Sunday 19 December 2021

திருவாதிரை சிவனார் நக்ஷத்திரம் 🤔 ?



 



திங்கட்கிழமை 20.12.2021 அன்று "ஆருத்ரா தரிசனம்". ஆருத்ரா என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் "ஆதிரை" என்பதாகும்.. இந்த ஆதிரை என்பது சிவனுக்கு உகந்த நக்ஷத்திரம். ஆதலால் உயர்வு கருதி 'திரு' எனும் அடைமொழி சேர்த்து "திருவாதிரை' என அழைக்கப்படுகிறது. 27 நக்ஷத்திரங்களில் திருவாதிரை ஆறாவது ஆகும்.




இந்த திருவாதிரை வான் மண்டலத்தில், ஒரு கோணத்தில் மின்னும் வைரம் போலவும், சூலம் போலவும், மற்றொரு பரிமாணத்தில் "யாழ்' போன்ற அமைப்பிலும் காணப்படுவதாகவும் அதையும் விட "நீர்த்துளி" போல் தோற்றம் தருவதாகவும் கூறுவர். இதெல்லாம் சரி! எதற்காக? இத்தனை பீடிகை? எனில், சிவனது நக்ஷத்திரமாக "திருவாதிரை" கருதப்படுகிறது அல்லவா? அதன், முக்கிய  பின்னனியை அறிவோம்!!!
       ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்சோதிஎன 
போற்றப்படுபவர் சிவபெருமான். அப்படி, பிறப்பு இறப்பு இல்லாதவருக்கு பிறந்த நக்ஷத்திரம் மட்டும் எப்படி இருக்க முடியும்?
    தன் முன்னோர்களின் மோக்ஷத்திற்க்காக, கடுந்தவம் மேற்கொண்டார் பகீரதன். அவரது தவத்தின் பயனாய் பிரம்மனும் காட்சியளித்து, ஜீவ முக்தியளிக்கும் ஆகாய கங்கையை  இப்புவிக்கு கொண்டு வருவதற்கான வரம் அருளினார்.ஆயினும், ஆகாயத்திலிருந்து  வரும் கங்கையின் வேகத்தை இப்புவி தாங்காமல் பிரளயமே நிகழ்ந்தாலும் ஆச்சரியம் இல்லை!. அதனால் கங்கையின் 
வேகத்தை தாங்கக் கூடியவர் சிவபிரான் ஒருவரே. அதனால் அவரை நோக்கித் தவம் புரிய அறிவுறுத்தினார் பிரம்மதேவன்.



அவ்வண்ணமே,பகீரதனின்  ஆழ்ந்த தவத்தில் மகிழ்ந்து சிவனாரும், தன் ஜடாமுடியை விரித்து, ஆகாய கங்கையை  தன் தலையில் தாங்கி, ஜடாமுடியில் முடிந்து பின் மெதுவாக தன் ஜடாமுடியிலிருந்து வழிந்து பூமியில் ஒடும் படி செய்த இந்த பகீரதன் தவம் அனைவரும் அறிந்த கதை.



பூமியின் வடகிழக்குப் பகுதியில் 310 ஒளியாண்டுகள் தொலைவில் திருவாதிரை நக்ஷத்திரம் இருப்பதாக அறிவியலும் கூறுகின்றது. நீரோட்டம் நிறைந்த இந்த நக்ஷத்திர மண்டலத்தில் தான் ஆகாய கங்கையின் வாசம் இருந்ததாக "பகீரத புராணம்" உரைக்கின்றது. 
அதனால், புனித கங்கை நதி குடியிருந்த திருவாதிரை நக்ஷத்திரத்தை சிவனுக்கும் உகந்ததாக கருதி, இந்த புராண நிகழ்வை நினைவு கொண்டு, நம் பாவங்களைப் போக்கி புண்ணிய ஆத்மாவாக மாற்றும் சக்தி வாய்ந்த கங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வதன் மூலம் நாம் நன்றி கூறி முக்தியையும் வேண்டும் பிரார்த்தனையாக வழிபாடு நடத்தப்படுவதே இதன் முக்கிய குறிக்கோள்! தாத்பர்யம்!!!      
       


2 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்

    திருவாதிரை நட்சத்திரத்திற்கும் பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமானுக்கும் உள்ள சம்பந்தத்தை தங்களின் இப்பதிவின் மூலம் அறிந்தோம்.

    அத்துடன் பிரம்மதேவன் கூறியபடி பகிரதன் சிவபெருமானை நோக்கி தன் முன்னோர்கள் முக்தியடைய கங்கை நீரை வேண்டியதால், ஆகாய கங்கை சிவபெருமானின் தலையில் குடிகொண்ட வரலாறையும் அறிந்தோம்.

    ஆருத்ரா எனும் திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் கங்கை வாசம் செய்ததால் சிவபெருமானுக்கும் திருவாதிரை நட்சத்திரம் உகந்ததாக அறிந்தோம்.

    நம் பாவங்களைப் போக்கி புண்ணிய ஆத்மாவாக மாற்றி நமக்கு முக்தியையும் தரவல்ல கங்கை நீரால் நாளை (20.12.21) திருவாதிரையன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் என்றும் அறிந்தோம்.

    நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete