Saturday 7 August 2021

ஆடி அமாவாசை

சூரியன் தென்திசை நோக்கி பயணிக்கும் பொருட்டு கடக ராசியில் பிரவேசிக்கக் கூடிய நாளினையே அதாவது ஆடி மாதத்தை நாம் 'தக்ஷிணாயண புண்ய காலம்' என்கிறோம். {தக்ஷிணம் என்றால் தெற்கு}. இது தேவர்களின் இரவுப் பொழுதாகவும் அவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வதாகவும், இந்த தக்ஷிணாயன ஆறு மாத காலம் நம் மூதாதையர்கள் நம்மைக் காக்கும் பணியை மேற்கொள்ள பூவுலகிற்கு வருவதாகவும் ஐதீகம்.இந்த ஆடி மாதத்திலிருந்து தான் அனேகம் பண்டிகைகள் தொடங்குகின்றன. ஆடி மாதப்பிறப்பு, ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை இன்னபிற பல பண்டிகைகள் தை மாதம் வரை கொண்டாடப்படுகின்றன. ஆடி அழைக்கும் என்பார்கள். அதாவது ஆடி மாதம் முதல் பண்டிகைகள் கொண்டாட்டமாய் வரிசையாக துவங்கும். தன்னைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்கள், சக மனிதர்கள், துறவிகள், மூதாதையர்கள் மற்றும் தன் குடும்பம் என ஐந்து தரப்பினரையும் பேணி பாதுகாக்கும் கடமையை எவனொருவன் திறம்படச் செய்கிறானோ அவனே சிறந்த இல்லறத்தானாக விளங்குகிறான். இதனையே, 
 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஒம்பல் தலை.


என்கிறார் திருவள்ளுவர் பெருமான். தென் புலத்தார் என்பது - பித்ருக்கள். நம்மை இவ்வுலகிற்கு அளித்து நம் சௌகரியங்களுக்காக தன்னை வருத்திக் கொண்ட நம் தாய், தந்தையின் தியாகத்திற்கு பிரதிபலனாக, நாம் அவர்களிடம் பணிவும், அன்பும் காட்டி அவர்கள் வாழும் காலம் வரையிலும் பராமரிப்பதோடு நம் கடமை முடியவில்லை. அவர்கள் இவ்வுலக வாழ்வை துறந்த பின்னும் சாஸ்திர முறைப்படி தர்ப்பணம், திதி முதலியவற்றை செய்யவேண்டும். பிள்ளைகள் விடும் எள்ளும், தண்ணீருமே அவர்களுக்கு பிதுரு லோகத்து உணவாக மாற்றி அனுப்பப்படும். எள் மற்றும் தர்ப்பையைக் கொண்டு 'திதி' கொடுத்து வழிபடுவது சந்ததிகளின் வாழ்வியல் ஆரோக்கியம் ஆகும்.எள் முன்னோர்களின் ஆகாரத்தையும், தர்ப்பைப் புல் அந்த உணவை அதற்கு உரியவரிடம் கொண்டு சேர்க்கும் தன்மையதாகவும் விளங்கும். அதன்பின், காகத்திற்கு அன்னமிட வேண்டும். அவர்களது மனம் குளிர்ந்து அளிக்கும் ஆசியே நம் சந்ததி தழைத்து வாழ்வாங்கு வாழ வைக்கும். வள்ளுவனை விட மிக எளிமையாக வேதத்தின் சாரத்தைச் சுருக்கி ஒரே வரியில், 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று எடுத்துரைத்த ஔவைப் பாட்டியின் அறிவுரையை கடைபிடிப்போம். இது முன்னோர்களுக்கு உரித்தான நாள். அன்றைய தினம் அவர்களுக்கு 'தர்ப்பணம்' கொடுத்தல் அவசியம். எப்படி நாம் வங்கியில் செலுத்தும் காசோலை உரியவர்களுக்கு பணமாகச் சென்றடைகிறதோ, அதுபோல் நாம் முன்னோர்களுக்கு விடும் நீரும், எள்ளும் அவர்களுக்கான உணவாகச் சென்றடையும் என்பது நியதி. இதனையே திருவள்ளுவரும், 
 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
 இல்வாழ்வான் என்பான் துணை. 
என "இல்வாழ்க்கை" எனும் 5 ஆவது அதிகாரத்தில் வலியுறுத்துகிறார். ஆடி அமாவாசையில் உற்றார், உறவினர் என்றில்லாமல் அறிந்தோர், அறியாதோர் என அனைத்து பித்ருக்களுக்குமாக தர்ப்பணம் செய்வதால், அவர்களின் நல்லாசியுடன் நம் சந்ததி தழைத்தோங்கும்.

7 comments: