Tuesday 24 January 2023

வசந்த பஞ்சமி 26.1.2023.

 



வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மஞ்சள் நிறப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது போல் விளங்கும் இளவேனிற்காலம் எனப்படும் இந்த  '
தை' மாதத்தில் வளர்பிறை   பஞ்சமி  திதியில் சரஸ்வதி தேவியை வழிபடும் நாளாக "வசந்த பஞ்சமி" கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சரஸ்வதி தேவி அவதரித்ததாகவும் கருதப்படுகிறது. 

 ஆதியில்  பிரம்மா உலகையும், உயிரினங்களையும் படைத்த பின், தன் படைப்பில் முழுமை இல்லாதது போல் அதிருப்தி அடைந்தார். காரணம் விளங்காமல் ஆழ்தியானத்தில் ஈடுபட்டு பின், கமண்டல நீரை தெளித்தார். அதிலிருந்து ஞானம், அழகு, தேஜஸ் மற்றும் அருட்பிரகாசத்துடன், பின்னிரு கைகளில் சுவடி, ஸ்படிக ஜபமாலை தாங்கி முன்னிரு கைகளில் வீணையுடன் ஞானசக்தி தோன்றியதோடு தன் வீணையை மீட்டி இசைக்கத் தொடங்கியது.
  அந்த தேவகானம் இசைக்கத் தொடங்கியதும் அதுவரை ஓசையின்றி மௌனமாக இயங்கிக் கொண்டிருந்த காற்று, நீர் முதற்கொண்டு அனைத்து உயிர்களும் அதுஅதற்குண்டான ஓசைநயத்துடன்  இயங்க ஆரம்பித்தது. மனிதர்களும் மொழி அறிவும் பெற்றனர். அப்பொழுது தான் தன் படைப்பு பூரணத்துவம் அடைந்ததை உணர்ந்தார் பிரம்மா.
   தன் மனஸிலிருந்து உதித்த தேவியை , "வீணாவாணி, வாக்வாதினி, வாக்தேவி, பாரதி  " என பலவாறாக போற்றி மகிழ்ந்தார். பின், தன்னுடனேயே எப்பொழுதும் இருந்து, தனக்கும் தன் படைப்பிற்கும் தக்க உறுதுணையாக இருக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். 
 அப்படிப்பட்ட ஞான சக்தியே சரஸ்வதி தேவி. 
தேவர்கள், ரிஷிமுனிகள், அசுரர், யக்ஷர், கின்னரர், கந்தர்வர், அப்ஸரஸ் மற்றும் மனிதர்கள் என அனைவருக்கும் பேதமின்றி அனைத்து கலைகளையும் அருளக் கூடிய கலைவாணியை  வியாழக்கிமை 26.1.2023 வசந்த பஞ்சமி அன்று பூஜிப்போம். 
இந்த நாளில் கல்வி சம்பந்தமான புதிய முயற்சி மேற்கொள்ளுதல் நலம்.
ஸ்ரீ க்ருஷ்ணர் கூட "சாந்தீபனி முனிவரிடம்" குருகுல வாசம் ஆரம்பித்ததும் வசந்தபஞ்சமி அன்று தான்.

1 comment:

  1. சரஸ்வதி தேவி தோன்றிய வரலாற்றை அறிந்து கொண்டோம்.

    நாளை 261.23 வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி தேவி துதி பாடி வழிபடுவோம்.

    நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete