Saturday 22 October 2022

தன்வந்திரி ஜயந்தி.




           தன்வந்திரி ஜயந்தி.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 23 ஆம் தேதி 2022 "தன்வந்திரி ஜயந்தி'.    "அனைவரும் அறிந்த  பத்து அவதாரங்கள் தவிர, மஹாவிஷ்ணு உலக நலனுக்காக இன்னும் பல அவதாரங்கள் எடுத்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று உடல் ஆரோக்கியத்தை அருளும் தேவ மருத்துவராக வணங்கப்படும் "தன்வந்திரி" ஆவார்.

பாற்கடலை அமிர்தத்திற்காக கடையப்பட்ட பொழுது உண்டான பல அற்புத வஸ்துக்களில் கடைசியாக;   பின்னிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும், இடது கையில் அட்டைப் பூச்சியும், வலக்கையில் அமிர்தகலசத்தை தாங்கியும்  தோன்றியவர் இந்த 'தன்வந்திரி'  




தனு என்ற சொல்லுக்கு  உடலைத் தைத்தல்  என்ற பொருளும் உண்டு. அறுவை சிகிச்சை செய்வதில் வல்லவர். அதனால் தன்வந்திரி காரணப்பெயர் ஆயிற்று. அத்துடன் பிரம்மா நான்கு வேதங்களின் சாரமாக ஐந்தாவதாக ஆயுர் வேதத்தை படைத்தார்.  அந்த ஆயுர்வேத மருத்துவத்திற்கு  தன்வந்திரியே  தலைவராகவும் கருதப்படுகிறார். 


          



          

  பிரம்மா தான் உருவாக்கிய ஆயுர்வேதத்தை முதலில் சூரியதேவனுக்கு கற்பித்ததாகவும், தன்வ என்றால் வான்வெளி எனப் பொருள். 'ஆக , தன்வன்' என்ற சொல் வானத்தில் திரிபவன் எனும் பொருள் தருவதாலும், வானத்தில் அலைைந்து திரியும் சூரியனே அனைத்து ஜீவன்களின் வாழ்வாதாரம். அவனே தன் கிரணங்களால் அனைத்து உயிர்களையும் காப்பாற்றுபவனாக இருப்பதால் சூரிய தேவனே, ' தன்வந்திரி' என்றொரு மாற்றுக் கருத்தும் உண்டு.



Friday 23 September 2022

கஜச்சாயை 23.9.2022.

                                                                     கஜச்சாயை


மஹாளய பக்ஷம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் 

இன்றைய தினம் 23 ஆம் தேதி வெள்ளி அன்று "கஜச்சாயை". அதாவது இந்த திரயோதசி திதியில் புண்ணிய தலங்களான "கயா, காசி மற்றும் இராமேஸ்வரத்திற்கு"ச் சென்று அனைத்து பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் ஆகும். 

     இந்த கயா க்ஷேத்ரம் புண்ணிய ஸ்தலமாக விளங்கியதன் பின்னணி கதையை அறிவோம்!.

ஒருமுறை கயாசுரன் எனும் அசுரன், மஹாவிஷ்ணுவைக்   குறித்து கடுந்தவம் மேற்கொண்டு, தவத்தின் பயனாய், விசித்திரமான வரத்தினை வேண்டினான்.

அதாவது, தன் உடல் புண்ணிய நதிகள், தேவர்கள், முனிவர், மனிதர்கள் என அனைவரைக் காட்டிலும் புனிதமானதாக விளங்கவேண்டும். அத்துடன், என் உடலைத் தொடுபவர்களும் புனிதம் அடையவேண்டும்  என்ற அரிய வரத்தைப் பெற்றான்.

அவனது இவ்வரத்தினால், மக்கள் அனைவரும் அவனது உடலைத் தொட்டு புனிதம் அடையவும், எமதர்ம ராஜனின் பணிக்கு வேலை இல்லாமல் போயிற்று. இதனால் பூமி பாரம் அதிகரித்தது. இதனால் செய்வதறியாது திகைத்த எமதர்மன் மற்றும் பிரம்மாவும், விஷ்ணுவிடமே இதற்கான தீர்வைக் கேட்க, அவரும், பிரம்மனிடம், யாகம் செய்வதற்கு, புனிதம் நிறைந்த உன் உடல் தேவை என, கயாசுரனிடம் கேட்கும்படி கூறினார்.

  ஒரு நல்ல காரியத்திற்கு தனது உடல் பயன்படுவதை அறிந்து மகிழ்வோடு இசைந்தான் கயாசுரன். உடன் பிரம்மதேவரும், வடக்கு, தெற்காக படுத்திருந்த கயாசுரனின் உடலில் வேள்வியைத் துவக்கினார். வேள்வியின் உச்ச நிலையில் நெருப்பின் தகிப்பை தாங்க இயலாமல், தலையை அசைத்து நெளிந்தான். 

அவன் தலை அசையாமல் இருக்க, அவன் தலையில் கல்லை வைக்கும்படி எமராஜனிடம் உத்தரவிட்டார். ஆயினும், அதையும் மீறி தலையை அசைத்தான். இதனால், பிரம்மா விஷ்ணுவின் உதவியை நாட, மஹாவிஷ்ணுவும் உலக நன்மை கருதி, அவன் மார்பில் தன் கதாயுதத்தை வைத்து அழுத்தியபடி, அவன் தலையில் தன் காலினை வைத்து அவனை அசையாமல் இருக்கச் செய்ததோடு, அவன் வேண்டும் வரம் யாது? எனக் கேட்டார்.


உண்மை நிலை புரிந்தவனாய், கயாசுரனும், இத்தலம் எனது பெயரால் விளங்கவேண்டும். அதோடு இங்கு வந்து பிண்டம் போட்டு, தன் முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்கள், திதி பெற்றவர்கள் என அனைவரது பாவங்களும் விலகி 'முக்தி' பெறவேண்டும் என கேட்டுக் கொண்டான். அவ்வண்ணமே வரம் அளித்த, விஷ்ணுவும், கயாசுரனை, பாதாள உலகிற்கு அனுப்பிவைத்தார்.  

அது முதல் இத்தலத்தில் பிண்டம் வைத்து, முன்னோர் வழிபாடு செய்வது புனிதம் தரும் செயலாகத் தொடரலாயிற்று

Friday 9 September 2022

நடராஜர் அபிஷேகம் (திருமஞ்சனம்). 9.9. 2022

    


  நடராஜர் அபிஷேகம்.

இன்றைய தினம் ஆவணி மாத சதுர்த்தசி திதி. 


அனைத்து சிவாலயங்களிலும் லிங்கத்திற்க்கே அபிஷேகம் ஆராதனை நடைபெறும். ஆனால் சிதம்பரம் தலத்தில் மட்டும் நடராஜரின் சிலைக்கு அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  நடராஜரின் நக்ஷத்திரம் அதிக உஷ்ணத்தை தரவல்ல  'திருவாதிரை' ஆகும். அத்துடன் அவர் தன் ஒரு   கரத்தினில் அக்னியைத் தாங்கியுள்ளார். உடல் முழுவதும் திரு நீறு வேறு தரித்திருப்பார். இதனால் சிவ்பிரான்   எப்பொழுதும் வெப்பம் சூழ விளங்குகின்ற காரணத்தால், நடராஜ மூர்த்திக்கு வருடத்திற்கு ஆறு முறை சித்திரை,ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி மற்றும் மாசி என இந்த ஆறு மாதங்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

   இதில் சித்திரையில் திருவோணம், ஆனியில் உத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை என நக்ஷத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அத் தினத்திலும்  மற்ற ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி என இந்த மூன்று மாதங்களில் மட்டும் வளர்பிறை சதுர்த்தசி திதியிலும்  திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. .   
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் தில்லையம்பலம் என போற்றப்படும் சிதம்பரம் நடராஜருக்கு அர்த்த ஜாமத்தில் அபிஷேகம் நடைபெறும். 


வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு மற்றும் அர்த்தஜாமம் என ஒரு நாளில் ஆறு பொழுதுகள் உள்ளன. பூவுலகின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுது.அந்த வகையில் தேவர்களின் வைகறைப் பொழுது மார்கழி மாதமாகும். அவர்களது அர்த்த ஜாமம் பொழுது புரட்டாசி மாதம் ஆகும்.  

நடராஜமூர்த்திக்கு ஐந்து நடன சபைகள் உள்ளன. சிவபெருமான் நடனம் ஆடும் கோலத்தில் எழுந்தருளியுள்ள தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்கள் சிதம்பரம், மதுரை,திருவாலங்காடு,திருநெல்வேலி மற்றும் திருக்குற்றாலம். தமிழில் சபையினை அம்பலம் எனக் கூறுவர். ஐந்து சபைகளிலும் ஐந்துவித நடனசபை மற்றும் தாண்டவம் [கூத்து] சிறப்பித்துக் கூறப்படுகிறது. 




சிதம்பரம் : பொன் சபை.அதாவது பொன்னம்பலம். பஞ்சபூத தலங்களுள் ஆகாயத் தலம். அகில உலகையும் அண்ட பேரண்டங்கள் என பிரபஞ்சத்தை  உருவாக்கிய எம்பெருமான் ஈசன், தான் ஆடும்   ஆனந்தத்  தாண்டவம் மூலம் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்குக் காரணமாயிருக்கிறார்.  பிரபஞ்சத்தின் மூலஸ்தானமாக இருக்கக் கூடிய தில்லை வனத்தில் (சிதம்பரம்) லிங்க வடிவு தாங்கி 'திருமூலட்டான நாதராய்" அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். 
    முதலில் திருமூலட்டான நாதரை தரிசித்த பின்னரே, நடராஜ மூர்த்தியை தரிசிக்கவேண்டும் என்பது நியதி. பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் முனிவர்களுக்காக அவர்  இங்கு ஆடிய திருநடனம் : ஆனந்த தாண்டவம். 

திருஆலவாய் எனப்படும் மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளியம்பலம், மதுரையை ஆண்ட இராஜசேகர மன்னன் பரதக் கலையை கற்றறிந்தவர். அதனால் நடனக் கலையில் உள்ள சிரமங்களை அறிந்தவர். பொதுவாக, நடராஜர் சிலை இடது காலைத் தூக்கியபடி இருக்கும். எம்பிரானுக்கு கால் வலிக்குமே என மனம் வருந்திய மன்னன், கால் மாறி ஆடும்படி வேண்டினார். தன் பக்தனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த நடராஜரும் இத்திருக்கோயிலில் வலது காலைத் தூக்கியபடி காட்சி தருகிறார். திரு நடனம் : சந்தியா தாண்டவம்,

திருநெல்வேலியில் தாமிர சபை. சந்தன சபாபதியாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் நடராஜ மூர்த்தியை தாமிர அம்பலத்தின் வழியாகக் காண கண் கோடி வேண்டும் அவ்வளவு அற்புத அழகோடு காட்சி தருவார். திரு நடனம் : முனி தாண்டவம்.

குற்றாலத்தில் சித்திர சபை. இங்கு நூற்றுக் கணக்கான கண்கவர் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டு அழகிய 'சித்திரக்கூடமாக' விளங்குகிறது. திருவிழா நாட்களில் நடராஜர் சிலை இங்கு எழுந்தருளப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். 'இக்கோயிலின் தல விருட்சம் 'குறும் பலா' . அதனால் இத்தல இறைவன் 'குறும்பாலீஸ்வரர்' எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் சங்கு வடிவில் அமைந்துள்ளதால் 'சங்குக் கோயில்' எனவும் அழைக்கப்படுகிறது. திரு நடனம் : திரிபுர தாண்டவம்.

திருவாலங்காட்டில் இரத்தின சபை. இத்தலத்தில் நடராஜருக்கும் காளிக்கும் இடையே நடனப் போட்டி நடைபெற்றது. வெற்றி தோல்வியை கணிக்க முடியாதபடி இருவரும் சமமான திறமையுடன் ஆடினர். அச்சமயம் நடராஜரது காதணி கழன்று கீழே விழவும், நடராஜர் நடனம் தடைபடாவண்ணம், தன் காலால் காதணியை எடுத்து, காலை உயரத்தூக்கி, காதில் அணிந்து கொண்டார். அவ்வாறு காலைத் தூக்கி ஆடத் தயங்கி, காளியும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். இங்கு ஆடக் கூடிய திரு நடனம் : ஊர்த்துவத் தாண்டவம்.



Saturday 16 April 2022

சித்ரா பௌர்ணமி 2022

 


இன்றைய தினம் 16.4.2022 சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி. முழு நிலவை பார்ப்பது என்பது கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்வையும் புத்துணர்வையும் அளிக்கக்கூடியது.  ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி வருகிறது என்றாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஏனெனில், வருடத்தில் ஒரு முறை மட்டுமே  இந்த சித்திரை மாதத்தில் மட்டுமே முழு நிலவாக களங்கங்கள் இல்லாமல் சூரியன் மறையும் பொழுது, பிரகாசமான ஒளிக்   கிரணங்களுடன்  காட்சி அளிப்பதே இதன் சிறப்பு.   


இந்த நாளில் நம் பண்டைய தமிழ் மக்கள் தன் உற்றார், உறவினருடன் நதி நிலைகளில் பௌர்ணமி ஒளியில், அமர்ந்து உணவருந்தி, ஆடிப் பாடி மகிழ்வர்.

இந்த சித்ரா பௌர்ணமி நாளில், 'சித்ரகுப்த பூஜை' விசேஷமானது. இதையே பண்டைய நாட்களில் சித்திர புத்திர நயினார் நோன்பு' என நம் தமிழக மக்கள் பூஜித்தனர். யார் இந்த சித்திர குப்தர்? அவரது சரிதத்தை அறிவோம்!


சித்திரகுப்தர் நம் பாவ, புண்ணிய கணக்குகளை, குறித்து வைத்துக் கொண்டு உயிர்களது வாழும் காலம் நிறைவுற்றதும் எமதர்மனிடம், அவ்வுயிர்களது நற்பலன் அல்லது தண்டனை அதாவது, சொர்க்கமா? நரகமா? என்பது பற்றி எடுத்துக் கூறுவாராம்.


   சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரம் பௌர்ணமி கூடிய சுபதினத்தில் அவதரித்தவர். 'குப்தர்' என்றால் இரகசியம். நம்மைப் பற்றிய இரகசியங்கள்,நாம் மனத்தால் நினைக்ககூடிய நன்மை தீமைகளைக் கூட இவரிடமிருந்து மறைக்க இயலாது.அதனால் இவர் 'சித்திரகுப்தர்' என அழைக்கப்படுகிறார்


       இவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான கதைகளிலிருந்து ஒன்று:


           ஒருமுறை, அஷ்ட திக் பாலகர்கள் ( 8 திசைகளின் தலைவர்கள்) சிவன் பார்வதியை சந்திக்கச் சென்றனர். அனைவரும் மகிழ்வுடன் இருக்க, யமதர்மன் மட்டும் சோர்வுடன் இருந்தார். அது பற்றி எம்பெருமான் வினவ, ஐயனே! நான், தனி ஒருவனாக அனைத்து உயிர்களின் காலக் கெடு, அவற்றின்பாவ புண்ணிய கணக்குகள் குறித்து, அதற்கான பலன்கள் வழங்குவது என எனது வேலைப் பளு மிகுதியாக உள்ளது. அதனால் நம்பத் தகுந்த உதவியாளன் இருந்தால், என் வேலை எளிதில் நிறைவுறும். அதற்கு தாங்கள் தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டினார்.


  சிவபிரானும், காலம் கனியும் பொழுது, உனக்குத் தகுந்த உதவியாளன் கிடைப்பான் என உறுதி கூறி , அதற்கான  பொறுப்பை பிரம்மனிடம் ஒப்படைத்தார். முதலில் அப்பொறுப்பை நினைத்து திணறி பிரம்மன் தவித்தாலும், சூரிய தேவனைக் கண்டதும் அவர் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. அகில உலகையும் சுற்றி வரக் கூடிய இவனால் உருவாக்கப்படும் குழந்தையே இதற்குச் சரியான ஆள்  என நினைத்து மகிழ்ந்தார். 


   உடன், வானவில்லை அழகிய பெண்ணாக உருமாற்றி, அவளுக்கு 'நீளாதேவி' என பெயரிட்டு, சூரிய தேவனின் மனதில் தன் மாயையால் காதல் எண்ணத்தை உருவாக்கி, நீளாதேவியை மணமுடித்தார். 


 இவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு 'சித்திர புத்திரன் எனப் பெயரிட்டனர். சூரியனே அவருக்கு குருவாகவும் இருந்து பல கலைகளைப் பயில்வித்ததோடு, சிவபிரானைக் குறித்து தவம் இயற்றி அரிய பல வரங்கள் பெறும் படியும் அறிவுறுத்தினார். அவ்வண்ணமே அவரும், தவமியற்றி, சிவனாரிடமிருந்து, அறிவாற்றலும், அனைத்து சித்திகளையும் கைவரப் பெற்றார்.


 உடன் அதனை சோதிக்க எண்ணி, தானே படைக்கும் தொழிலை மேற்கொண்டார். இதனை அறிந்து பிரம்மன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர். பிரம்மன், சூரியனிடம் இதுபற்றி முறையிட, அவரும் சித்திர புத்திரனை அழைத்து, மகனே! 


உயிர்களின் இரவு பகலைக் கணக்கிட்டு,  ஒவ்வொரு உயிர்களின் வாழ்க்கையையும் நெறிபடுத்துபவன். எனவே, நீ அவர்களது பாவ, புண்ணியத்தை கணக்கெடுத்து, உனது அண்ணனான யமதர்மனுக்கு உதவியாக பணி செய்வாயாக! இதற்காகவே நீ படைக்கப்பட்டவன். படைப்புத் தொழில் உனக்கானதன்று. அது பிரம்மனது பணி. என வாழ்த்து கூறி எழுத எழுத தீராத ஏட்டுப் புத்தகத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார். 



      மற்றவர்களின் இரகசியத்தை அறிபவராகவும், அந்த இரகசியத்தை யாரும் அறியாதபடி இரகசியமாகக் குறித்து தக்க சமயத்தில் அதை வெளிபடுத்தி பலன்களை அளிப்பதனாலும் 'சித்திர குப்தர்' என பெயர் காரணமாயிற்று.


 ஆயினும் கிராமப்புறங்களில் இவருக்கு 'சித்திர புத்திரன் பூஜை' என்றே கொண்டாடுகின்றனர்.  இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தன் படம் வரைந்து, பூஜை திரவியங்களுடன் ஓலைச் சுவடி எழுத்தாணி இவற்றையும் வரைந்து, சக்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, பாயசம் இன்னபிற இனிப்பு வகைகளை நிவேதனம் செய்து, பூஜையின் இறுதியில் ஊர் பெரியவர் சித்திர குப்தனின் வரலாற்றை படிக்க, தங்களது பாவச் சுமையைக் குறைத்து, புண்ணிய பலனை அதிகரிக்கவும், நல்ல வாழ்வை அளிப்பதோடு, யமராஜனிடம் தனக்காக பரிந்துரைக்கவும் வேண்டிக் கொள்வர்.   இந்த நாளில் அன்னதானம் செய்வது நல்லது. 





Friday 15 April 2022

தாயாகத் திகழ்ந்தவர்.


 மங்களம் என்பது அவர் நாமம் - நித்தம்

உரைத்திட்ட மொழிகளும் மங்கலம்- எங்கள்

வாழ்விலும் வழி நடத்தினார் மங்கலமாய்.

உறவின் பெயரில் தான் மாமியார் - ஆனால்

அன்பு மழை பொழிந்தார் - அன்னையாய்.

இன்று அவரது 90 ஆவது பிறந்த நாள்.

                       15.4.2022.

                                     தங்களன்புள்ள

என்றென்றும் உங்கள் நினைவில் வாழும்

                   அன்புச் செல்வங்கள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Thursday 7 April 2022

ஆரத்தி பாடல்.

                    ஆரத்தி பாடல்.


ஓம் ஸ்ரீஜய ஜய ஜய சக்தி

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி

ஜய ஜய என தினம்

பாடி பணிந்தோம்

ஜகமெங்கும் அமைதியை தா

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க

தேவையெல்லாம் அடைய

அம்மம்மா தேவையெல்லாம் அடைய

பக்தி பெருகிட பாடி உருகிட

பணிப்பாய் அன்பில் எமை

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


இரண்டுகள் போக மூன்றுகள் அகல

ஈஸ்வரி வரம் அருள்வாய்

அம்மம்மா ஈஸ்வரி வரம் அருள்வாய்

கரங்குவித்தோம் இனி காலை விடோமடி

கருணையுடன் அணைப்பாய்

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


காசினில் எங்கும் வேற்றுமை போக

கருத்தினில் அன்பருள்வாய்

அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய்

தேஜசுடன் வாழ காட்டடி காட்சி

தேவி உன் அடைக்கலமே

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


நமஸ்காரம் இருவினை கரத்தினில் ஞான

நல்லொளி தீபம் வைத்து

ஞான நல்லொளி தீபம் வைத்து

நமஸ்காரம் செய்து ஹாரத்தி செய்தோம்

ஞாலத்துக்கு அமைதியை தா

ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி


ஓம் கணபதி சாயி ஷண்முக நாதா

ஓம் த்ரிகுண தீதா க்ருஷ்ணா

ஓம் த்ரிகுண தீ தா க்ருஷ்ணா

ஓம் ஸ்ரீ ராம மஹாதேவ சம்போ

ஓம் ஜய ஜகத் ஜனனி

ஓம் ஸ்ரீ ஜய ஸத்குருதேவா

     

       2. அம்பாள் ஆரத்தி 

ஆரத்தி எடுத்து வந்தோம் தேவி உனக்கு

ஆரத்தி எடுத்து வந்தோம்.


அருளைப் பொழியும் அகிலாண்டேஸ்வரி ஆற்றலை அளிக்கும் ஆதிசக்தியே

இன்ப வாழ்வருளும் இமயவன் புத்ரி

ஈகை குணம் கொண்ட ஈஸ்வரியே- உனக்கு. (ஆர்த்தி எடுத்து வந்தோம் )


உலகினைப் படைத்த உமையவளே 

ஊண் உறக்கம் அளித்த ஊரணியே 

எங்கும் நிறைந்த பூரணியே 

ஏற்றத்தை அளிக்கும் காரணியே - உனக்கு


ஆரத்தி எடுத்து வந்தோம்.


ஐங்கரன் தாயே சங்கரியே 

ஒளிமயமான நாயகியே 

ஓம்கார ரூபி ஏகாக்ஷரியே.. உனக்கு 

ஆரத்தி எடுத்து வந்தோம்

.

        3.  அஷ்டலக்ஷ்மி ஆரத்தி


[07/10/2023, 15:04] Vasanthi: ஆனந்தபைரவி


ஆரத்தி எடுத்தே உன் பதம் பணிந்தோம்

நாரணன் மனைவியே நாராயணியே 

நான்மறை போற்றும் நாயகியே 

நானிலம் காக்கும் நறுமணியே.

 (-)


பேரின்ப வாழ்வருளும் 

ஆதிலக்ஷ்மி

பசி பிணி நீக்கும் 

தான்யலக்ஷ்மி


பவபயம் போக்கும் 

தைர்யலக்ஷ்மி 


ராஜ வாழ்வளிக்கும் 

கஜலக்ஷ்மி 

பத பநிஸ்.. நிஸ் க்ரிஸ் |

ஸ்நிதப மகரிஸ| கமபமகரிகம || (ஆரத்தி)


மழலைச் செல்வம் தரும் 

ஸந்தானலக்ஷ்மி 


எங்கும் எதிலும் வெற்றியை நல்கும் 

விஜயலக்ஷ்மி 


மேன்மை குணமருளும் 

வித்யாலக்ஷ்மி 


சகல செல்வம் தரும்

தனலக்ஷ்மி

பதபநிஸ் நிஸ் க்ரிஸ் |

ஸ்நிதப மகரிஸ| கமபம கரிகம|| (ஆரத்தி)


ஐஸ்வர்யங்கள் அருளிடும் அஷ்ட லக்ஷ்மி. 

பங்கய மலரில் வாழும் லக்ஷ்மி 

திசைகள் எட்டிலும் புகழ் ஓங்கிடவே-உன்

வசந்த நாமங்கள் பல இசைத்தோம் 

ஆதிலக்ஷ்மி தான்யலக்ஷ்மி தைர்யலக்ஷ்மி கஜலக்ஷ்மி

சந்தான லக்ஷ்மி 

விஜயலக்ஷ்மி

வித்யாலக்ஷ்மி

தனலக்ஷ்மி

அலைகடல் உதித்த அலைமகனே 

அனுதினம் அருள்வாய் திருமகளே..

பதபநிஸ் நிஸ்க்ரிஸ் | ஸ்நிதப மகரிஸ | கமபம கரிகம ||( ஆரத்தி)


  4. சரஸ்வதி ஆரத்தி



Saturday 26 March 2022

கண்ணன் பாடல்கள்

                       பாடல்  -1

ராகம்  : காபி                       தாளம் : ஆதி. 

   இயற்றியவர்  : அம்புஜம் கிருஷ்ணா. 

                   பல்லவி 


சின்ன சின்ன பதம் வைத்து

கண்ணா நீ வா வா

வண்ண வண்ண உடை உடுத்தி
மன்னா நீ வா வா மணிவண்ணா நீ வா வா

                அனுபல்லவி 

மல்லிகை முல்லை மலராலே
மாதவனே உன்னை பூஜிக்கிறோம்;
காலமெல்லாம் உன் அருளை
வேண்டுகிறோம் நீ வா வா (சின்ன சின்ன)

               சரணம் -1

திரௌபதி மானம் காத்தவனே
தீனச்சரண்யா நீ வா வா
மாதவனே கேசவனே
யாதவனே நீ வா வா (சின்ன சின்ன)

                சரணம் -2

கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கமலக் கண்ணா நின் தோற்றம்
கண்ணழகா மணிவண்ணழகா
கண்ணா நீ வா வா
மணிவண்ணா நீ வா வா (சின்ன சின்ன)

               ---------------×----------

                  பாடல்  - 2

ராகம் : யமன்கல்யாணி          தாளம் : ஆதி

                    பல்லவி

சலங்கை கட்டி ஓடி ஓடி வா வா - எங்கள்

தாமரை கண்ணா ஆடி ஆடி வா வா- உந்தன்

பிஞ்சு பாதம் தேடி தேடி நாங்கள்- உந்தன் 

திவ்ய நாமம் பாடி ஆடி வந்தோம்.

              அனுபல்லவி

தேவகி நந்தனா காரக சுந்தரா 

கேசவா ஹரே மாதவா 

கீதா நாயகா ராதா ஜீவனா

கேசவா ஹரே மாதவா

கோகுல பாலனே ஓடி வா வா

கோபால பாலனே ஆடி வா வா   (சலங்கை)

                   சரணம் -1

கம்சனை கொன்றவா காளிங்க நர்த்தனா 

கேசவா ஹரே மாதவா

அன்பரை காத்திடும் ஆபத்பாந்தவா 

கேசவா ஹரே மாதவா 

ஓம்கார நாதனே ஓடி வா  வா 

ஆனந்த கீதனே ஆடி வா வா .(சலங்கை)


                    சரணம் -2

பாண்டவ ரக்ஷகா பாப விநாசகா 

கேசவா ஹரே மாதவா

அர்ஜுனன் தேரினில் சாரதியாகிய 

கேசவா ஹரே மாதவா

கீதாம்ருதனே ஓடி வா வா 

இதயானந்தனே ஆடி வா வா . (சலங்கை)

-                 -‐---------×---------

                 பாடல் - 3

ராகம் : பிருந்தாவன சாரங்கா.  ஆதி தாளம்.

                         பல்லவி

வனமாலி வாஸுதேவா 

மனமோகன ராதா ரமணா 

சசிவதனா ஸரஸிஜ நயனா 

ஜகன்மோகன ராதா ரமணா. 

                 அனுபல்லவி 

பாற்கடலில் பள்ளி கொண்ட 

பரந்தாமா ராதா ரமணா 

பக்தர்களின் குறை தீர்க்கும் 

ஸ்ரீரங்கா ராதா ரமணா. 

                        சரணம்

வெண்ணெய் உண்ட மாயவனே

 கண்ணா ராதா ரமணா

வேண்டும் வரம் தந்திடுவான் 

ஸ்ரீரங்கா ராதா ரமணா. 

            ----------------×------------.


 மஹாவிஷ்ணு க்ருதி ஸ்ரீ பாரதி தீர்த்த

 ஸ்வாமிஜி [ச்ருங்கேரி] அருளியது

கருட கமன தவ, சரண கமல மிஹ 

மனஸி லஸது மம நித்யம் |

மம தாபம பாகுரு தேவா, மம பாபம பாகுரு தேவா||

ஜலஜ நயன விதி, நமுசி ஹரண முக, விபூத வினுத பத பத்ம |

மம தாபம பாகுரு தேவா, மம பாபம பாகுரு தேவா||

புஜக ஷயன பவ,மதன ஜனக மம, ஜனன மரண பய ஹாரி|

மம தாபம பாகுரு தேவா, மம பாபம பாகுரு தேவா||

ஷங்க சக்ர தர, துஷ்ட தைத்ய ஹர, ஸர்வ லோக சரண|

மம தாபம பாகுரு தேவா, மம பாபம பாகுரு தேவா||

அகணித குண கண, அஷரண ஷரணத,  விதலித ஸுரரிபு ஜால|

மம தாபம பாகுரு தேவா, மம பாபம பாகுரு தேவா||

பக்த வர்ய்ய மிஹ, பூரி கருணயா, பாஹி பாரதி தீர்த்தம்|

மம தாபம பாகுரு தேவா, மம பாபம பாகுரு தேவா||



Saturday 12 March 2022

காரடையான் நோன்பு. 14 . 3. 2022 திங்கட்கிழமை.

  



 பதிவிரதா தர்மம். - இது மேன்மையும் சிறப்பும் வாய்ந்தது. பதிவிரதா தர்மம் என்பது தன் கணவனின் மேல் இறுதி வரை மாறாத அன்பு கொள்வது. தன் கணவனுக்காக எதையும் செய்யத் துணிந்து கடும்  சோதனைகளையும்  முறியடிக்கும் வல்லமை கொண்ட பெண்கள் இன்றளவிலும் நம் பாரத மண்ணில் மங்காப் புகழோடு, போற்றப்படுகிறார்கள். 

அந்த வகையில், "சத்தியவான் சாவித்திரி" எனும் ஆத்மார்த்த தம்பதி பற்றிய கதை சிவபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கதையின் நாயகியான சாவித்ரியின் பதிவிரதா தர்மத்தை மஹாபாரதத்தில், "மார்கண்டேய மகரிஷி" பாண்டவர்களின் வனவாச சமயத்தில், திரௌபதிக்கு எடுத்துரைக்கிறார்.



 மத்திர தேசத்தை ஆண்ட 'அசுவபதி' மன்னனுக்கு திருமணம் ஆகியும் பல ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லாமல் மனம் வாடினார். நாரதரின் வழிகாட்டுதல் படி, சூரிய தேவனை நோக்கி கடும் விரதம் இருந்து, அழகிய பெண்குழந்தையைப் பெற்றார். சூரியனின் அருளால் பிறந்ததால் 'சாவித்திரி' என பெயர் சூட்டினர்.

    இல்லை என்ற சொல்லே அறியாத வகையில் சாவித்திரி விரும்பியதை எல்லாம், நொடிப் பொழுதில் நிறைவேற்றி வைத்து மிகுந்த செல்லமாக வளர்த்தனர்

இந்த நிலையில் சாவித்ரி பருவ வயதை அடைந்ததும், தனக்கான மணாளனை தானே தேர்வு செய்வதாக தந்தையிடம் கூறி அவரது அனுமதியுடன், தகுந்த பாதுகாப்புடன், பல நாடுகளுக்கும் சென்றாள். யாரையும் அவள் மனது விரும்பவில்லை. கடைசியாக ஊர் திரும்பும் சமயம், காட்டு வழிப் பாதையில் வந்து கொண்டிருந்தனர்.
அங்கே ஒரு கட்டிளங்காளையான இளைஞன் ஒருவன் வயதான கண் பார்வையற்ற தன் தாய் தந்தைக்கு பணிவிடை செய்து கொண்டிருப்பதைக் கண்டாள். கண்டதும் காதல் என்பது போல், அவனைப் பார்த்ததும் அவளுக்கு அவன் மேல் காதல் உண்டாயிற்று. தானே நேரிடையாகச் சென்று அவர்களை யார்?என வினவி, அவர்கள் கதையைக் கேட்டறிந்தாள்.  
சிறிதும் தாமதிக்காமல், நாடு திரும்பி காட்டில் கண்ட இளைஞன் "சால்வ தேசத்து" இளவரசன். சத்தியவான் என்பது அவன் பெயர். சால்வ மன்னருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டதினால், எதிரிகளால் நாடு கைப்பற்றப்பட்டு, காட்டிற்கு விரட்டப்பட்டார் எனவும்,  அவர்களது மகனான சத்தியவானே தான் விரும்பும் மணாளன், அவனையே எனக்குத் திருமணம் செய்து தாருங்கள் என தன் தந்தையிடம் உறுதியாகக் கூறினாள்.
இச்சமயத்தில் நாரத மகரிஷி அங்கு வரவும், நடக்கும் சம்பாஷணையின் மூலம் விவரங்களை ஊகித்து அறிந்து, சத்தியவான் வெகு விரைவில் இறந்து விடுவான் மகளே! என எச்சரித்தார்.
   அதுவும் எனக்குத் தெரியும். அவரது தாயிடன் இருந்து அறிந்து  கொண்டேன்  .  என்னைக் கரம் பிடித்த வேளை, என் தாலி பாக்கியத்தால், அவரது ஆயுள் நீட்டிக்கப்படலாமல்லவா?  என பிடிவாதம் பிடித்தாள்.
நாரதரும் அவளுக்கு ஆசி கூறி, மன்னனிடம், அவள் விருப்பப்படியே திருமணத்தை முடித்து வையுங்கள் சாவித்ரியின் மேன்மை வெளிப்படும். சர்வ மங்கலம் உண்டாகும் என அருளினார்.
அவ்வண்ணமே மனம் இல்லாமல், தன் மகளுக்கு    சத்தியவானுடனேயே திருமணம் முடித்து வைத்தார்.  சாவித்திரயும், தன் கணவன் குடியிருக்கும் காட்டுப்  பகுதிக்கு  சென்று அவன் குடிசையில் மனமகிழ்வோடு, பார்வையற்ற தன் மாமனார் மாமியாருக்கும் தக்க பணிவிடைகளைச் செய்து வாழ்ந்து வந்தாள்.

இப்படியாக, மகிழ்வுடன் காலம் கடந்து,சத்தியவானின் இறுதிக் காலமும் நெருங்கியது. மூன்று நாட்கள் முன்பு, தன் கணவனுக்காக "கௌரி விரதம்" இருந்து நோன்பு நூற்று, பிரார்த்தனை செய்தாள். கடைசி நாளன்று சத்தியவான் காட்டிற்கு விறகு வெட்டுவதற்காகச்  செல்ல, தானும் பிடிவாதமாக உடன் சென்றாள்.




கணவன் சத்தியவானின் முடிவுற்ற ஆயுளை எடுப்பதற்காக், எமதூதர்கள், ஆங்கே வந்தனர். அருகே சாவித்திரி இருந்ததால்  அவளது பதிவிரதா சக்தி அவனருகில் எமதூதர்களை நெருங்க விடாமல் தடுத்தது. அவர்கள் இதுபற்றி எமராஜனிடம் கூற, தானே நேரில் வந்து, தன் பாசக் கயிற்றை, சத்தியவானின் மேல் வீசி, உயிரைப் பறிக்க முயன்றார். அச்சமயம் சாவித்திரி, தன் கணவனின் உயிரை திருப்பித் தர கேட்க, 



அவள் கண்களுக்கு தான் புலப்படுவதை உணர்ந்த எமராஜனும், மஹாபதிவிரதையாக விளங்கும் தேவியே, என் கடமையைச் செய்யவிடு!. தடுக்காதே என்று, தன் வழியே சென்றார்.
   ஆயினும் , அப்பெண் தன்னைப் பின் தொடர்வதை அறிந்து எமதர்மர், பெண்ணே! உன் பதிபக்தி என்னை நெகிழச் செய்து விட்டது. உன் கணவன் உயிரைத் தவிர, வேறு ஏதேனும் வரம் கேள் தருகிறேன்!! என்றார்.
சிறிது சிந்தித்த சாவித்ரியும், சால்வ மன்னனாகிய தனது மாமனார் திரும்ப கண்பார்வை பெற்று, தன் நாட்டையும்  ஆள்வதோடு, என் வயிற்றில் பிறக்கும் அவரது பேரக் குழந்தைகளும் நாட்டை ஆள்வதைக் காணும் பேற்றினை அவருக்கு அளிக்கவேண்டும் என எமராஜனின் பாதம் பணிந்து வேண்டினாள். 





அவளது புத்தி சாதுர்யமான இந்த வேண்டுதலைக் கேட்டு அதிசயித்து, பெண்ணே! இந்த வையகம் உள்ளளவும் உன் புகழ் ஓங்கி நிலைத்திருக்கும். நீ கடைபிடித்த இவ்விரதத்தை வருங்கால சந்ததியினரும் , நோன்பிருந்து பயன் பெறுவர் என வாழ்த்தி சத்தியவானுக்கு உயிர்ப் பிச்சை அளித்து ஆசி வழங்கினார்.
       இதையே பங்குனி மாதப் பிறப்பன்று "காரடையான் நோன்பு" என திருமணமான பெண்கள், ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாது இருக்கவேண்டும் எனவும், கன்னிப் பெண்கள்  சத்தியவானைப்   போல் நல்ல குணவான் தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்றும் மஞ்சள் சரடினை கட்டிக்  கொண்டு   நோன்பு இருப்பர். 




நாளைய தினம் திங்கட்கிழமை மார்ச் 
14 அன்று, இரவு 11.53 மணிக்கு 
நடுநிசியில், 
 பங்குனி  மாதம் பிறக்க 
இருப்பதால், 
இரவு 8 மணியளவில்,  
நோன்பு நூற்றல் நலம்.


காரடையான் நோன்பு15.3.2023

புதனன்று, மாசியும் பங்குனியும் கூடும் புண்ணிய தருணத்தில், "காரடையான் நோன்பு" கடைபிடிக்கப்படுகிறது. இதை "காமாட்சி விரதம்" எனவும் கூறுவர். 
குறுகிய வாழ்நாள் கொண்டவன் என அறிந்தும், தான் காதலித்த 'சத்தியவானையே" பிடிவாதமாக மணந்து கொண்டாள் சாவித்ரி. தன் மாங்கல்யம் நிலைக்கவேண்டும் என்று மிகுந்த நம்பிக்கையுடன், காமாட்சி தேவியை விரதமிருந்து பூஜித்து வந்தாள். அந்த பூஜையின் பலனும், கண் தெரியாத தன் வயதான மாமனார், மாமியாரை மிகுந்த அன்போடு கவனித்து பராமரித்ததாலும், அவள் தன் கற்பின் திறத்தாலும் எமனுடன் வாதிட்டு, தன் மணாளன் உயிரை மீட்டு வந்தாள் சாவித்ரி.
இதனை அடிப்படையாகக் கொண்டே, நாமும் தம்பதியின் ஒற்றுமை மேலோங்கவும், ஆயுள் பலம், மாங்கல்ய பலம் வேண்டியும், கன்னிப் பெண்கள், நல்லதொரு கணவனும் கிடைத்திட வேண்டியும் இந்த "காரடையான் நோன்பினை" நூற்பர். 

அன்றைய தினம் பூஜையின் முடிவில், கார் அரிசியில் செய்த வெல்லம் மற்றும் உப்பு அடைகளையும் உருகாத கெட்டியான வெண்ணெயையும் அம்மனுக்கு நிவேதனம் செய்து, பின், மஞ்சள் நோன்புக் கயிற்றில் புது மலரினைக் கட்டி 'உருகாத வெண்ணெய் போல் ஒருக்காலும் என் கணவர் எனைப் பிரியாது இருக்கவேண்டும் என வேண்டிக் கொண்டு, கழுத்தில் கட்டிக் கொள்வர். அத்துடன் புதிதாக மாங்கல்ய சரடும் மாற்றிக் கொள்வர். "மாசி சரடு பாசி படியும்" என்பது சொல்வழக்கு. அதாவது, சரடு அழுக்கேறி பாசி படர்ந்தது போல் ஆனாலும், அந்த சரடு சக்தி வாய்ந்ததாக போற்றப்படுகிறது.

இவ்வருடம் மார்ச் 15 ஆம் தேதி புதனன்று அதிகாலை 5 மணிக்கு மேல் பங்குனி மாதம் பிறப்பதால், 5 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக நோன்புச் சரடினை நூற்று கட்டிக் கொள்ளவேண்டும். குறைந்த பட்சம் காலை 6.30 மணிக்குள்ளாவது கட்டிக் கொள்வது நலம். 



Sunday 6 March 2022

முதல் சிவன் கோயில்? & கடைசி அசுரன்?

 


ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமான் வேதங்களின் ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய "சிவஞான போதம் " எனும் நூலின் தத்துவ விளக்கத்தினை பார்வதிதேவிக்கு உபதேசிக்கலானார். ஒரு கட்டத்தில் பார்வதி தேவிக்கு மனம் லயிக்காமல் கவனம் சிதறியது. அதை கவனித்த சிவனார் கோபம் கொண்டு, கல்வியறிவில்லாத மீனவ குலத்தில் பிறப்பாய் என சாபமிட்டார். 



 அவ்வாறே, உமாதேவியும் பாண்டிய நாட்டில் புன்னை மர நிழலில் ஒரு பெண் குழந்தையாக கிடக்க, மீனவகுலத் தலைவனால்  கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள்.

   தன் தாய்க்கு நேர்ந்ததை சகியாத விநாயகரும், முருகனும் நந்திதேவரின் அனுமதியின்றி, அவர் தடுத்தும் கேளாமல் தந்தையிடம் நியாயம் கேட்டு வாதிட்டனர். 
இதற்கெல்லாம் காரணம் இந்த சிவஞானபோதமே என சுவடிகளை எடுத்து எறியவும், அவை கடலில் விழுந்து மூழ்கியது.  
சிவபிரான், குழந்தைகளின் இச்செயலை கண்டித்து, விநாயகரை விடுத்து முருகனிடம், பெரியோர்களை மதியாமல் எதிர்த்து பேசியதால், நீ பூவுலகில் "திருவாலவாய்" நகரில் ஒரு வணிகனின் மகனாக ஊமையாக பிறப்பாய் என சாபமிட்டார்.
 பின், நந்திதேவரிடம், என்னைக் காண வருபவர்கள் எத்தனை சக்தி படைத்தவராக இருந்தாலும், அவர்களை தடுத்து தக்க முறையில் கையாள வேண்டும்.  
 உன் பணியை திறம்படச் செய்ய தவறியதால், சிவஞானபோதம் கடலில் சென்று விழும்படி நேர்ந்தது. ஆகையால் நீ, கடலில் சுறாமீனாக மாறக்கடவாய்! என சபித்தார். 
விநாயகப்பெருமானை கடிந்து கொண்டதோடு விட்டுவிட்டு அவருக்கு சாபம் அளிக்காததன் காரணம்: 
விநாயகரை யாராலும் சபிக்க முடியாது. அவரை சபித்தவர் யாராக இருந்தாலும், அச்சாபம் சபித்தவரையே சென்றடையும் .

தன் கடமையை தவறியதை உணர்ந்து நந்திதேவரும் சுறாமீனாக மாறி வேதங்களைத் தேடி கடலில் சுற்றி அலைந்தார்.

  அவரது இத்தேடலுக்கு இடையூறாக, மீனவர்கள் வலைவீசி பிடிக்க முயன்றதால் எரிச்சல் அடைந்த நந்திதேவர், மீனவர்களின்  படகையும்  நாசம் செய்ததோடு, மீனவர்களையும் கடுமையாகத் தாக்கி விரட்டினார். 

இச்சமயத்தில் பார்வதிதேவியும், அழகிய பருவப் பெண்ணாக நன்கு வளர்ந்திருந்தாள். உடன், வளர்ப்புத் தந்தையான மீனவத் தலைவன், சுறாவின் கொட்டத்தை அடக்குபவர்க்கு, தனது மகளை திருமணம் செய்து தருவதாக அறிவித்தான். பல கட்டிளம் காளைகள் போட்டி போட்டு முயன்றும், பலன் இல்லை.!!

   அதுசமயம் பார்வதிதேவியும், தங்களின் குலதெய்வமான  சிவபிரானை துதித்து, தங்கள் குலத்தைக் காக்கவண்டும் என பிரார்த்திக்கவும், பார்வதி தேவியை ஆட்கொள்ள தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சிவபிரானும் மீனவனாக வந்து, மீனவத் தலைவனிடம் சபதம் செய்து, கடலில் சென்று வலைவீசி சுறாவாக அலைந்து கொண்டிருந்த நந்திதேவரை பிடித்து, தான் இட்ட சாபத்தை தானே விலக்கி சிவஞானபோதத்தோடு, நந்திதேவரையும் மீட்டெடுத்து, பார்வதி தேவியை கரம் பிடித்து, அனைவருக்கும் காட்சியளித்து அருளினார்.

இந்த நிகழ்வு நடந்த இடம் மதுரை - இராமநாதபுரம் வழித்தடத்தில் அமைந்துள்ள 'உத்திர கோச மங்கை' எனும் தலமாகும்



ருத்திரன் மங்கைக்கு உபதேசம் செய்த இடம் ஆனதால், இத்தலம் "உத்திர கோச மங்கை" என அழைக்கப்படுகிறது. 

இந்தத் திருக்கோயிலே உலகில் முதலில் தோன்றிய கோயிலாகக் கருதப்படுகிறது. அதற்கான பல சான்றுகளை வல்லுனர்கள் முன் வைக்கின்றனர்.
அவற்றில் சில,
1. நவகிரஹங்கள் பற்றி அறியப்படாத காலகட்டத்தில், சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் மட்டுமே இத்திருக்கோயிலில் இடம் பெற்றுள்ளனர்.


2.ஆதிகாலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக   உத்திரகோசமங்கையே இருந்ததாகவும், இந்த நிலத்தின் ஒரு பகுதி கடல் கொண்டதால், பின்னர் 'மதுரை' தலை நகரமாக மாற்றப்பட்டதாகவும் கல்வெட்டு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.


 3.அது தவிர, மண்டோதரி தலைசிறந்த சிவபக்தனையே தான் திருமணம் முடிக்க விரும்புவதாக காத்திருந்து, இத்தலத்து சிவனை வேண்டி, தலைசிறந்த சிவபக்தனான இராவணனை இத்தலத்திலேயே திருமணம் செய்ததாகவும் குறிப்புகள் உள்ளன. 




இராவணனே கடைசி அசுரனாக கருதப்படுகிறார். மஹாவிஷ்ணு இராவண வம்சத்துடனேயே அசுர குலத்தை முடித்து வைத்தார்.

அதற்கு அடுத்து வந்த யுகத்தில் இருந்து

   "குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்"

 என திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்றாற்போல், ஒவ்வொரு மனிதனுள்ளும், நற்குணம் அசுர குணம் இரண்டும் கலந்து விட்டது.  

"மிகை நாடி மிக்க கொளல்" 

என்பதில் எந்த குணம் அதிகளவில் தலைதூக்குகிறதோ, அதையே அவரது இயல்பாக கொள்கிறோம். 

4. மஹாவிஷ்ணுவும், பிரம்மனும்  அடிமுடி காண்பதற்கான நிகழ்விற்கு முன்பாகவே இது தோன்றியிருக்கலாம். ஏனெனில்,  தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால், சிவபூஜைக்கு பயன்படாமல் போகும் சாபம் பெற்றதல்லவா?

ஆனால் இத்திருக்கோயிலில் தாழம்பூ பூஜைக்கு சேர்க்கப்படுகிறது. அதனால், இது எந்த யுகத்தில் உண்டான கோயில் என்பது அறியப்படாததாக உள்ளது.

இச்சமயத்தில் யுகங்கள் பற்றிய தகவல்களையும் பதிலிட கடமைப்பட்டுள்ளேன். 

இந்த பூமியை ஆட்சி செய்பவர்கள் மன்வந்தரர்கள். 
மன்வந்தரரின் புத்திரர்கள் ஆனதால், நாம் மனிதன் என அழைக்கப்படுகிறோம். 14 மன்வந்தரர்களின் ஆட்சிக் காலம் பிரம்மனின் ஒரு நாளாக கருதப்படுகிறது. 

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என நான்கும் சேர்ந்து ஒரு சதுர் யுகம் எனப்படுகிறது.



இப்படியான 71 சதுர்யுகத்தை ஒரு மன்வந்தரர் ஆட்சி செய்கிறார். இதே கால அளவு தான் இந்திரன், தேவர்கள் ஆகியோருக்கும். 

இந்த அளவில் 14 மன்வந்தரர்களின் 71 சதுர் யுக மொத்த ஆட்சிக் காலம் பிரம்ம தேவனின் ஒரு நாளாக உள்ளது. பல கல்பங்களைக்  காணும் பிரம்மனின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.  அதன்பின் மகாப்ரளயம் ஏற்பட்டு, பிரம்மனும் இறைவனிடத்தில் ஒடுங்கி விடுவார். பின் அடுத்த உலக படைப்பில், வேறொருவர், தகுதியின் அடிப்படையில்  'பிரம்ம' பதவியை அடைவார்.  

    நாம் இப்பொழுது ஏழாவது மன்வந்தரரான "வைவஸ்வத மன்வந்தரரின், ஸ்வேத வராஹ கல்பத்தில், 28 ஆவது மஹாயுகத்தில்,  கலியுகத்தின் முதல் கால் பாகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

தற்பொழுது பிரம்மனின் வயது ஐம்பத்து ஒன்று. "த்விதீய பரார்த்தே" ஒரு ஐம்பது முடிந்து இரண்டாவது ஐம்பதின் தொடக்கம்" எனப் பொருள். இதைத் தான் நாம் விசேஷ காலங்களில்   சங்கல்பமாக கூறுகிறோம்.

   


    




அதுகாறும் மதுரை தமிழ்ச்சங்கத்தில் 48 புலவர்கள் இருந்தனர். அவர்கள் அகத்திய முனிவர் இயற்றிய "அகத்தியம் " எனும் இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டு பாடல்களைப் புனைந்திருந்தனர். 
அவர்களிடையே தங்களுடைய நூலே சிறந்தது என்று போட்டி ஏற்பட்டு, முடிவுக்கு வர இயலாமல் சண்டையாக வலுக்கும் நிலை ஏற்பட, ஐயம் கொண்ட அவர்கள், மதுரை "சொக்கநாத சுவாமியையே" தஞ்சமடைந்தனர்.
சொக்கநாதரும், திருவாலவாயில் வசிக்கும் வணிகன் தனபதியின் புதல்வன் ஊமையனான "ருத்ரசர்மன்" இதற்கு தீர்ப்பளிக்க உகந்தவன் என்று கூறியருளினார். அவ்வண்ணமே புலவர்களும், ருத்ரசர்மன் இல்லத்தை அடைந்து, அவன் தாயிடம் தாங்கள் அங்கு வந்த நோக்கத்தைக் கூறி, தங்கள் மகன் ருத்ரசர்மனை தங்களோடு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். 
வியப்பு மேலிட, வாய் பேச முடியாத என் மகனால் எப்படி தீர்ப்புக் கூறமுடியும் என வினவினாள் அவன் அன்னை. 
அதற்கு புலவர்களோ! அதை நாங்கள் அறிவோம்!! இது அந்த ஈசனான சொக்கேசனின் கட்டளை!!!.ஆகையால் தாங்கள் கருணைகொண்டு தங்கள் மகனை அனுப்பி வைக்கவேண்டும் என்றனர். 
இதைகேட்டு சொக்கநாதரின் கருணையை எண்ணி அகமகிழ்ந்து, தன் மகனை அனுப்பி வைத்தாள்.




 ருத்ரசர்மனும் அவர்களது பாடல்களை எல்லாம் தாளம் போட்டு ரசித்து கேட்டதோடு, 
"நக்கீரர், கபிலர் மற்றும் பாணர்" ஆகியோரது பாடல்களே சிறந்தவை என தீர்ப்பளித்தார். அத்துடன் நில்லாமல் மற்ற புலவர்களது பாடல்களில் உள்ள பிழைகளை திருத்தி அமைத்து கொடுத்து, அவர்களது பாடல்களை திரும்ப அரங்கேற்றினார். 
அதன்பின், சாபம் நீங்கப் பெற்றவராய் ருத்ரசர்மனாக பிறந்த முருகப்பெருமான் கைலாயம் ஏகினார்.