Friday 26 November 2021

காலபைரவாஷ்டமி மற்றும் வைக்கத்தஷ்டமி

காலபைரவாஷ்டமி


 சிவபெருமான் உருவெடுத்த பல்வேறு  அவதார வடிவங்களில் முதலில் தோன்றியது சொர்ணபைரவ மூர்த்தியே.. அந்த சொர்ண பைரவரிடமிருந்து எட்டு பைரவர்கள், பின் ஒவ்வொரு பைரவரும் எட்டு எட்டு பைரவ வடிவமாக 64 வித   பைரவ மூர்த்திகள் வெளிப்பட்டன. இவர் சிவனைப் போலவே தலையில் பிறையுடன் கூடிய ஜடாமகுடமும், நாகத்தை பூணூல் போன்று அணிந்தும், பன்னிரு கைகளில் பாசம், அங்குசம் இன்னபிற ஆயுதங்கள் தாங்கியும்  நிர்வாண கோலத்துடனும் அருள் பாலிக்கிறார். 




பைரவரது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை 12 ராசிகளும் முறையே மேஷம் முதல் மீனம் வரை இடம் பெற்றுள்ளதாக கூறுவர். 

பைரவர், சனி பகவானின் குருவானதால் இவரை வழிபடுவதன் மூலம் சனி தோஷத்தால் ஏற்படும் தாக்கம் குறையும். தேய்பிறை அஷ்டமி தினமே இவரை வழிபட உகந்தது. அதிலும்   ருத்ராஷ்டமி   எனப்படும் கார்த்திகை மாத அஷ்டமியே 'மஹாதேவாஷ்டமி' ஆகும்.

ஒவ்வொரு மாத அஷ்டமிக்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு. நவம்பர் 27 . 2021 சனிக்கிழமை கார்த்திகை மாத காலபைரவாஷ்டமி,  மஹாதேவாஷ்டமி விசேஷமானதாகும்.

                                வியாக்ரபாதர் 

  மழன் முனிவன், தன் தந்தையான மத்யந்தன முனிவரிடம், சிவபூஜை ஒன்றே முக்தி அளிக்கக்கூடியது என்பதை கேட்டறிந்து, வேறு சிந்தனை ஏதுமின்றி வாழ்நாள் குறிக்கோளாக பக்தியுடன் சிவபூஜைக்காக அன்றலர்ந்த பூக்களைச் சேகரித்தார். அதில்   வாடிய    பூக்களும், சில இதழ்கள் உதிர்ந்த பூக்களும் இடம் பெற்றிருந்தது அவருக்கு வருத்தத்தை அளித்தது. அதனால், சிவபிரானிடம் வண்டுகள்   பூக்களின்  தேனை நுகர்வதற்கு முன்பாகவும், மரத்திலிருந்து உதிர்வதற்கு முன்பும் அதிகாலையில் பறிப்பதற்காக மரத்தின் உச்சியில் வழுக்காமல் ஏறுவதற்கு வசதியாக புலிக்காலையும் கைகளில் புலியினது நகம் போன்றும், இருளிலும் பார்க்கும்  வண்ணம் புலியின் கண்களையும் பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக மழமுனிவர் வியாக்ர பாதர்  அதாவது புலிப்பாதர் என அழைக்கப்பட்டார்.

வைக்கம்




      அதுசமயம், 'கரன்' என்பவன் அசுரகுலத்தில் பிறந்தாலும், அக்குணம் சிறிதுமின்றி, முக்தி வேண்டி சிவபிரானைக் குறித்து  கடுந்தவம் இருந்தான். அவனது பக்தியில் மகிழ்ந்து எம்பிரானும், மூன்று லிங்கங்களைக் கொடுத்து அதை தக்க இடத்தில்  பிரதிஷ்டை  செய்து பூஜித்து, பின் முக்தி பெறுவாயாக ! என வாழ்த்தியுருளினார். பின் புலிப்பாதரையும் அவனைத் தொடரும் படி அனுப்பினார். வியாக்ரபாதரும் கரன் அறியாமல் அவனை பின்தொடர்ந்து சென்றார். கரன் அசுரனும் வலக்கை, இடக்கை மற்றும் தனது வாய்க்குள்ளும்  தாங்கி மூன்று லிங்கங்களையும் எடுத்துச்  சென்றான்  வழியில் களைப்பு மிகுதியால் வலக்கையில் இருந்த லிங்கத்தை கீழே வைத்தான். ஆசுவாசப்படுத்திக் கொண்டபின், திரும்பவும் அந்த லிங்கத்தை அவனால் எடுக்க இயலவில்லை. 

              ஏற்றமனூர் 



             திகைத்து நின்ற வேளையில், தன் பின்னே வியாக்ரபாதர் இருப்பதைக் கண்டு, அவரிடம்  அந்த லிங்கத்தை பூஜிக்க வேண்டுமாய்   பணிவுடன்  விண்ணப்பித்துக் கொண்டு, மற்ற இரு லிங்கங்களுடன் தன் பயணத்தை தொடர்ந்தான். வியாக்ரபாதரும் மகிழ்வுடன் சிவபூஜை செய்து வந்தார். சிவபிரான் அவருக்கு   காட்சி  அளித்த இடமே வியாக்ரபாதர் மேடை எனப்பட்டது. கரனால் சிவலிங்கம் வைக்கப்பட்ட இடம் என்பதே காலப்போக்கில் சிறிது சிறிதாக மருவி 'வைக்கம்' என்ற பெயர் நிலைத்துவிட்டது. 

                             மஹாதேவர்



                          கடித்துருத்தி





அதன்பின், கரன் அசுரன்,   கோட்டயம் அருகில், ஏற்றமானூர் [தற்பொழுது எட்டுமனூர்] என்ற ஊரில் மேற்கு நோக்கியும், வாய்க்குள்  இருந்த லிங்கத்தை 'கடித்துருத்தியில் கிழக்கு நோக்கியும்' பிரதிஷ்டை செய்து பூஜித்து முக்தி பெற்றான். வாயில் வைத்து கடித்து உருத்தி வந்ததால்  'கடித்துருத்தி' எனப்பெயர் பெற்றது. இந்த மூன்று லிங்கங்களின் பெயரும் "மஹாதேவர்" என்பதாகும். 
கார்த்திகை மஹாதேவாஷ்டமி யன்று உச்சி காலத்திற்க்குள், இந்த மூன்று 'மஹாதேவரையும்' தரிசிக்க முக்தி நிச்சயம் .


பின்னாளில், மஹாவிஷ்ணுவின் அவதாரமான, பரசுராமர் தன் அவதார நோக்கம் நிறைவேறியதும் அவர் வென்ற    பூமி அனைத்தையும் தானமாக கொடுத்தபின், தன் தவ வாழ்விற்கான இடத்தை தேடி யோக நிஷ்டையின் மூலம் ஆகாயமார்க்கமாகச் செல்லும் போது இந்த வைக்கத்தின் அருகில் வரும் பொழுது கருடன் குரலெடுத்து கத்தவும், அப்பகுதி அவரை ஆகர்ஷிக்கவும், 
கீழே நீரில் பாதி மூழ்கிய  நிலையில் நாவல் பழ   நிறத்தில் மின்னிய சிவலிங்கம் அவர் கண்களில் தட்டுப்பட, இந்த வைக்கம் பகுதியில்  இறங்கி, உடன் மேடை அமைத்து அங்கு அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.  

7 comments:

  1. Very useful information.. needs high appreciation..

    ReplyDelete
  2. மிக்க நன்றி. 😄😁🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. திருமதி வசந்தி பாலு மேடம்
    நன்றி மேடம்.
    நாளை சனிக்கிழமை (27.11.21) கால பைரவாஷ்டமி, மஹாதேவாஷ்டமி முன்னிட்டு பைரவரை தரிசித்து சனி தோஷம் ஏதேனும் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்து கொள்கிறோம்.

    வியாக்ரபாதர் புராணத்தையும் கரன் எனும் நல்ல அசுரன் புராணத்தையும் அதன் மூலம் அந்த மகாதேவர் எனும் பெயர் கொண்ட மூன்று லிங்கங்கள் உள்ள க்ஷேத்ரங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்.
    நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete
  4. How you say SwarnaAkarshana Bhairava is the first Bhairava Avatar of Siva?

    ReplyDelete
    Replies
    1. உயர்திரு ரமேஷ் அவர்களுக்கு,            வணக்கம். தங்களின் இத்தகைய கேள்விக்கு ஈசனின் அருளோடு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.அந்தகாசுரன்  உலகம் முழுவதையும் இருளாக்கி ஆட்சி புரிந்தான். எல்லை மீறிய அவனது அட்டகாசத்தினால் அல்லலுற்ற தேவர்கள் சிவபெருமானை சரண் அடைந்தார்கள் அல்லவா?அது சமயம் சிவபிரான், பைரவரை உருவாக்கினார். ஆயிரம் சூரிய கோடி தேஜஸுடன், தகதகவென தங்கம் போல் ஜொலித்தவாறு பைரவர் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இவர் அனைத்தையும் ஆகர்ஷிக்கவும் அதாவது தன்னுள் ஈர்த்தும் வெளிப்படுத்தும் தன்மையதாகவும் விளங்கியதாகக் கூறப்படுகிறது. இவரிடமிருந்து தோன்றிய ஒளியால், இருள் நீக்கி உலகைப் பிரகாசிக்கச் செய்தார் என்றும், நவகிரகங்களில் "சூரியதேவனுக்கு" அதிபதியாக அல்லது இவரது உபதேவதையாக சூரியன் என கூறப்படுகிறது. இதுதவிர, இன்னும்சில மேற்கோள்கள் மூலம் நான் ஆராய்ந்து அறிந்து உணர்ந்ததை, [அல்லது ஊகம் என்றும் சொல்லலாம்.] எழுதியுள்ளேன்.

      Delete
  5. இத்தகவலின் உண்மை ஆழத்தை அந்த சர்வேஸ்வரனின் அருளால் மேலும் தெளிந்து, பிறிதொரு கட்டுரையில் விளக்க முயற்சிக்கிறேன்.         நன்றி வணக்கம்.

    ReplyDelete
  6. அப்பப்பா ! தாங்கள் எழுதும் அனைத்திலும் எத்தனை எத்தனை விஷயங்கள் !

    தங்களின் இத்தகைய சேவைக்கு எங்கள் பணிவான வணக்கங்கள்

    நீங்கள் ஒரு புராண தகவல் களஞ்சியம்

    - V. Sugavanam

    ReplyDelete