Thursday 2 January 2020

ஆருத்ரா தரிசனம் & திருவாதிரைக்கு சிவபெருமானுக்கு களி நிவேதனம் செய்வதன் பின்னனிக் கதை.





           ஆருத்ரா தரிசனம்

     வேள்வியில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள், தாங்களே கடவுளைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்க அதீத கர்வத்துடன் இருந்தனர். அவர்களுக்கு உண்மை நிலையை புரியவைக்க முயன்ற சிவபெருமான், அழகே உருவான ''பிச்சாடனார்'' உருவம் தாங்கி அவர்கள் முன் தோன்றி பிச்சை கேட்கலானார். அவரது திவ்ய தேஜஸில் பரவசமடைந்த முனிவர்களின் மனைவிகள், பிச்சாடனாரை பணிந்து அவரைப் பின்பற்றியது அவர்களுக்கு பெருங்கோபத்தை உண்டாக்கியது. 



அதனால், சிவபெருமானையே அழிப்பதற்காக, யாகம் செய்து, வேள்வித் தீயிலிருந்து, மதங்கொண்ட யானை, பாம்பு, மான், மழு எனும் ஆயுதம், உடுக்கை,வேள்வித் தீ மற்றும் முயலகன் எனும் அரக்கன் இன்னபிறவற்றை உருவாக்கி மந்திர உச்சாடனத்துடன் சிவபெருமான் மீது ஏவினர்.


Image result for arudra darisanam pitchadanar 

 ஆனால் சிவபெருமானோ மதங்கொண்ட யானையின் தோலைக் கிழித்து ஆடையாகவும்,பாம்பினை தன் கழுத்தில் சுற்றிக் கொண்டும், வேள்வித்தீ, உடுக்கை, மான் மற்றும் மழுவினை தன் திருக் கரங்களில் பற்றியும், முயலகனை தன் வலது பாதத்தில் அழுத்தி பிடித்து, இடது பாதம் தூக்கியும்  நடனம் ஆடினார். தன் தவறை உணர்ந்த முனிவர்கள் இறைவனைப் பணிந்து மன்னிப்பு வேண்டினர்.அந்த தினமே மார்கழி திருவாதிரையும் பௌர்ணமியும் சேர்ந்த தினமாகும். இதையே ஆருத்ரா தரிசனமாக கொண்டாடுகிறோம்.


திருவாதிரைக்கு சிவபெருமானுக்கு களி நிவேதனம் செய்வதன் பின்னனிக் கதை.



         சிதம்பரம் அருகே , விறகு வெட்டியான சேந்தனார் எனும் சிவபக்தர், விறகு விற்ற காசில் அரிசி வாங்கி, தினமும்  களி கிண்டி, அடியார்களுக்கு அளித்து பிறகு தான் உண்டு மகிழ்வார். ஒரு நாள் மழையில் அவரது விறகுகள் நனைந்து விற்க முடியாமல் போனதால்,தன் இல்லத்தில் இருந்த கேழ்வரகைக் கொண்டு களி கிண்டி அடியார்களுக்காக காத்திருந்தார்.
  அவர் பெருமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய இறைவன்,  தானே அடியாராக அவர் இல்லத்திற்கு சென்று அவர் அளித்த களியை உண்டதோடு, மீதமிருந்த களியையும் தன் அடுத்த வேளை உணவிற்க்கு என கேட்டு வாங்கி வந்தார்.   

அன்று தேர்த் திருவிழா.அரசர் முதற் கொண்டு மக்கள் கூட்டம் தேர் வடம் பிடித்து இழுக்க முயற்சிக்க, சேந்தனார் 'பல்லாண்டு' பாடிய பின்னரே, தேர் நகரும் என்று அவரை பெருமை படுத்தும் வண்ணம் 'அசரீரி' ஒலிக்கவும், சேந்தனார் இறைவனின் கருணையை எண்ணி வியந்தவாறு அவன் அருளால் பாடவும் தேர் நகர்ந்தது..

மன்னரும் சிறந்த சிவபக்தரான இறையருளைபரிபூரணமாகப் பெற்ற சேந்தனாரைப் பணிந்து போற்றி மகிழ்ந்தார்.
Image result for thiruvathirai kali
அது முதற் கொண்டு மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று, இறைவனுக்கு, "களி" கிண்டி நிவேதனம் செய்யும் வழக்கம் உண்டாயிற்று.

4 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்,

    தாருகாவனத்து முனிவர்கள், கடவுளையும் மிஞ்சியவர்கள் தாங்கள் என்று செருக்குடன் இருந்ததனால் பிச்சாடனர் வேடம் கொண்டு சிவபெருமான் அவர்கள் முன்னே தோன்ற அவருடைய அழகில் மயங்கிய முனிவர்களின் மனைவிகள் பிச்சாடனர் பின்னே செல்ல அதைக் கண்டு கோபமுற்ற முனிவர்கள் சிவனையும் அழிக்க நினைத்து வேள்வி நடத்தியது ; பலவற்றை பிச்சாடனர் மேல் ஏவியது - அவற்றை சிவபெருமான் தன் ஆடையாகவும் கையில் தாங்கியும், முயலகனை தன் பாதத்தில் மிதித்தும் அதுகண்டு முனிவர்களும் செருக்கு நீங்கிய தினம் திருவாதிரை என்று கொண்டாடப்படுவதை அறிந்தோம்.

    சிவனடியார்களுக்கு அமுது அளித்து பிறகு உண்ணும் சேந்தனாரின் பெருமையை உணர்த்தும் வண்ணம் கேழ்வரகில் செய்த களி சாப்பிட்டதால், அன்றைய தினம் களி சாப்பிடும் வழக்கம் உருவானது என்றும் களியையே நிவேதனமாக படைக்கும் பழக்கம் உருவானது என்றும் அறிந்தோம்

    சேந்தனார் பெருமையை உணர்த்த அவர் "பல்லாண்டு" பாடினால் தான் தேர் நகரும் என்று அசரீரி ஒலிக்க அதன்படி சேந்தனார் பாடவும் தேர் நகரவும் அவருடைய பெருமையை அனைவரும் அறிந்ததும் அறிந்து யாமும் சிவபக்தியில் திளைக்க எண்ணம் உருவாகிறது.

    நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete
  2. Very good information not aware and not known till I read your posting. Thank you Vasantha madam. God bless you.

    ReplyDelete
  3. Useful information.thank you🙏🙏

    ReplyDelete
  4. ஆஹா !
    அந்தந்த நாளுக்கான சிறப்புகள் குறித்து தாங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தும் வரலாறுகளை படித்து வியக்கிறோம்.

    தாங்கள் ஒரு வரலாற்று களஞ்சியமாக விளங்குகிறே ர்கள் .

    தங்கள் பணி சிறந்தது

    - V. Sugavanam

    ReplyDelete