குறித்து தவம் செய்து நவகிரக அந்தஸ்தும் பெற்றார். 
இதனால்,  பொதுவாக மகாவீரர்கள், சர்வாதிகாரம் கொண்டவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என ஜோதிடம் கூறுகிறது.
image.png

பூமியின் வளர்ப்பு மைந்தன் ஆதலால், வீடு, நிலம் ,மனை யோகத்தினையும் அருள்பவர் ஆகிறார். 

No comments:

Post a Comment