Tuesday 16 November 2021

கார்த்திகை தீபத்திருவிழா. 2021



 

   அக்னி ஸ்தலமாகிய 'திருவ்ண்ணாமலையில்" மிகுந்த விசேஷமாகக் கொண்டாடப்படும் தீபத்திருவிழா. அத்திரு நாளில் மக்களும் தங்கள் இல்லங்களில் வீடு முழுவதும் விதவிதமான அகல் விளக்கு முதல் பல அழகிய வேலைப்பாடு அமைந்த விளக்குகளைக் கொண்டும் தீபம் ஏற்றி வழிபடுவர்.

பரணி தீபத்தன்று அதிகாலை 4 மணியளவில் கற்பூரம் கொண்டு கருவறை முன் தீபம் ஏற்றி, தீபாராதனை காட்டியபின், உண்ணாமுலை அம்மன் சன்னதியிலும் ,நந்தி முன்பும் "பஞ்சமுக தீபம்" ஏற்றி, கடைசியாக பைரவர் முன்பு தீபம் ஏற்றுவார்கள். வெள்ளிக்கிழமை நவ. 19 ஆம் தேதியன்று கார்த்திகை தீபத் திருவிழா. 

      கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நக்ஷத்திரத்தை  ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவம் திருவண்ணாமலையில்  பத்து நாட்கள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. ஊர்வலம், தெப்ப உற்சவம் மறும் சண்டிகேஸ்வரர் உற்சவம் என விமரிசையாக  நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். 
     மாணிக்கவாசகரது, "ஏகன் அநேகன்" என்ற ஈசனின் திருவாசக தத்துவ உரைக்கேற்ப  கார்த்திகை தீபத்தன்று ஒரு விளக்கை ஏற்றி, அதிலிருந்து ஐந்து தீபங்களை ஏற்றி பூஜை செய்த பின், ஐந்தையும் ஒன்றாக்கி அண்ணமலையார் முன்பு வைத்து விடுவார்கள். இது ஒன்று பலவாகி, பலதும் திரும்பி ஒன்றினுள் அடங்கி விடும் தத்துவத்தை விளக்குகிறது. அதாவது சிவனே பல வடிவங்களாக அருள் புரிகிறார்.







இந்த கார்த்திகை திரு நாளில் மாலைப் பொழுதில் பஞ்சமூர்த்திகள் தீபமண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களோடு  வருடத்திற்க்கொரு முறை அன்றைய தினத்தில் மட்டுமே அர்த்த நாரீஸ்வர உற்சவ மூர்த்தமும், பக்தர்களுக்கு காட்சி தருவதற்கு "தீப மண்டபத்தில்'' எழுந்தருளப்படுகிறது. 
அதன்பின் தீப மண்டபத்தில் இவர்களுக்கு முன்பாக "அகண்ட தீபம்" ஏற்றப்படும் அதே வேளையில் திருவண்ணாமலையின் உச்சியிலும் "மகாதீபம்" ஏற்றப்படுகிறது. 



கார்த்திகை தீபத் திரு விழா தோன்றிய காரணமான புராணக் கதை:
               இவ்வுலகைப் படைக்கும் தொழில் செய்வதனால், தானே பெரியவன் என பிரம்மன் வாதிட, படைத்தால் மட்டும் போதுமா? அதைக் காக்கும் திறன் வேண்டாமா?. நீர் படைக்கும் உயிர்களை யாமல்ல்வோ பாதுகாக்கிறேன்! அதனால் நானே உன்னை விடப் பெரியவன் என தன் வாதத்தை முன்மொழிந்தார்! விஷ்ணு  பகவான்.  




     அச்சமயம், அவர்கள் முன் ஒளிப் பிழம்பாக பெரிய ஜோதி தோன்றி தகதகவென எரிந்தது. உடன் இவர்கள்  அடிமுடியைக்  கண்டு யார் முதலில் வருகின்றனரோ? அவரே பெரியவர் என தீர்மானித்து, அவ்வண்ணமே, திருமால் பன்றி உருவெடுத்து, மண்ணை அகழ்ந்து தோண்டியவாறு, ஒளிப்பிழம்பின் முடிவினைக் காணச்சென்றார். அதுபோல் பிரம்மனும், அன்னப் பறவையின் வடிவெடுத்து வான் நோக்கி பற்ந்து ஒளிப் பிழம்பின்  முடியினைக்  காணச் சென்றார். அவரால் நெடு நாட்கள் தன் பயணத்தை தொடர முடியாமல் மிகவும் சோர்வுற்ற சமயம், மேலிருந்து தாழம்பூ ஒன்று கீழ் நோக்கி வருவதைக் கண்டு, 
    இந்த ஒளிப் பிழம்பு யார்? நீ எங்கிருந்து வருகிறாய்? 
என அதனிடம் வினவினார்  அதற்கு தாழம்பூ, இந்த ஜோதி சிவபெருமான் ஆவார். நான் அவரது தலையிலிருந்து  நெடு நாட்களாக கீழே விழுந்து கொண்டிருக்கிறேன். இன்னும் என் பயணம் முடிந்தபாடில்லை எனக் கூறியது. அப்படியானால் நீ எனக்கு ஒரு உதவி செய். நான் சிவனின் முடியை கண்டுவிட்டதாக விஷ்ணுவிடம் எனக்காக பொய் சாட்சிக் கூறக் கேட்டுக் கொண்டு, அதனுடன் திரும்பி வந்தார்.


ஆனால் மஹாவிஷ்ணு  தன்னால் தீபத்தின் அடியினை காணமுடியவில்லை  என்பதை பிரம்மனிடம் ஒப்புக் கொண்டார். உடன் பிரம்மன், விஷ்ணுவை கேலி செய்து அவமதித்து, நீ எனக்கு சிறு குழந்தைக்கு ஈடாவாய்! தெரியுமா? என எள்ளி நகையாடியதும் அல்லாமல், இங்கே பார். இஜ்ஜோதியானது சிவனாரே ஆவார். நான் அவரைக் கண்டு விட்டேன். இதற்கு சாட்சி இந்த தாழம்பூவே எனக் கூற, அதுவும் ஆமோதித்தது.   
    உடன், சிவபிரான் அங்கு தோன்றி, பொய்யுரை கூறியதுமில்லாமல், விஷ்ணுவை அவமதித்து எள்ளி நகைத்தன் காரணமாக, பூவுலகில் உனக்கு தனி ஆலயம் கிடையாது. அத்துடன் 'பத்ம கல்பத்தில்' மஹாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிறப்பாய் எனக் கூறி, தாழம்பூவைப் பார்த்து, பொய் சாட்சி சொன்ன குற்றத்திற்காக, நீ எனது பூஜை வழிபாட்டிற்கு உதவ மாட்டாய் என கூறினார்.
தங்கள் தவறுணர்ந்து பிரம்மனும் தாழம்பூவும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கவும், மனமிரங்கிய ஈசன் உத்திரகோச மங்கை எனும் ஊரில்  தன் பக்தைக்காக அப்புண்ணிய பூமியில் அவதரிக்க இருப்பதாகவும், அச்சமயம் பயன்படும்படியான வரத்தை அருளினார். 
   தன் அடியைக் காண இயலாததால் மஹாவிஷ்ணுவிடம் நீர் "சிறியவர்" என அழைக்கப்படுவாய் என்று கூறவும், பிரம்மன் தனக்கான மக்கள் வழிபாட்டிற்க்கான வரத்தை அருளும்படி கேட்கவும், ஈசனும், நாம் மூவரும் இணைந்த சிவலிங்கமாக ஆகலாம் எனக் கூறி, அடிப்பகுதி, பிரம்மனாகவும், நடுப்பகுதி, திருமாலாகவும், மேல்பாகம் ஈசனாகவும் அமைந்த சிவலிங்கம் தோன்றியது. 
  சிவலிங்கத்தின் பின்புறம் அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் உண்ணாமுலையுடன் இணைந்த கோலத்துடனும் அருள்பாலிக்கிறார். 
இறைவனின் திருவடிகளை சரணம் எனப் பணிந்தால் என்றும் நன்மையே பயக்கும். பணிவே உயர்வைத் தரும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.


3 comments: