Thursday 4 November 2021

கேதாரகௌரி விரதம்

 
இன்றைய தீபாவளித் திரு நாளிலேயே "கேதாரகௌரி விரதமும்" அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. இது தம்பதி ஒற்றுமைக்காக பார்வதி தேவியாலேயே முதன் முதலில் கடைபிடிக்கப்பட்டு 'அர்த்தநாரியாக' காரணமான உன்னத விரதமாகும். ஒருமுறை தீவிர சிவபக்தரான முனிவர் ஒருவர், பார்வதி தேவியை விடுத்து சிவனை மட்டுமே வழிபட்டு வலம் வந்து வணங்கியது தேவியை சங்கடப்படுத்தியது. 




நித்தம் அவரது இச்செயலால் மனம் பொறாமல், இது தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிய அன்னை, பெண்மையின் பெருமையை அந்த முனிவர் உணரவேண்டும் என்று சிவனில் பாதியாக தான் ஆகவேண்டும் என 21 நாட்கள் நோன்பு நூற்று அதன் பலனாய் "அர்த்த நாரியாக" ஆக அதாவது சிவனில் பாதியாக ஆகும் வரம் பெற்றாள். அர்த்த என்றால் பாதி. நாரி என்றால் பெண். சிவனில் பாதியாக காற்றுகூட புக முடியாத அளவு நெருங்கி 'அம்மையப்பனாக' இருக்கும் இச்சமயம். அவர் தன்னையும் சேர்த்துத் தானே, வலம் வரமுடியும் என நினைத்தாள்.ஆனால் முனிவரோ, சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், வண்டாக உருமாறி தொப்புளின் வழியாக உடலை துளைத்துக் கொண்டு சிவனை மட்டும் சுற்றி வந்தார். வண்டாக உருமாறியதனால் "பிருங்கி முனிவர்" என பெயர் பெற்றார். 
             [ப்ருங்கி -வண்டு] 
           இதை சற்றும் எதிர்பாராத அன்னை, பெண்மையை மதியாத உனது ஆணவத்தால், தாயிடமிருந்து பெற்ற, சக்தியின் இருப்பிடமாகிய இரத்தம் சதையினை இழப்பாய் என சபிக்கவும். உடல் வலுவிழந்து தடுமாறினார். பக்தனின் நிலைக்கு மனமிரங்கி சிவபெருமான் வலுவான மூன்றாவது காலை அளித்து அருள் புரிந்ததோடு, சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்து கொள். சிவசக்தி வழிபாடே சிறந்தது என அறிவுரை கூறினார். 




உண்மையுணர்ந்த முனிவரும், அன்னையிடம் மனமுருகி மன்னிப்பு வேண்டினார். கருணையின் வடிவான அன்னையும் சினம் தணிந்து அவரை மன்னித்தருளினாள்.

No comments:

Post a Comment