Thursday 30 November 2023

பங்குனி உத்திரம்.

 


ஹோலி பண்டிகைக்கு பல நிகழ்வுகள் கதைகள் கூறப்பட்டாலும், காமனின் தகனம் அதனைத் தொடர்ந்த பங்குனி உத்திரமும் அதி முக்கியம் வாய்ந்தது.

பர்வத ராஜனின் மகளாக பார்வதி எனும் நாமத்துடன் உமாதேவி சிவபெருமானைப் பிரிந்திருக்க, இவர்கள் ஒன்று சேர்வதன் மூலம் முருகப் பெருமான் பிறந்து அதன் பின் "சூரபத்மனை" வதம் செய்யவேண்டும். இதற்காக தேவேந்திரன் மன்மதனிடம் அவ்வேளையை ஒப்படைக்க, அவன் சிவனின் நெற்றிக்கண்ணால் எரிந்து சாம்பலானான். அப்பொழுது அம்பிகையே மன்மதனின் வில்லையும் அம்பையும்  ஏந்தி உலக நன்மைக்காக 'காமாக்ஷி'யாக இறைவனை தன் வசப்படுத்தினாள். அத்துடன் மன்மதனையும் அருள் கூர்ந்து உயிர் பெறச் செய்தாள்.
               அதன் பின் வந்த, பங்குனி உத்திரத் திரு நாளில் எம்பெருமான் உமாதேவியை மணந்தார். இக்கல்யாண உற்சவத்தை அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடுவர். அம்மையப்பனுக்கும் புது ஆடை ஆபரணங்கள் அணிவித்து, வேத மந்திர கோஷத்துடன் ஹோமம் வளர்த்து,பின் திருமாங்கல்யம் அணிவித்து  திருமணம் நடத்தி பின் பல்லக்கில் அம்மையப்பனாக அனைவருக்கும் அருள் மழை பொழிய 'வீதி உலா' வந்து, பின் 'பள்ளியறைக்கு' எழுந்தருள்வார்கள்.
       இதே பங்குனி உத்திரத்தில் தான் திருமுருகனும் 'தேவசேனாதிபதியாக ' சூரபத்மனை வதம் செய்து,  அதற்கு பரிசாக  இந்திரனின் மகளான 'தெய்வானையை  மணம் புரிந்தார்.அதனால் இந்த பங்குனி உத்திரம் முருகனுக்கும் விசேஷம் வாய்ந்தது.  
                 அதனால் பார்வதி பரமேஸ்வரன் மற்றும் திருமுருகன் கல்யாண உற்சவத்தில் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் மற்றும் ஆண்கள் வேண்டிக் கொண்டு கல்யாண விரதம் இருந்து  உற்சவத்தில் கலந்து கொண்டால் விரைவில் அவர்களுக்கு திருமணம் கைக்கூடும் என்பது ஐதீகம். 
  வருகிற மார்ச் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 'பங்குனி உத்திரத் திரு நாள்' ஆகும்.

No comments:

Post a Comment