Saturday 28 August 2021

கோகுலாஷ்டமி

 ஆனந்தமயமானவன் கிருஷ்ணன். சுகமான சுமைகள் என்பது போல ஞானிகள் இன்பம், துன்பம் அனைத்திலுமே இறைவனைக் காண்கிறார்கள். அதனாலேயே புடம் போட்டத் தங்கம் போல், யுகங்கள் பல கடந்தாலும் அவர்கள் மங்காப் புகழுடன் இன்னமும் வாழ்வியல் தத்துவமாக விளங்குகிறார்கள்.

  30.8.2021 திங்கட்கிழமையன்று "கோகுலாஷ்டமி". பசுக் கூட்டத்தின் காவலனாய், விளங்கிய கோகுலக் கண்ணன், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதி ரோகிணி நக்ஷத்திரத்தில், நடுநிசியில் வசுதேவருக்கும், தேவகிக்கும் மகனாக அவதரித்தார். தெய்வமே மகனாக வந்து பிறந்ததெனில், அவர்கள் எப்பேர்ப்பட்ட ஞானிகளாய் இருக்கவேண்டும்.
யார் இந்த வஸுதேவர், தேவகி?  இவர்களைத் தேர்ந்தெடுத்து,   இவர்களின் மகனாக கண்ணனாக  பகவான் மஹாவிஷ்ணு. பிறந்ததற்கான பின்னனிக் கதைகளை இப்புண்ணிய தினத்தில் அறிவோமா? இத்தம்பதிக்கு, இவர்களின் மகவாக பலமுறை அவதரித்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது:
     முதன் முதலில் பிரம்மன் உலகைப் படைத்து, உயிரினங்களை  உருவாக்கியதில், மனித இனம் மிகவும் குறைவாகவே இருந்தது. அப்பொழுது, தலைசிறந்த மனிதனாக, சுதபா என்ற மன்னனும், அவரது மனைவியாய் பெண்குலத் திலகமாய் 'ப்ருச்னி,' என்பவளும், இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாமல், இருவருமாக, மஹாவிஷ்ணுவைக் குறித்து, 12 தேவ ஆண்டுகள் தவமிருந்தனர். இவ்விருவரின் தன்னலமற்ற பண்பினால், கவரப்பட்ட பிரம்மன், இவர்களே, மனித இனம் தழைக்கத் தகுதியானவர்கள், என்று உணர்ந்து, அவர்களிடம் தன் வேண்டுகோளைக் கூறினார். 
ஆனால், அவர்கள் இவர் கூறியது எதையும் காதில் கேளாமல், தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். இவரது முயற்சி பலனளிக்காததால் கோபங்கொண்ட, பிரம்மன், இடி முதலான இயற்கைச் சீற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் தவத்தைக் கலைக்க முயன்றார். தூய உள்ளம் கொண்டவர்களிடம் எந்த துன்பமும் தோற்றுத் தான் போகும் என்பது ஆங்கே நிரூபனம் ஆயிற்று.
image.png


இப்படியான இவர்களது தவத்தில் மகிழ்ந்த மஹாவிஷ்ணுவும் அவர்களுக்கு காட்சியளித்து, வேண்டும் வரம் தருவதாகக் கூறினார். இத்தம்பதி தன்னிடம் முக்தியை விரும்பிக் கேட்பார்கள் என்று நினைத்த பகவானே அதிசயிக்கும்படி, தாங்கள் எத்தனை பிறவி எடுத்தாலும், மஹாவிஷ்ணுவே    தங்களது மகனாக அவதரிக்கவேண்டும் என்று கேட்டனர். அவ்வாறே அவர்களது விருப்பத்திற்கிணங்கி, அவர்களின் மகனாக 'ப்ருச்னி கர்பா' என்ற பெயரில் அவதரித்தார்.
     அடுத்த பிறவியில், 'காச்யபர், அதிதி' யாக தேவர்களின் தாய் தந்தையாக இத்தம்பதியே    விளங்கிய போது, அவர்களின் மகனாக, 'உபேந்திரன்' என்ற பெயரில் அவதரித்த இவரின் குள்ள உருவின் காரணமாக 'வாமனர்' என அழைக்கப்பட்டார். 
மஹாபலி சக்கரவர்த்தி, தேவர்களை எல்லாம் சிறையெடுத்து கொடுமைபடுத்தியதால், தேவர்களின் தாயான அதிதி, மஹாவிஷ்ணுவை வேண்டி தாமே எங்களுக்கு மகனாக அவதரித்து, இந்திரன் முதலான தேவர்களை மீட்டுக் காக்கவேண்டும் என வேண்டினாள். அவ்வண்ணமே 'உபேந்திரன்' எனும் நாமத்துடன் அவர்களின் மகனாக அவதரித்தார்.
image.png
ஆம்! மூன்றடி மண் கேட்டு,விஸ்வரூபம் எடுத்து, மூவுலகையும் அளந்து திரிவிக்ரமனாய் மஹாபலி சக்கரவர்த்தியை ஆட்கொண்ட எம்பெருமானின், உபேந்திரன்' அவதாரமே இது. உபேந்திரன் என்றால், இந்திரனுக்குப் பின் வந்தவன். அதாவது இந்திரனின் தம்பி எனப் பொருள்.
 மூன்றாவதாக, திரும்பவும், இத்தம்பதியே, வஸுதேவர், தேவகியாய் 'துவாபர யுகத்திலும், எம்பெருமானின், தாய், தந்தையாய் விளங்கக் கூடிய மகத்தான பேற்றையும் பெற்றார்கள்.
 ஆனால், எம்பெருமான், இனி பிறவா வரமளித்து, தன்னுடனேயே இருக்கும்படியான மகத்தான 'பரமபதத்தினை' அளித்து ஆட்கொண்டார்.
image.png
         ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியில் நடு நிசியில் கிருஷ்ணன் அவதரித்தார். அதனால், கிருஷ்ணருக்கான பூஜையை    சாயங்காலத்திலும் அல்லது இரவிலும் நடத்தப்படுகின்றன வாசல் முதல் பூஜை அறை வரை கிருஷ்ண பாதம் வரைந்து, வெண்ணெய், அவல், லட்டு, அப்பம், அதிரசம், உப்புச் சீடை, வெல்ல சீடை, முறுக்கு போன்ற இன்னபிற பலகாரங்கள் கண்ணனுக்கு பூஜையின் முடிவில் நிவேதனம் செய்யப்படுகின்றன.image.png

Saturday 21 August 2021

ஆவணி அவிட்டம், காயத்ரி ஜபம்

  22.8.2021 ஞாயிற்றுக்கிழமை "யஜூர் வேத உபாகர்மா". திங்கட்கிழமை 22.8.2021 அன்று "காயத்ரி ஜபம் ". பொதுவாக ஆவணி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் திருவோண நக்ஷத்திரத்தில் ருக் வேத உபாகர்மாவும், அவிட்டம் நக்ஷத்திரத்தில் யஜுர் வேத உபாகர்மாவும் நடைபெறும். ஸாம வேத உபாகர்மா வினாயகர் சதுர்த்தி சமயம் நடைபெறும்.  

உலக இயக்கத்தின் மூலக்கருவான வேதங்களை பிரம்மாவிடமிருந்து அபகரித்துச் சென்ற அசுரனை மஹாவிஷ்ணு  'ஹயக்ரீவராக' அவதரித்து அதாவது குதிரை வடிவம் எடுத்து விரட்டி பிடித்து வேதங்களை மீட்டு திரும்பவும் பிரம்மாவிடம் ஒப்படைத்த திருநாள் ஆதலால் அன்றைய தினம் "ஹயக்ரீவர் ஜயந்தி" ஆகவும் கொண்டாடுவர். 

உபாகர்மா என்றால் தொடக்கம் என்று பொருள். உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் இந்த சடங்கினை உருவாக்கிய தங்களது 'ரிஷிகளுக்கு' ஆறு மற்றும் குளக்கரைகளில் அமர்ந்து, நன்றி கூறி தர்ப்பணம் செய்து புதிய 'பூணூலை' மாற்றிக் கொள்வர். அத்துடன் அன்றைய தினம் வேத பாராயணமும்  செய்வர். 

       பிரம்மச்சாரிகள் ஒரு முப்புரி நூலினையும், திருமணமான ஆண்கள் இரண்டு முப்புரி நூலினையும், தந்தையை இழந்தவர் மூன்றாவது முப்புரி நூலையும் அணிந்து கொள்வர் இவர்கள் தினமும் மூன்று வேளையும். 'காயத்ரி ஜபம் செய்யவேண்டும் என்பது நியதி.
  குருவிடமிருந்து காயத்ரி மந்திரத்தை உபதேசம் பெற்று
  ஓம் பூ : புவ: ஸுவ : மஹ: ஜன: தப: சத்யம் சத்யம் தத்ஸ்விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய
 தீமஹி தியோயோன :.ப்ரசோதயாத்
     என்று வலது கையினை அங்கவஸ்திரத்தால் மூடிக் கொண்டு 108 அல்லது 1008 வரை ஜபிப்பதால் சகலவிதமான பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். இது உலக நன்மைக்காகவும், கூட்டு பிரார்த்தனையாகக் கடைபிடிக்கப்படுகிறது.
image.png
  லௌகீக விஷயங்களை அறிந்து கொள்ள உதவும் நம் இரு கண்கள் தவிர, மெய்ஞ்ஞானத்தை அறியக் கூடிய துணைக்கண்ணாக அதாவது மூன்றாவது கண்ணாக இந்த உப நயனம் விளங்குகின்றது.
அனைத்து உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய கடவுளான சூரியனே!
 பரம்பொருள்  தத்துவத்தை உணரக் கூடிய வகையில் எனது ஞான அறிவுக் கண்ணையும் திறந்து தூண்டக்கூடியதாகட்டும் என்பதே இதன் விளக்கம். 
சூரிய தேவனின் மஹிமையை உணர்த்தும் இந்த மந்திரத்தை உள் வாங்கி மனதில் தியானித்து பரம்பொருளை உணர்வதாகும்
  இந்த மந்திரத்தில் வரும் பூலோகம், புவர் லோகம், ஸுவர் லோகம், மஹர லோகம், ஜன லோகம், தப லோகம் மற்றும்சத்ய லோகம் என ஏழு உலகங்களையும் குறிக்கிறது.
ஈரேழு பதினான்கு உலகங்கள் என கூறுவார்கள் அல்லவா? அவைகள்: நம் பூமியைச் சேர்த்து அதற்கு மேல் உள்ள ஆறு உலகங்களும், பூமிக்குக் கீழாக ஏழு உலகங்களும் ஆகும்
பூ லோகம் ஓரறிவு முதல் ஆறறறிவு வரை படைத்த உயிரினங்கள் வாழ்வது. அதாவது, நாம் வாழும் பூமி. 
புவர் லோகம்  .கிரகங்கள் மற்றும் நக்ஷத்திரங்களுக்கான    தேவதைகளின் இருப்பிடம்
image.png
ஸுவர்லோகம்  முனிவர்களும், மகரலோகம் இந்திரன் முதலான தேவர்கள் வசிக்கும் இடம், ஜனோலோகம் : பித்ருக்களின் வசிப்பிடமாகவும், தபோலோகம் : தேவதைகளும், இறுதியாக சத்யலோகத்தில் 'பிரம்ம தேவனும்' வசிப்பதாகக் கூறப்படுகிறது.
 பூமிக்கு கீழுள்ள ஏழு உலகங்கள் : 
1.அதல லோகத்தில் நாகர்களும், 
2.விதல லோகத்தில் அரக்கர்களும், 
3. சுதல லோகத்தில் அரக்கர் குலத்தில் பிறந்தாலும் மஹாவிஷ்ணுவால ஆட்கொள்ளப்பட்ட 'மஹாபலி சக்கரவர்த்தியும், 
4. தலாதல லோகத்தில் மாயாவிகளும், 
5. மஹாதல லோகத்தில் தன் நற்செயல்களால் புகழடைந்த அசுரர்களும், 
6. பாதாள லோகத்தில் வாசுகி போன்ற பாம்புகள் வசிப்பதாகவும், மற்றும் 
7.ரஸாதல லோகத்தில் அசுரர்களின் குருமார்களும் வசிப்பதாகக் கூறப்படுகிறது. 
image.png

Saturday 14 August 2021

புன்னை நல்லூர் மாரியம்மன் முத்து பல்லக்கு






 தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட சோழமன்னர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட காவல் சக்திகளை நிறுவி வழிபட்டார்கள். அந்த அஷ்ட சக்திகளில் தஞ்சையின் கிழக்குப் பகுதியில் அமர்ந்து கோயில் கொண்டு அருளாட்சி செய்பவள் தான் புன்னைநல்லூர் மாரியம்மன்.

   கடல் கடந்து சோழ சாம்ராஜ்யம் எங்கெல்லாம் கொடி நாட்டியதோ? அங்கெல்லாம் மாரியம்மனின் அருட்கொடி பரவியிருந்தது என்றால் அது மிகையல்ல. 
image.png
சோழர்களால் இந்த அம்மன் ஸ்தாபிக்கப்பட்டாலும், பின்னால் வந்த மராட்டிய மன்னர்களும் இந்த அம்மனின் மஹிமையை உணர்ந்து, பல திருப்பணிகள் செய்துள்ளனர்.
 புன்னைவனத்தில் சுயம்புவாகத் தோன்றிய இந்த அம்மனைத் தான் கண்ட கனவின் மூலம் கண்டெடுத்து கோயில் எழுப்பி "புன்னைநல்லூர் முத்து மாரியம்மன்" என பெயரிட்டு,  அந்த ஊரையே இத்திருக்கோயிலுக்கு சொந்தமாக்கி, அரும்பணி தொடங்கி வைத்த மராட்டிய மன்னர் வெங்கோஜி' மகாராஜா முதல், பல ஆங்கிலேய அதிகாரிகள், கடைசியாக தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் இன்றளவிலும் பல பக்தகோடிகள்   மாரியம்மனின்  சக்தியை  உணர்ந்து வழிபட்டு  பலனடைந்தவர்கள் ஏராளம். 
சரபோஜி மன்னர் தன் ஆட்சிக் காலத்தில், மகாமண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் இரண்டாவது பெரிய சுற்றுச் சுவர் என விரிவுபடுத்தி திருப்பணி செய்துள்ளார். 
இந்த அம்மனிடம் அம்மை நோய் முதல் தங்களது பலவித கஷ்டங்களுக்கும் தீர்க்க வேண்டியபடி பிரார்த்தனை நிறைவேறிய மகிழ்வோடு அம்மனைக் கொண்டாடி, நேர்த்திக் கடன்   செலுத்தி   செல்லுகின்றனர்.  வருடா 

image.png
வருடம் அம்மனுக்கு சுற்றுப்புற ஊர் மக்கள் அனைவரும் பால்குடம் எடுத்தும், குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல், காது குத்து,  கல்யாணம்  என அம்மனிடத்தில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை நல்லவிதமாக நடத்தித் தர முழு சரணாகதியாய் அவள் பொற்பாதங்களில் தஞ்சம் அடைந்து விடுவார்கள். 
 விழாக்காலங்களில் கலை நிகழ்ச்சிகள் கச்சேரியும் அமர்க்களமாக கொண்டாடப்படும்.
  பக்தர்கள் கலைநிகழ்ச்சிகளை விடியும் வரை கண்டுகளித்து கலைஞர்களையும் உற்சாகமாக ஊக்குவிப்பார்கள். 
அப்படிப்பட்ட இந்த மாரியம்மனின் சன்னதியில் 1987 முதல் 1993 வரை எனது பரதநாட்டிய நிகழ்ச்சியை தொடர்ந்து அடியேன் நிகழ்த்துவதற்கு அந்த மாரியம்மனின் மாரி போன்ற கருணையன்றி வேறென்ன இருக்க முடியும். அதை நினைக்கும் இச்சமயத்தில் உள்ளம் அவள் அருள் திறத்தை எண்ணி பாகாய் உருகுகிறது. உடல் சிலிர்க்கிறது. 
ஆகஸ்ட் 15 2021 இன்றைய தினம் ஆடி மாத கடைசி ஞாயிறு. இத்தினத்தில் அம்மனை அலங்கரித்து 'முத்துப் பல்லக்கில்'  வானவேடிக்கை மேளதாளத்துடன் வேத கோஷம் முழங்க வீதி உலா வரும் அழகை, அம்மனை தரிசிக்க பக்தர்கள் சாலையின் இரு புறங்களிலும் ஆவலோடு கூடியிருப்பர்.

Tuesday 10 August 2021

ஆடிப்பூரம்

 ஆக. 11ம்தேதி [ஆடி 26] புதன்கிழமையன்று அம்பிகைக்கு உகந்த பூர நக்ஷத்திரம். 

இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்தாகவும், மற்றும்   பூமாதேவி ஆண்டாளாக அவதரித்ததாகவும் புராணங்கள் உரைக்கின்றன. இதனால் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்தப்பெறும். இதில் தேர் வீதி உலா, ஐந்தாம் நாள் கருட சேவை, ஏழாம் நாள் பெருமாள் ஆண்டாள் மடியில் 'சயனத் திருக்கோலம்' என விமரிசையாக நடைபெறும்.
  அவ்வண்ணமே, அம்பிகைக்கும் ,  பத்து நாட்கள் விழாவாக காலை மாலை இருவேளையும்  அபிஷேகம், அலங்காரம் இவற்றோடு பூரம் கழித்தல் எனும் ''ருது சாந்தி விழா, திருமணம், வளைகாப்பு மற்றும் சீமந்தம்   என  
கோலாகலமாக பக்தர்களின் வாழ்விலும் இது போன்ற மங்கல நிகழ்வுகளோடு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற வேண்டுதலோடு கொண்டாடப்படுகிறது.
பார்வதி தேவி தன் உடல் மூலக்கூறுகள  உருவானவர் கணபதி.  சிவனின்நெற்றிக்கண்ணிலிருந்து உதித்தவர்முருகப்பெருமான். மகாவிஷ்ணுவின் மோஹிணி அவதாரத்தின் போது சிவா விஷ்ணு ஐக்கியத்தால் உருவானவர் ஐயப்பன், இவை யாவரும் அறிந்ததே. இவர்களைத் தவிர இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் உண்டு. அசோக சுந்தரி, ஜோதி மற்றும் மானஸா.
image.png
   அதில் முதல் பெண் குழந்தையாக, வினாயகருக்கும்  மூத்தவளாக, 'அசோகசுந்தரி' என்ற பெண் மகவை பார்வதி  பெற்ற கதையை அறிவோமா? 
    ஒருமுறை, சிவபிரான் போருக்காக சென்றிருந்த சமயம் பார்வதி தேவி, நீண்ட நாட்கள் தனித்திருக்கும் நிலையைப் பொறுக்கமாட்டாமல், தனக்கு ஒரு பெண் குழந்தை இருந்திருந்தால், தன் பேச்சுத் துணைக்கும், அக்குழந்தையை வளர்ப்பதிலும் தன் நேரப் பொழுது, இனிமையானதாக இருந்திருக்கும் என ஏங்கி சோகத்தில் தவித்தாள்.. உடன் பார்வதிக்கு, தேவலோகத்தில் இருக்கும் கேட்டதைக் கொடுக்கும், 'கற்பக மரம்' நினைவுக்கு வந்தது. சிறிதும் தாமதியாமல், கற்பக மரத்திடம் சென்று தனக்கு ஒரு பெண் குழந்தையை வேண்டினாள்.
 உடன் பார்வதி தேவியின் கைகளில் அழகிய பெண் குழந்தை தவழ்ந்தது. தன் பெரும் சோகம் நீங்கப் பெற்றவளாய், அகமகிழ்ந்தாள் தேவி.
 'அ' எனற சொல் நேர்மறை எண்ணம் கொண்டது. சோகம் என்ற எதிர்மறை சொல்லுக்கு முன் 'அ' சொல்லைச் சேர்த்தும்,  ;சோகத்தைப் போக்கியவள்] மிகுந்த பேரழகுடன் குழந்தை இருந்ததால்' சுந்தரி' என சேர்த்து குழந்தைக்கு 'அசோகசுந்தரி' என பெயர் சூட்டினாள். 
image.png
பார்வதியால் உருவாக்கப்பட்ட கணபதியை யார்? என அறியாமல் சிவபிரான் போரிட்டு அவர் தலையைக் கொய்த போது, பயந்து அதிர்ந்த  அசோகசுந்தரி உப்புக் குவியலில்    மறைந்திருந்ததாக 'புராணக் கதை கூறுகிறது.இந்த பாலாம்பிகையே துர்க்கையின் மஹிஷாசுர வதத்தின் போது 'பண்டாசுரனின்' முப்பது புதல்வர்களோடு போரிட்டு வென்றாள் என லலிதா சஹஸ்ரநாமம் இவள் புகழைச் சிறப்பித்துக் கூறுகிறது.
அசோகசுந்தரி பருவ வயதை அடைந்ததும், இந்திரனுக்கு இணையான செவ்வாக்கு பெற்ற, 'நகுஷன்' என்பவனுக்கு திருமணம் முடித்தார் சிவபிரான்.. இவர்களது மகனே புகழ் பெற்ற 'யயாதி' ஆவான்.
அசோக சுந்தரி வழிபாடு வட மாநிலங்களில் பிரபலம்.  நம் தென்னகத்தில் அவ்வளவாக பிரபலம் இல்லை என்றாலும்  ' பாலா' என்ற நாமத்தில் வழிபாடு நடத்தப்படுகிறது . .
 பாலாம்பிகை கோயில் காஞ்சிபுரம் அருகே ' நெமிலி' என்ற ஊரிலும், திருநெல்வேலியிலும் திருக்கோயில் அமைந்துள்ளது.       
image.png  
சிவபிரான் மற்றும் பார்வதியின் ஒளிவட்டத்திலிருந்து உதித்தவள் 'ஜோதி' . இவள் வெளிச்சத்தின் உருவகமாகக் கருதப்படுகிறாள். இவள் 'ஜுவாலாமுகி' என்ற பெயரில் வடநாட்டில் கொண்டாடப்படுகிறாள். 
கத்ரு என்ற நாகதேவதை செதுக்கிய சிலையில் சிவனின் அம்சமாக உருவாகியவள்.அதனால், இவள் பெயர் 'மானஸா' என்றும், இவள் பாம்புக் கடிக்கு தீர்வளிக்கும், கருணையுள்ளம் கொண்டவ்ள் என வட நாட்டு கிராமங்களில் மானஸாவை கொண்டாடுகின்றனர். பாற்கடலை கடைந்த பொழுது உண்டான ஆலகால விஷத்தை சிவன் உண்ட பொழுது அவருக்கு விஷத்தினால் தீங்கு நேராவண்ணம் காப்பாற்றியவள் இந்த மானஸா என அறியப்படுகிறது.

Saturday 7 August 2021

ஆடி அமாவாசை

சூரியன் தென்திசை நோக்கி பயணிக்கும் பொருட்டு கடக ராசியில் பிரவேசிக்கக் கூடிய நாளினையே அதாவது ஆடி மாதத்தை நாம் 'தக்ஷிணாயண புண்ய காலம்' என்கிறோம். {தக்ஷிணம் என்றால் தெற்கு}. இது தேவர்களின் இரவுப் பொழுதாகவும் அவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வதாகவும், இந்த தக்ஷிணாயன ஆறு மாத காலம் நம் மூதாதையர்கள் நம்மைக் காக்கும் பணியை மேற்கொள்ள பூவுலகிற்கு வருவதாகவும் ஐதீகம்.இந்த ஆடி மாதத்திலிருந்து தான் அனேகம் பண்டிகைகள் தொடங்குகின்றன. ஆடி மாதப்பிறப்பு, ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை இன்னபிற பல பண்டிகைகள் தை மாதம் வரை கொண்டாடப்படுகின்றன. ஆடி அழைக்கும் என்பார்கள். அதாவது ஆடி மாதம் முதல் பண்டிகைகள் கொண்டாட்டமாய் வரிசையாக துவங்கும். தன்னைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்கள், சக மனிதர்கள், துறவிகள், மூதாதையர்கள் மற்றும் தன் குடும்பம் என ஐந்து தரப்பினரையும் பேணி பாதுகாக்கும் கடமையை எவனொருவன் திறம்படச் செய்கிறானோ அவனே சிறந்த இல்லறத்தானாக விளங்குகிறான். இதனையே, 
 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஒம்பல் தலை.


என்கிறார் திருவள்ளுவர் பெருமான். தென் புலத்தார் என்பது - பித்ருக்கள். நம்மை இவ்வுலகிற்கு அளித்து நம் சௌகரியங்களுக்காக தன்னை வருத்திக் கொண்ட நம் தாய், தந்தையின் தியாகத்திற்கு பிரதிபலனாக, நாம் அவர்களிடம் பணிவும், அன்பும் காட்டி அவர்கள் வாழும் காலம் வரையிலும் பராமரிப்பதோடு நம் கடமை முடியவில்லை. அவர்கள் இவ்வுலக வாழ்வை துறந்த பின்னும் சாஸ்திர முறைப்படி தர்ப்பணம், திதி முதலியவற்றை செய்யவேண்டும். பிள்ளைகள் விடும் எள்ளும், தண்ணீருமே அவர்களுக்கு பிதுரு லோகத்து உணவாக மாற்றி அனுப்பப்படும். எள் மற்றும் தர்ப்பையைக் கொண்டு 'திதி' கொடுத்து வழிபடுவது சந்ததிகளின் வாழ்வியல் ஆரோக்கியம் ஆகும்.எள் முன்னோர்களின் ஆகாரத்தையும், தர்ப்பைப் புல் அந்த உணவை அதற்கு உரியவரிடம் கொண்டு சேர்க்கும் தன்மையதாகவும் விளங்கும். அதன்பின், காகத்திற்கு அன்னமிட வேண்டும். அவர்களது மனம் குளிர்ந்து அளிக்கும் ஆசியே நம் சந்ததி தழைத்து வாழ்வாங்கு வாழ வைக்கும். வள்ளுவனை விட மிக எளிமையாக வேதத்தின் சாரத்தைச் சுருக்கி ஒரே வரியில், 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று எடுத்துரைத்த ஔவைப் பாட்டியின் அறிவுரையை கடைபிடிப்போம். இது முன்னோர்களுக்கு உரித்தான நாள். அன்றைய தினம் அவர்களுக்கு 'தர்ப்பணம்' கொடுத்தல் அவசியம். எப்படி நாம் வங்கியில் செலுத்தும் காசோலை உரியவர்களுக்கு பணமாகச் சென்றடைகிறதோ, அதுபோல் நாம் முன்னோர்களுக்கு விடும் நீரும், எள்ளும் அவர்களுக்கான உணவாகச் சென்றடையும் என்பது நியதி. இதனையே திருவள்ளுவரும், 
 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
 இல்வாழ்வான் என்பான் துணை. 
என "இல்வாழ்க்கை" எனும் 5 ஆவது அதிகாரத்தில் வலியுறுத்துகிறார். ஆடி அமாவாசையில் உற்றார், உறவினர் என்றில்லாமல் அறிந்தோர், அறியாதோர் என அனைத்து பித்ருக்களுக்குமாக தர்ப்பணம் செய்வதால், அவர்களின் நல்லாசியுடன் நம் சந்ததி தழைத்தோங்கும்.

Sunday 1 August 2021

ஆடிப்பெருக்கு 2021

  வருகிற ஆகஸ்ட் 3 ஆம்தேதி செவ்வாயன்று "ஆடி பதினெட்டாம்  பெருக்கு". பொங்கிப் பிரவகித்து பெருகி விரிந்து தான் ஓடும் பாதையையெல்லாம் வளப்படுத்திச் செல்லும் காவிரி அன்னைக்கு நன்றி கூறும் முகமாக, கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை. 

      யார் இந்த காவிரி? காவிரி அன்னை வரலாற்றை அறிவோம் வாருங்கள்!.
image.png
தமிழ் காக்கும் அருந்தொண்டாற்றிய 'குறுமுனியாம்' அகத்திய முனிவரின் தர்ம பத்தினியே 'லோபாமுத்ரா'. உலகை சம நிலைப்படுத்தப்படுவதற்காக இறைவனார் சிவபெருமானால் தென் மண்டலப் பகுதிக்கு அனுப்பப்பட்டார் அகத்திய முனிவர். அதற்கு முன் தமிழ் மக்களுடன் கலந்து வாழவேண்டிய அவசியத்தால், தென் மொழியான தமிழ் மொழியை இறைவனாரிடம் கற்றுக் கொண்டார். இதற்கான ஆதாரக் குறிப்பு, ஸ்கந்த புராணம், வால்மீகி ராமாயணம் கூறுகின்றது. 
தம்பதியாக இவர்கள் இருவருமாக தமிழ் மொழிக்காக அரும் பணியாற்றியுள்ளனர். அகத்திய முனி லோபமுத்ராவைக் கரம் பிடித்த கதை சுவாரஸ்யமானது.
இந்த லோபமுத்ரா தேவி நான்கு வேதங்களில் முதலாவதான ருக் வேத காலத்திய 27  பிரம்மசாரிணிகளில் [அதாவது பெண் ரிஷி] ஒருவர் ஆவார். லோபமுத்ரா என்றால் உலகின் மொத்த அழகின் இருப்பிடமானவள் எனப் பொருள். தேவியின் லலிதா சஹஸ்ர நாமத்தை தேவியிடமிருந்தே   நேரிடையாக உபதேசம் பெற்றவர்.
     நான்கு வேதங்களில் முதன்மையான 'ரிக்' வேதத்தில் லோபாமுத்ரா இயற்றிய ஸ்லோகங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இத்தனை பெருமை வாய்ந்த லோபமுத்ரா பிரம்மகிரி மலையில், இடையூறுகள் ஏற்படாதிருக்கும் பொருட்டு, பாறையாக மாறி தவமியற்றிக் கொண்டிருந்தாள். 
   இதற்கிடையே 'சுர்வதமன்' எனும் அரக்கன், சிவபெருமானைக் குறித்து தவமியற்றி பெற்ற வரத்தின் பயனால், உலகையே ஆட்டிப் படைக்க நினைத்தான். அதன் முதல் படியாக, தேவலோகம் சென்று தேவர்களை வென்று சிறைபிடித்தான் ஆயினும், இந்திரன் மட்டும் தப்பி தென் பகுதியில் தஞ்சம் அடைந்தான். இதைத் தன் தளபதியின் மூலம் அறிந்த அசுரன், வருணனிடம் தென் பகுதியில்  மழை பொழியாமல் 'பஞ்சம்' ஏற்படச் செய்யவேண்டும் என கட்டளையிட்டு அச்சுறுத்தினான். 
image.png
இந்திரனுக்கு உதவிய தென் பகுதி மக்களுக்கு தண்டனையாகவும், பஞ்சம் காரணமாக இந்திரன் தானே வெளியில் வரும் சூழல் உருவாகும் என்ற எண்ணம். 
இதனால் தென் பகுதி மக்கள் கடும் பஞ்சத்தினால் அவதியுறுவதைக் கண்டு வருந்தினாள் பாறை உருவில் இருந்த அன்னை லோபாமுத்ரா. இதற்கு தீர்வு காண அன்னையின் மனம் துடித்தது.
அச்சமயம் 'காவேரன்' எனும் விதர்ப்ப நாட்டு மன்னன் பிரம்மதேவனிடம், குழந்தை வரம்  வேண்ட, நீ எந்த அழகிய பொருளைத் தொடுகிறாயோ, அதுவே உனக்கு மகவாக அமையும் என்றார். வரம் பெற்ற மன்னன் தன் நாடு திரும்பும் வழியில் கரடு முரடான மலைப் பாதையில் ஓரிடத்தில் கால் இடறி விழ இருந்தவர், உடன், அருகில்  தவம் செய்து கொண்டிருக்கும் 'லோபாமுத்ரா' பாறையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார். உடன் லோபாமுதரா அழகிய பெண் குழந்தையாக, அவருக்குக் கிடைக்கப் பெற்றாள். மிகவும் மகிழ்ந்த காவேர மன்னன், குழந்தைக்கு 'காவேரி' எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.
     பருவ வயதை அடைந்ததும், அகத்திய முனிவர், ஏற்கெனவே   லோபமுத்ராவின் ஞானம், தெய்வாம்சம் இவற்றையெல்லாம் அறிந்தவராதலால், மன்னனிடம் சென்று அவரது பெண்ணைத் தனக்குத் திருமணம் முடித்துத் தரவேண்டும் என்று வேண்டினார். 
   அப்பொழுது லோபாமுத்ரா அகத்தியரிடம் ஒரு நிபந்தனை விதித்தாள். எனக்கும் உங்களைப் போன்ற ஞானியை திருமணம் முடிப்பதில் விருப்பம் தான். ஆனால், நீங்கள் என்னை எப்பொழுதும் இணை பிரியாமல் இருக்கவேண்டும் என்று வேண்டினாள். அகத்திய முனியும் அதற்கு இசைந்தார். 
image.png
 அவர் முனிவர் ஆனபடியால், உலக நன்மை கருதி எப்பொழுதும் எங்காவது சஞ்சரித்துக் கொண்டேயிருப்பார் அல்லவா?.
     அச்சமயங்களில், தன் மனைவியை நீராக மாற்றி, தன் கமண்டலத்தில் ஊற்றி, எடுத்துச் சென்று விடுவார். இப்படியாக, லோபாமுத்ராவிற்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றி வந்தார்.
     ஆனால், லோபாமுத்ராவின் ஞானம், பொறுமை, கனிவு அருள் என அனைத்தும் மக்களுக்கு பயன்பெறவேண்டும் என்பது தான் தெய்வ சங்கல்பம். முன்பு சிவபிரானிடம், அதையே வரமாக லோபமுத்ரா அன்னையும் வேண்டியிருந்தபடியாலும், தென்பகுதி மக்கள் பஞ்சத்தால் வாடுவதைஉணர்ந்து தான் தவம் இயற்றிய காலத்தில் உதவ துடித்துக் கொண்டிருந்த படியாலும் தகுந்த காலத்திற்காக காத்திருந்த அந்த தருணமும் கனிந்து நெருங்கியது. இந்த நிகழ்வு அனைத்திற்கும் தான் ஒரு கருவி என்பதை அகத்தியரும் உணர்ந்தே இருந்தார். ஆனால், காவிரி பரந்து விரிவதற்குத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்வதில் அவருக்கு குழப்பம் இருந்தபடியால், விநாயகப் பெருமானை பிராத்தித்துக்  கொண்டார்.               
        ஆம்! அகத்தியரும் வழக்கம் போல், தன் மனைவியை  கமண்டலத்தில் இருத்தி எடுத்துக் கொண்டு குடகு  மலைப்  பகுதிக்கு  வந்து, ஓரிடத்தில் அமர்ந்து தன் நித்ய கர்மாவினை செய்யும் பொருட்டு, கமண்டலத்தை கீழே வைத்துவிட்டு, தியானம் மேற்கொண்டார்.
  அச்சமயம், விநாயகப் பெருமான் காக்கை உருவில் வந்து, தன் தண்ணீர் தாகத்திற்கு நீர் அருந்துவது போல், கமண்டலத்தின் அருகே வந்து, தன் அலகால் கமண்டல நீரை தள்ளி, காவிரி நதி நீராக பெருக்கெடுத்து ஓடும் படி செய்தார்
image.png
    கமண்டலம் உருளும் சத்தம் கேட்டு தியானம் கலைந்து கண் விழித்த அகத்தியர், காகம் நீரை தள்ளிவிட்டதை அறிந்து கடுங்கோபங்கொண்டு அதை தண்டிக்க முற்பட்டார். அப்பொழுது காக்கையாக வந்து நாடகம் ஆடிய விநாயகப் பெருமான் காட்சி அளிக்கவும், உண்மை உணர்ந்து தன் தலையில் தானே பிள்ளையார் குட்டு போட்டுக் கொண்டு மன்னித்தருள வேண்டினார்.
image.png
         இப்படிப் பல ஆண்டுகள் அங்கு காவிரியுடனேயே இருந்த அகத்திய முனி, தனது உலகப்பணிகளையும், காவிரியின் பணிகளையும் கருத்தில் கொண்டு மலை உச்சிக்குச் சென்று, ஆழ்ந்த சிந்தனையுடன், காவிரியை கூர்ந்து நோக்கி, பின்   ஆசிர்வதித்துவிட்டு, அங்கிருந்து அகன்றார்.
      தனக்கு வாக்குக் கொடுத்துவிட்டு தன் கணவன் தன்னை விட்டு அகன்று சத்தியத்தை மீறியதை உணர்ந்த அன்னைக் காவிரியும் மனம் வருந்தினாள். அதனால், தன் போக்கை மாற்றிக் கொண்டு மலையிலிருந்து இறங்கி, மறைந்து, பின் தலைக்காவிரியில்,
image.png
  பாகமண்டலாவில் மீண்டும் தோன்றி தென்னகம் முழுதும் பாய்ந்து மக்களின் பசி, பிணியைப் போக்கி வளப்படுத்தியவாறே கடலில் கலக்கத் தொடங்கினாள். இப்படிப்பட்ட புண்ணிய நதியாம் காவிரி அன்னையை 'தக்ஷிண கங்கை' எனப் போற்றுவர்.