Sunday 21 November 2021

ஸோமவார சங்காபிஷேகம்.

 கார்த்திகை ஸோமவார        சங்காபிஷேகம். 




அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு சங்கினால் அபிஷேகம் செய்வது மிகுந்த விசேஷத்தைத் தரவல்லது.

 அதிலும் கார்த்திகை மாதத்தில் அனைத்து திங்கட்கிழமைகளிலும்    சிவாலயங்களில் " சங்காபிஷேகம்" 108, 1008 அல்லது ஒரு லட்சம் சங்கினால் அபிஷேகம் செய்வர். குறிப்பாக வலம்புரி சங்கே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கோடி இடம்புரி சங்குகளுக்கு இணையானது ஒரு வலம்புரி சங்காகும். 

              எதனால் இந்த சங்காபிஷேகம் சிறப்பானது                  தெரியுமா?

      கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும் கிருத்திகை நக்ஷத்திரமும் கூடுகின்ற வேளையில் சிவபெருமான் "ஜோதி ஸ்வரூபமாக" அதாவது அக்னிப் பிழம்பாக காட்சியளிக்கிறார் அல்லவா?! . அத்துடன் கார்த்திகை மாதம் முழுவதும் கோயில்களிலும் , இல்லங்களிலும் தீப ஒளியினாலேயே சிவனை நாம் ஆராதிக்கின்றோம். அதனால் அவரை குளிர்விக்கும் பொருட்டு, சங்காபிஷேகம் செய்கிறார்கள். 




        சந்திரன் பாற்கடலில் உதித்தவர். குளிர்ச்சி பொருந்தியவர். அவ்வண்ணமே பாற்கடலில் தோன்றிய சங்கினை மஹாவிஷ்ணு தன் திருக்கரங்களில் தாங்கி அலங்கரித்தார்.  கடலில் தோன்றும் இச்சங்கு குளிர்ச்சி பொருந்தியதும் கூட.   அதனால் சந்திரனுக்கு உகந்த நாளான திங்கட்கிழமையில் இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது. தேய்ந்து அழிய இருந்த சந்திரதேவனும் சிவனை பூஜித்தே வளர்ச்சி அடைந்ததோடு அவரது ஜடாமுடியை  அலங்கரிக்கும் பேற்றினையும் பெற்றவரல்லவா!
   சங்கினை "பவித்ரா பாத்ரம்" அதாவது, புனிதமான பாத்திரம் என்றே  குறிப்பிடுகின்றனர். ஆம்! சங்கு பஞ்ச பூதங்களாலும்  தன் நிலை மாறுவது இல்லை. 




                          ஓங்கார நாதம்

சங்கை தீயினால் சுட்டாலும் வெண்மை தரும் என்பது ஆன்றோர் வாக்கு. சங்கின் துவாரத்தின் வழியாக காற்றைச் செலுத்த இனிமையான ஓசையை எழுப்பும். வலம்புரிசங்கை காதில் வைத்துக் கேட்கும் போது "ஓம்" எனும் நாதம் ஒலிக்கும்.     பூஜையிலும் சங்கை ஊதி வழிபாடு  பழங்காலம் தொட்டே வழக்கில் உள்ளது. அதன் நாதம் நம் மனஇருளை பயத்தை போக்க வல்லது. மனோபலத்தை அளிக்கவல்லது.



 அதனால் சந்திரனின் அம்சமாக கருதப்படும் சங்கினில் தீர்த்தம் நிரப்பி, சந்தனம் குங்குமம் இட்டு ருத்ராக்ஷம் வைத்து துளசியால் அர்ச்சனை செய்து பின் அந்த தீர்த்தத்தால் சிவனுக்கு அபிஷேகம் நிகழ்த்தப்படும். அந்த அபிஷேக நீரை நாம் பருகுவதனால் நம் உடலில் சகல வியாதிகளும் குணமடையும் என்பது திண்ணம். 





சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்றும் சூரியனின் ஆயிரக்கணக்கான கிரணங்களுள் ஒன்றான சுஷ்முனா அல்லது சுஷ்மா எனும் ஒளிக்கீற்றினால் சந்திரன் ஒளி பெறுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகையினால், சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூரியனின் காயத்ரி மந்திரத்தையே சொல்லி பூஜிக்க வேண்டும் என்ற நியதியையும் சாஸ்திரங்கள் வகுக்கின்றன. சிறப்புவாய்ந்த கார்த்திகை மாதத்து சங்கு அபிஷேகம் காணப் பெறுவது பெரும்பேற்றினை அருளக்கூடியது. சங்கு அபிஷேகம் காண்போம்! சங்கடங்கள் நீங்கப் பெறுவோம்!

திருக்கடையூர் சங்காபிஷேகம் மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிவபெருமான் மார்க்கண்டேயரால் அபிஷேகம் செய்யப்பட்டவர். இங்கு சங்காபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தீர்த்தத்தில் 100க்கும் மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த அபிஷேக தீர்த்தம் பல நோய்களைத் தீர்க்கும் சக்தி உடையது



மனோகாரகனான சந்திரன் வாழ்வில் இன்பத்தை அளிக்க வல்லவன் ஆதலால், இந்த சங்காபிஷேகத்தில் நாம் கலந்து கொள்வதால் நமது சகல பாவங்களும் விலகி நன்மை மலரும் என்பது உறுதி.

4 comments:

  1. Very useful information. Nice. Tku

    ReplyDelete
  2. திருமதி வசந்தி பாலு மேடம்
    தங்கள் மூலம் வலம்புரி சங்கின் பெருமையையும், சங்கு மூலமாக கிடைக்கும் நற்பலன்களையும் அறிந்தோம்.
    இனி நாளை முதல் கார்த்திகை மாதம் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் தாங்கள் கூறியபடி அபிஷேகப் பிரியரான சிவபெருமானின் ஆலயத்துக்கு சென்று அங்கு நடைபெறும் சங்காபிஷேகம் கண்டு தரிசிப்போம்.
    அபிஷேக தீர்த்தத்தை பருகி நற்பலன் பெறுவோம்.
    நல் வழி காட்டும் தங்களுக்கு நன்றி மேடம் !

    - V. Sugavanam

    ReplyDelete
  3. மிக்க நன்றி. சந்தோஷம். ஓம் நமசிவாய வாழ்க!!!

    ReplyDelete
  4. மிக்க நன்றி வசந்தி

    ReplyDelete