Sunday 19 December 2021

திருவாதிரை சிவனார் நக்ஷத்திரம் 🤔 ?



 



திங்கட்கிழமை 20.12.2021 அன்று "ஆருத்ரா தரிசனம்". ஆருத்ரா என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் "ஆதிரை" என்பதாகும்.. இந்த ஆதிரை என்பது சிவனுக்கு உகந்த நக்ஷத்திரம். ஆதலால் உயர்வு கருதி 'திரு' எனும் அடைமொழி சேர்த்து "திருவாதிரை' என அழைக்கப்படுகிறது. 27 நக்ஷத்திரங்களில் திருவாதிரை ஆறாவது ஆகும்.




இந்த திருவாதிரை வான் மண்டலத்தில், ஒரு கோணத்தில் மின்னும் வைரம் போலவும், சூலம் போலவும், மற்றொரு பரிமாணத்தில் "யாழ்' போன்ற அமைப்பிலும் காணப்படுவதாகவும் அதையும் விட "நீர்த்துளி" போல் தோற்றம் தருவதாகவும் கூறுவர். இதெல்லாம் சரி! எதற்காக? இத்தனை பீடிகை? எனில், சிவனது நக்ஷத்திரமாக "திருவாதிரை" கருதப்படுகிறது அல்லவா? அதன், முக்கிய  பின்னனியை அறிவோம்!!!
       ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்சோதிஎன 
போற்றப்படுபவர் சிவபெருமான். அப்படி, பிறப்பு இறப்பு இல்லாதவருக்கு பிறந்த நக்ஷத்திரம் மட்டும் எப்படி இருக்க முடியும்?
    தன் முன்னோர்களின் மோக்ஷத்திற்க்காக, கடுந்தவம் மேற்கொண்டார் பகீரதன். அவரது தவத்தின் பயனாய் பிரம்மனும் காட்சியளித்து, ஜீவ முக்தியளிக்கும் ஆகாய கங்கையை  இப்புவிக்கு கொண்டு வருவதற்கான வரம் அருளினார்.ஆயினும், ஆகாயத்திலிருந்து  வரும் கங்கையின் வேகத்தை இப்புவி தாங்காமல் பிரளயமே நிகழ்ந்தாலும் ஆச்சரியம் இல்லை!. அதனால் கங்கையின் 
வேகத்தை தாங்கக் கூடியவர் சிவபிரான் ஒருவரே. அதனால் அவரை நோக்கித் தவம் புரிய அறிவுறுத்தினார் பிரம்மதேவன்.



அவ்வண்ணமே,பகீரதனின்  ஆழ்ந்த தவத்தில் மகிழ்ந்து சிவனாரும், தன் ஜடாமுடியை விரித்து, ஆகாய கங்கையை  தன் தலையில் தாங்கி, ஜடாமுடியில் முடிந்து பின் மெதுவாக தன் ஜடாமுடியிலிருந்து வழிந்து பூமியில் ஒடும் படி செய்த இந்த பகீரதன் தவம் அனைவரும் அறிந்த கதை.



பூமியின் வடகிழக்குப் பகுதியில் 310 ஒளியாண்டுகள் தொலைவில் திருவாதிரை நக்ஷத்திரம் இருப்பதாக அறிவியலும் கூறுகின்றது. நீரோட்டம் நிறைந்த இந்த நக்ஷத்திர மண்டலத்தில் தான் ஆகாய கங்கையின் வாசம் இருந்ததாக "பகீரத புராணம்" உரைக்கின்றது. 
அதனால், புனித கங்கை நதி குடியிருந்த திருவாதிரை நக்ஷத்திரத்தை சிவனுக்கும் உகந்ததாக கருதி, இந்த புராண நிகழ்வை நினைவு கொண்டு, நம் பாவங்களைப் போக்கி புண்ணிய ஆத்மாவாக மாற்றும் சக்தி வாய்ந்த கங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வதன் மூலம் நாம் நன்றி கூறி முக்தியையும் வேண்டும் பிரார்த்தனையாக வழிபாடு நடத்தப்படுவதே இதன் முக்கிய குறிக்கோள்! தாத்பர்யம்!!!      
       


Saturday 18 December 2021

சிதம்பரம் கோயில் தேர்த்திருவிழா".

                தேர்த்திருவிழா.



மார்கழி 4 ஆம்தேதி டிச. 19 .2021 ஞாயிற்றுக்கிழமை இன்றைய தினம் சிதம்பரம் கோயில் தேர்த்திருவிழா".  "சிவகாமி அம்மை உடனுறை நடராஜ பெருமான்" தேரில் பவனி வரும் காட்சி.கோயிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய இயலாத முதியவர்கள் நோயாளிகள் போன்றவர்களுக்காக அந்த நாளில் கோயில் போன்றே அமைப்புடைய தேரில் இறைவனே எழுந்தருளி  நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக தன் பக்தர்களுக்கு   காட்சியளிப்பதாக ஐதீகம்.


image.png

கோயிலின் கர்ப்பகிரஹம் போன்றே தேரும், உபபீடம், அதிட்டானம், பாதம் மற்றும் கோபுர விமானம் போன்றே அமைக்கப்படுகிறது. அந்தந்த ஊரின் தல வரலாற்றை விளக்கும் விதத்தில் அழகிய சிற்பக் கலைகளுடனும், பல வண்ணக் கலவைகளுடன் விளங்கும் ஆலவட்டங்கள் தோரணங்கள் என அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

முன்னே வேத விற்பன்னர்கள் வேத கோஷம் முழங்க,, ஓதுவார்கள் தேவாரம் இசைத்தும், நடன்மணிகள் நாட்டியம் ஆடியபடியும், நாதஸ்வர மேள தாளத்துடனும் கன கம்பீரமாக தேர் அசைந்து ஊர்ந்து வருவதைக் காண கண் கோடி வேண்டும். 

ஊர் கூடித் தேர் இழுத்தல்  எனும் ஒற்றுமையை விளக்கும் விதமாக, அனைத்து தரப்பு மக்களும் தேர் வடம் எனும் அந்தக் கயிற்றைப் பிடித்து பக்தியுடன் இழுத்து வருவர். 

Wednesday 15 December 2021

மார்கழி மாத சிறப்புகள்.

 




சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி ஆகும். மார்கழி  மாதத்தை " பீடை" மாதம் என்பார்கள். பீடுடை மாதம் என்பது மருவி பீடை என்றாயிற்று. 'பீடு' --அழகு, மிடுக்கு, இளமை, பெருமை, கம்பீரம் என இன்ன பல பொருள்களைத் தரும்.

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே! 
என திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் இதற்கு மேற்கோளாகக்
 கொள்ளலாம்.
தேவர்களுக்கு மார்கழி மாதம் அதிகாலை நேரமாகும். அதனால், இம்மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ்த்தாமல், பூஜைக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. 
வியாழக்கிழமை டிசம்பர் 16 ஆம் தேதி 2021  முதல் மார்கழி மாதம் தொடங்குகிறது. அன்று முதல் சிவா, விஷ்ணு  கோயில்களில் தனுர் மாத 
பூஜை விசேஷமாக நடக்க இருக்கிறது. 



       ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரால் துளசிச் செடியின் அருகில் கண்டெடுக்கப்பட்டு "கோதை" என்று பெயர் சூட்டப்பட்டவர் "ஆண்டாள்". பன்னிரு ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். பூமித் தாயின் அவதாரமாகக் கருதப்படுகிறார். சிறு வயது முதலே தந்தையிடம் வைணவ நூல்களை கேட்டே வளர்ந்ததனால், கண்ணனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவராய் திகழ்ந்தார்.தன்னை கோபிகையாகவே நினைத்து, மார்கழியில் கண்ணனை வழிபடும் முறையை, "பாவை நோன்பினை" பற்றி இவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும்  "திருப்பாவையாக" பிரபலமாக பாடப்பட்டு வருவது சிறப்பு.  



மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து, இயற்றப்பட்ட பாடல் தொகுப்பு "திருவெம்பாவை" ஆகும். மாணிக்கவாசகரால் திருவண்ணாமலையை தரிசித்த பொழுது பாடப்பெற்றது. 
இதுவும் மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் இருக்கும் "பாவை நோன்பின்" வழிபாடாக அமைந்துள்ளது. மொத்தம் இருபது பாடல்களைக் கொண்டது.சிவத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்பது போலவும், அதிகாலையில் சிவபிரானின் புகழ் பாடியவாறு நீராடச் செல்லுதலையும், வேண்டுதல்களை கூறுவது போலவும், நீராடுதலைக் குறிப்பதாகவும் உள்ளது. 'எம்பாவாய்' என்ற மொழியால் இறுதியில் நிறைவுறுவதால், உயர்வு கருதி 'திருவெம்பாவை' என்ற பெயர் காரணத்துடன் போற்றப்படுகிறது.






பக்தர்கள் வைகறைப் பொழுதில் அதாவது சூரியன் உதிக்கும் முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை குழுவாக கோயிலிலோ அல்லது வீதியில் ஊர்வலமாக திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பஜனைப் பாடல்கள் பாடி, வழிபடுவர். இவ்வாறு பாவை நோன்பு இருந்து திருப்பாவை, திருவெம்பாவை படிப்பதனால் விரைவில் திருமணம் கைக்கூடுமென்பது நம்பிக்கை. 
இம்மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் வாசலை அடைத்து பெரிதாக வண்ண வண்ண கோலங்களை போடுவர். 



    இந்த மார்கழி மாதத்தில் ஓசோன் வாயு அதிகாலை நேரத்தில் மிக அதிக அளவில் வெளிவரும். இது உடலுக்கு மிக ஆரோக்கியமானது என்பதனால் நம் முன்னோர் அதிகாலையில் கோலம் இடும் வழக்கத்தை உருவாக்கினர்.  

Sunday 12 December 2021

கார்த்திகையில் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல்.ஏன்?

 



டிச. 14 ந்தேதி செவ்வாயன்று ஸ்ரீரங்கத்தில் மட்டும் 'வைகுண்டஏகாதசி'  கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக மார்கழி மாதத்தில் சுக்ல பக்ஷ ஏகாதசி திதியில் தான் கொண்டாடப்படும். ஆனால் இந்த பிலவ வருடம் 2021 ல் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி திதியிலேயே வைகுண்ட ஏகாதசியை  ஸ்ரீரங்கம் கோயிலில் கொண்டாட இருக்கின்றனர்.




  ஆழ்வார்களில் கடைசி பன்னிரண்டாவதுஆழ்வாரான திருமங்கை ஆழ்வார், தமிழ் திராவிட வேதம் என போற்றப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் அடியார்களால் ஓதப்பட, அதை எம்பெருமான் தன் தேவியருடன்  கேட்டருளவேண்டும் என்று வரமாக வேண்டியிருந்தார்.



அதன்படி, 
ஸ்ரீரங்கத்தில்  வைகுண்ட ஏகாதசி முன்பு பத்து நாட்கள் பகல் பத்து காலையில் ஓதப்படும் "திருமொழித் திரு நாள்" என்றும், 

வைகுண்ட ஏகாதசியிலிருந்து இராப்பத்து  சாயங்கால வேளையில், " திருவாய்மொழித் திரு நாள்" என நாலாயிரம் பாடல்களையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து இசைப்பர். 

இதற்கு 
    "திரு அத்யயன உற்சவம்" 
என்று பெயர்.


அதுவும் தவிர தை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் "தை தேர்த் திருவிழா" ஸ்ரீரங்கத்தில்
விமரிசையாக நடத்தப்படும்.



          ஆனால், இவ்வருடம் மார்கழி மாதக் கடைசியில் சுக்ல பட்ச ஏகாதசி "போகிப் பண்டிகையன்று" வருகிறது. அத்துடன் தேர்த் திருவிழா கொண்டாடவேண்டிய தை மாத புனர்பூச நக்ஷத்திரமும் தை மாதம் 4 தேதியிலேயே அமைந்து விட்டது. இம்மாதிரியான சூழல் பத்தொன்பது வருடத்திற்கு ஒருமுறை அமைந்து வரும். 
  இந்த அத்யயன உற்சவம் தடைபடக்கூடாது என்பதற்காக, கார்த்திகை வளர்பிறை ஏகாதசி திதியில் 'சொர்க்கவாசல்' திறப்பு நடத்தப்படுகிறது.
 

Saturday 11 December 2021

திருப்பெருந்துறை ​ - மாணிக்கவாசகர்



திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகரை சிவபெருமான் ஆட்கொண்ட தலம் "திருப்பெருந்துறை'. குளம், ஆறு என நீர் நிலைகளில் மக்கள்  இறங்கி நீராட வசதியாக இருப்பதை'துறை' என அழைப்பர். அவ்வண்ணமே, இறையருளை பேரின்ப நிலையை மாணிக்கவாசகர் பெற்ற  இடமாக அமைந்ததாலும், அவர் போலவே நாம் அனைவரும் இத்தலத்து இறைவனை சரண் புக பிறவிப் பெருங்கடலைக் கடந்து ஈடில்லா பேரின்ப முக்திநிலையை அடையலாம் எனும் மெய்ப்பொருள் தத்துவத்தை விளக்கும் முகமாக, இத்தலம் 'திருப்பெருந்துறை' என அழைக்கப்ப்டுகிறது.


        பாண்டிய மன்னனிடத்தில் தலைமை அமைச்சராக பணிபுரிந்த வாதவூரார், மன்னனின் கட்டளையின் பேரில் சோழ நாட்டிற்கு குதிரைகளை வாங்குவதற்காக புறப்பட்டார். வழியில் வாதவூராரை ஆட்கொள்ளும் பொருட்டு, 'குருந்த மரத்தடியில்' சிவபெருமான் சிவயோகியாய் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமாய் அமர்ந்திருக்க, அந்த தெய்வீகத்தில் தன்னை மறந்தார். தான் மேற்கொண்டு வந்த பணியையும்  மறந்தார். சிவயோகியிடம் சிவஞானபோதம் உபதேசம் பெற்றார். யோகி பின் வாதவூராரின் காதில் 'பஞ்சாக்ஷரம்' ஓதி தீக்ஷை அளித்தார். உடன் வாதவூரார், யோகியின்  பாதம் தன் தலையில் படும்படியாக விழுந்து வணங்கினார். அவரது பாதம் இவர் தலையில் படவும், சிவஞானம் பெற்றவராய் எம்பெருமானைப் புகழ்ந்து பாடல்களைப் பாடலானார். 
  எம்பெருமானும் மகிழ்ந்து, வாதவூரா! நீ பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கமாய் இருக்கிறது. அதனால் இன்று முதல் நீ "மாணிக்கவாசகன்" எனப்படுவாய். அதோடு, இத்திருக்கோயிலையும்  புதுப்பிக்கும்படி கூறி மறைந்தார். அப்பொழுது தான்  வந்தது இறைவன் என உணர்ந்தார். 




  பின் மன்னன் அளித்த பொற்காசுகளைக் கொண்டு, அவ்விடத்தில் கோயில் கட்டினார். சிவபிரான் தக்ஷிணாமூர்த்தியாக   இருந்து உபதேசம் செய்ததால்,   ஆவுடையார்   'தெற்கு' திசையில் அமைந்திருப்பது சிறப்பு. அதனால் தம் குழந்தைகளின் கல்வி அறிவு மேம்பட, இத்திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர்.  
இத்திருக்கோயிலில் லிங்கம் இல்லாமல் அதாவது உருவமற்றவராக, அருவமாக சதுர வடிவில் ஆவுடை மட்டுமே இருக்கும். அடையாளத்திற்காக ஒருகுவளை கவிழ்க்கப்பட்டிருக்கும் . இக்குவளை உடலாகவும் அதனுள் இருப்பது ஆத்மாக்கள் எனவும், ஆத்மாக்கள் இறைவனிடமே தோன்றி திரும்பவும் வந்து அடைவதான தத்துவத்தை உணர்த்துகிறது. அதனால், இக்கோயில் ஆவுடையார் கோயில் என்றும் இறைவன் 'ஆத்ம நாதன்' எனவும் அழைக்கப்படுகிறார்.

அத்துடன் பக்தியின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குத் தான் இறை திரு உருவம் தேவை. பக்குவமடைந்து அனைத்தும் பரப்ரும்மம் என்ற ஞானம் கைவரப் பெற்ற பின், உருவ வழிபாடு தேவையில்லை. அவர்கள் தான் வேறு இறைவன் வேறல்ல என்ற உண்மையை அறிந்தவர்களென்பதையும் உணர்த்துகின்றது.



மாணிக்கவாசகரே இத்திருக்கோயிலின் மூலவராக கருதப்படுகிறார். இததலத்தில் சிவபெருமான் மூலஸ்தானத்தில் அரூபமாகவும், குருந்த மரத்தில் அருவ உருவமாகவும், மாணிக்கவாசகர் உருவமாகவும் அருளுகின்றனர்.

மாணிக்கவாசகர் இறைவனின் ஜோதியில் ஐக்கியமானதால், இங்கு காண்பிக்கப்படும் 'தீபாராதனை" பக்தர்களுக்கு கண்களில் ஒற்றிக் கொள்ள வெளியே எடுத்து வரப்படுவதில்லை. அந்த தீப ஜோதியே இறை தரிசனமாக வணங்கப்படுகிறது.



12.12.2021 ஞாயிறு அன்று திருப்பெருந்துறை, மாணிக்கவாசகர் 'முதலமைச்சராய்" திருக்காட்சி" கோலம்.

அடுத்த நாள் 13.12.2021 கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமை இத்திருக்கோயிலில் விசேஷம் நிறைந்தது. குருந்த மரம், ஆவுடை மற்றும் மாணிக்கவாசகரும் சிவபிரானாகவே கருதி வழிபடப்படுகிறது. அதனால் கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமை குருந்த மரத்திற்கு  முன்பாக 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

 நான் என்ன பாவம் செய்தேன்? கடவுள் என்னை சோதிக்கிறார்! என்றெல்லாம் புலம்புவார்கள்!நாம் பிறருக்கு அறிவுரை கூறுவதை விட நாம் வாழ்ந்து காட்டினாலே அது நல்ல படிப்பினையாக இருக்கும். எந்தவொரு தவறுக்கும், தண்டனை, மன்னிப்பு மற்றும் பரிகாரம் உண்டு. அது கடவுளே ஆனாலும் இந்த நியதிக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

   அதை உணர்த்தும் வகையில், தக்ஷனின் மகளாக பிறந்து, தக்ஷன் செய்த யாகத்திற்கு  தன் கணவர் சிவபிரானின் வார்த்தையை மீறி, சென்றதற்காக, மன்னிப்பு பெறும் பொருட்டு அம்பிகை இத்திருத்தலத்தில், அரூப வடிவத்தில் தவமியற்றினாள். அதனால்
இத்தலத்தில் அம்பாளும் அரூபமாகவே இருக்கிறாள். அம்பாள் தவமியற்றிய பாதத் தடம் மட்டுமே உள்ளது. ஆனால் சன்னதி கதவு அடைக்கப்பட்ட நிலையில், அம்பாள் பாதத்தை ஜன்னல் வழியாக காணும்படி, கண்ணாடியில் பிரதிபலிக்கும்படி பக்தர்களின் தரிசனத்திற்கு வகை செய்துள்ளனர்.



இறைவன், இறைவி இருவருமே உருவமின்றி அருவமாகக் காட்சியளிப்பதால், இத்தலத்தில்" நந்தியும்" கிடையாது என்பது கூடுதல் தகவல்.



Thursday 9 December 2021

நந்த சப்தமி 10.12.2021.வெள்ளிக்கிழமை.

  கேட்பதை அருளும் காமதேனு


டிச. 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கார்த்திகை மாதம் சுக்ல பட்ச சப்தமி திதி. இதனை "நந்த சப்தமி" என்று அழைப்பர். இந்த நாளில் "கோ பூஜை" செய்வது மிகச் சிறந்த விசேஷமாகக் கூறப்படுகிறது.  அதிலும் கார்த்திகை மாத சப்தமி திதி வெள்ளிகிழமையில் இந்த வருடம் அமைந்து வருவது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.   

  பொதுவாகவே, வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் அல்லது "கோ சாலையில்"  கோ பூஜை நடைபெறும்.

பசுக்களில் "காராம்பசு" உயர்வாகக் கருதப்படுகிறது. மண்ணில் பல ஆண்டுகளாக புதையுண்ட நிலையில் இருந்த தெய்வச் சிலைகளை, இத்தகைய காராம்பசுக்கள் புல் மேயும் போது அறிந்து கொண்டு தானாகவே அவ்விடத்தில் பாலைச் சொறிந்து அபிஷேகம் செய்வதையும், அதைக் கண்டு ஊரார், அவ்விடத்தில் இருந்து சிவலிங்கம் அல்லது பல்வேறு தெய்வச் சிலைகளைக் கண்டெடுத்த அதிசய வரலாற்றை நாம் கேட்டிருப்போம். 



 அப்படிப்பட்ட தெய்வீக சக்தியை ரகசியங்களை உணரக் கூடிய சக்தி இத்தகைய பசுக்களுக்கு உண்டு. 



  காராம்பசுவின் மடிக் காம்புகள் சிறியவையாக இருக்கும். எல்லாவகை புற்களையும் அது மேயாது. தேர்ந்தெடுத்து சில வகைப் புற்களை மட்டுமே உண்ணும். இத்தகைய பசுவினது பால், அதிக சுவையும், சக்தியும், மருத்துவ குணமும் நிறைந்ததாக இருக்கும். 

     பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது சுக்ர ஓரையில் [வெள்ளியன்று காலை 6 மணிமுத்ல் 7மணி வரை சுக்ர ஓரை}கோபூஜை செய்வது முழு பலனையும் தரவல்ல அதி உத்தமான நல்ல நேரம். அப்படி இல்லையென்றாலும் மாட்டுத் தொழுவத்திலோ கோயில்களில் நடக்கும் கோபூஜையிலோ கலந்து கொண்டு வழிபடுவதும் சிறப்பு. அதுவும் தவிர, வீதியில் பசு மாட்டினைக் கண்டால் கூட அதற்கு அருகம் புல்லையோ அல்லது அகத்திக் கீரையையோ உண்பதற்கு கொடுத்து, பசு மாட்டின் பின் பக்கம் வால் பகுதியை தொட்டுக் கும்பிடுவதும் நல்ல பலனைத் தருவதாகும். 



ஏனெனில், பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதிலும் குறிப்பாக, அதன் வால் பகுதி, 'மஹாலஷ்மியின்' இருப்பிடம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!. 

   காமதேனு பசுவும் நந்தினி கன்றுடன் கூடிய சிலையோ அல்லது படத்தையோ வைத்தும் கூட  நாம் வீட்டிலும் பூஜை செய்யலாம். 
இதனால் திருமணத்தடை முதல் நம் வாழ்வில் நம் முன்னேற்றத்திற்க்கான அனைத்து  தடைகளும் விலகும் என்பது நம்பிக்கை.
அத்துடன், செல்வ வளம் பெருகும். ஆரோக்கியம் கூடும் என்பதும் உண்மை. ஆம் கொடிய தோல் சம்பந்தமான வியாதிகள் கூட கண்டிப்பாக குணமடையக் கூடிய சக்தியைக் கொண்டது கோமியமும், பசுஞ்சாணமும் என்பது நிதர்சனமான உண்மை. 

"கொடிய தோல் வியாதியால் பீடிக்கப்பட்டு துன்புற்று தன்னிடம் வந்தவரை, 'ரமண மகரிஷி '  மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்யும் பணியை அளித்து, அவரது வியாதியை குணப்படுத்தினாராம்".


பசு மாட்டின் கோமியம், சாணம் இவை கிருமி நாசினியாக செயல்படும் என்பதால் நாம் வழிவழியாக தொன்றுதொட்டு கோமியத்தை வீட்டில் தெளிப்பதும், பசுஞ்சாணத்தை நீரில் கரைத்து வாசல் தெளிப்பதும் வழக்கத்தில் உள்ளதல்லவா?!  மற்றும் பால், தயிர், வெண்ணெய், நெய் இவை எல்லாமே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக மருத்துவ குணம் நிறைந்ததாக அறிவியல் ஆராய்ச்சியில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது அல்லவா?! 
  
இத்தனை சிறப்புகளை தன்னகத்தே கொண்டும், சாதுவான பிராணியாகவும் வலம் வரும் கோமாதாவை வலம் வந்து நலம் பெறுவோம். 
இதன் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே, சின்னக்கண்ணன் பசுக்கூட்டத்துடனேயே வாழ்ந்து 'கோ குல' கண்ணனாக திகழ்ந்தானோ?!!!.




Wednesday 8 December 2021

"குக்கே சுப்பிரமணியர்" சுப்பிரமண்ய சஷ்டி, சம்பா சஷ்டி.

 




டிசம்பர் 9 ஆம் தேதி வியாழக்கிழமை ''சுப்பிரமண்ய சஷ்டி மற்றும் சம்பா சஷ்டி " விசேஷம் நிறைந்தது. முருகபெருமான் தாரகாசுரன் மற்றும் பத்மாசுரனின் சம்ஹாரத்திற்கென அவதரித்தவர். இவர் தேவ சேனாதிபதியாகவும், அனைத்து தெய்வங்களிலும் தனித்துவம் வாய்ந்தவராகவும் விளங்குபவர். 

ஐப்பசி மாத சூரசம்ஹாரத்தை அடுத்து வரும் இந்த கார்த்திகை மாத சுக்ல பக்ஷ சஷ்டியில் 

      "குக்கே சுப்பிரமணியர்"

திருத்தலத்தில்  சுப்ரமணிய சஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

இத்தலத்தில் விசேஷமாக முருகபெருமானை நினைத்து "ஸ்நானமும், தானமும்" செய்தால் நம் அனைவரது பாவங்களும் விலகும். ஸர்ப்ப தோஷமும் விலகும் என்பது ஐதீகம். 

கர்நாடக மாநிலததில் மங்களூர் அருகில் "குக்கே" எனும் கிராமத்தில், ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, "குக்கே சுப்பிரமணியராக" அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.




            காஷ்யப முனிவரின் மனைவிகள் வினதை மற்றும் கத்ரு. கருடனின் தாயான வினதையை, நாகர்களின் தாயான கத்ரு, வஞ்சகமாக போட்டி ஒன்றை வைத்து தன் மகன்களான நாகர்கள் மூலம் வினதையை தந்திரமாக தோல்வியுறச் செய்து அடிமைப்படுத்தினாள். இதையறிந்த கருடன், தாயை  மீட்டதோடு நாகர்களை பழிவாங்கலானார்.

கருடனுக்கு பயந்து நாகர்கள் தலைவனான வாசுகி தன் நாகர் கூட்டத்துடன், தங்களின் குலதெய்வமான சிவபிரானை தஞ்சம் அடைய, சிவனார் முருகபெருமானை அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க பணித்தார்.அவ்வண்ணமே நாகர்களை ஆட்கொண்ட விதமாக, முருகப்பெருமானும் 'குமரமலையில்' குகை கோயிலில் சுப்பிரமணியராக, ஐந்து தலை நாகம் குடையாக இருக்க அருள்பாலிக்கிறார். 
தங்களை ஆட்கொண்டு காப்பாற்றிய முருகப்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாகராஜன் வாசுகியே ஐந்து தலை நாகமாக குடையாக காட்சியளிக்கிறது

இந்த குமரமலையை பாதுகாக்கும் விதமாக அருகில் ஆறு தலை நாக வடிவில் "சேஷமலை" அமைந்துள்ளது சிறப்பு அம்சம். 
அதனால் ஆதிசேஷனின் நக்ஷத்திரமான ஆயில்ய நக்ஷத்திரத்தன்று நாகதோஷ பரிகார பூஜை இத்திருக்கோயிலில் விசேஷமாக கருதப்படுகிறது.

         சாம்பசிவனான சிவபெருமானின் அருளால், கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் குழந்தை பிறந்ததால், 'சாம்பன்' என பெயரிட்டனர். துருவாச முனிவரால் 'குஷ்டரோகம்' பீடிக்க சபிக்கப்பட்டதனால், இத்தல முருகனை வழிபட்டு, இதே போன்றதொரு திருநாளில் சாப நிவர்த்தி பெற்றான் சாம்பன். அதனால் 'அவன் பெயரால் 'சம்பா சஷ்டி' எனவும் அழைக்கப்படுகிறது. 

Friday 3 December 2021

திருவிசையில் எழுந்தருளிய கங்கை.

 டிசம்.4 ஆம்தேதி சனிக்கிழமை கார்த்திகை அமாவாசை திதி. திருவிசை நல்லூர் "கங்காகர்சனம்."    

 ஒவ்வொரு மனிதனுக்கும் சுக, துக்கங்கள் மாறி, மாறி வருவது  இயற்கை. அப்படிப்பட்ட சோதனை அல்லது சாதனைகளால் அகில உலகும் பயன்பெறும் வகையில் வாழ்கின்றவர்களே மகான்களாகப் போற்றப்படுகின்றனர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடுவது அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் கூட அனைவருக்கும் அது சாத்தியப்படுவதில்லை. ஒவ்வொரு வருட கார்த்திகை அமாவாசை அன்று திருவிசைநல்லூர் எனும் தலத்தில் கங்கை பொங்கிப் பிரவகிக்கிறாள். அதில் புனித நீராட ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்படி கங்கை இங்கே பிரவகிக்க காரணமாயிருந்த அந்த மகான் யார்? அதன் பின்னனிக் கதை என்ன? என்பதை அறிவோமா!.


       அந்த மகானின் திருநாமம் 
     ஸ்ரீதர வெங்கடேச          அய்யாவாள். 
இவர்  மைசூர் சமஸ்தானத்தில் 'திவானாக' சிறப்புற பணியாற்றி வந்தார். நாளாக நாளாக, அவருக்கு லௌகீக விஷயங்களில் நாட்டமின்றி எப்பொழுதும் சிவ நாமமும், சிவ சிந்தனையுமே மேலோங்கியிருந்தது. 
இதனால், திடீரென்று தன் திவான் பதவியை துறந்துவிட்டு, ஊர் ஊராக பற்பல சிவதலங்களுக்கும் செல்ல ஆரம்பித்தார். இப்படியாக தென்னகத்தில் காவிரிக்கரையோரம் கோயில் கொண்டுள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். இறுதியாக, திருவிடைமருதூர் வந்தடைந்து, அங்கு "மஹாலிங்கேஸ்வரரை" தரிசித்தவருக்கு, பொன்னார் மேனியனின்  திவ்ய ஸ்வரூபத்தில் மனம் லயித்தது. தினம் இவரை தரிசிக்கவேண்டுமென்ற ஆவல் கொண்டார். அதற்கு வசதியாக பக்கத்தில் உள்ள திருவிசைநல்லூரில் ஒரு வீட்டில் தங்கினார். 
      இச்சமயத்தில், அய்யாவாள் தந்தையின் 'திதி' வந்தது. தன் தந்தையின் 'திதி'க்கான ஏற்பாட்டோடு, காவிரியில் நீராடிவிட்டு, விரைந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது இவரது பெருமையை உலகறிய திருவுளம் கொண்டான் இறைவன். ஈசன் தாழ்ந்த குல வயோதிகன் போல் வேடம் பூண்டு, அய்யாவாளிடம் வந்து, தான் மிகவும் பசித்திருப்பதாகவும் தனக்கு உணவளிக்கும் படியும் இறைஞ்சினார்.
    பசியால் வாடியிருந்த அவர் முகத்தைக் கண்டதும் அய்யாவாளின் மனம் இரங்கியது. தன்னுடனேயே அம்முதியவரை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று திதியானதால், சிரார்த்தத் திதிக்கான உணவே தயாராகி யிருந்தது. அந்த சிரார்த்த உணவை திதி இட்ட பின், வேதியர்கள் அந்த அன்னத்தைப் புசிப்பர். அதன்பின்னே, வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவர். அதன்பின்னும் உணவு மீதம் இருந்தால் அதை பசு மாட்டிற்கு மட்டுமே அளிப்பர். இதுதான் நியதி. ஆனால் அய்யாவாள் நியதியை மீறி, பசித்திருப்பவனுக்கே முதலில் உணவு என்று, திதிக்காக சமைத்திருந்த உணவை அந்த ஏழை வயோதிகருக்கு அளித்துவிட்டார்.
 இதைக் கண்ட வேதியர்கள் தங்களுக்கான உணவை தாழ் குலத்தோனுக்கு அளித்ததன் மூலம் பெரும் பாவச் செயலைச் செய்து விட்டாய். ஸ்ரீதரா! நீ காசிக்குச் சென்று கங்கையில் நீராடி விட்டு வா. அப்பொழுது தான் உன் பாவமும் தொலையும். நாங்களும் அதன்பிறகு தான் உன் தந்தையின் திதியை நடத்தித் தருவோம் என்று கோபித்துச் சென்றனர். ஒரே நாளில் எப்படி காசி  சென்று திரும்புவது என திகைத்து, மனம் கலங்கி, சர்வேஸ்வரனை தியானித்தவாறு, அயர்ச்சியில் கண் அசந்துவிட்டார். அப்பொழுது கனவில் எம்பெருமான் தோன்றி, கவலை கொள்ளாதே ஸ்ரீதரா! உன் வீட்டுக் கொல்லைக் கிணற்றிலேயே கங்கையை வரவழைக்கிறேன் எனக் கூறி மறைந்தார்.


திடுக்கிட்டு கண் விழித்தவர், எம்பெருமானின் கருணையை வியந்தவாறு, விடுவிடுவென்று கிணற்றடிக்குச் சென்று, "கங்காஷ்டகம்" பாடலானார். என்னே மாயம்! கங்கா மாதா பொங்கிப் பிரவகித்து, கிணற்றிலிருந்து வழிந்து ஊரே மூழ்கும்படி பாய்ந்து ஓடினாள். 
   அப்பொழுது கோபித்துச் சென்ற வேதியர்கள், ஓடோடி வந்து அய்யாவாளின் பக்தியையும் பெருமையையும் புரிந்து கொள்ளாமல் பிழை செய்துவிட்டோம். தங்கள் பிழையைப் பொறுத்தருளுவதோடு, கங்கையின் பிரவாகத்தையும் கட்டுப்படுத்தும் படி வேண்டிக் கொண்டனர். பின், மனமுவந்து அய்யாவாளின் தந்தையின் திதியையும் நடத்திக் கொடுத்தனர்.  இப்பொழுதும் ஒவ்வொரு கார்த்திகை மாதம் அமாவாசையன்று அக்கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக ஐதீகம். 







குச்சனூர் சனிபகவான் ஆராதனை 4.12.2021

 



முன் காலத்தில் குலிங்க நாட்டை நல்லமுறையில் ஆண்டு வந்த 'தினகரன்' எனும் மன்னனுக்கு நெடுங்காலமாக குலம் விளங்க வாரிசு இல்லாமல் இருந்தது. சிவபெருமானிடத்தில் ஆழ்ந்த பக்தியுடன் விளங்கிய அவனுக்கு, அவன் மனக்குறையைப்  போக்கும் வண்ணம் 'அசரீரி' ஒன்று,. மன்னவனே! உன் இல்லம் நாடி வரும் ஒரு அந்தணச் சிறுவனை மகனாக தத்தெடுத்து வளர்க்கவும். அதன் பின்னரே    உனக்கு மகன் பிறப்பான் என ஒலித்தது.
     அவ்வண்ணமே, ஒரு நாள் ஆதரவற்ற அந்தணச் சிறுவன்   எப்படியோ அவர்களை வந்தடைய, அரசனும் அரசியும் அகமகிழ்ந்து, 'சந்திரவதனன்' எனும் அச்சிறுவனை உயிரினும் மேலாக பாசம் காட்டி வளர்த்தனர். அதன்பின், அசரீரி வாக்கின் படி, ராணியும் கருவுற்று அழகிய ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். 'சுதாகன்' என அவனுக்கு பெயர் சூட்டி இரு குழந்தைகளையும் சமமாக பாவித்தனர். சுதாகனை விட வளர்ப்பு மகனான சந்திரவதனன், அறிவும் ஆற்றலும் திறமை மிக்கவனாகவும் திகழ்வதைக் கண்ட மன்னன், சிறிதும் தயங்காமல், சந்திரவதனனையே தனக்கு அடுத்த அரசனாக முடிசூட்டினான்.
   இந்த நிலையில், மன்னன் தினகரனுக்கு ஏழரைச் சனியின் ஆதிக்கம் தொடங்கியது. அதனால் பெரும் துன்பத்திற்கு ஆளானான். தன்னிடம் அன்பு காட்டி அரசனாகவும் ஆக்கிய தன், வளர்ப்புத் தந்தை படும் இன்னலைக் கண்டு சகிக்க முடியாமல் தவித்த சந்திரவதனன் ஜோதிடர்களிடம் இதற்கான பரிகாரம் பற்றி வினவ, சனி பகவானை தரிசித்து வர, அவரது உடல் நிலை சரியாகலாம் எனக் கூறினர்.

    உடன் சிறிதும் தாமதியாமல், தென்னகம் அடைந்து சனீஸ்வர பகவான் வழிபாடு செய்யப் புறப்பட்டான். தேனி மாவட்டம் 'சுரபி நதி' அருகில் செண்பகநல்லூர் எனும் ஊரை அடைந்து, இரும்பினால் தனக்குத் தோன்றியவாறு சனி பகவான்  உருவச்  சிலையை நிறுவி, பூசணி காயைக் குடைந்து குங்குமம் இட்டும்,
கரும்புகளைத் துண்டுகளாக்கி பரிகாரம் செய்து பூஜித்து  பகவானே! எனது தந்தையின் அனைத்து   துன்பங்களையும் எனக்குக் கொடுங்கள். அவரை இத்துன்பத்திலிருந்து   விடுவியுங்கள் என மனமுருகி பிரார்த்தித்தான்.
  அவனது தூய அன்பில் மனமிரங்கிய சனி பகவானும்   அவனுக்கு  காட்சி கொடுத்து. அவரது முற்பிறவியின் வினைப் பயனே இந்த அல்லலுக்கு காரணம். உனது அன்பிற்கு கட்டுப்பட்டு, ஏழரை ஆண்டு கால தண்டனையை ஏழரை நாழிகையாகக் குறைத்து,  உனக்கு வழங்குகிறேன். அதுவும் உன் முற்பிறவியின் பயனால் தான் இதுவும் விளைந்தது என்று அருளினார்.   
 

அது சமயம்  சுதாகன்    அண்ணனைப் பிரிந்து இருக்க முடியாமல், தமையனைத் தேடி புறப்பட்டான். 
இருவரையும் பிரிய மனமில்லாமல், தன் உடல் நலம் அடைந்த நிலையில் மன்னன் தன் இரு புதல்வர்களையும் தேடிப் புறப்பட்டான்.
  சந்திரவதனனை சனியின் தாக்கம் பீடித்ததால்,  சந்திரவதனன் பூஜை செய்த குங்குமம் தடவிய பூசணியும் கரும்புத் துண்டுகளும் அறுபட்ட தலை மற்றும் கைகள் போன்று  மன்னனுக்கு காட்சியளிக்க, சுதாகனை கொன்றுவிட்டதாக எண்ணி தன் வாளை உருவி, சந்திரவதனனின் தலையைக் கொய்ய முற்பட்டான். உடன் சனி பகவானும் அங்கு தோன்றி, உண்மை உணர்த்தி, ஏழரை நாழிகை காலக் கெடு முடிந்தது . இனி கவலை வேண்டாம். என்றுரைத்து, தனக்கு இங்கு கோயில் எழுப்பி வழிபாடு நடத்த கட்டளையிட்டார். 
அச்சமயம் சுதாகனும், தாமதமாக அவ்விடத்தை வந்து அடைய, உண்மை உணர்ந்து மன்னன் மனம் வருந்தி சந்திரவதனனிடம்  மன்னிப்பு வேண்டினார். 
பின், அங்கே சுயம்புவாக சனி பகவான் கிடுகிடுவென லிங்கமாக வளர்ந்து அருள் பாலித்தார். தங்கள் இன்னல்களைக் களைந்த சனி பகவானுக்கு 'குச்சுப் புற்களால்' கூரை வேய்ந்து கோயில் எழுப்பினான் சந்திரவதனன். அதுமுதல் 'குச்சனூர்' என அழைக்கப்படலாயிற்று. 
சனி பகவான் ரகு வம்சத்தில் உதித்தவர் ஆதலால், திரு நாமம் இட்டும் சிவபக்தன் ஆனதால் பட்டையும் இடப்பட்டிருக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அம்சமும் அடங்கியவர் என்பதால், இவர் ஆறு கண்களுடன் காட்சியளிக்கிறார்.
பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்களிலோ அல்லது உச்சந்தலையில் தான் சனீஸ்வர பகவான் இடம் பெற்றிருப்பார். ஆனால் இந்த குச்சனூரில் மூலவராக பிரதான மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
    மூன்று வேளையும் தவறாமல் பூஜை நடக்கும் இத்தலத்தில், உச்சிக் கால பூஜை நிறைவுற்ற பின், காகத்திற்கு அன்னம் படைத்து காகம் உண்ட பின்னரே, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்கிறார்கள். 





ஏதாவது தவறு நிகழ்ந்திருந்து அப்படி காகம் உணவை உண்ண மறுத்தால், அன்றைய நிகழ்ச்சிகளை அப்படியே நிறுத்தி வைத்து, பூசாரி முதல் பக்தர்கள் வரை அனைவரும்  காகத்திடம் மன்னிப்பு வேண்டி பிரார்த்திக்கின்றனர். அதன் பின் காகம் உணவை ஏற்கும் அதிசயம் இன்றும் நடப்பதாகக் கூறுகின்றனர்.