Friday 3 December 2021

திருவிசையில் எழுந்தருளிய கங்கை.

 டிசம்.4 ஆம்தேதி சனிக்கிழமை கார்த்திகை அமாவாசை திதி. திருவிசை நல்லூர் "கங்காகர்சனம்."    

 ஒவ்வொரு மனிதனுக்கும் சுக, துக்கங்கள் மாறி, மாறி வருவது  இயற்கை. அப்படிப்பட்ட சோதனை அல்லது சாதனைகளால் அகில உலகும் பயன்பெறும் வகையில் வாழ்கின்றவர்களே மகான்களாகப் போற்றப்படுகின்றனர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடுவது அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் கூட அனைவருக்கும் அது சாத்தியப்படுவதில்லை. ஒவ்வொரு வருட கார்த்திகை அமாவாசை அன்று திருவிசைநல்லூர் எனும் தலத்தில் கங்கை பொங்கிப் பிரவகிக்கிறாள். அதில் புனித நீராட ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்படி கங்கை இங்கே பிரவகிக்க காரணமாயிருந்த அந்த மகான் யார்? அதன் பின்னனிக் கதை என்ன? என்பதை அறிவோமா!.


       அந்த மகானின் திருநாமம் 
     ஸ்ரீதர வெங்கடேச          அய்யாவாள். 
இவர்  மைசூர் சமஸ்தானத்தில் 'திவானாக' சிறப்புற பணியாற்றி வந்தார். நாளாக நாளாக, அவருக்கு லௌகீக விஷயங்களில் நாட்டமின்றி எப்பொழுதும் சிவ நாமமும், சிவ சிந்தனையுமே மேலோங்கியிருந்தது. 
இதனால், திடீரென்று தன் திவான் பதவியை துறந்துவிட்டு, ஊர் ஊராக பற்பல சிவதலங்களுக்கும் செல்ல ஆரம்பித்தார். இப்படியாக தென்னகத்தில் காவிரிக்கரையோரம் கோயில் கொண்டுள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். இறுதியாக, திருவிடைமருதூர் வந்தடைந்து, அங்கு "மஹாலிங்கேஸ்வரரை" தரிசித்தவருக்கு, பொன்னார் மேனியனின்  திவ்ய ஸ்வரூபத்தில் மனம் லயித்தது. தினம் இவரை தரிசிக்கவேண்டுமென்ற ஆவல் கொண்டார். அதற்கு வசதியாக பக்கத்தில் உள்ள திருவிசைநல்லூரில் ஒரு வீட்டில் தங்கினார். 
      இச்சமயத்தில், அய்யாவாள் தந்தையின் 'திதி' வந்தது. தன் தந்தையின் 'திதி'க்கான ஏற்பாட்டோடு, காவிரியில் நீராடிவிட்டு, விரைந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது இவரது பெருமையை உலகறிய திருவுளம் கொண்டான் இறைவன். ஈசன் தாழ்ந்த குல வயோதிகன் போல் வேடம் பூண்டு, அய்யாவாளிடம் வந்து, தான் மிகவும் பசித்திருப்பதாகவும் தனக்கு உணவளிக்கும் படியும் இறைஞ்சினார்.
    பசியால் வாடியிருந்த அவர் முகத்தைக் கண்டதும் அய்யாவாளின் மனம் இரங்கியது. தன்னுடனேயே அம்முதியவரை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று திதியானதால், சிரார்த்தத் திதிக்கான உணவே தயாராகி யிருந்தது. அந்த சிரார்த்த உணவை திதி இட்ட பின், வேதியர்கள் அந்த அன்னத்தைப் புசிப்பர். அதன்பின்னே, வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவர். அதன்பின்னும் உணவு மீதம் இருந்தால் அதை பசு மாட்டிற்கு மட்டுமே அளிப்பர். இதுதான் நியதி. ஆனால் அய்யாவாள் நியதியை மீறி, பசித்திருப்பவனுக்கே முதலில் உணவு என்று, திதிக்காக சமைத்திருந்த உணவை அந்த ஏழை வயோதிகருக்கு அளித்துவிட்டார்.
 இதைக் கண்ட வேதியர்கள் தங்களுக்கான உணவை தாழ் குலத்தோனுக்கு அளித்ததன் மூலம் பெரும் பாவச் செயலைச் செய்து விட்டாய். ஸ்ரீதரா! நீ காசிக்குச் சென்று கங்கையில் நீராடி விட்டு வா. அப்பொழுது தான் உன் பாவமும் தொலையும். நாங்களும் அதன்பிறகு தான் உன் தந்தையின் திதியை நடத்தித் தருவோம் என்று கோபித்துச் சென்றனர். ஒரே நாளில் எப்படி காசி  சென்று திரும்புவது என திகைத்து, மனம் கலங்கி, சர்வேஸ்வரனை தியானித்தவாறு, அயர்ச்சியில் கண் அசந்துவிட்டார். அப்பொழுது கனவில் எம்பெருமான் தோன்றி, கவலை கொள்ளாதே ஸ்ரீதரா! உன் வீட்டுக் கொல்லைக் கிணற்றிலேயே கங்கையை வரவழைக்கிறேன் எனக் கூறி மறைந்தார்.


திடுக்கிட்டு கண் விழித்தவர், எம்பெருமானின் கருணையை வியந்தவாறு, விடுவிடுவென்று கிணற்றடிக்குச் சென்று, "கங்காஷ்டகம்" பாடலானார். என்னே மாயம்! கங்கா மாதா பொங்கிப் பிரவகித்து, கிணற்றிலிருந்து வழிந்து ஊரே மூழ்கும்படி பாய்ந்து ஓடினாள். 
   அப்பொழுது கோபித்துச் சென்ற வேதியர்கள், ஓடோடி வந்து அய்யாவாளின் பக்தியையும் பெருமையையும் புரிந்து கொள்ளாமல் பிழை செய்துவிட்டோம். தங்கள் பிழையைப் பொறுத்தருளுவதோடு, கங்கையின் பிரவாகத்தையும் கட்டுப்படுத்தும் படி வேண்டிக் கொண்டனர். பின், மனமுவந்து அய்யாவாளின் தந்தையின் திதியையும் நடத்திக் கொடுத்தனர்.  இப்பொழுதும் ஒவ்வொரு கார்த்திகை மாதம் அமாவாசையன்று அக்கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக ஐதீகம். 







4 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்

    மைசூர் திவான் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் தன் பதவியை துறந்து தென்னகத்தில் காவிரி ஆற்றங்கரைகளில் உள்ள சிவபெருமான் ஸ்தலங்களில் தரிசனம் பெற்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் சொரூபத்தில் மயங்கி அங்கேயே தினமும் தரிசனம் செய்ய திருவிசைநல்லூரில் வீடு எடுத்து தங்கியதும்
    தகப்பனாரின் திதியன்று தாழ்குல ஏழையாக வயோதிக வடிவில் வந்த சிவபெருமானின் பசியைப் போக்க திதிக்காக சமைத்த உணவை வேதியர்கள் சாப்பிடும் முன் அந்த வயோதிகருக்கு சாப்பிட கொடுத்ததால் காசிக்குப் போய் கங்கையில் நீராடிவிட்டு வந்தால் தான் தகப்பனாரின் திதியை செய்வதாக வேதியர்கள் கூறிவிட்டு சென்றதனால் சிவனாரின் அருளால் அவர் வீட்டு கிணற்றிலேயே கங்கை பிரவாகித்து அருள் செய்த நாள் கார்த்திகை மாதம் அமாவாசை என்று அறிந்தோம். நாளை கார்த்திகை மாத அமாவாசை - 4.12.21

    இவ்வாறு ஒவ்வொரு நாளின் விசேஷத்திற்கு காரணமாக அமையும் சரித்திரங்களை தங்கள் மூலம் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்

    நன்றி
    - V. Sugavanam

    ReplyDelete
  2. நன்று வசந்தி
    தங்கள் நற்பணி தொடரட்டும்

    ReplyDelete