Saturday 11 December 2021

திருப்பெருந்துறை ​ - மாணிக்கவாசகர்



திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகரை சிவபெருமான் ஆட்கொண்ட தலம் "திருப்பெருந்துறை'. குளம், ஆறு என நீர் நிலைகளில் மக்கள்  இறங்கி நீராட வசதியாக இருப்பதை'துறை' என அழைப்பர். அவ்வண்ணமே, இறையருளை பேரின்ப நிலையை மாணிக்கவாசகர் பெற்ற  இடமாக அமைந்ததாலும், அவர் போலவே நாம் அனைவரும் இத்தலத்து இறைவனை சரண் புக பிறவிப் பெருங்கடலைக் கடந்து ஈடில்லா பேரின்ப முக்திநிலையை அடையலாம் எனும் மெய்ப்பொருள் தத்துவத்தை விளக்கும் முகமாக, இத்தலம் 'திருப்பெருந்துறை' என அழைக்கப்ப்டுகிறது.


        பாண்டிய மன்னனிடத்தில் தலைமை அமைச்சராக பணிபுரிந்த வாதவூரார், மன்னனின் கட்டளையின் பேரில் சோழ நாட்டிற்கு குதிரைகளை வாங்குவதற்காக புறப்பட்டார். வழியில் வாதவூராரை ஆட்கொள்ளும் பொருட்டு, 'குருந்த மரத்தடியில்' சிவபெருமான் சிவயோகியாய் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமாய் அமர்ந்திருக்க, அந்த தெய்வீகத்தில் தன்னை மறந்தார். தான் மேற்கொண்டு வந்த பணியையும்  மறந்தார். சிவயோகியிடம் சிவஞானபோதம் உபதேசம் பெற்றார். யோகி பின் வாதவூராரின் காதில் 'பஞ்சாக்ஷரம்' ஓதி தீக்ஷை அளித்தார். உடன் வாதவூரார், யோகியின்  பாதம் தன் தலையில் படும்படியாக விழுந்து வணங்கினார். அவரது பாதம் இவர் தலையில் படவும், சிவஞானம் பெற்றவராய் எம்பெருமானைப் புகழ்ந்து பாடல்களைப் பாடலானார். 
  எம்பெருமானும் மகிழ்ந்து, வாதவூரா! நீ பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கமாய் இருக்கிறது. அதனால் இன்று முதல் நீ "மாணிக்கவாசகன்" எனப்படுவாய். அதோடு, இத்திருக்கோயிலையும்  புதுப்பிக்கும்படி கூறி மறைந்தார். அப்பொழுது தான்  வந்தது இறைவன் என உணர்ந்தார். 




  பின் மன்னன் அளித்த பொற்காசுகளைக் கொண்டு, அவ்விடத்தில் கோயில் கட்டினார். சிவபிரான் தக்ஷிணாமூர்த்தியாக   இருந்து உபதேசம் செய்ததால்,   ஆவுடையார்   'தெற்கு' திசையில் அமைந்திருப்பது சிறப்பு. அதனால் தம் குழந்தைகளின் கல்வி அறிவு மேம்பட, இத்திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர்.  
இத்திருக்கோயிலில் லிங்கம் இல்லாமல் அதாவது உருவமற்றவராக, அருவமாக சதுர வடிவில் ஆவுடை மட்டுமே இருக்கும். அடையாளத்திற்காக ஒருகுவளை கவிழ்க்கப்பட்டிருக்கும் . இக்குவளை உடலாகவும் அதனுள் இருப்பது ஆத்மாக்கள் எனவும், ஆத்மாக்கள் இறைவனிடமே தோன்றி திரும்பவும் வந்து அடைவதான தத்துவத்தை உணர்த்துகிறது. அதனால், இக்கோயில் ஆவுடையார் கோயில் என்றும் இறைவன் 'ஆத்ம நாதன்' எனவும் அழைக்கப்படுகிறார்.

அத்துடன் பக்தியின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குத் தான் இறை திரு உருவம் தேவை. பக்குவமடைந்து அனைத்தும் பரப்ரும்மம் என்ற ஞானம் கைவரப் பெற்ற பின், உருவ வழிபாடு தேவையில்லை. அவர்கள் தான் வேறு இறைவன் வேறல்ல என்ற உண்மையை அறிந்தவர்களென்பதையும் உணர்த்துகின்றது.



மாணிக்கவாசகரே இத்திருக்கோயிலின் மூலவராக கருதப்படுகிறார். இததலத்தில் சிவபெருமான் மூலஸ்தானத்தில் அரூபமாகவும், குருந்த மரத்தில் அருவ உருவமாகவும், மாணிக்கவாசகர் உருவமாகவும் அருளுகின்றனர்.

மாணிக்கவாசகர் இறைவனின் ஜோதியில் ஐக்கியமானதால், இங்கு காண்பிக்கப்படும் 'தீபாராதனை" பக்தர்களுக்கு கண்களில் ஒற்றிக் கொள்ள வெளியே எடுத்து வரப்படுவதில்லை. அந்த தீப ஜோதியே இறை தரிசனமாக வணங்கப்படுகிறது.



12.12.2021 ஞாயிறு அன்று திருப்பெருந்துறை, மாணிக்கவாசகர் 'முதலமைச்சராய்" திருக்காட்சி" கோலம்.

அடுத்த நாள் 13.12.2021 கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமை இத்திருக்கோயிலில் விசேஷம் நிறைந்தது. குருந்த மரம், ஆவுடை மற்றும் மாணிக்கவாசகரும் சிவபிரானாகவே கருதி வழிபடப்படுகிறது. அதனால் கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமை குருந்த மரத்திற்கு  முன்பாக 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

 நான் என்ன பாவம் செய்தேன்? கடவுள் என்னை சோதிக்கிறார்! என்றெல்லாம் புலம்புவார்கள்!நாம் பிறருக்கு அறிவுரை கூறுவதை விட நாம் வாழ்ந்து காட்டினாலே அது நல்ல படிப்பினையாக இருக்கும். எந்தவொரு தவறுக்கும், தண்டனை, மன்னிப்பு மற்றும் பரிகாரம் உண்டு. அது கடவுளே ஆனாலும் இந்த நியதிக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

   அதை உணர்த்தும் வகையில், தக்ஷனின் மகளாக பிறந்து, தக்ஷன் செய்த யாகத்திற்கு  தன் கணவர் சிவபிரானின் வார்த்தையை மீறி, சென்றதற்காக, மன்னிப்பு பெறும் பொருட்டு அம்பிகை இத்திருத்தலத்தில், அரூப வடிவத்தில் தவமியற்றினாள். அதனால்
இத்தலத்தில் அம்பாளும் அரூபமாகவே இருக்கிறாள். அம்பாள் தவமியற்றிய பாதத் தடம் மட்டுமே உள்ளது. ஆனால் சன்னதி கதவு அடைக்கப்பட்ட நிலையில், அம்பாள் பாதத்தை ஜன்னல் வழியாக காணும்படி, கண்ணாடியில் பிரதிபலிக்கும்படி பக்தர்களின் தரிசனத்திற்கு வகை செய்துள்ளனர்.



இறைவன், இறைவி இருவருமே உருவமின்றி அருவமாகக் காட்சியளிப்பதால், இத்தலத்தில்" நந்தியும்" கிடையாது என்பது கூடுதல் தகவல்.



3 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்

    மாணிக்கவாசகர் நமக்குக் கிடைத்த வரலாறு மிக அற்புதம் !

    பாண்டி மன்னனின் முதலமைச்சர் வாதவூரார், சிவயோகி யாக வந்த சிவபெருமானின் அருளால் அவரிடம் தீட்சை பெற்று பின் அவர் கால் மேல் தன் தலை படும்படி வணங்கியதால் அழகான பாடல்களையும் இயற்றி அதனால் மகிழ்ந்த சிவபெருமானும் மாணிக்கவாசகன் என்று அவருக்கு நாமகரணம் சூட்டிய வரலாறு கேட்க தெவிட்டாதது.

    திருப்பெருந்துறை எனும் இந்த ஊரில் இந்த ஆவுடையார் கோவிலில் சிவபெருமான் மூலஸ்தானத்திலும் & குருந்த மரத்திலும் அருவமாகவும், மாணிக்கவாசகரே மூலவராகவும், தட்சனின் மகள் தாட்சாயினி சிவபெருமானின் சொல்லை மீறி தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்ற குற்றத்தால் மன்னிப்பு பெறும் பொருட்டு இத்திருத்தலத்தில் அருவமாகவும் இருந்து தவம் செய்த புராணத்தையும் அவர்தம் காலடி மட்டும் தெரியும்படி கதவு சாத்தி ஜன்னல் வழியாகப் பார்க்கும்படியும் அமைந்திருக்கும் தலபுராணம் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது.

    இத்திருக்கோவிலில் ஏன் தீபாராதனை மக்கள் ஒற்றிக் கொள்ள கொடுப்பதில்லை என்றும் ஏன் நந்திதேவர் இங்கு இல்லை என்றும் அறிந்தோம்.

    நாளை (12.12.21) மாணிக்கவாசகர் முதலமைச்சர் கோலத்தில் காட்சிதர இருப்பதையும்

    அதன் மறுநாள் (13.12.21) திங்களன்று கடைசி சோமவார சங்காபிஷேகம் நடப்பதையும் அறிந்தோம்.

    சங்காபிஷேகத்தை பற்றி தாங்கள் ஏற்கனவே சென்ற 21 நவம்பர் அன்று எழுதிய பதிவில் குறிப்பிட்டு இருந்தீர்கள்.

    மிக்க நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete
  2. G. Meenalochani
    Manikkavasahar tjiruprrndurai stalathin perumayai terindu kondom. Padivittadarku nandri. Vazhltukkal

    ReplyDelete
  3. ரொம்ப ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete