Saturday 28 August 2021

கோகுலாஷ்டமி

 ஆனந்தமயமானவன் கிருஷ்ணன். சுகமான சுமைகள் என்பது போல ஞானிகள் இன்பம், துன்பம் அனைத்திலுமே இறைவனைக் காண்கிறார்கள். அதனாலேயே புடம் போட்டத் தங்கம் போல், யுகங்கள் பல கடந்தாலும் அவர்கள் மங்காப் புகழுடன் இன்னமும் வாழ்வியல் தத்துவமாக விளங்குகிறார்கள்.

  30.8.2021 திங்கட்கிழமையன்று "கோகுலாஷ்டமி". பசுக் கூட்டத்தின் காவலனாய், விளங்கிய கோகுலக் கண்ணன், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதி ரோகிணி நக்ஷத்திரத்தில், நடுநிசியில் வசுதேவருக்கும், தேவகிக்கும் மகனாக அவதரித்தார். தெய்வமே மகனாக வந்து பிறந்ததெனில், அவர்கள் எப்பேர்ப்பட்ட ஞானிகளாய் இருக்கவேண்டும்.
யார் இந்த வஸுதேவர், தேவகி?  இவர்களைத் தேர்ந்தெடுத்து,   இவர்களின் மகனாக கண்ணனாக  பகவான் மஹாவிஷ்ணு. பிறந்ததற்கான பின்னனிக் கதைகளை இப்புண்ணிய தினத்தில் அறிவோமா? இத்தம்பதிக்கு, இவர்களின் மகவாக பலமுறை அவதரித்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது:
     முதன் முதலில் பிரம்மன் உலகைப் படைத்து, உயிரினங்களை  உருவாக்கியதில், மனித இனம் மிகவும் குறைவாகவே இருந்தது. அப்பொழுது, தலைசிறந்த மனிதனாக, சுதபா என்ற மன்னனும், அவரது மனைவியாய் பெண்குலத் திலகமாய் 'ப்ருச்னி,' என்பவளும், இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாமல், இருவருமாக, மஹாவிஷ்ணுவைக் குறித்து, 12 தேவ ஆண்டுகள் தவமிருந்தனர். இவ்விருவரின் தன்னலமற்ற பண்பினால், கவரப்பட்ட பிரம்மன், இவர்களே, மனித இனம் தழைக்கத் தகுதியானவர்கள், என்று உணர்ந்து, அவர்களிடம் தன் வேண்டுகோளைக் கூறினார். 
ஆனால், அவர்கள் இவர் கூறியது எதையும் காதில் கேளாமல், தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். இவரது முயற்சி பலனளிக்காததால் கோபங்கொண்ட, பிரம்மன், இடி முதலான இயற்கைச் சீற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் தவத்தைக் கலைக்க முயன்றார். தூய உள்ளம் கொண்டவர்களிடம் எந்த துன்பமும் தோற்றுத் தான் போகும் என்பது ஆங்கே நிரூபனம் ஆயிற்று.
image.png


இப்படியான இவர்களது தவத்தில் மகிழ்ந்த மஹாவிஷ்ணுவும் அவர்களுக்கு காட்சியளித்து, வேண்டும் வரம் தருவதாகக் கூறினார். இத்தம்பதி தன்னிடம் முக்தியை விரும்பிக் கேட்பார்கள் என்று நினைத்த பகவானே அதிசயிக்கும்படி, தாங்கள் எத்தனை பிறவி எடுத்தாலும், மஹாவிஷ்ணுவே    தங்களது மகனாக அவதரிக்கவேண்டும் என்று கேட்டனர். அவ்வாறே அவர்களது விருப்பத்திற்கிணங்கி, அவர்களின் மகனாக 'ப்ருச்னி கர்பா' என்ற பெயரில் அவதரித்தார்.
     அடுத்த பிறவியில், 'காச்யபர், அதிதி' யாக தேவர்களின் தாய் தந்தையாக இத்தம்பதியே    விளங்கிய போது, அவர்களின் மகனாக, 'உபேந்திரன்' என்ற பெயரில் அவதரித்த இவரின் குள்ள உருவின் காரணமாக 'வாமனர்' என அழைக்கப்பட்டார். 
மஹாபலி சக்கரவர்த்தி, தேவர்களை எல்லாம் சிறையெடுத்து கொடுமைபடுத்தியதால், தேவர்களின் தாயான அதிதி, மஹாவிஷ்ணுவை வேண்டி தாமே எங்களுக்கு மகனாக அவதரித்து, இந்திரன் முதலான தேவர்களை மீட்டுக் காக்கவேண்டும் என வேண்டினாள். அவ்வண்ணமே 'உபேந்திரன்' எனும் நாமத்துடன் அவர்களின் மகனாக அவதரித்தார்.
image.png
ஆம்! மூன்றடி மண் கேட்டு,விஸ்வரூபம் எடுத்து, மூவுலகையும் அளந்து திரிவிக்ரமனாய் மஹாபலி சக்கரவர்த்தியை ஆட்கொண்ட எம்பெருமானின், உபேந்திரன்' அவதாரமே இது. உபேந்திரன் என்றால், இந்திரனுக்குப் பின் வந்தவன். அதாவது இந்திரனின் தம்பி எனப் பொருள்.
 மூன்றாவதாக, திரும்பவும், இத்தம்பதியே, வஸுதேவர், தேவகியாய் 'துவாபர யுகத்திலும், எம்பெருமானின், தாய், தந்தையாய் விளங்கக் கூடிய மகத்தான பேற்றையும் பெற்றார்கள்.
 ஆனால், எம்பெருமான், இனி பிறவா வரமளித்து, தன்னுடனேயே இருக்கும்படியான மகத்தான 'பரமபதத்தினை' அளித்து ஆட்கொண்டார்.
image.png
         ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியில் நடு நிசியில் கிருஷ்ணன் அவதரித்தார். அதனால், கிருஷ்ணருக்கான பூஜையை    சாயங்காலத்திலும் அல்லது இரவிலும் நடத்தப்படுகின்றன வாசல் முதல் பூஜை அறை வரை கிருஷ்ண பாதம் வரைந்து, வெண்ணெய், அவல், லட்டு, அப்பம், அதிரசம், உப்புச் சீடை, வெல்ல சீடை, முறுக்கு போன்ற இன்னபிற பலகாரங்கள் கண்ணனுக்கு பூஜையின் முடிவில் நிவேதனம் செய்யப்படுகின்றன.image.png

4 comments:

  1. Nandri. Purana kadaihal yellam terindu kolla mudihiradhu. Go*ulashtami Patti terindu kondom.

    ReplyDelete
  2. மிக்க நன்றி. அனைவரது பாராட்டும் என்னை உற்சாகப்படுத்துகிறது🙏🙏🙏. ஒரு சிறு வேண்டுகோள். யாருடைய பெயரும் கருத்துப் பதிவில் வராததால் தங்களின் பெயரையும் குறிப்பிட கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

    ReplyDelete