Friday 3 December 2021

குச்சனூர் சனிபகவான் ஆராதனை 4.12.2021

 



முன் காலத்தில் குலிங்க நாட்டை நல்லமுறையில் ஆண்டு வந்த 'தினகரன்' எனும் மன்னனுக்கு நெடுங்காலமாக குலம் விளங்க வாரிசு இல்லாமல் இருந்தது. சிவபெருமானிடத்தில் ஆழ்ந்த பக்தியுடன் விளங்கிய அவனுக்கு, அவன் மனக்குறையைப்  போக்கும் வண்ணம் 'அசரீரி' ஒன்று,. மன்னவனே! உன் இல்லம் நாடி வரும் ஒரு அந்தணச் சிறுவனை மகனாக தத்தெடுத்து வளர்க்கவும். அதன் பின்னரே    உனக்கு மகன் பிறப்பான் என ஒலித்தது.
     அவ்வண்ணமே, ஒரு நாள் ஆதரவற்ற அந்தணச் சிறுவன்   எப்படியோ அவர்களை வந்தடைய, அரசனும் அரசியும் அகமகிழ்ந்து, 'சந்திரவதனன்' எனும் அச்சிறுவனை உயிரினும் மேலாக பாசம் காட்டி வளர்த்தனர். அதன்பின், அசரீரி வாக்கின் படி, ராணியும் கருவுற்று அழகிய ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். 'சுதாகன்' என அவனுக்கு பெயர் சூட்டி இரு குழந்தைகளையும் சமமாக பாவித்தனர். சுதாகனை விட வளர்ப்பு மகனான சந்திரவதனன், அறிவும் ஆற்றலும் திறமை மிக்கவனாகவும் திகழ்வதைக் கண்ட மன்னன், சிறிதும் தயங்காமல், சந்திரவதனனையே தனக்கு அடுத்த அரசனாக முடிசூட்டினான்.
   இந்த நிலையில், மன்னன் தினகரனுக்கு ஏழரைச் சனியின் ஆதிக்கம் தொடங்கியது. அதனால் பெரும் துன்பத்திற்கு ஆளானான். தன்னிடம் அன்பு காட்டி அரசனாகவும் ஆக்கிய தன், வளர்ப்புத் தந்தை படும் இன்னலைக் கண்டு சகிக்க முடியாமல் தவித்த சந்திரவதனன் ஜோதிடர்களிடம் இதற்கான பரிகாரம் பற்றி வினவ, சனி பகவானை தரிசித்து வர, அவரது உடல் நிலை சரியாகலாம் எனக் கூறினர்.

    உடன் சிறிதும் தாமதியாமல், தென்னகம் அடைந்து சனீஸ்வர பகவான் வழிபாடு செய்யப் புறப்பட்டான். தேனி மாவட்டம் 'சுரபி நதி' அருகில் செண்பகநல்லூர் எனும் ஊரை அடைந்து, இரும்பினால் தனக்குத் தோன்றியவாறு சனி பகவான்  உருவச்  சிலையை நிறுவி, பூசணி காயைக் குடைந்து குங்குமம் இட்டும்,
கரும்புகளைத் துண்டுகளாக்கி பரிகாரம் செய்து பூஜித்து  பகவானே! எனது தந்தையின் அனைத்து   துன்பங்களையும் எனக்குக் கொடுங்கள். அவரை இத்துன்பத்திலிருந்து   விடுவியுங்கள் என மனமுருகி பிரார்த்தித்தான்.
  அவனது தூய அன்பில் மனமிரங்கிய சனி பகவானும்   அவனுக்கு  காட்சி கொடுத்து. அவரது முற்பிறவியின் வினைப் பயனே இந்த அல்லலுக்கு காரணம். உனது அன்பிற்கு கட்டுப்பட்டு, ஏழரை ஆண்டு கால தண்டனையை ஏழரை நாழிகையாகக் குறைத்து,  உனக்கு வழங்குகிறேன். அதுவும் உன் முற்பிறவியின் பயனால் தான் இதுவும் விளைந்தது என்று அருளினார்.   
 

அது சமயம்  சுதாகன்    அண்ணனைப் பிரிந்து இருக்க முடியாமல், தமையனைத் தேடி புறப்பட்டான். 
இருவரையும் பிரிய மனமில்லாமல், தன் உடல் நலம் அடைந்த நிலையில் மன்னன் தன் இரு புதல்வர்களையும் தேடிப் புறப்பட்டான்.
  சந்திரவதனனை சனியின் தாக்கம் பீடித்ததால்,  சந்திரவதனன் பூஜை செய்த குங்குமம் தடவிய பூசணியும் கரும்புத் துண்டுகளும் அறுபட்ட தலை மற்றும் கைகள் போன்று  மன்னனுக்கு காட்சியளிக்க, சுதாகனை கொன்றுவிட்டதாக எண்ணி தன் வாளை உருவி, சந்திரவதனனின் தலையைக் கொய்ய முற்பட்டான். உடன் சனி பகவானும் அங்கு தோன்றி, உண்மை உணர்த்தி, ஏழரை நாழிகை காலக் கெடு முடிந்தது . இனி கவலை வேண்டாம். என்றுரைத்து, தனக்கு இங்கு கோயில் எழுப்பி வழிபாடு நடத்த கட்டளையிட்டார். 
அச்சமயம் சுதாகனும், தாமதமாக அவ்விடத்தை வந்து அடைய, உண்மை உணர்ந்து மன்னன் மனம் வருந்தி சந்திரவதனனிடம்  மன்னிப்பு வேண்டினார். 
பின், அங்கே சுயம்புவாக சனி பகவான் கிடுகிடுவென லிங்கமாக வளர்ந்து அருள் பாலித்தார். தங்கள் இன்னல்களைக் களைந்த சனி பகவானுக்கு 'குச்சுப் புற்களால்' கூரை வேய்ந்து கோயில் எழுப்பினான் சந்திரவதனன். அதுமுதல் 'குச்சனூர்' என அழைக்கப்படலாயிற்று. 
சனி பகவான் ரகு வம்சத்தில் உதித்தவர் ஆதலால், திரு நாமம் இட்டும் சிவபக்தன் ஆனதால் பட்டையும் இடப்பட்டிருக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அம்சமும் அடங்கியவர் என்பதால், இவர் ஆறு கண்களுடன் காட்சியளிக்கிறார்.
பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்களிலோ அல்லது உச்சந்தலையில் தான் சனீஸ்வர பகவான் இடம் பெற்றிருப்பார். ஆனால் இந்த குச்சனூரில் மூலவராக பிரதான மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
    மூன்று வேளையும் தவறாமல் பூஜை நடக்கும் இத்தலத்தில், உச்சிக் கால பூஜை நிறைவுற்ற பின், காகத்திற்கு அன்னம் படைத்து காகம் உண்ட பின்னரே, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்கிறார்கள். 





ஏதாவது தவறு நிகழ்ந்திருந்து அப்படி காகம் உணவை உண்ண மறுத்தால், அன்றைய நிகழ்ச்சிகளை அப்படியே நிறுத்தி வைத்து, பூசாரி முதல் பக்தர்கள் வரை அனைவரும்  காகத்திடம் மன்னிப்பு வேண்டி பிரார்த்திக்கின்றனர். அதன் பின் காகம் உணவை ஏற்கும் அதிசயம் இன்றும் நடப்பதாகக் கூறுகின்றனர்.

6 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்

    மன்னன் தினகரன், தத்துப் பிள்ளை சந்திர வதனன், மகன் சுதாகரன் மூவருக்கிடையே உள்ள அன்பை பார்க்கும் போது கண்கள் பனிக்கிறது.

    இதனால் உருவான சனிபகவான் பிரதானமூர்த்தியாக சுயம்புவாக குச்சனூரில் அருள்பாலிப்பதும், நாமம் மற்றும் விபூதி பட்டையும் அணிந்தவராக 6 கண்களுடன் காட்சி தருவதும்
    காகத்திற்கு உணவு படைத்து அவை உண்ட பிறகே பக்தர்களுக்கு பிரசாதம் அளிப்பதும் சிறப்பு.
    நாளை 4.12.21 அன்று குச்சனூர் சனி பகவானுக்கு ஆராதனையின் போது அவரிடம் அருள் பாலிக்குமாறு பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

    நன்றி மேடம்

    - V. Sugavanam

    ReplyDelete
  2. மிக அருமையான ஸ்தல புராணம்
    நன்றி வசந்தி

    ReplyDelete
  3. Thank you for your kind message

    ReplyDelete