Saturday 7 January 2023

ஆண்டாள் நாச்சியார் 2ஆம் திருமொழி.

 

 ஆண்டாள் நாச்சியார் திருவடிக்ளே சரணம்.!

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற 
நாராயணா! நரனே! உன்னை 
மாமி தன் மகனாகப் பெற்றால்
எனக்கு வாதை தவிருமே;
காமன் போதரு காலம் என்று
பங்குனி நாள் கடை பாரித்தோம்;
தீமை செய்யும் சிரீதரா! எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே.1.
  காதல் என்றாலே அதனை மேலும் வலுப்படுத்துவது ஊடல்! தான். இந்த இரண்டாம் திருமொழி முழுவதும் ஊடல் நாடகமே அரங்கேறியிருக்கிறது.
ஆம்! கண்ணபிரான் தனக்குப் பிரியமான தன்னவளான கோதை நாச்சியாரை, தன்னை விட சிறு தெய்வமான காமனிடம் வேண்டும் படியான ஒரு நிலைமையைத் தான் உருவாக்கி விட்டோமே என்ற வருத்தம் மேலிட கண்ணபிரான், தானே கோதையைத் தேடி தரிசனம் தர வருகிறான்.
ஆனால், தன்னைப் பல நாட்களாக   ஏங்கித்   தவிக்கவைத்த  கண்ணனை தானும் தவிக்கவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், கண்ணன் வந்ததையே கவனிக்காதது போல்,காமனுக்காக இருக்கும் நோன்பின் ஒரு பகுதியான சிறு மணல் வீடு கட்டுவதிலேயே கவனம் கொண்டு இருக்கிறாள். பொறுமை இழந்த கண்ணனும் ஆண்டாள் கட்டியிருக்கும் சிறு வீட்டை    இடிக்க   முற்படுகிறான். தாங்கள் ஆசையாக வீடு கட்டி விளையாடி மகிழ்ந்து கொண்டிருப்பத்ற்க்கு இடையூறு செய்யவேண்டாம்  என்று கண்ணனுடன் ஊடல் கொள்கிறாள்.
   ஊடல் என்பது காதலின் மிக முக்கியமான ஒரு அங்கம். ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும்   மிகையாகாத  ஜாடைப் பேச்சும்,   பொய்க் கோபமும் கொண்ட, பாசாங்கு சண்டை. இது காதலை ஆழப்படுத்தக் கூடியது. ஒருக் கட்டத்தில் அந்தஊடல் கூடலாகி ஆழ்ந்த நெருக்கத்தையும் மன அன்பையும் வெளிப்படுத்தி காதலை உறுதிப்படுத்துகிறது.
     இவ்வாறான இவர்களின் ஊடலின்   முடிவில்   இருவரும்  ஒற்றுமையான பின்பும் திரும்பவும் பிரியும் நிலையை    விளக்குகின்றது இந்த இரண்டாம் திருமொழி.
  நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா என குறிப்பிடுகிறாள் கோதை. மஹாபாரதப் போர் முடிந்த பின், தர்மன், அம்புப் படுக்கையில் இருக்கும் தாத்தா பீஷ்மரிடம், பல நீதி போதனைகளைக் கேட்கிறான். இப்பிறப்பு எனும் மாயையிலிருந்து விடுபடுவதற்க்கான ஒரே வழியாக, விஷ்ணுவின் பல திவ்ய நாமங்களை ஜபித்தவாறு இருப்பதே என்று பீஷ்மரால் தொகுக்கப்பட்டதே இந்த விஷ்ணு சஹச்ரநாமம். பரமபதத்தில் அடியார்களால் ஆயிரம் நாமங்கள் கொண்டு  போற்றிப் பாடப்பெறும் நாராயணனே என்று அதனை கருத்தில் கொண்டே நாமம் ஆயிரம் ஏத்தி நாராயணா என்கிறாள் .  
    அடுத்து,   நரனே! என மானுட தர்மத்தை   ஒழுகி   கடைபிடித்து   வாழ்ந்து காட்டிய ராமபிரானைக் குறிப்பிடுகிறாள். 
    எங்களது மாமியாரான யசோதை உன்னை
 பிள்ளையாகப் பெற்றதனால் தான் நாங்கள் இவ்வளவு துயரம் கொள்கிறோம். 
   பங்குனி பௌர்ணமியன்று மன்மதன் வருகின்ற நேரம். அதற்காக அவன் வரும் வழியில் நாங்கள் சிறு வீடு கட்டி விளையாடி மகிழ்கிறோம். இவையெல்லாம் உன்னை எதிர்பார்த்து காத்திருந்து உனக்காகச் செய்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதே. இது என் விருப்பமான விளையாட்டு. என்று கண்ணனிடம் ஊடல் கொண்டு சீண்டுகிறாள். அதனால்,  சிறிது எரிச்சலுற்று, அச்சிறு வீட்டைக் கலைக்க முற்பட்ட கண்ணனிடம்,
    தீமை செய்யும் சிரீதரா என்று ஊடுகிறாள். அதாவது விஷ்ணு சஹச்ர நாமத்தில் 610 வது பெயராக ஸ்ரீதரன் என்ற நாமம் இடம் பெறுகிறது. 'ஸ்ரீ' என்ற கிரந்த எழுத்திற்கு பதிலாக  ஆழ்வார்கள் சிறீ என குறிப்பிடுகின்றனர். ஸ்ரீ என்பது இலக்குமியைக் குறிக்கும். 'தரன்' என்றால் தாங்குபவன்  மஹாலட்சுமியை தன் மார்பில் தாங்குபவன் எனப் பொருள். நிலவுக்கு அதன் குளிர்ச்சி போலவும், மணிக்கு அதன் ஓசை போலவும், மலருக்கு அதன் மணம் போலவும் எப்படி ஒன்றையொன்று பிரிக்க இயலாதோ/ அப்படி திருமகளை தன் மார்பில்    எப்பொழுதும்  தாங்கி இருப்பவன் எனும்படி, நீ திருமகளுக்கு தான் கணவன். அதனால் உன்னை கணவனாக அடைந்து, நான் மேலும் துன்பப்பட விரும்பவில்லை . அதனால் நாங்கள் கட்டிய இச்சிறு வீட்டினை உனக்கானது என்றெண்ணி கலைக்காதே என பொய்க் கோபங்கொள்வது போல் கண்ணனின் பெருமையை மறைமுகமாக உயர்த்தியே பேசுகிறாள் கோதை .

             ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

---'------×--------×----'------×--------×--------×----------×----------×------'----×---------×----
                                          பாசுரம் - 12

              இன்று முற்றும் முதுகு நோவ

             இருந்து இழைத்த இச் சிற்றிலை    

              நன்றும் கண்ணுற நோக்கி

               நாம் கொள்ளும்

             ஆர்வம்  தன்னை தணிகிடாய் ;

             அன்று பாலகன் ஆகி ஆலிலை 

             மேல் துயின்ற எம் ஆதியாய்!

             என்றும் உந்தனுக்கு எங்கள் மேல் 

             இரக்கம் எழாதது எம் பாவமே.    2


தன்னைத் தேடி வந்த கண்ணனை கவனியாதது போல் ஊடல் கொண்டு, கோதை நாச்சியார் சீண்டியதால், எரிச்சலுற்ற கண்ணன் கோபங்கொண்டு, அவள் கட்டிய வீட்டையும், கோலமிட்டு  பூக்களால் அழகுபடுத்தியிருந்த தோரணங்கள் இன்னபிறவற்றையும் கண்ணன கலைக்கவும், அவனது கோபத்தைக் கண்டு கலவரம் அடைந்தாள் கோதை. 


   உடனே கண்ணனை சமாதானப்படுத்தும் விதமாக அவனிடம் மிஞ்சியவள் இப்பொழுது  கெஞ்சத் தொடங்குகிறாள்.


 இன்று முழுவதும் முதுகு வலி நோக, உனக்காகப்  பார்த்துப்  பார்த்துக்   கட்டிய மணல் வீட்டை நானே இன்னும் முழுமையாகப் பார்த்து ரசிக்கவில்லை கண்ணா. அத்துடன், இச்சிறு வீட்டை நீ கண்டு இரசிக்கவும், நீ ரசிக்கும் அழகை நான் கண்டு ரசிக்கவும் மிகுந்த ஆவலோடு இருந்தேன் கண்ணா.


   எங்களையும் பார்த்து ரசிக்கவிட்டு, நீயும் அதைக் கண்டு களித்து எங்கள் ஆசையைத் தணிக்கச் செய்வாயாக! கண்ணா என கெஞ்சுகிறாள் கோதை..


 அப்படியும் அவன் கோபம் தணியாதது கண்டு,


 அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய்! என போற்றுகிறாள்.


   மார்கண்டேய மகரிஷிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிரளய காலத்தில் பேரண்டத்தையே தன் வயிற்றுக்குள் பாதுகாத்து ஆலிலையில் சிறுகுழந்தையாக படுத்துக் கொண்டு கால்கட்டைவிரலைச் சூப்பியபடி தரிசனம் தந்ததை இங்கே நினைவு கூறுகிறாள் கோதை நாச்சியார். 


    ஆலமரத்தின் பெருமையை இன்னதென்று சொல்லமுடியாத    அளவிடற்கரியது. .ஆலமரத்தின் பூக்களைக் காணமுடியாது. பழமோ மிகவும் சிறியது. அதன் விதையோ அணுவளவு சிறியது. அப்படிப்பட்ட சிறு விதையிலிருந்து பிரம்மாண்டமான ஆலமரம் உருவாகிறது.


பூமிக்கடியில் அதன் வேர்கள் பல்கிப் பெருகி பட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளும். மரமானது அடுத்தடுத்து விழுதுகளை விட்டுக் கொண்டே அதன் பலத்தில் அகன்று கொண்டே போகும். எந்த அளவு என்றால், அரசன் தன் படை பரிவாரங்களுடன் வந்து தங்கி இளைப்பாறும் அளவுக்கு மிகப் பெரியதாக கம்பீரமாக ஓங்கி வளர்ந்து இருக்கும் 


 ஒரு பாகம் பட்டுப் போனாலும், விழுதிலிருந்து விழுதுகள் என எப்பொழுதும் பசுமையாக இருந்து கொண்டே இருக்கும். 


    தாயும் தந்தையுமான இறைவனிடத்திலிருந்தே அனைத்து உயிர்களும் தோன்றுகிற தத்துவத்தை உணர்த்துகிறது.


     ஆயினும் ஆலமரத்தின் வளர்ச்சிக்கும் வாழும் காலத்திற்க்கும்  முடிவுண்டு. ஆனால் முடிவில்லாத அகண்ட ஸ்வரூபனான கண்ணனோ, தன்னைச் சிறு குழந்தையாக சுருக்கிக் கொண்டு ஆலிலையில் சிரித்தவாறு படுத்துக் கொண்டு இருக்கிறான். 


    ஆலிலை வாடி சருகானாலும் மற்ற இலைகளைப் போல் நொறுங்காது. மெத்தென்றே இருக்கும். சிறிது தண்ணீரை அதன் மேல் தெளித்தாலும் கூட பசுமை பெறும் அளவிற்கு அதில் பச்சையம் அதிகம்.


  இதன் காரணமாகவே கண்ணன் தளிர் ஆலிலையை தன் மெத்தையாகக் கொண்டு, பிரளய காலக் கடலில் மிதந்து இருப்பது போல்,இன்ப துன்பம் என வாழ்வியல் நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறு குழந்தை வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பது போல் பற்றற்ற நிலையில் சம்சாரக் கடலில் மிதந்து அலைக்கழிக்கப்படாமல் வாழவேண்டும் என அறிவுறுத்துகிறான்.  


    இப்படியாக வடபத்ர சாயியாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானை நினைவு கூர்கிறாள். வட என்றால் ஆல மரம் பத்ர என்றால் இலை சாயி கண்ணபிரான். 


   இப்படிப்பட்ட அகில உலகையும் ஆக்கவும் அழிக்கவும் திறன் கொண்ட, உலக மக்களுக்கெல்லாம் இரக்கம் காட்டக் கூடிய என் தலைவனான  கண்ணன்,


   சிறு மணல் வீடு கட்டுவதற்கே துன்பப்படும் தன்மீது இரக்கம் கொள்ளாமல் அதை அழிக்க முற்படுவது தாங்கள் செய்த பாவமே என்கிறாள் கோதை.


அதாவது, இவ்வுலக துன்பங்களுக்கு நம் மனதில் இடம் கொடாமல், அவன் நாமத்தையே மனதில் சிந்தித்து இருந்தால், அலைகடல் போல் அலையும் நம் மனதை அமைதி பெறச் செய்து, ஆலிலை போன்ற மிருதுவான நம மனத்திரையில் சயனித்துக் கொள்வான் என்று அவன் புகழ் பாடுகிறாள். ஆலிலை காய்வது நாம் நம் மனதில் அலைபாயும் கோபம், குரோதம், ஆசைகள் என வேண்டாத எண்ணங்களை, துளி நீரைத் தெளிப்பதன் மூலம், பச்சையத்தைத் திரும்பப் பெறும் இலையின் தண்மை போல் கண்ணனின் நாமத்தை நம் மனதில் சிந்தித்திருக்க, துளிர் விடும் பச்சையம் போல் நம்மில் தோன்றும் பக்தியினால் கட்டுண்டு நம் மனதில் வந்து சயனித்துக் கொள்வான் கண்ணன் என்று நமக்கு குறிப்பால் ஆலிலையை உவமையாக்கிக் கூறுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.


பக்தி செய்வதை எவ்வளவு எளிமையாக விளக்குகிறாள்   இந்த நாச்சியார் என உள்ளம் உவகை அடைகிறது. 


ஓ! இதனாலேயே தான் கண்ணனும் 'வடபத்ர சாயியாக' ஆண்டாளுடன் ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளியுள்ளான் போலும்.


 ஆஹா! ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம். 

                நன்றி வணக்கம்

---'------'----×-------×-------×---------×------×--------×-------×----

ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

  ---------×---------×-------×-------×-----×-------×------×-----×---

                     பாசுரம் 13

         குண்டு நீர் உறை கோளரீ ! மத

        யானை கோள் ! விடுத்தாய் உன்னைக்

        கண்டு மால் உறுவோங்களைக் கடைக்

          கண்களால் இட்டு வாதியேல்,

       வண்டல் நுண்மணல் தெள்ளி     

      யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம்,

      தெண் திரைக் கடல் பள்ளியாய்! எங்கள்

      சிற்றில் வந்து சிதையேலே.


  கண்ணனது கோபத்தை தணிக்கும் விதமாக அவனது பெருமைகளைப் பேசி சாந்தப்படுத்தும் முயற்சியில் உள்ள கோதை, மேலும் கண்ணனைப் பார்த்து, 

"குண்டு நீர் உறை அதாவது, மிகுந்த ஆழத்தை உடைய கடல் உறைந்திருப்பவனும்,"  


"கோளரீ" என்றால் மிடுக்கான நரசிம்ம அவதாரத்தைக் குறிக்கிறது.

 சிறுவன் ஆன போதிலும் பிரகலாதனின் தூய பக்திக்கு, செவி சாய்த்து சிறிதும் தாமதியாமல் நரசிம்ம அவதாரம் எடுத்தாயல்லவா? என வியக்கிறாள். அடுத்து,


   மத யானை கோள் விடுத்தாய்!  (கஜேந்திரன் யானையின் மோக்ஷ வரலாறு)


       இந்திரத்யும்னன் எனும் பாண்டிய மன்னன், மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். விஷ்ணுவின் பூஜையில் இருக்கும் சமயம், அவனைக் காண துர்வாச முனிவர் வருகை தந்தார். ஆழ்ந்த பூஜையில் இருந்ததால் முனிவரின் வருகையை அவன்  உணரவில்லை. கர்வத்தினால், தன்னை அலட்சியம் செய்ததாக எண்ணிய முனிவர், மதம் கொண்ட யானையாக   மாறக் கடவது என சபித்தார்.!


    பின், நிலை உணர்ந்து மன்னன் மன்னிப்புக் கோரவும், மனமிரங்கிய முனிவர், விஷ்ணுவினாலேயே   ஆட்கொள்ளப் படுவாய் என ஆசி அளித்தார்.


    அவ்வண்ணமே கஜேந்திரன் எனும் யானையாக மாறிய பாண்டிய மன்னன், பூர்வ ஜன்ம வாசனையாக, தடாகங்களில் மலர்ந்திருக்கும் தாமரைகளைப் பறித்து தன் விஷ்ணு பூஜையைத் தொடர்ந்தான்.


இப்படியாக, ஒரு நாள், பெரியதொரு தாமரைத் தடாகத்தைக்  கண்டு மஹாவிஷ்ணுவின் பூஜைக்கென தாமரை மலர்களைப் பறிக்க ஆவலோடு இறங்கியது கஜேந்திரன் யானை. 


             ஆங்கே! விதிவசத்தால் ஹூஹூ எனும் கந்தர்வன், நீர்நிலையில் தவம் செய்து கொண்டிருந்த, 'தேவலன்' என்ற முனிவரது காலை முதலைப் போல் கவ்வி இழுத்தான். இதனால் திடுக்கிட்ட முனிவர், கந்தர்வனின் விஷமத்தனத்தை உணர்ந்து, முதலையாக மாற சாபம் அளித்தார். அவன் வேண்டுதலுக்கு இரங்கி, கஜேந்திரனால் உனக்கும் மோட்சம் கிட்டும் என வரமளித்திருந்தார். 


அவ்வண்ணமே, கஜேந்திரன் உற்சாகமாக, கந்தர்வன் முதலையாக வசித்துக் கொண்டிருந்த தடாகத்திலிருந்து தாமரை மலர்களைப் பறிக்க முயலவும், முதலை அதன் காலைக் கவ்விப் பிடித்து தண்ணீருள் இழுத்தது. யானையும் திடுக்கிட்டு, பின் சுதாரித்து தன் பலங்கொண்ட மட்டும் போராடியது. 


 இறுதியில், கஜேந்திரன் நம்மைக் காப்பாற்ற எம்பெருமானால்  மட்டுமே இயலும் என உணர்ந்து, முழு சரணாகதியுடன் 'ஆதிமூலமே' என விண்ணதிர பிளிறியது. சிறிதும் தாமதியாமல் மஹாவிஷ்ணு கருடன் மீதேறி, பற்ந்து வந்து, தன் சக்கராயுதத்தை முதலையின் மேல் ஏவி, முதலைக்கும் முக்தியளித்ததுடன், தன் பக்தனான கஜேந்திரனுக்கும்  மோக்ஷ்ம் அளித்தார். 


 இந்த நிகழ்வு நமக்கு விளக்க வந்த பாடம் என்னவெனில், 


ஜீவாத்மாவாகிய நம்மை கஜேந்திரனுக்கும், லோக மாயையை  முதலைக்கும் ஒப்பிடுகிறாள். தம் பலத்தில் ஆணவம் கொண்டு போராடி சம்சாரக் கடலில் சிக்கி உழலாமல், முழு   சரணாகதியுடன்   இறை தியானம் செய்தால், நமக்கும் மோக்ஷம் எம்பெருமானது இன்னருள் கிட்டும் என்பதாகும். 


    இப்படியாக உன் அடியார்களுக்கெல்லாம், நேரடியாக வந்து உன் இரு விழிகளையும் அருட் பார்வையாக காட்டி ஆட்கொண்டாயல்லவா? எங்களிடம் மட்டும் ஏன் கடைக்கண் பார்வை காண்பித்து வருத்துகிறாய்? என வினவுகிறாள்.


 உன்னை அடைவதற்காகத் தானே நாங்கள் கடுமையான விரதம் மேற்கொண்டுள்ளோம். வளையல்களின் எடையைக் கூட தாங்க இயலாத மென்மையான கரங்களால் உனக்காக வண்டல் மணற் துகள்களைச் சலித்து வீடு கட்டி அழகுபடுத்தி கோலம்  இட்டுள்ளோம்.


     வெண்மையான பேரலைகள் வெகுண்டு திரண்டு வீசினால் கூட அசையாமல் எந்த பாதிப்பும் இல்லாமல், பாம்பணையில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமா! சிறு காற்றின் வீச்சிற்கே   தாங்காத  எங்கள் மணல் வீட்டை நீ சிதைக்கலாமா?


 உன் மேல் உள்ள அன்பினால் நாங்கள் செய்யும் சிறு பிழைகளைப் பொறுத்து, எங்கள் சிற்றிலைக் கண் குளிரக் கண்டு இரசித்து அருள் புரியவேண்டும் என இறைஞ்சுகிறாள் கோதை நாச்சியார். 


வாழ்க்கை தத்துவத்தை மிக எளிமையாக நமக்கு விளக்கவந்த ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்                                                         நன்றி   வணக்கம். 

--------×-------×------×-------×-----×-----×-----×-----×-----×----×

                                           பாசுரம் 14.


              ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே                                 சரணம்


பெய்யும் மாமுகில் போல் வண்ணா! உன் தன்

பேச்சும் செய்கையும் எங்களை

மையல் ஏற்றி மயக்க உன் முகம்

மாய மந்திரம் தான் கொலோ?

நொய்யர் பிள்ளைகள்  என்ப்தற்கு உன்னை

நோவ நாங்கள் உரைக்கிலோம்.

செய்ய தாமரைக் கண்ணினாய்! எங்கள்

சிற்றில் வந்து சிதையேலே.



ஆண்டாள் நாச்சியார் கண்ணனின் கோபத்தை மேலும் தணிக்கும் விதமாக, எடுக்கும் பலவித முயற்சியில், அடுத்ததாக, 


   பெய்யுமாமுகில் போல் வண்ணா என்று கூறுகின்றாள்.


அதாவது, மழை பொழிவதற்கு முன்பாக, அடர்ந்த பந்தல் போல், கருகருவென்று மேகம் வானத்தில் சூழ்ந்திருக்கும் அல்லவா?!


இந்த வகையான மேகங்கள் தான் உண்மையான மழை மேகங்கள். அடர் கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த மேகங்கள் தன்னகத்தே தண்ணீர் துளிகளையும், சிறு சிறு பனிக்கட்டிகளையும் கூட கொண்டிருக்கும். அப்பொழுது, சூரிய சந்திர கதிர்களின் வெளிச்சம் கூட இதனூடே ஊடுருவ இயலாமல் மங்கியே இருக்கும்., ஒரு ரம்மியமான சூழல், மனதையும், உடலையும் வருடிக் கொடுக்கும் படியான குளிர்க் காற்று சுகந்தமாக இருக்கும் அல்லவா?! இதை நாம் அனைவருமே அனுபவித்திருப்போம்!.


ஆம்!  உன் பேச்சும் செய்கையும் எங்கள் மனதையும் உடலையும் வருடி அப்படிப்பட்ட சுகமான அனுபவத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உன்மேல் மேலும் மையல் கொள்ளும், அதீத காதலை ஏற்படுத்தக்கூடிய உன் முக வசீகரத்தின் மாய மந்திரம் தான் என்ன? என்று வியக்கிறாள் கோதை.


இப்படி உன் முக வசீகரத்தில் கட்டுண்டு மோன மயக்க நிலையில் பேச்சற்று இருக்கும் எங்களால்,  சிறு பிள்ளைகள் போல் உன்னை 'நொய்நொய்' என்று நச்சரிக்க இயலுமா? அல்லது உன் மனம் நோகும் படியான வார்த்தைகளைத் தான் கூற இயலுமா? கண்ணா என்கிறாள். 


ஆம் அவனது வசீகரத்தில் கோபம் கூட காணாமல் மறைந்து விடுவது இயல்பு தானே! தாமரை போன்ற அழகிய கண்களை உடையவனே, என்கிறாள்!


தாமரை சேற்றில் மலர்ந்தாலும், அதைக் கண்ட மாத்திரத்தில் நம்முள் பரவசம், புத்துணர்ச்சி, புதிதாய்ப் பிறந்தது போன்ற ஒரு உவகை உண்டாகிறதல்லவா!


இப்படி சேற்றில் மலர்ந்த தாமரைக்கே நம் மனம் உவகை அடைகிறதென்றால், அந்தத் தாமரைப் போன்ற கண்களை கொண்ட கண்ணனின் அழகில் பேச நா எழுமா? என்ன?!


 உன்மேல் மாறாத காதல் கொண்டு உனக்காக கட்டியிருக்கும் இச்சிறு வீட்டை சிதைக்காதே என்று நயமாக வேண்டுகிறாள்.


 இந்த கருத்து பாடலுக்குண்டான மேம்போக்கான ஒரு கருத்து. இதில் ஒளிந்திருக்கும் அறிவியல் நுணுக்கத்தை ஆராய்ந்தால் கோதையின் புத்திகூர்மை வியப்பின் உச்சிக்கே நம்மை இட்டுச் செல்லும். 


 அதாவது, மேகங்கள் பல்வகைப் இருந்தாலும்,  அவை அனைத்துமே வெண்மை நிறமாகத் தான் இருக்கும். இந்த கார்மேகத்தையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். 


   ஆம்! அது கருமையாக தெரிவது ஒரு மாயை. மண்ணிலிருந்து பார்க்கும் போது கருப்பாக தெரிகின்றன. ஆகாய மார்க்கமாக விமானத்தில் செல்லும் போது பார்த்தால் இந்த மழை மேகங்களும் வெண்மையாகவே இருக்கும் என்பதுதான்நிதர்சனமான உண்மை.


இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டியதென்னவெனில், தூய வெண்மேகம்  போன்ற நிர்மலமான அவன் பாதகமலங்களை நாம் சரணடைந்தால், நம் மனதில் குடியிருக்கும் காம குரோத கோப தாபங்களை அகற்றி தன்னகத்தே ஈர்த்து விடுகிறார். அப்படியும் நம்மைப் போன்ற சாமான்ய மக்களால் அவர் லீலையை முழுமையாக உணர முடியாமல் பிதற்றி நச்சரிப்போம் அல்லவா? 


அதையும் தன் தாமரை விழிகளால் அருட்பார்வையுடன் நோக்கி நம்மை பக்குவப்படுத்துகிறார். அப்படி பக்குவப்பட்ட பின் எவ்வாறு எங்களால் உன்னை கோபிக்க இயலும் என்று தன் நியாயமான வாதத்தை முன் வைத்து உனக்காக கட்டிப இச்சிறு வீட்டை சிதைக்காதே என நயம்பட தெளிவாக உரைக்கின்றாள் கோதை.

கண்ணனின் அருள் முக வசீகரத்தை  எவ்வளவு கவித்துவமாகவும் தெளிந்த அறிவியல் சிந்தனையோடும் ஒப்பு நோக்கி உரைக்கின்றாள் நாச்சியார்.

 ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம். 

                            நன்றி, வணக்கம்.

---------×-----------×---------×---------×--------×--------×--------×


                     பாசுரம் :15

வெள்ளை நுண் மணல் கொண்டுசிற்றில்

விசித்திரப்பட, வீதிவாய்த

தெள்ளிநாங்க இழைத்தகோல

மழித்தியாகிலும், உன்றன் மேல்

உள்ளமோடி யுருகலல்லால்

உரோடமொன்று மிலோங்கண்டாய்,

கள்ளமாதவா!  கேசவா ! உன்

முகத்தனகண்க ளல்லவே



அந்த பெண்கள் வாசலில் மணலில் வீடு கட்டி, அழக்காக கோலம் போட்டிருக்கிறார்கள். கண்ணன் வந்து அதை பார்க்கும் சாக்கில் அந்த வீட்டையும் கோலத்தையும் அழித்துவிட்டுப் போகிறான்.


அந்த பெண்களுக்கு அப்ப கூட கண்ணன் மேல் கோபம் வர வில்லை. அவனை பார்த்து உள்ளம் உருகுகிறது. காரணம் அந்த கண்ணனின் கண்கள்.உன் முகத்தன கண்கள் அல்லவே = உன் முகத்தில் உள்ளவை கண்கள் அல்லவே.




கோலத்தையும் வீட்டையும் அழித்ததற்காக வருத்தப் படவில்லை என்கிறாள் ஆண்டாள்.


இதற்கு ஒரு பாடலா ?


நாம் இறைவனிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கிறோம்.


கேட்டது எல்லாம் கிடைப்பது இல்லை.


மாறாக சில சமயம் துன்பம் வந்து சேர்வதும் உண்டு.


பண நஷ்டம், மனக்  கஷ்டம், உடல் நலக் குறைவு, எதிர்பார்த்தது நடக்காமல் போவது இப்படி ஏதோ வகையில் துன்பம் வந்து சேருகிறது.


அப்போது இறைவன் மேல் நமக்கு அன்பா வரும் ? கோபம் வரும் ... அவனை திட்டி தீர்ப்போம் ...


ஆண்டாள் சொல்கிறாள் ...கண்ணா நீ எனக்கு துன்பம் தந்தாலும் உன் மேல் கோபம் இல்லை....என் உள்ளம் உருகுகிறது என்கிறாள்.


பக்தி...காதல்....துன்பத்திலும் இன்பத்தை பார்க்கும்.




 .


   

No comments:

Post a Comment