Wednesday 15 December 2021

மார்கழி மாத சிறப்புகள்.

 




சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி ஆகும். மார்கழி  மாதத்தை " பீடை" மாதம் என்பார்கள். பீடுடை மாதம் என்பது மருவி பீடை என்றாயிற்று. 'பீடு' --அழகு, மிடுக்கு, இளமை, பெருமை, கம்பீரம் என இன்ன பல பொருள்களைத் தரும்.

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே! 
என திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் இதற்கு மேற்கோளாகக்
 கொள்ளலாம்.
தேவர்களுக்கு மார்கழி மாதம் அதிகாலை நேரமாகும். அதனால், இம்மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ்த்தாமல், பூஜைக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. 
வியாழக்கிழமை டிசம்பர் 16 ஆம் தேதி 2021  முதல் மார்கழி மாதம் தொடங்குகிறது. அன்று முதல் சிவா, விஷ்ணு  கோயில்களில் தனுர் மாத 
பூஜை விசேஷமாக நடக்க இருக்கிறது. 



       ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரால் துளசிச் செடியின் அருகில் கண்டெடுக்கப்பட்டு "கோதை" என்று பெயர் சூட்டப்பட்டவர் "ஆண்டாள்". பன்னிரு ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். பூமித் தாயின் அவதாரமாகக் கருதப்படுகிறார். சிறு வயது முதலே தந்தையிடம் வைணவ நூல்களை கேட்டே வளர்ந்ததனால், கண்ணனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவராய் திகழ்ந்தார்.தன்னை கோபிகையாகவே நினைத்து, மார்கழியில் கண்ணனை வழிபடும் முறையை, "பாவை நோன்பினை" பற்றி இவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும்  "திருப்பாவையாக" பிரபலமாக பாடப்பட்டு வருவது சிறப்பு.  



மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து, இயற்றப்பட்ட பாடல் தொகுப்பு "திருவெம்பாவை" ஆகும். மாணிக்கவாசகரால் திருவண்ணாமலையை தரிசித்த பொழுது பாடப்பெற்றது. 
இதுவும் மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் இருக்கும் "பாவை நோன்பின்" வழிபாடாக அமைந்துள்ளது. மொத்தம் இருபது பாடல்களைக் கொண்டது.சிவத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்பது போலவும், அதிகாலையில் சிவபிரானின் புகழ் பாடியவாறு நீராடச் செல்லுதலையும், வேண்டுதல்களை கூறுவது போலவும், நீராடுதலைக் குறிப்பதாகவும் உள்ளது. 'எம்பாவாய்' என்ற மொழியால் இறுதியில் நிறைவுறுவதால், உயர்வு கருதி 'திருவெம்பாவை' என்ற பெயர் காரணத்துடன் போற்றப்படுகிறது.






பக்தர்கள் வைகறைப் பொழுதில் அதாவது சூரியன் உதிக்கும் முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை குழுவாக கோயிலிலோ அல்லது வீதியில் ஊர்வலமாக திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பஜனைப் பாடல்கள் பாடி, வழிபடுவர். இவ்வாறு பாவை நோன்பு இருந்து திருப்பாவை, திருவெம்பாவை படிப்பதனால் விரைவில் திருமணம் கைக்கூடுமென்பது நம்பிக்கை. 
இம்மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் வாசலை அடைத்து பெரிதாக வண்ண வண்ண கோலங்களை போடுவர். 



    இந்த மார்கழி மாதத்தில் ஓசோன் வாயு அதிகாலை நேரத்தில் மிக அதிக அளவில் வெளிவரும். இது உடலுக்கு மிக ஆரோக்கியமானது என்பதனால் நம் முன்னோர் அதிகாலையில் கோலம் இடும் வழக்கத்தை உருவாக்கினர்.  

2 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்

    மார்கழி மாத சிறப்புகள் பற்றி அருமையாக விளக்கி கூறியுள்ளீர்கள்

    திருப்பாவை ஆண்டாள் ளால் இயற்றப்பட்டு
    திருவெம்பாவை மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டு
    மார்கழி மாத அதிகாலை வேளையில் இவற்றைப் பாடி மக்கள் வீதிவலம் வருவது அருமை. அதிகாலை நேரத்தில் வெளிவரும் ஓசோன் வாயு மூலம் வீதி வலம் வருபவர்களின் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. இவ்வேளையில் பெரியதாக வண்ண வண்ண கோலங்கள் வீட்டு வாசலில் கோலம் போடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை பொழுது என்பதால் இந்த மாதத்தில் திருமணம் நடைபெறாது என்றும் பூஜைக்கான மாதம் என்றும் அறிந்து கொண்டோம்.

    நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete