Tuesday 31 January 2023

பீஷ்ம ஏகாதசி 1.2.2023 புதன்கிழமை.

                       



     1.2.2023 புதன்கிழமை "பீஷ்ம ஏகாதசி". 

வருடத்தில் 24 முறை [சில சமயம் 25] வரும் ஏகாதசியில் இந்த பீஷ்ம ஏகாதசியின் சிறப்பு பற்றி அறிவோமா?. தை மாத வளர்பிறை, பீஷ்மாஷ்டமியைத் தொடர்ந்து வரும் ஏகாதசியை பீஷ்ம ஏகாதசியாக பகவான் கிருஷ்ணனே ! கௌரவப்படுத்தினார். 
மஹா ஞானியான பீஷ்மர், மஹாவிஷ்ணுவின் அவதாரமே பகவான் கிருஷ்ணன் என்பதை உணர்ந்திருந்தார். நித்யம் அவரை மனதார துதித்து வந்தார். அதனால் அம்புப் படுக்கையில் இருந்த காலத்தில், தர்மர் முதலானவர்களுக்கு தர்மோபதேசம் செய்தார். அப்பொழுது, தர்மர் வினவிய கேள்விக்கு,
 " கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத்."  
அதாவது,இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து நம்மை விடுவிப்பது எது? என்ற கேள்விக்கு, 
நாராயண நாம ஸ்மரணையே என்று மஹாவிஷ்ணுவின் அனைத்து திவ்ய ஸ்வரூபத்தையும் சஹஸ்ர நாமமாக உபதேசித்து பதில் கூறினார்.
அத்துடன்,
"சங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஷார்ங்கதந்வா கதாதர : |
 ரதாங்கபாணி ரக்ஷோப்ய : சர்வப்ரஹரணாயுத:|| 
  என்றே சஹஸ்ர நாம ஸ்லோகத்தை நிறைவு செய்கிறார்.

 ஆம் ! பீஷ்மர் மஹாபாரதப் போரின் போது, சாரதியாக மட்டுமே பங்கு பெறுவேன் என்ற கிருஷ்ணரை போரில் ஆயுதம் ஏந்த வைப்பதாக சவால் விடுத்தார்.
  அதன்படியே, பீஷ்மர், போரில் வேண்டுமென்றே, சாரதியான கிருஷ்ணனின் மீது அம்புகளை எய்தார். பக்தனின் ஆசையை பூர்த்தி செய்வது தன்   கடமை என்று ஸ்ரீகிருஷ்ணரும், பீஷ்மர் மேல் கோபம் கொள்வது போல் பொய்யாக வெகுண்டெழுந்து, தேர் சக்கரத்தை பிடுங்கி, அதில் தன் சுதர்சனச் சக்கரத்தை ஆவாஹனம் செய்து, பீஷ்மரை நோக்கிச் சென்றார். 



இதுவே தக்க தருணம் . பகவானின் கையால் மரணம் அடைவதே தன் வாழ்வின் சிறந்த பயன்! பேறு!! என்று தன் ஆயுதங்களைத் துறந்து, பீஷ்மரும் தேரில் இருந்து இறங்கி, கிருஷ்ணரைப் பணிந்து வணங்கினார். 
    பின் அர்ஜுனன் ஓடோடி வந்து வணங்கி வேண்டவும், சாந்தமானது போல் ரதச் சக்கரத்தை தூக்கி எறிந்து மீண்டும் சாரதியாக ஒரு அமர்த்தலான புன்முறுவலுடன் தன் பணியைத் தொடர்ந்தார்.
   இதுவே ரதச் சக்கரத்தை தாங்கிய அந்த திருக்கோலமே, பீஷ்மரின் நெஞ்சில் நிலைத்தது. அதனால், சக்ரீ, ரதாங்கபாணி என்றே சஹஸ்ர நாமத்தை அதாவது, ரத சக்கரத்தை தன் சுதர்சன சக்கரமாக தாங்கியவன் என்று  நிறைவு செய்ததன் பின்னனி விளங்கும்.
இப்படிப்பட்ட உன்னத பக்தியின் பெருமைக்காகவும், அவரது மேன்மையை உலகறியச் செய்ய வேண்டும்   என்றே ஸ்ரீகிருஷ்ணரும், இந்த ஏகாதசியை "பீஷ்ம ஏகாதசியாக" சிறப்பித்தார். 
பொதுவாக மஹாவிஷ்ணுவிற்கு ப்ரீதியான ஏகாதசியில் உபவாசம் இருந்து துவாதசியில் பூஜித்து விரதம் முடிப்பது வழக்கம். 
அப்படி பீஷ்மருக்காக சிறப்பித்த இந்த ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு, ஞானிகள், சன்னியாசிகள், போரில் வீரமரணம் அடைந்தவர்கள் என்ன மாதிரியான நற்கதி அடைவார்களோ அவர்களைப் போன்றே பீஷ்ம ஏகாதசி விரதம் இருப்பவர்கள் நற்கதியான மோக்ஷத்தை அடைவர் என்ற வரத்தை அருளியுள்ளார் ஸ்ரீ கிருஷ்ண பகவான்.
இதை 'பீம ஏகாதசி' என்றும் கூறுவர். ஏனெனில், பசி பொறுக்காதவனும், உண்பதில் மிகுந்த நாட்டம் உடையவனும், அதிக அளவில் வகைவகையான உணவை விரும்புபவனும்  ஆகிய 'பீமனும்' இந்த பீஷ்ம ஏகாதசி' விரதத்தை கடைபிடித்ததாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பீமனே விரதம் இருக்கும் பொழுது, நாமும் அதைக் கடைப்பிடிப்பது நலம் என்ற நோக்கில், சிறிது நகைச்சுவையாக வேடிக்கையாகக் கூறுவர்.

                               நன்றி.
                           வணக்கம்.

2 comments:

  1. பீஷ்ம ஏகாதசி பற்றி தங்கள் மூலம் அறிந்தோம்.
    இப்படி ஒவ்வொரு நாள் வரும் போதும் அந்த நாளுக்கான சிறப்புகள் குறித்து தாங்கள் எங்களுக்கு தெரிய வைப்பதன் மூலம் எங்களாலும் அவற்றை கடைபிடிக்க முடிகிறது.

    - V. Sugavanam

    ReplyDelete
  2. பீஷ்ம ஏகாதசி பற்றிய விரிவான விளக்கத்திற்கு நன்றி. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்.

    ReplyDelete