Sunday 7 November 2021

திருமுருகனின் முற்பிறப்புக் கதை.

 வரம் கொடுக்கும் சாமியே பிள்ளை வரம் கேட்ட கதை



தீபாவளி அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை  முதல் சஷ்டி வரை ஆறு நாட்கள் விழாவாக 'கந்த சஷ்டி' கொண்டாடப்படும்.  ஆறாம் நாளன்று 'சூரசம்ஹாரம்' நடைபெறும். அதற்கு அடுத்த நாளில் முருகப்பெருமானின் 'திருக்கல்யாண வைபவம் நடந்தேறுவது வழக்கம். 
இத்தகைய திரு நாளில்   முருகனது  முந்தைய பூர்வ அவதாரக் கதையை அறிந்து கொள்ளலாம். 
"திரிபுரா ரஹஸ்யம்"  என்ற கிரந்தத்தில் 'மஹாத்மிய காண்டத்தில்'   முருகனது முற்பிறப்பு பற்றிய புராணத் தகவல் உள்ளது.

    பிரம்மாவின் மானசீகப் புத்திரரான ஸனத்குமாரர் மஹாஞானி.     அகமும், புறமும் அனைத்துமே பரப்ரம்மம் என்ற ஞானம் கைவரப் பெற்றவராய் திகழ்ந்தார். ஒருமுறை அவர், தான் தேவ சேனாதிபதியாய் சூரனுடன் போரிடுவது போல் கனவு கண்டார். உடன் கனவு களைந்து தன் தந்தையான பிரம்மனிடம் அது பற்றி விளக்கம் கேட்டார். வேதத்தை கரைத்துக் குடித்தவனான நீ, போன பிராயத்தில் வேதம் கற்கும் பொழுது, வேதத்திற்கு அசுரர்களால் தீங்கு நேர்வதைக் கண்டு, அவர்களை எதிர்த்துப் போரிடவேண்டும் என்ற உத்வேகம் உன்னுள் எழுந்தது. 
       உத்தமமான ஞானிகள் அறிந்தோ, அறியாமலோ, கனவிலோ, நினைவிலோ எது ஒன்று பற்றி நினைத்தாலும் அது நடந்தே தீரும் என்பது காலத்தின் கட்டாயம். அதனால், இப்போர் நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உன்னால் நிகழ்த்தப்படும் என்று கூறினார். நன்மை தீமை என்ற நிலையைத் தாண்டி    அனைத்துமே பரப்ரம்மம் என்றாகிவிட்ட அவருக்கு, இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தன் தியானத்தை தொடர்ந்தார்.
             இப்படிப்பட்ட பேரறிவான பிரம்மனின் திவ்யக் குழந்தை, தனக்கும் குழந்தையாக அவதரிக்கவேண்டும் என்று ஆவல் கொண்டார் சிவபெருமான். அதனால் தன்னை அழைக்காமலேயே  தானே உமையம்மையுடன் அவருக்கு காட்சி கொடுத்தார். ஆனால், அப்பொழுதும் பரப்ரம்ம நிலையிலேயே வந்தவர்களை கண்டு கொள்ளாமல் தியான நிலையை தொடர்ந்தார். 
    இதனால் அவர்பால் சிவபிரானுக்கு மேலும் அன்பு பெருகியது. ஆயினும் சோதிக்க எண்ணி, அவரிடம் அதிதியாக வந்தவர்களை கவனியாமல் அலட்சியம் செய்கிறாய் என்பது போல் பொய்யாக கோபங்கொண்டார். நீர் வேறு, நான் வேறு அல்ல. அனைத்துமே பரப்ரம்ம ஸ்வரூபம் தான் என்று அவரிடமிருந்து அமைதியாக பதில் வந்தது. 

       சரி! அப்படியே இருக்கட்டும். நான் உனக்கு வரம் அளிக்கக் காத்திருக்கிறேன். என்ன வேண்டுமோ? கேள் என்று விடாப்பிடியாகக்  கேட்டார் சிவபிரான். அனைத்துமே பிரம்மம் என்று அறிந்துவிட்ட பின், வேறு தேவை என்ன இருக்கமுடியும்? உனக்குத் தான் தேவை இருப்பது போல் தெரிகிறது. என்ன வேண்டுமோ கேள். நான் உனக்கு வரம் தருகிறேன் என்றார்.


   அதற்காகவே காத்திருந்தது போல், ஸனத்குமாரா! நீ எனக்கு மகனாக அவதரிக்கவேண்டும் என்பதே என் விருப்பம் என்றார். அப்பொழுது, இந்த உரையாடலில் சிறிதும் கலந்து கொள்ளாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உமையம்மையை ஆழ்ந்து கவனித்தார் ஸனத்குமாரர். பின், சிவபெருமானைப் பார்த்து, கேட்காமல் யாருக்கும் வரம் அளிக்க இயலாது. நீ மட்டுமே என்னை மகனாக கேட்டாய். ஆகையால் உமையம்மை சம்பந்தம் இல்லாமல் என்னை எப்படி மகனாகப் பெறமுடியுமோ அப்படி பெற்றுக் கொள் என்றார்.   
 இதைக் கேட்டு, உடன் உமையம்மை பதறி, இருவரும் விரும்பி ஒன்றாகத் தானே வந்துள்ளோம். கணவன் கேட்பதும் மனைவியின் சார்பாகத் தானே. இதில் நான் தனித்துக் கேட்க என்ன இருக்கிறது? என்றாள். அவள் கூற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்தவராய், உன் கூற்று உண்மை தான். ஆயினும், பரப்ரம்ம நிலையிலிருந்து இறங்கி, திரும்பவும் கருவில் உதிக்க தனக்கு எண்ணமில்லை. அதை எப்படி சம்பந்தப்படுத்திக் கொள்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறி தன் தியானத்தை தொடர்ந்தார்.
image.png

        முன்பு ஒருமுறை 'பஸ்மாசுரன் எனும் அசுரன், சிவபெருமானை நோக்கி தவமிருந்து, தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் எரிந்து சாமபலாகி விடவேண்டும் என்ற வரம் பெற்றதோடு, அதை சோதிக்க எண்ணி, சிவன் தலையிலேயே கை வைக்க முனைந்தான். அதனால், சிவனார் உடன் அங்கிருந்து மறைந்து விட்டார். திடீரென்று, தன் பதியைக் காணாமல் தவித்த தேவி, பெருந்துக்கத்தினால், கரைந்து நீராக உருகிவிட்டாள். அதுவே சரவணப் பொய்கையானது.அத்ன்பின், சிவனார் மஹாவிஷ்ணுவின் துணையோடு, பஸ்மாசுரனை அழித்து கைலாயம் வரவும், உமையம்மை மீண்டும் உருப்பெற்றாள். ஆயினும் தன் பதிபக்திக்கு எடுத்துக் காட்டாக, சரவணப்பொய்கை அழியாமல் இருக்கட்டும் என்று அதை பாதுகாத்தது  தற்பொழுது நினைவுக்கு வந்தது. தந்து சரீரமே பொய்கை ஆனபடியால், சிவபிரானின் தேஜஸிலிருந்து நெருப்பாக வெளிவந்தபின், பொய்கையில் அதைத் தாங்கி, குழந்தையாக அதை உமையம்மை உருப் பெறச் செய்வது என்று தீர்மானித்தனர்.


     அவ்வண்ணமே, பின்னாளில் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த அத்தீக்கங்குகளை பிரம்மா கங்கையிடம் அதனை சரவணப் பொய்கையில் சேர்க்கும்படி கூற, தன்னாலேயே, இத்தீச்சுடரை தாங்க முடியவில்லையே இச்சிறு பொய்கையால் எப்படி இதை தாங்க இயலும் என வினவினாள் கங்கை.
  அதற்கு பிரம்மா. தேவியின் சரீரம் தான் இப்பொய்கை. அதனால் மட்டுமே இதைத் தாங்க இயலும் என்றார். இப்படி உருவானவரே முருகப்பெருமான்.
   இதற்கு தகுந்தாற்போல்  சூரபத்மனும் பிரம்மாவிடம், பெண் சம்பந்தமில்லாமல் உருவாகும் குழந்தையால் தான் தனக்கு மரணம் ஏற்படவேண்டும் என்ற வரம்கேட்டான். அப்படி ஒன்று நிகழ வாய்ப்பு இல்லை, அதனால் தனக்கு மரணமும் இல்லை என்று நினைத்தான். அவ்வண்ணமே திருமுருகனின் பிறப்பில் அன்னையின் நேரடி சம்பந்தமில்லாமல் இருந்தாலும், நெருப்பை கருவாக்கி அதை குழந்தையாக்கி, பின் தன் சக்தியினை வேலாக்கி குகனுக்கு அளிக்க அதைக் கொண்டே முருகப்பெருமானும்  சூரபத்மனின் உடலை இரு கூறுகளாக்கி, மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆட்கொள்ளக் காரணமாக இருந்தாள் அன்னை பார்வதி தேவி.


இந்த ஸ்கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு அடியேனின் இப்பதிவினை தாங்கள் தங்களது உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிர்ந்து எமக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.

                                             நன்றி
                                       

 வணக்கம்.

1 comment:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்
    கந்த சஷ்டி 6 நாட்கள் நடக்கும் என்றும்
    முருகனின் முற்பிறவி பற்றியும் தெரிந்து கொண்டோம்.

    நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete