Sunday 28 November 2021

ஸ்நான வகைகள் விதிகள்.

 சைவ ஆகமங்கள் மொத்தம் 28. அதில் நான்காவதான காரணாகமம் என்ற ஆகம நூலில் பூர்வ மற்றும் உத்தர என இரண்டு பாகங்கள் உள்ளன. இவற்றில் ஆசார அனுஷ்டான விதிகள் பற்றி கூறப்பட்டுள்ளன.

அதில் முக்கியமாக இந்த நூலில் ""ஸ்நான விதி" என்பது பற்றி சிவாகம ரத்னாகரம் சிவஸ்ரீ. கண்டமங்கலம் "சுந்தர குருக்கள்" அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார். 
அன்னாரது 25 ஆவது  ஜயந்தி  வருகிற 30.112021 செவ்வாயன்று  கொண்டாடப்பட இருக்கின்றது. 



         இந்த ஸ்நான விதிகளைப் பற்றி காஞ்சி முனி என போற்றப்படும் மஹாபெரியவா. ஸ்ரீ . சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் "தெய்வத்தின் குரல்" மூன்றாம் பாகத்தில் எளிமையாக விளக்கியுள்ளார்.
சுவாரஸ்யமான இத்தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஸ்னானம் - குளியல் என்பது உடலை சுத்தப்படுத்துவது. இதில் ஐந்து வகையான ஸ்னான விதி குறிப்பிடப்பட்டுள்ளன. பஞ்ச பூதங்களால் நம்மைத் தூய்மைப்படுத்தும் விதத்தை அறிந்து கொள்வோம்!.
1.பஞ்ச புதங்களில் ஒன்றான வருணன் அல்லது நீர் :- நதி, குளங்கள் ஆறுகள் இவற்றில் முங்கிக் குளிப்பதே உத்தமமானது.



வாளியில் த்ண்ணீரை நிரப்பியோ அல்லது ஷவரில் குளிப்பதோ சுத்தமான குளியல் ஆகாது. இது இரண்டாம் பட்சம் தான்  இருப்பினும், இல்லத்தினில்  கிணற்றில் நீர் இறைத்து நீராடுவதும் சாலச் சிறந்தது என்கிறார்









2. அக்னி ஸம்பந்தம் :- விபூதி ஸ்னானம் . நெருப்பிலிட்டு சாம்பலாகி விபூதி பெறப்படுவதால், இதற்கு "பஸ்மா" என்று பெயர். தண்ணீரை விட்டுக் குழைக்காமல் அப்படியே வாரி இட்டுப் பூசிக் கொள்வது. இதற்கு "பஸ்மோத் தூளனம்" எனப் பெயர். அதாவது விபூதிப் பொடி. 



3. கோ தூளி : பசுக்கள் கூட்டமாகச் செல்லும் பொழுது, அதன் குளம்புகள் மண் தூசுகளை காற்றில் புழுதி கிளப்பியவாறு செல்லும் அல்லவா?! 
இதில், மண் எனும் பஞ்ச பூதங்களில் பூமியும் வாயுவும் ஒருசேர இடம் பெறக் கூடிய குளியல் ஆகும். இந்த காற்றுக் குளியலுக்கு "வாயவ்யம்" எனப் பெயர்.



4. திவ்ய ஸ்னானம் :- 

       சில நேரங்களில் வெயில் அடிக்கும் பொழுதே மழையும் பெய்யும் அல்லவா?!  இப்படிப்பட்ட இந்த மழை தேவலோகத்திலிருந்து வருவதற்கு சமானம் என்று கூறுகிறார். அதனால் மழையும் வெயிலும் ஒருசேர நிகழும் சமயம் நாம் அதில் நிற்பது திவ்யக் குளியல் என்கிறார். இது பஞ்சபூதங்களில் ஆகாயம் சம்பந்தப்பட்டது
.



5. ப்ராஹ்மம் :-  

     மந்திர ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்கிறோம் அல்லவா?! நன்றாக நாம் குளித்திருந்தாலும் நம் வீட்டில் சந்தியாவந்தனம், பூஜை செய்யும் பொழுது பஞ்சபாத்திரத்தினை  அலங்கரித்து மந்திரம் சொல்லி அந்த மந்திர நீரை நாமே நம் மீது தெளித்துக் கொள்வது. அல்லது யாகம் மற்றும் ஹோமம் செய்யும் பொழுதோ மந்திர ஜலத்தால் ப்ரோகிதர் தர்ப்பை கட்டைக் கொண்டு நம் மேல் தெளித்து சுத்தப்படுத்துவது. இந்த வகையான ஸ்னானத்திற்குப் பெயர் தான் "ப்ராஹ்மம்" என்பதாகும். 








இப்படி இந்த எல்லா வகைக் குளியலிலும் நாம் பகவானின் சிந்தனையுடன் பகவன் நாமாவை உச்சரித்து செய்தால் அனைத்துமே "ப்ராஹ்மம்" தான்.

Friday 26 November 2021

காலபைரவாஷ்டமி மற்றும் வைக்கத்தஷ்டமி

காலபைரவாஷ்டமி


 சிவபெருமான் உருவெடுத்த பல்வேறு  அவதார வடிவங்களில் முதலில் தோன்றியது சொர்ணபைரவ மூர்த்தியே.. அந்த சொர்ண பைரவரிடமிருந்து எட்டு பைரவர்கள், பின் ஒவ்வொரு பைரவரும் எட்டு எட்டு பைரவ வடிவமாக 64 வித   பைரவ மூர்த்திகள் வெளிப்பட்டன. இவர் சிவனைப் போலவே தலையில் பிறையுடன் கூடிய ஜடாமகுடமும், நாகத்தை பூணூல் போன்று அணிந்தும், பன்னிரு கைகளில் பாசம், அங்குசம் இன்னபிற ஆயுதங்கள் தாங்கியும்  நிர்வாண கோலத்துடனும் அருள் பாலிக்கிறார். 




பைரவரது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை 12 ராசிகளும் முறையே மேஷம் முதல் மீனம் வரை இடம் பெற்றுள்ளதாக கூறுவர். 

பைரவர், சனி பகவானின் குருவானதால் இவரை வழிபடுவதன் மூலம் சனி தோஷத்தால் ஏற்படும் தாக்கம் குறையும். தேய்பிறை அஷ்டமி தினமே இவரை வழிபட உகந்தது. அதிலும்   ருத்ராஷ்டமி   எனப்படும் கார்த்திகை மாத அஷ்டமியே 'மஹாதேவாஷ்டமி' ஆகும்.

ஒவ்வொரு மாத அஷ்டமிக்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு. நவம்பர் 27 . 2021 சனிக்கிழமை கார்த்திகை மாத காலபைரவாஷ்டமி,  மஹாதேவாஷ்டமி விசேஷமானதாகும்.

                                வியாக்ரபாதர் 

  மழன் முனிவன், தன் தந்தையான மத்யந்தன முனிவரிடம், சிவபூஜை ஒன்றே முக்தி அளிக்கக்கூடியது என்பதை கேட்டறிந்து, வேறு சிந்தனை ஏதுமின்றி வாழ்நாள் குறிக்கோளாக பக்தியுடன் சிவபூஜைக்காக அன்றலர்ந்த பூக்களைச் சேகரித்தார். அதில்   வாடிய    பூக்களும், சில இதழ்கள் உதிர்ந்த பூக்களும் இடம் பெற்றிருந்தது அவருக்கு வருத்தத்தை அளித்தது. அதனால், சிவபிரானிடம் வண்டுகள்   பூக்களின்  தேனை நுகர்வதற்கு முன்பாகவும், மரத்திலிருந்து உதிர்வதற்கு முன்பும் அதிகாலையில் பறிப்பதற்காக மரத்தின் உச்சியில் வழுக்காமல் ஏறுவதற்கு வசதியாக புலிக்காலையும் கைகளில் புலியினது நகம் போன்றும், இருளிலும் பார்க்கும்  வண்ணம் புலியின் கண்களையும் பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக மழமுனிவர் வியாக்ர பாதர்  அதாவது புலிப்பாதர் என அழைக்கப்பட்டார்.

வைக்கம்




      அதுசமயம், 'கரன்' என்பவன் அசுரகுலத்தில் பிறந்தாலும், அக்குணம் சிறிதுமின்றி, முக்தி வேண்டி சிவபிரானைக் குறித்து  கடுந்தவம் இருந்தான். அவனது பக்தியில் மகிழ்ந்து எம்பிரானும், மூன்று லிங்கங்களைக் கொடுத்து அதை தக்க இடத்தில்  பிரதிஷ்டை  செய்து பூஜித்து, பின் முக்தி பெறுவாயாக ! என வாழ்த்தியுருளினார். பின் புலிப்பாதரையும் அவனைத் தொடரும் படி அனுப்பினார். வியாக்ரபாதரும் கரன் அறியாமல் அவனை பின்தொடர்ந்து சென்றார். கரன் அசுரனும் வலக்கை, இடக்கை மற்றும் தனது வாய்க்குள்ளும்  தாங்கி மூன்று லிங்கங்களையும் எடுத்துச்  சென்றான்  வழியில் களைப்பு மிகுதியால் வலக்கையில் இருந்த லிங்கத்தை கீழே வைத்தான். ஆசுவாசப்படுத்திக் கொண்டபின், திரும்பவும் அந்த லிங்கத்தை அவனால் எடுக்க இயலவில்லை. 

              ஏற்றமனூர் 



             திகைத்து நின்ற வேளையில், தன் பின்னே வியாக்ரபாதர் இருப்பதைக் கண்டு, அவரிடம்  அந்த லிங்கத்தை பூஜிக்க வேண்டுமாய்   பணிவுடன்  விண்ணப்பித்துக் கொண்டு, மற்ற இரு லிங்கங்களுடன் தன் பயணத்தை தொடர்ந்தான். வியாக்ரபாதரும் மகிழ்வுடன் சிவபூஜை செய்து வந்தார். சிவபிரான் அவருக்கு   காட்சி  அளித்த இடமே வியாக்ரபாதர் மேடை எனப்பட்டது. கரனால் சிவலிங்கம் வைக்கப்பட்ட இடம் என்பதே காலப்போக்கில் சிறிது சிறிதாக மருவி 'வைக்கம்' என்ற பெயர் நிலைத்துவிட்டது. 

                             மஹாதேவர்



                          கடித்துருத்தி





அதன்பின், கரன் அசுரன்,   கோட்டயம் அருகில், ஏற்றமானூர் [தற்பொழுது எட்டுமனூர்] என்ற ஊரில் மேற்கு நோக்கியும், வாய்க்குள்  இருந்த லிங்கத்தை 'கடித்துருத்தியில் கிழக்கு நோக்கியும்' பிரதிஷ்டை செய்து பூஜித்து முக்தி பெற்றான். வாயில் வைத்து கடித்து உருத்தி வந்ததால்  'கடித்துருத்தி' எனப்பெயர் பெற்றது. இந்த மூன்று லிங்கங்களின் பெயரும் "மஹாதேவர்" என்பதாகும். 
கார்த்திகை மஹாதேவாஷ்டமி யன்று உச்சி காலத்திற்க்குள், இந்த மூன்று 'மஹாதேவரையும்' தரிசிக்க முக்தி நிச்சயம் .


பின்னாளில், மஹாவிஷ்ணுவின் அவதாரமான, பரசுராமர் தன் அவதார நோக்கம் நிறைவேறியதும் அவர் வென்ற    பூமி அனைத்தையும் தானமாக கொடுத்தபின், தன் தவ வாழ்விற்கான இடத்தை தேடி யோக நிஷ்டையின் மூலம் ஆகாயமார்க்கமாகச் செல்லும் போது இந்த வைக்கத்தின் அருகில் வரும் பொழுது கருடன் குரலெடுத்து கத்தவும், அப்பகுதி அவரை ஆகர்ஷிக்கவும், 
கீழே நீரில் பாதி மூழ்கிய  நிலையில் நாவல் பழ   நிறத்தில் மின்னிய சிவலிங்கம் அவர் கண்களில் தட்டுப்பட, இந்த வைக்கம் பகுதியில்  இறங்கி, உடன் மேடை அமைத்து அங்கு அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.  

Monday 22 November 2021

முருகன் பாடல்கள்


இயற்றியவர்
சுப்பராம பாகவதர்

ராகம்: மாயாமாளவகௌள  தாளம் ; ஆதி

                            பல்லவி 

சரவணபவகுஹனே - உன்னை
சரணடைந்தேன் காத்திடுவாய் என்னை

                      அனுபல்லவி

அரவணை மேல் துயில் கொள்ளும் அந்த 
ஆதிபுருஷனின் மருமகனே  (--)

                           சரணம் -1

திருகயிலையில் ஒரு முழு கனி வென்றிட 
செருக்குடனே உலகை வலம் வந்தாய் 
குறுக்கு வழியில் விநாயகன் கனி பெற 
வெறுப்புடன் பழனி குன்றினில் நின்றிடும்  (--)

                            சரணம் - 2

வேலனும் வேடனும் விருத்தனுமாகிய 
வேடம் புனைந்தொரு மாதை மணந்திட 
நாடகமாடிய நாயகனே திருநீலகண்டனுக்கு ஞாலம் உரைத்த  (--)
 

Sunday 21 November 2021

ஸோமவார சங்காபிஷேகம்.

 கார்த்திகை ஸோமவார        சங்காபிஷேகம். 




அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு சங்கினால் அபிஷேகம் செய்வது மிகுந்த விசேஷத்தைத் தரவல்லது.

 அதிலும் கார்த்திகை மாதத்தில் அனைத்து திங்கட்கிழமைகளிலும்    சிவாலயங்களில் " சங்காபிஷேகம்" 108, 1008 அல்லது ஒரு லட்சம் சங்கினால் அபிஷேகம் செய்வர். குறிப்பாக வலம்புரி சங்கே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கோடி இடம்புரி சங்குகளுக்கு இணையானது ஒரு வலம்புரி சங்காகும். 

              எதனால் இந்த சங்காபிஷேகம் சிறப்பானது                  தெரியுமா?

      கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும் கிருத்திகை நக்ஷத்திரமும் கூடுகின்ற வேளையில் சிவபெருமான் "ஜோதி ஸ்வரூபமாக" அதாவது அக்னிப் பிழம்பாக காட்சியளிக்கிறார் அல்லவா?! . அத்துடன் கார்த்திகை மாதம் முழுவதும் கோயில்களிலும் , இல்லங்களிலும் தீப ஒளியினாலேயே சிவனை நாம் ஆராதிக்கின்றோம். அதனால் அவரை குளிர்விக்கும் பொருட்டு, சங்காபிஷேகம் செய்கிறார்கள். 




        சந்திரன் பாற்கடலில் உதித்தவர். குளிர்ச்சி பொருந்தியவர். அவ்வண்ணமே பாற்கடலில் தோன்றிய சங்கினை மஹாவிஷ்ணு தன் திருக்கரங்களில் தாங்கி அலங்கரித்தார்.  கடலில் தோன்றும் இச்சங்கு குளிர்ச்சி பொருந்தியதும் கூட.   அதனால் சந்திரனுக்கு உகந்த நாளான திங்கட்கிழமையில் இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது. தேய்ந்து அழிய இருந்த சந்திரதேவனும் சிவனை பூஜித்தே வளர்ச்சி அடைந்ததோடு அவரது ஜடாமுடியை  அலங்கரிக்கும் பேற்றினையும் பெற்றவரல்லவா!
   சங்கினை "பவித்ரா பாத்ரம்" அதாவது, புனிதமான பாத்திரம் என்றே  குறிப்பிடுகின்றனர். ஆம்! சங்கு பஞ்ச பூதங்களாலும்  தன் நிலை மாறுவது இல்லை. 




                          ஓங்கார நாதம்

சங்கை தீயினால் சுட்டாலும் வெண்மை தரும் என்பது ஆன்றோர் வாக்கு. சங்கின் துவாரத்தின் வழியாக காற்றைச் செலுத்த இனிமையான ஓசையை எழுப்பும். வலம்புரிசங்கை காதில் வைத்துக் கேட்கும் போது "ஓம்" எனும் நாதம் ஒலிக்கும்.     பூஜையிலும் சங்கை ஊதி வழிபாடு  பழங்காலம் தொட்டே வழக்கில் உள்ளது. அதன் நாதம் நம் மனஇருளை பயத்தை போக்க வல்லது. மனோபலத்தை அளிக்கவல்லது.



 அதனால் சந்திரனின் அம்சமாக கருதப்படும் சங்கினில் தீர்த்தம் நிரப்பி, சந்தனம் குங்குமம் இட்டு ருத்ராக்ஷம் வைத்து துளசியால் அர்ச்சனை செய்து பின் அந்த தீர்த்தத்தால் சிவனுக்கு அபிஷேகம் நிகழ்த்தப்படும். அந்த அபிஷேக நீரை நாம் பருகுவதனால் நம் உடலில் சகல வியாதிகளும் குணமடையும் என்பது திண்ணம். 





சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்றும் சூரியனின் ஆயிரக்கணக்கான கிரணங்களுள் ஒன்றான சுஷ்முனா அல்லது சுஷ்மா எனும் ஒளிக்கீற்றினால் சந்திரன் ஒளி பெறுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகையினால், சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூரியனின் காயத்ரி மந்திரத்தையே சொல்லி பூஜிக்க வேண்டும் என்ற நியதியையும் சாஸ்திரங்கள் வகுக்கின்றன. சிறப்புவாய்ந்த கார்த்திகை மாதத்து சங்கு அபிஷேகம் காணப் பெறுவது பெரும்பேற்றினை அருளக்கூடியது. சங்கு அபிஷேகம் காண்போம்! சங்கடங்கள் நீங்கப் பெறுவோம்!

திருக்கடையூர் சங்காபிஷேகம் மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிவபெருமான் மார்க்கண்டேயரால் அபிஷேகம் செய்யப்பட்டவர். இங்கு சங்காபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தீர்த்தத்தில் 100க்கும் மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த அபிஷேக தீர்த்தம் பல நோய்களைத் தீர்க்கும் சக்தி உடையது



மனோகாரகனான சந்திரன் வாழ்வில் இன்பத்தை அளிக்க வல்லவன் ஆதலால், இந்த சங்காபிஷேகத்தில் நாம் கலந்து கொள்வதால் நமது சகல பாவங்களும் விலகி நன்மை மலரும் என்பது உறுதி.

Tuesday 16 November 2021

கார்த்திகை தீபத்திருவிழா. 2021



 

   அக்னி ஸ்தலமாகிய 'திருவ்ண்ணாமலையில்" மிகுந்த விசேஷமாகக் கொண்டாடப்படும் தீபத்திருவிழா. அத்திரு நாளில் மக்களும் தங்கள் இல்லங்களில் வீடு முழுவதும் விதவிதமான அகல் விளக்கு முதல் பல அழகிய வேலைப்பாடு அமைந்த விளக்குகளைக் கொண்டும் தீபம் ஏற்றி வழிபடுவர்.

பரணி தீபத்தன்று அதிகாலை 4 மணியளவில் கற்பூரம் கொண்டு கருவறை முன் தீபம் ஏற்றி, தீபாராதனை காட்டியபின், உண்ணாமுலை அம்மன் சன்னதியிலும் ,நந்தி முன்பும் "பஞ்சமுக தீபம்" ஏற்றி, கடைசியாக பைரவர் முன்பு தீபம் ஏற்றுவார்கள். வெள்ளிக்கிழமை நவ. 19 ஆம் தேதியன்று கார்த்திகை தீபத் திருவிழா. 

      கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நக்ஷத்திரத்தை  ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவம் திருவண்ணாமலையில்  பத்து நாட்கள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. ஊர்வலம், தெப்ப உற்சவம் மறும் சண்டிகேஸ்வரர் உற்சவம் என விமரிசையாக  நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். 
     மாணிக்கவாசகரது, "ஏகன் அநேகன்" என்ற ஈசனின் திருவாசக தத்துவ உரைக்கேற்ப  கார்த்திகை தீபத்தன்று ஒரு விளக்கை ஏற்றி, அதிலிருந்து ஐந்து தீபங்களை ஏற்றி பூஜை செய்த பின், ஐந்தையும் ஒன்றாக்கி அண்ணமலையார் முன்பு வைத்து விடுவார்கள். இது ஒன்று பலவாகி, பலதும் திரும்பி ஒன்றினுள் அடங்கி விடும் தத்துவத்தை விளக்குகிறது. அதாவது சிவனே பல வடிவங்களாக அருள் புரிகிறார்.







இந்த கார்த்திகை திரு நாளில் மாலைப் பொழுதில் பஞ்சமூர்த்திகள் தீபமண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களோடு  வருடத்திற்க்கொரு முறை அன்றைய தினத்தில் மட்டுமே அர்த்த நாரீஸ்வர உற்சவ மூர்த்தமும், பக்தர்களுக்கு காட்சி தருவதற்கு "தீப மண்டபத்தில்'' எழுந்தருளப்படுகிறது. 
அதன்பின் தீப மண்டபத்தில் இவர்களுக்கு முன்பாக "அகண்ட தீபம்" ஏற்றப்படும் அதே வேளையில் திருவண்ணாமலையின் உச்சியிலும் "மகாதீபம்" ஏற்றப்படுகிறது. 



கார்த்திகை தீபத் திரு விழா தோன்றிய காரணமான புராணக் கதை:
               இவ்வுலகைப் படைக்கும் தொழில் செய்வதனால், தானே பெரியவன் என பிரம்மன் வாதிட, படைத்தால் மட்டும் போதுமா? அதைக் காக்கும் திறன் வேண்டாமா?. நீர் படைக்கும் உயிர்களை யாமல்ல்வோ பாதுகாக்கிறேன்! அதனால் நானே உன்னை விடப் பெரியவன் என தன் வாதத்தை முன்மொழிந்தார்! விஷ்ணு  பகவான்.  




     அச்சமயம், அவர்கள் முன் ஒளிப் பிழம்பாக பெரிய ஜோதி தோன்றி தகதகவென எரிந்தது. உடன் இவர்கள்  அடிமுடியைக்  கண்டு யார் முதலில் வருகின்றனரோ? அவரே பெரியவர் என தீர்மானித்து, அவ்வண்ணமே, திருமால் பன்றி உருவெடுத்து, மண்ணை அகழ்ந்து தோண்டியவாறு, ஒளிப்பிழம்பின் முடிவினைக் காணச்சென்றார். அதுபோல் பிரம்மனும், அன்னப் பறவையின் வடிவெடுத்து வான் நோக்கி பற்ந்து ஒளிப் பிழம்பின்  முடியினைக்  காணச் சென்றார். அவரால் நெடு நாட்கள் தன் பயணத்தை தொடர முடியாமல் மிகவும் சோர்வுற்ற சமயம், மேலிருந்து தாழம்பூ ஒன்று கீழ் நோக்கி வருவதைக் கண்டு, 
    இந்த ஒளிப் பிழம்பு யார்? நீ எங்கிருந்து வருகிறாய்? 
என அதனிடம் வினவினார்  அதற்கு தாழம்பூ, இந்த ஜோதி சிவபெருமான் ஆவார். நான் அவரது தலையிலிருந்து  நெடு நாட்களாக கீழே விழுந்து கொண்டிருக்கிறேன். இன்னும் என் பயணம் முடிந்தபாடில்லை எனக் கூறியது. அப்படியானால் நீ எனக்கு ஒரு உதவி செய். நான் சிவனின் முடியை கண்டுவிட்டதாக விஷ்ணுவிடம் எனக்காக பொய் சாட்சிக் கூறக் கேட்டுக் கொண்டு, அதனுடன் திரும்பி வந்தார்.


ஆனால் மஹாவிஷ்ணு  தன்னால் தீபத்தின் அடியினை காணமுடியவில்லை  என்பதை பிரம்மனிடம் ஒப்புக் கொண்டார். உடன் பிரம்மன், விஷ்ணுவை கேலி செய்து அவமதித்து, நீ எனக்கு சிறு குழந்தைக்கு ஈடாவாய்! தெரியுமா? என எள்ளி நகையாடியதும் அல்லாமல், இங்கே பார். இஜ்ஜோதியானது சிவனாரே ஆவார். நான் அவரைக் கண்டு விட்டேன். இதற்கு சாட்சி இந்த தாழம்பூவே எனக் கூற, அதுவும் ஆமோதித்தது.   
    உடன், சிவபிரான் அங்கு தோன்றி, பொய்யுரை கூறியதுமில்லாமல், விஷ்ணுவை அவமதித்து எள்ளி நகைத்தன் காரணமாக, பூவுலகில் உனக்கு தனி ஆலயம் கிடையாது. அத்துடன் 'பத்ம கல்பத்தில்' மஹாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிறப்பாய் எனக் கூறி, தாழம்பூவைப் பார்த்து, பொய் சாட்சி சொன்ன குற்றத்திற்காக, நீ எனது பூஜை வழிபாட்டிற்கு உதவ மாட்டாய் என கூறினார்.
தங்கள் தவறுணர்ந்து பிரம்மனும் தாழம்பூவும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கவும், மனமிரங்கிய ஈசன் உத்திரகோச மங்கை எனும் ஊரில்  தன் பக்தைக்காக அப்புண்ணிய பூமியில் அவதரிக்க இருப்பதாகவும், அச்சமயம் பயன்படும்படியான வரத்தை அருளினார். 
   தன் அடியைக் காண இயலாததால் மஹாவிஷ்ணுவிடம் நீர் "சிறியவர்" என அழைக்கப்படுவாய் என்று கூறவும், பிரம்மன் தனக்கான மக்கள் வழிபாட்டிற்க்கான வரத்தை அருளும்படி கேட்கவும், ஈசனும், நாம் மூவரும் இணைந்த சிவலிங்கமாக ஆகலாம் எனக் கூறி, அடிப்பகுதி, பிரம்மனாகவும், நடுப்பகுதி, திருமாலாகவும், மேல்பாகம் ஈசனாகவும் அமைந்த சிவலிங்கம் தோன்றியது. 
  சிவலிங்கத்தின் பின்புறம் அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் உண்ணாமுலையுடன் இணைந்த கோலத்துடனும் அருள்பாலிக்கிறார். 
இறைவனின் திருவடிகளை சரணம் எனப் பணிந்தால் என்றும் நன்மையே பயக்கும். பணிவே உயர்வைத் தரும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.


Monday 8 November 2021

ஸ்கந்த சஷ்டி விழா. 2021


முசுகுந்த சோழச் சக்கரவர்த்திக்கு முருகன் அருளிய கதை 

இவர் திரேதா யுக காலத்தில் ராமபிரானுக்கும்   மூத்தோராக  அறியப்படுகிறார்.              

 ஒருமுறை ஒரு அடர்ந்த பூஞ்சோலையில், பரமேஸ்வரன் தன் மனதுக்கினிய பார்வதி தேவியுடன் பிரவேசித்து, பெரிய வில்வ மர்த்தினடியில் அமர்ந்து ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டார். அது சமயம், சிவபிரானின் தலையில் பொல பொலவென்று வில்வ இலைகள் விழந்தவண்ணம் அவரது தியானத்திற்கு இடையூறு விளைவிப்பதை கவனித்த அன்னை பார்வதிதேவி, இவ்விலைகள் தானாக மரத்திலிருந்து விழுவது போல் இல்லையே! என சந்தேகித்து அம்மரத்தை அண்ணாந்து நோக்கினாள். 



 அப்பூஞ்சோலையில் வசித்து வந்த குரங்கு ஒன்று விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து, சிவன் தலையில் போட்டுக் கொண்டிருந்ததைக்  கண்டாள். அன்னையின் பார்வை தீக்ஷன்யத்தினால்,  ஞானம் பெற்றதோடு, தான் தன் குறும்புத்தனத்தால் தவறு செய்ததை உணர்ந்தது அக்குரங்கு. உடன், அமைதியாக மரத்திலிருந்து இறங்கி வந்து சிவபார்வதி கால்களில் விழுந்து வணங்கியது. இருவரும் மகிழ்ந்து, வில்வஇலையால் எம்மை பூஜித்ததன் பலனாய், அடுத்த பிறவியில், சக்கரவர்த்தியாக சிறப்புறுவாய் என அருள் மொழி கூறினார் எம்பெருமான். 



தவறு செய்த எனக்கு அருள் செய்த எம்பிரானே, வசதி, பதவி, பட்டம் இவைகள் கர்வத்தையும் அதனால் கேடையும்  விளைவிக்கும். அதனால், எனக்கு இந்த முற்பிறவி ஞாபகம் இருக்கும் வண்ணம் இக்குரங்கு முகத்துடனேயே பிறந்து பக்தி மனம் மாறாமல் இருக்கவேண்டும் என வேண்டியது. 
 அவ்வண்ணமே, சிவனருள் பெற்ற, குரங்கு முகம் காரணமாக "முசுகுந்த சக்கரவர்த்தி" என்ற பெயருடன், ஞானம் , கல்வி, வீரம், அமானுஷ்ய சக்தி, அஷ்டமாசக்தி என அனைத்தையும் பெற்றதோடு தேவர் தலைவனான இந்திரனின் நட்பையும் பெற்றார்.
      ஒருமுறை இந்திரனுக்காக அரக்கர்களுடன் போரிட்டு மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்ததற்குப் பரிசாக, முசுகுந்தன் விரும்பும் எதுவும் தரத் தயாராக இருந்தார் தேவேந்திரன்  பலமுறை தேவலோகம் செல்லும் பொழுதெல்லாம், தேவேந்திரன் "ஸோமாஸ்கந்த" மூர்த்தியை வழிபட்டு வருவதைக் காண்பார். ஸோஂமாஸ்கந்தன் என்றால் பார்வதி பரமேஸ்வரன் நடுவில் சிறு பாலகனாய் முருகன் வீற்றிருக்கும் அழகே! அது.. 
         இதுதான் சமயம் என்று அச்சிலைகளையே தனக்குப் பரிசளிக்க வேண்டினான். இதை சற்றும் எதிர்பாராத இந்திரனுக்கு, கொடுக்க மனமில்லாதாதாயினும் தன் உற்ற நண்பனுக்கு கொடுத்த வாக்கை மீறவும் விருப்பமில்லை. அதனால், அதுபோலவே இன்னும் 6 சிலைகளை உருவாக்கி அதில் சரியானதை தேர்வு செய்து கொள்ளச் செய்தான். ஆயினும் மனம் கலங்காமல், எம்பிரானைத் துதித்து, உண்மையானதை தனக்கு காட்டியருள பிரார்த்தனை செய்தார் சக்கரவர்த்தி.

        சிவனாரும் தன் சக்தியை உண்மையான சிலையினுள்  செலுத்தி,   'அஜபா' நடனம் ஆடிக் காண்பித்தருளினார். இந்திரனும் மகிழ்ந்து, முசுகுந்தனின் முற்பிறவிப் பலனை உணர்ந்து அனைத்து சிலைகளையும் பரிசளித்தான். 
     மகிழ்வோடு நாடு திரும்பிய முசுகுந்தனை, கந்தனின் திவ்ய அழகு வசீகரித்துக் கொண்டே இருந்தது. முருகப் பெருமானிடத்தில் அளவிலாத பக்தி மனத்தைப் பெருகச் செய்தது. 
        அச்சமயம், சூரபத்மனால், தோற்கடிக்கப்படு, அவமானத்தால், தலைமறைவாக இந்திராணியையும் பிரிந்து வாழ்ந்து துன்புற்றார் தேவேந்திரன்.

 சிவபிரானின் நெற்றிக்கண்ணிலிருந்து உதித்து கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதனால் கார்த்திகேயன் என புகழ் பெற்றார். தந்தையின் கட்டளைப்படி, முருகப்பெருமானும், அன்னை தந்தையின் ஆசியொடும், அன்னையிடமிருந்து   சக்திவேலைப் பெற்று.சூரபத்மனை வென்று, தேவலோகத்தை மீட்டு, திரும்பவும் இந்திரனை அரியணையில் அமர்த்தினார்  
               இத்தகைய மாபெரும் உதவி புரிந்து அருள் செய்த முருகப் பெருமானுக்கு நன்றியின் அடையாளமாக மிகச் சிறந்த பொருளை  காணிக்கையாக்கத் துடித்தார் தேவேந்திரன். எதைக் கொடுப்பது என்று யோசித்தவேளையில், நித்தம் முருகனையே நினைத்து உருகும் நம் மகள் 'தேவயானையையே" முருகனுக்கு மணமுடித்துக் கொடுப்போம் என யோசனை கூறினாள். இந்திராணி.
   இதுவே சரியான பரிசு என்று மகிழ்வோடு கூவி ஆனந்தித்து, அதற்கான தக்க ஏற்பாட்டையும் முறைப்படி செய்தார் இந்திரதேவன்.  'திருப்பரங்குன்றத்தில்' திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. . 


உடன் அவருக்கு தனது நண்பன் "முசுகுந்தன்" நினைவு வரவே, அவரையும் அழைத்து வரச் சொல்லி தேவகணங்களை அனுப்பினார்.
     தேவகணங்கள் கூறிய விஷயங்கள், முசுகுந்தனது காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது. எததனை காலங்களாக முருகப் பெருமானின் தரிசனத்திற்கு காத்திருந்தோம். இங்கே அருகிலேயே தரிசனம் தர எம்பெருமான் இருப்பதைக் கேட்டதும், அவருக்கான பரிசுப் பொருளோடு செல்லவேண்டும் என மனம் விழைந்தது. ஆயினும் இவை அனைத்துமே அவனருளியது. அம்மட்டில் ஐயனுக்கு அளிக்கவேண்டியது தூயமையான பக்தி உள்ளமே அன்றி வேறொன்றுமில்லை என மனம் தெளிந்து விரைந்து ஓடோடிச் சென்றார். 



                                      ஆனால், அவருக்கு முன்பாக   பல்லாயிரக்கணக்கனவர்கள்   எம்பெருமானின் திவ்ய தரிசனத்திற்காக காத்திருப்பதைக் கண்டு, தனக்கு எம்பெருமானின் தரிசனம் கிடைக்காதோ?! என ஐயமுற்று, முருகனின் நாமத்தை உச்சரித்தவாறே பக்தி பெருக்கோடு மனம் விம்மினார் முசுகுந்த சக்கரவர்த்தி.
  பக்தனின் மனம் அறிந்து, அனைவரையும் விலக்கி, முருகப் பெருமானே அவரை நாடி வந்து தரிசனம் தந்தார். ஐயனே! யான் செய்த பாக்கியம் எனக்கு இப்புவி வாழ்வு போதும் ஆட்கொள்வாய் அப்பனே! என அரற்றினார் சக்கரவர்த்தி. 



முருகப்பெருமானும் அவரை அன்புடன் நோக்கி அதற்கான காலம் இன்னும் கனியவில்லை முசுகுந்தா! இன்னும் உனக்கான பணிகள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் திறம்பட முடித்து, பெரும் புகழுடன் எம்மை வந்தடைவாய் என அருளினார்.  
ஐயனே! என் மனம் உன்னைக் கண்டதும், அரசாள்வதில் நாட்டம் செல்லவில்லை. ஆயினும் உன் கட்டளைப்படி நடக்க இயலாமல் போனால், நாட்டிற்கே கேடு விளைவிப்பதாக இருக்கும் என இறைஞ்சினார். கவலை கொள்ள வேண்டாம். வீரபாகு முதலான எனது படைத் தலைவர்கள் ஏழு பேர்கள், உனக்கு படைத் தலைவர்களாக இருந்து நாட்டை ஆள்வதில் உதவி புரிவர். 
    சூரபத்மன் அரக்கன் ஆனாலும் சிறந்த சிவபக்தன் ஆனதால், சூரபத்மனின் படைகளை நிர்மூலமாக்கிய பாவங்களும் அவர்களை விட்டு அகலவேண்டும் ஆதலால், அவர்கள் உம்முடன் இருந்து நாடாள்வதில் உதவி புரிந்து தங்கள் பாவங்களைக் கரைத்து அவர்களும் முக்தி பெறுவர் எனக் கூறியருளினார் முருகப் பெருமான்.


எப்பேர்ப்பட்ட பக்தி நெறி ஆனாலும், அது குருவருள் இல்லாமல் திருவருள் இல்லை என்பதை உணர்ந்தார் சக்கரவர்த்தி. குரு கடாக்ஷம் பெற்றால் தான் பக்தி முழுமையடையும் என்ற உண்மை உரைக்க, நேராக வசிஷ்ட மஹரிஷியிடம் விரைந்து, தனக்கு குருவாக விளங்கி உபதேசிக்க வேண்டும் என பணிந்து வணங்கி நின்றார் சக்கரவர்த்தி. 



வசிஷ்டரும் மனம் மகிழ்ந்து, திருமுருகனின் நாம மந்திர உபதேசம் செய்து, ஜபம், பூஜை செய்வதற்கான மந்திர வழிபாட்டையும் கூறி அருளினார். அவ்வண்ணமே தினம் பக்தி நெறி தவறாமல் நாட்டை ஆண்ட முசுகுந்த சக்கரவர்த்தி, பல்லாண்டுகள் சிறப்புற ஆட்சி செய்தபின், முருகன் திருவடி அடைந்தார். அங்ஙனமே வீரபாகு முதலான ஏழ்வர் படைத் தலைவர்களும், புவி வாழ்விலிருந்து முக்தி பெற்று முருகனடி சேர்ந்தார்கள்.

Sunday 7 November 2021

திருமுருகனின் முற்பிறப்புக் கதை.

 வரம் கொடுக்கும் சாமியே பிள்ளை வரம் கேட்ட கதை



தீபாவளி அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை  முதல் சஷ்டி வரை ஆறு நாட்கள் விழாவாக 'கந்த சஷ்டி' கொண்டாடப்படும்.  ஆறாம் நாளன்று 'சூரசம்ஹாரம்' நடைபெறும். அதற்கு அடுத்த நாளில் முருகப்பெருமானின் 'திருக்கல்யாண வைபவம் நடந்தேறுவது வழக்கம். 
இத்தகைய திரு நாளில்   முருகனது  முந்தைய பூர்வ அவதாரக் கதையை அறிந்து கொள்ளலாம். 
"திரிபுரா ரஹஸ்யம்"  என்ற கிரந்தத்தில் 'மஹாத்மிய காண்டத்தில்'   முருகனது முற்பிறப்பு பற்றிய புராணத் தகவல் உள்ளது.

    பிரம்மாவின் மானசீகப் புத்திரரான ஸனத்குமாரர் மஹாஞானி.     அகமும், புறமும் அனைத்துமே பரப்ரம்மம் என்ற ஞானம் கைவரப் பெற்றவராய் திகழ்ந்தார். ஒருமுறை அவர், தான் தேவ சேனாதிபதியாய் சூரனுடன் போரிடுவது போல் கனவு கண்டார். உடன் கனவு களைந்து தன் தந்தையான பிரம்மனிடம் அது பற்றி விளக்கம் கேட்டார். வேதத்தை கரைத்துக் குடித்தவனான நீ, போன பிராயத்தில் வேதம் கற்கும் பொழுது, வேதத்திற்கு அசுரர்களால் தீங்கு நேர்வதைக் கண்டு, அவர்களை எதிர்த்துப் போரிடவேண்டும் என்ற உத்வேகம் உன்னுள் எழுந்தது. 
       உத்தமமான ஞானிகள் அறிந்தோ, அறியாமலோ, கனவிலோ, நினைவிலோ எது ஒன்று பற்றி நினைத்தாலும் அது நடந்தே தீரும் என்பது காலத்தின் கட்டாயம். அதனால், இப்போர் நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உன்னால் நிகழ்த்தப்படும் என்று கூறினார். நன்மை தீமை என்ற நிலையைத் தாண்டி    அனைத்துமே பரப்ரம்மம் என்றாகிவிட்ட அவருக்கு, இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தன் தியானத்தை தொடர்ந்தார்.
             இப்படிப்பட்ட பேரறிவான பிரம்மனின் திவ்யக் குழந்தை, தனக்கும் குழந்தையாக அவதரிக்கவேண்டும் என்று ஆவல் கொண்டார் சிவபெருமான். அதனால் தன்னை அழைக்காமலேயே  தானே உமையம்மையுடன் அவருக்கு காட்சி கொடுத்தார். ஆனால், அப்பொழுதும் பரப்ரம்ம நிலையிலேயே வந்தவர்களை கண்டு கொள்ளாமல் தியான நிலையை தொடர்ந்தார். 
    இதனால் அவர்பால் சிவபிரானுக்கு மேலும் அன்பு பெருகியது. ஆயினும் சோதிக்க எண்ணி, அவரிடம் அதிதியாக வந்தவர்களை கவனியாமல் அலட்சியம் செய்கிறாய் என்பது போல் பொய்யாக கோபங்கொண்டார். நீர் வேறு, நான் வேறு அல்ல. அனைத்துமே பரப்ரம்ம ஸ்வரூபம் தான் என்று அவரிடமிருந்து அமைதியாக பதில் வந்தது. 

       சரி! அப்படியே இருக்கட்டும். நான் உனக்கு வரம் அளிக்கக் காத்திருக்கிறேன். என்ன வேண்டுமோ? கேள் என்று விடாப்பிடியாகக்  கேட்டார் சிவபிரான். அனைத்துமே பிரம்மம் என்று அறிந்துவிட்ட பின், வேறு தேவை என்ன இருக்கமுடியும்? உனக்குத் தான் தேவை இருப்பது போல் தெரிகிறது. என்ன வேண்டுமோ கேள். நான் உனக்கு வரம் தருகிறேன் என்றார்.


   அதற்காகவே காத்திருந்தது போல், ஸனத்குமாரா! நீ எனக்கு மகனாக அவதரிக்கவேண்டும் என்பதே என் விருப்பம் என்றார். அப்பொழுது, இந்த உரையாடலில் சிறிதும் கலந்து கொள்ளாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உமையம்மையை ஆழ்ந்து கவனித்தார் ஸனத்குமாரர். பின், சிவபெருமானைப் பார்த்து, கேட்காமல் யாருக்கும் வரம் அளிக்க இயலாது. நீ மட்டுமே என்னை மகனாக கேட்டாய். ஆகையால் உமையம்மை சம்பந்தம் இல்லாமல் என்னை எப்படி மகனாகப் பெறமுடியுமோ அப்படி பெற்றுக் கொள் என்றார்.   
 இதைக் கேட்டு, உடன் உமையம்மை பதறி, இருவரும் விரும்பி ஒன்றாகத் தானே வந்துள்ளோம். கணவன் கேட்பதும் மனைவியின் சார்பாகத் தானே. இதில் நான் தனித்துக் கேட்க என்ன இருக்கிறது? என்றாள். அவள் கூற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்தவராய், உன் கூற்று உண்மை தான். ஆயினும், பரப்ரம்ம நிலையிலிருந்து இறங்கி, திரும்பவும் கருவில் உதிக்க தனக்கு எண்ணமில்லை. அதை எப்படி சம்பந்தப்படுத்திக் கொள்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறி தன் தியானத்தை தொடர்ந்தார்.
image.png

        முன்பு ஒருமுறை 'பஸ்மாசுரன் எனும் அசுரன், சிவபெருமானை நோக்கி தவமிருந்து, தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் எரிந்து சாமபலாகி விடவேண்டும் என்ற வரம் பெற்றதோடு, அதை சோதிக்க எண்ணி, சிவன் தலையிலேயே கை வைக்க முனைந்தான். அதனால், சிவனார் உடன் அங்கிருந்து மறைந்து விட்டார். திடீரென்று, தன் பதியைக் காணாமல் தவித்த தேவி, பெருந்துக்கத்தினால், கரைந்து நீராக உருகிவிட்டாள். அதுவே சரவணப் பொய்கையானது.அத்ன்பின், சிவனார் மஹாவிஷ்ணுவின் துணையோடு, பஸ்மாசுரனை அழித்து கைலாயம் வரவும், உமையம்மை மீண்டும் உருப்பெற்றாள். ஆயினும் தன் பதிபக்திக்கு எடுத்துக் காட்டாக, சரவணப்பொய்கை அழியாமல் இருக்கட்டும் என்று அதை பாதுகாத்தது  தற்பொழுது நினைவுக்கு வந்தது. தந்து சரீரமே பொய்கை ஆனபடியால், சிவபிரானின் தேஜஸிலிருந்து நெருப்பாக வெளிவந்தபின், பொய்கையில் அதைத் தாங்கி, குழந்தையாக அதை உமையம்மை உருப் பெறச் செய்வது என்று தீர்மானித்தனர்.


     அவ்வண்ணமே, பின்னாளில் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த அத்தீக்கங்குகளை பிரம்மா கங்கையிடம் அதனை சரவணப் பொய்கையில் சேர்க்கும்படி கூற, தன்னாலேயே, இத்தீச்சுடரை தாங்க முடியவில்லையே இச்சிறு பொய்கையால் எப்படி இதை தாங்க இயலும் என வினவினாள் கங்கை.
  அதற்கு பிரம்மா. தேவியின் சரீரம் தான் இப்பொய்கை. அதனால் மட்டுமே இதைத் தாங்க இயலும் என்றார். இப்படி உருவானவரே முருகப்பெருமான்.
   இதற்கு தகுந்தாற்போல்  சூரபத்மனும் பிரம்மாவிடம், பெண் சம்பந்தமில்லாமல் உருவாகும் குழந்தையால் தான் தனக்கு மரணம் ஏற்படவேண்டும் என்ற வரம்கேட்டான். அப்படி ஒன்று நிகழ வாய்ப்பு இல்லை, அதனால் தனக்கு மரணமும் இல்லை என்று நினைத்தான். அவ்வண்ணமே திருமுருகனின் பிறப்பில் அன்னையின் நேரடி சம்பந்தமில்லாமல் இருந்தாலும், நெருப்பை கருவாக்கி அதை குழந்தையாக்கி, பின் தன் சக்தியினை வேலாக்கி குகனுக்கு அளிக்க அதைக் கொண்டே முருகப்பெருமானும்  சூரபத்மனின் உடலை இரு கூறுகளாக்கி, மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆட்கொள்ளக் காரணமாக இருந்தாள் அன்னை பார்வதி தேவி.


இந்த ஸ்கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு அடியேனின் இப்பதிவினை தாங்கள் தங்களது உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிர்ந்து எமக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.

                                             நன்றி
                                       

 வணக்கம்.

Thursday 4 November 2021

கேதாரகௌரி விரதம்

 
இன்றைய தீபாவளித் திரு நாளிலேயே "கேதாரகௌரி விரதமும்" அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. இது தம்பதி ஒற்றுமைக்காக பார்வதி தேவியாலேயே முதன் முதலில் கடைபிடிக்கப்பட்டு 'அர்த்தநாரியாக' காரணமான உன்னத விரதமாகும். ஒருமுறை தீவிர சிவபக்தரான முனிவர் ஒருவர், பார்வதி தேவியை விடுத்து சிவனை மட்டுமே வழிபட்டு வலம் வந்து வணங்கியது தேவியை சங்கடப்படுத்தியது. 




நித்தம் அவரது இச்செயலால் மனம் பொறாமல், இது தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிய அன்னை, பெண்மையின் பெருமையை அந்த முனிவர் உணரவேண்டும் என்று சிவனில் பாதியாக தான் ஆகவேண்டும் என 21 நாட்கள் நோன்பு நூற்று அதன் பலனாய் "அர்த்த நாரியாக" ஆக அதாவது சிவனில் பாதியாக ஆகும் வரம் பெற்றாள். அர்த்த என்றால் பாதி. நாரி என்றால் பெண். சிவனில் பாதியாக காற்றுகூட புக முடியாத அளவு நெருங்கி 'அம்மையப்பனாக' இருக்கும் இச்சமயம். அவர் தன்னையும் சேர்த்துத் தானே, வலம் வரமுடியும் என நினைத்தாள்.ஆனால் முனிவரோ, சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், வண்டாக உருமாறி தொப்புளின் வழியாக உடலை துளைத்துக் கொண்டு சிவனை மட்டும் சுற்றி வந்தார். வண்டாக உருமாறியதனால் "பிருங்கி முனிவர்" என பெயர் பெற்றார். 
             [ப்ருங்கி -வண்டு] 
           இதை சற்றும் எதிர்பாராத அன்னை, பெண்மையை மதியாத உனது ஆணவத்தால், தாயிடமிருந்து பெற்ற, சக்தியின் இருப்பிடமாகிய இரத்தம் சதையினை இழப்பாய் என சபிக்கவும். உடல் வலுவிழந்து தடுமாறினார். பக்தனின் நிலைக்கு மனமிரங்கி சிவபெருமான் வலுவான மூன்றாவது காலை அளித்து அருள் புரிந்ததோடு, சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்து கொள். சிவசக்தி வழிபாடே சிறந்தது என அறிவுரை கூறினார். 




உண்மையுணர்ந்த முனிவரும், அன்னையிடம் மனமுருகி மன்னிப்பு வேண்டினார். கருணையின் வடிவான அன்னையும் சினம் தணிந்து அவரை மன்னித்தருளினாள்.

Wednesday 3 November 2021

தீபாவளி திருநாள்.


 


தீபாவளி. ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து ஜோதிஸ்வரூபமான சிவபிரானுக்கு வழிபாடு செய்யும் திருநாளாகும். இத்திருநாளில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ஒன்றுதான்  நரக சதுர்த்தசி எனும் தீபாவளி

இரண்யாட்சன் எனும் அசுரன் இப்பூமியை அண்டவெளி ஆழ்கடலில் முழ்கடிக்க ,அப்பொழுது மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அவனை வென்று, பூதேவியை தன் மூக்கால் தாங்கினார். அப்பொழுது எம்பெருமானின் ஸ்பரிசத்தால் உருவானவன் 'பவுமன்'  ( பவுமன் என்றால் பூமாதேவியின் புதல்வன் மற்றும் பலம் பொருந்தியவன் என்று பொருள்). பவுமன் இறவா வரம் வேண்டிதவம் இருக்க, பிரம்மா, பிறப்பு என்றால் இறப்பு நிச்சயம் எனக் கூறவும், எந்த தாயும் தன் மகனை கொல்ல   நினைக்க மாட்டாள் என்பதால் தன் தாயின் கையால் தான் தன் மரணம் நிகழவேண்டும் என்ற வரம் வேண்டினான். இந்த வரத்தினால் ஏற்பட்ட  மமதையினால் நரனாக அதாவது மனிதனாக இருந்தும் அசுர குணம்  கொண்டு  அனைவரையும் துன்பறுத்தினான். இதனால் நரகாசுரன் என பெயர் பெற்றான். 
    இதனால், மஹாவிஷ்ணு தன் கிருஷ்ணா அவதாரத்தின் போது  பூமி தேவியை 'சத்யபாமாவாக" அவதரிக்கச் செய்து மணந்து கொண்டார். பின், தான் தனித்து போருக்கு செல்வதாகவும், பாமாவே தனக்கு தேரோட்டவேண்டும் என அழைத்து சென்றார். போரில் நரகாசுரனின் கணைக்கு தான் மயங்கி விழுவது போல் நடித்தார். இதனால் வெகுண்ட சத்யபாமா தானே போரிட்டு அவனை வதம் செய்து, நரகாசுரன் பெற்ற வரத்தை நிறைவேற்றினாள். 


   உண்மை விவரம் அறிந்து அன்னை சத்யபாமா வருந்தினாலும், நரகாசுரன் மனம் மகிழ்வோடு இந்த நாளை மக்கள் நரக சதுர்த்தசியாக தீபாவளி திருநாளாக கொண்டாடி இன்புறவேண்டும் என வேண்டினான். 
அதன்பின், தங்களது மகன் இறப்பிற்க்கு கிருஷ்ணனும் சத்யபாமாவும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து தலைமுழுகினர். இதனால் தான் அதையே பின்பற்றி  தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் ஏற்பட்டது