Monday 27 November 2023

நல்ல உள்ளம் வாழும் வாழ வைக்கும்.

 ஒரு சிறிய கிராமத்தில்  பரம சாதுவான ஒரு பெரியவர் வசித்து வந்தார். பெருத்த குடும்பம், சிறுத்த வருமானம்.ஆம்! அவரிடம் கல்விச் செல்வமும், குழந்தைச்  செல்வங்களும் இருந்த அளவு, பொருள் செல்வம் இல்லை. 


 நிலையான வருமானம் இல்லாததால் பசியும்  பட்டினியுமாக   அவரும் அவரது மனைவி மக்களும் வறுமையில் வாடினர்.  எப்படி முயன்றும் சரியான வேலை கிடைக்காத காரணத்தால் தான் முதலில் அயலூருக்குச் சென்று நல்லதொரு வேலை தேடிய பின், மனைவி மக்களை அழைத்துச் செல்வதாகக் கூறி புறப்பட்டார்.


    வழியில் காட்டுப் பாதை வழியாகத் தான் அடுத்த ஊருக்குச் செல்லமுடியும். நடந்து நடந்து ஒரு வழியாக காட்டுப் பாதையையும் அடைந்தார்.  


வெகு தூரம் நடந்து வந்த களைப்பு மிகுதியால், பசியும்   அதைவிட  நா வறண்டு  தாகமும்  மேலிட,  அருகில் குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் எதுவும் தென்படுகிறதா? என தேடினார்.


அப்பொழுது, அங்கே, கிணறு ஒன்றை கண்டார். அப்பாடா ! என்று ஆவலோடு கிணற்றை மெதுவாக எட்டிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஆம்! அது ஒரு பாழும் கிணறு. அதில், புலி, குரங்கு மற்றும் மலைப்பாம்புடன் ஒரு மனிதனும்  இருப்பதைக் கண்டார் .அவசரத்தில் தவறி விழுந்திருக்கலாம் என்று ஊகித்து அறிந்தார்.


   அப்பொழுது புலி அவரைப் பார்த்து, ஐயா! தங்களைப்   பார்த்தால் மிகவும் கருணை கொண்டவராகத் தெரிகிறீர். என்னை இக்கிணற்றிலிருந்து காப்பாற்றினால், நன்றி உடையவனாக இருப்பேன் என்றது.


உடன் ஏழைப் பெரியவரும், நான் உன்னைக் காப்பாற்றிய பின், நீ என்னையே அடித்து உண்ணமாட்டாய் என்பது என்ன நிச்சயம் என்றார்.


ஐயா! நாங்கள் பசி எடுக்கும் பொழுது மட்டுமே பிற உயிர்களை அடித்து உண்போம். மனிதர்களைப் போல  தேவையின்றி பிறரை துன்புறுத்தமாட்டோம். என்றது.


அவரும் புலியின் கூற்றின் உண்மையை உணர்ந்து, புலியை காப்பாற்றினார்.


புலியும் அவருக்கு பலவாறு தன் நன்றியைக் கூறி  அதோ தெரியும் மலையின் அடிவாரத்தில் தான் தனது குகை உள்ளது எனவும், தாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும், தன் குகைக்கு வருகை தந்து தன்னை கௌரவிக்க வேண்டுமென அன்புடன் கூறியதோடு, யாருக்கு வேண்டுமானாலும் உபகாரம் செய்யுங்கள். ஆனால் அந்த மனித்னை மட்டும் நம்பாதீர்கள். அவன் நயவஞ்சகம் கொண்டவன் என எச்சரித்து விடை பெற்றுச் சென்றது.  


   அவ்வண்ணமே ! மலைப்பாம்பும் தன்னையும் காப்பாற்ற வேண்டியதும் அவர் தயங்கவே அவரது பயத்தை உணர்ந்து, தங்களுக்கு தக்க சமயத்தில் நான் உதவி புரிவேன் என சத்தியம் செய்தது. அவரும் தைரியம் வரப் பெற்றவராய், அதன்படியே காப்பாற்றவும், மலைப்பாம்பும் அவருக்கு நன்றி கூறி, அவர் தன்னை எப்பொழுது நினைத்தாலும் அவர் முன் தோன்றுவேன் என வாக்களித்து புலியைப் போலவே மனிதனைப் பற்றி எச்சரித்துச் சென்றது. 


அடுத்து, குரங்கும் அவரை கெஞ்சலுடன் நோக்கவே, குரங்கினால் எந்த ஆபத்தும் நேராது .அது சாதுவான பிராணி என்று எண்ணி, அதையும் காப்பாற்றினார். குரங்கும் அவருக்கு நன்றிகள் பல கூறி அருகில் இருக்கும் தோப்பில் தான் நான் வாசம் செய்கிறேன். சமயம் கிடைக்கும் பொழுது அவர் அங்கு வரவேண்டும் என்றதோடு, மற்ற இரண்டையும் போலவே, அம்மனிதனிடம் நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்திச் சென்றது.


அப்பொழுது, போயும் போயும் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் சொல்வதை நம்புவாய்! மனிதனுக்கு மனிதன் நம்ப மாட்டாயா? எனக் கூறி அவரிடம் தன்னையும் காப்பாற்ற வேண்டினான் அந்த மனிதன். 


 அவன் மேல் இரக்கம் கொண்டு அவனையும் காப்பற்றினார். அந்த மனிதனும்,  பக்கத்து நகரில் தான் தனது இல்லம் இருப்பதாகவும், தான் ஒரு பொற்கொல்லன் எனவும் கூறி, தன் இல்லக் கதவு அவருக்காக எப்பொழுதும் திறந்தே இருக்கும் என்றும் பலவாறாய் அவருக்கு நன்றி கூறி விடைபெற்றான்.


      அதன்பின், அந்த ஏழைப் பெரியவரும், ஒருவாறாக, பக்கத்து ஊரை அடைந்து, நல்லதொரு வேலைக்காக அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனில்லாமல் போகவே, தனியே இங்கு இருந்து துன்பப்படுவதைக் காட்டிலும் ஊருக்கே திரும்புதல் நலம் என எண்ணி, வந்த வழியே கிளம்பலானார்.


  மனச் சோர்வும், வாழ்க்கைமேல் அவநம்பிக்கையும் நீண்ட தூரம் நடந்த களைப்பும் ஒன்றுக்கொன்று மனதை பிசைய உடல் தளர்ந்து ஒரு மரத்தடியில் மயங்கி விழுந்தார்.


  அந்த மரத்தில் தான், முன்பு அவர் காப்பாற்றிய குரங்கு வசித்து வந்தது. தூரத்தில் அவர் வரும் போதே கண்டு கொண்ட குரங்கு, தனக்குதவி செய்தவருக்கு தான் பிரதி உபகாரம் செய்யும் சந்தர்ப்பம் வந்தது என்று மகிழ்ந்து, அவர் அருகில் வந்ததும் எதிர் கொண்டழைக்கக் காத்திருந்தது. ஆனால், அவர் மயங்கி விழவும், மிகவும் பதறி மரத்திலிருந்து சரசரவென இறங்கி, மயக்கம் தெளிவித்து  அவர் பசியுடன் இருப்பதை உணர்ந்து, பலவித சுவை மிகுந்த பழங்களை எடுத்து வந்து அவருக்கு அளித்து உபசரித்தது. 


    அப்பழங்களை உண்டதும்,சோர்வு நீங்கி புத்துணர்வு பெற்றவரானார். உடன் அருகில் மலையடிவாரத்தில் தான் தன் குகை என புலி கூறியது நினைவில் வரவே, சரி! வந்தது தான் வந்தோம். புலியையும் பார்த்து விட்டுச் செல்லலாம் என எண்ணியவாறு குரங்கிடம் நன்றி கூறி விடைபெற்று, புலியின் குகைக்குச் சென்றார். 


   அவரைக் கண்டதும் புலி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தது. அவரை உபசரித்து பின் அவர் கிளம்பும் சமயம், அவரை அன்புடன் நோக்கி, முன்பொரு முறை, பக்கத்து நாட்டு இளவரசன் என்னை வேட்டையாட வந்தான். அவனிடமிருந்து என்னை காத்துக் கொள்ள வேண்டியதால், நான் அவனைக் கொல்லும்படி நேர்ந்தது.   .


 அவனது விலையுயர்ந்த ஆபரணங்களையெல்லாம் நான் தாங்கள் இங்கு வரும் பொழுது உங்களுக்கு நன்றிக் கடனாக என் அன்பளிப்பாக கொடுக்கலாம் என்று அவனிடமிருந்து கழற்றி எடுத்து வந்தேன் என்று கூறி அவருக்கு பரிசளித்தது. 


ஆனால், பெரியவர் அதை வாங்க மறுத்தார்..புலியோ மிகவும் வற்புறுத்தியது. தனக்கு இந்த நகைகளால் எந்த உபயோகமும்   இல்லை. இவை அவரது வறுமையைப் போக்க உதவும் என்று அவரை வேண்டிக் கெஞ்சியது.


புலியின் வேண்டுதலை தட்ட இயலாமல்,   பெரியவரும்    நகைகளை பெற்றுக் கொண்டாலும் இதனால் ஏதும் ப்ரச்சினை வருமோ? என உள்ளூர பயந்தார். 


   பின், புலியிடம் விடைபெற்றுச் செல்லும்போது, தான் காப்பாற்றிய அந்த பொற்கொல்லன் நினைவு அவருக்கு வந்தது.  நகைகளாக வைத்துக் கொண்டிருந்தால் பிரச்சனையும் ஆபத்தும் வரலாம். அதனால், அவனிடம் இந்த நகைகளை நல்ல விலைக்கு விற்றுக் கொடுக்கச் சொல்லலாம். இனி நம் கஷ்டமும் தீரும் என்ற நினைப்பு உவகை தர, பொற்கொல்லனது இல்லம் நாடிச் சென்றார்.


 இவரைக் கண்டதும் பொற்கொல்லன் அகமும், முகமும் மலர வரவேற்று உபசரித்தான். பின், பெரியவர் நடந்தவற்றை எல்லாம் அவனிடத்தில் விளக்கிக் கூறி, அந்த நகைகளை விற்றுத் தந்தால் தமது வறுமை நீங்கும் என அவனிடம் உதவும் படி கேட்டுக் கொண்டார்.


 பொற்கொல்லனும் அவருக்கு உதவுவது தனது பேறு எனக் கூறி, அவரிடமிருந்து அந்த நகைகளை வாங்கிப் பார்த்தவன் திடுக்கிட்டான்.


ஆஹா! இது  தங்கள் நாட்டு இளவரசனுக்காக என்னால் செய்யப்பட்ட   நகையாயிற்றே! வேட்டையாடச் சென்றவனை காணவில்லை என தேடிச் சென்ற வீரர்கள் இறந்து கிடந்த அவன் உடலைத் தான் எடுத்து வந்தனர். இளவரசன் அணிந்திருந்த நகைகளும் அவன் உடம்பில் காணப் பெறாததால், ஏதோ கொள்ளையர்கள் தான் அவனைக் கொன்று நகையை களவாடிச் சென்றதாக அனைவரும்  நினைத்திருந்தனர். அதனால் அரசனும், கொள்ளையர்களை கண்டுபிடித்து  தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்குவதாக அறிவித்திருந்தான்.  


        இப்பொழுது பொற்கொல்லனுக்கு  விஷயம் விளங்கியது. ஆனால், அவன் மனதில் ஒரு திட்டம் உருவாகியது. உடனே, அவன் பெரியவரிடம், தாங்கள் என் வீட்டிலேயே  காத்திருங்கள். இது மிகவும் தரம் வாய்ந்த நகைகளாக உள்ளதால், இதை வாங்கும் திறன் அரசனுக்கே உள்ளது. நான் அரண்மனை பொற்கொல்லன் ஆனதால், நான் அரசனிடம் சென்று இதை காண்பித்து, தக்க பொற்காசுகளை வாங்கி வருகிறேன் என்றான். பெரியவரும் மகிழ்ந்து, அதற்கு இசைந்தார். 


       ஆனால், பொற்கொல்லன் வஞ்சக எண்ணத்துடன், அரசனிடம் சன்மானம் பெறும் ஆதாயத்துடன், அரசனிடம் சென்று,


அரசே! இளவரசரது நகைகளைக் களவாடிய கொடியவனை என் இல்லத்தில் பிடித்து வைத்திருக்கிறேன் என்று உண்மையை மறைத்து பொய்யுரை கூறி, பரிசுத் தொகையை வாங்கிக் கொண்டு, காவலர்களுடன், தன் இல்லத்திற்கு வந்து, பெரியவரை பிடித்துக் கொடுத்தான்.


 அரசனும் மகனை இழந்த பெருந்துயரம் காரணத்தால், உண்மையை ஆராயாது, விசாரணை ஏதுமின்றி, அப்பெரியவரை சந்திக்கக்கூட இல்லாமல், அவரை சிறையில் அடைத்து மறுநாள் அவருக்கு மரணதண்டனையும் விதித்தான்.


 பெரியவர் என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள், சிறையில் அடைக்கப்பட்டார். தான் யாருக்கும் மனதால்   கூட    கெடுதல்  நினைத்ததில்லையே. அத்துடன் தன் நிலை, தான் பயந்தது போலவே ஆகியதே என மனம் நொந்தார். இனி தன்னை காப்பாற்றுவார் யார் உளர்? விவரம் ஏதும் அறியாமல் தன் குடும்பம் வேறு தத்தளிக்குமே என    பலவாறாக எண்ணி அவர் மனம் வருந்தினார். 


  திக்கற்றவனுக்கு தெய்வமே துணை! கடவுளே நான் எப்படி இந்த பழி பாவத்திலிருந்து மீளுவேன் என கதறிய வேளையில், அவருக்கு  தன்னை நினைத்த மாத்திரத்தில் அவர் முன்னே தோன்றுவேன் எனக் கூறிய மலைப்பாம்பின் நினைவு வந்தது. 


அவ்வாறே, அவருக்கு வாக்களித்த வண்ணம், அவர் தன்னை நினைத்தவுடன் அவர் முன் தோன்றிய மலைப்பாம்பு, நடந்தவற்றை எல்லாம் அறிந்து, அவருக்கு தைரியம் அளித்து, பின் ஒரு யோசனையும் கூறியது.


கவலைப்படாதீர் பெரியவரே! தங்களுக்கு உதவ இது அந்த தெய்வமே எனக்கு அளித்த வாய்ப்பாக கருதுகிறேன். நான் இந்த நாட்டு அரசியை கடித்து விடுகிறேன். அரண்மனை வைத்தியர்களாலும் குணப்படுத்த இயலாமல் கை விரித்து விடுவர். அது சமயம், நீங்கள், அரசியை என்னால் காப்பாற்ற இயலும் என்ற தகவலை மன்னருக்குத் தெரியப்படுத்த, அவரும் வேறு வழியின்றி உங்களை அனுமதிப்பார். நீங்களும் அரசிக்கு வைத்தியம் செய்வதுபோல் நாடி பிடித்துப் பார்க்கும் பொழுது, யாரும் அறியாமல் நான் வந்து அரசியின் உடம்பில் பரவிய விஷத்தை உறிஞ்சி எடுத்து விடுகிறேன். அரசியும் உயிர் பிழைப்பாள். அரசனும் மகிழ்ந்து உங்களை விடுதலை செய்து விடுவான் என்ற மலைப்பாம்பின் திட்டப்படியே அனைத்தும் செம்மையாக நடந்தேற, அரசனும் அவரை பலவிதமாக பாராட்டி நன்றி கூறினார்.


   பின் தங்களைப் பார்த்தால் கள்ளங்கபடமற்றவர் போல் தெரிகிறதே. தாங்கள் நிச்சயமாக என் மகனை கொன்றிருக்க முடியாது. என்ன நடந்தது? எதையும் மறைக்காமல் கூறுங்கள் என்று அன்போடு கேட்டார்.


பெரியவரும், உள்ளது உள்ளபடி அனைத்தையும் கூற, வெகுண்ட மன்னன், அந்த நம்பிக்கை துரோகியான பொற்கொல்லனை நிரந்தரமாக சிறையிலடையுங்கள் என கட்டளையிட்டான்.


 பின், அந்த பெரியவரை தனது முதன் மந்திரியாக நியமித்து, ஏராளமான பொன்னும், பொருளும் இன்னபிற பரிசுகளையும் அளித்து கவுரவித்தான்.


பின்னர், அந்த பெரியவரும் தன் குடும்பத்தையும் அந்நாட்டிற்கு   வரவழைத்து, மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.



No comments:

Post a Comment