Sunday 1 October 2023

நரசிங்க முனையரையர் குருபூஜை புரட்டாசி சதய நக்ஷத்திரம்.

 



திருமுனைப்பாடி நாட்டு குறு நில மன்னராகத் திகழ்ந்த 'நரசிங்கமுனையர்'. சிறந்த சிவத் தொண்டின் காரணமாக நாயன்மார் வரிசையில் இடம் பெற்ற பெருந்தகை. சைவசமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை ஆவார்.  


      சடையனார் மற்றும் இசை ஞானியார் என்ற இந்த நாயன்மார் தம்பதியின் குழந்தை தான் சுந்தரர். இளவயதில் தன் நண்பர்களுடன் தேர் உருட்டி வீதியில் விளையாடி கொண்டிருந்த பொழுது வீதிஉலா வந்த மன்னன் நரசிங்கமுனையர் குழந்தையின் திவ்ய தேஜஸால் கவரப்பட்டு, தன் மகவாக வேண்டிப் பெற்று சுந்தரரது திருமண வயது வரை வளர்த்தவர்.   


         அரசராகத் திகழ்ந்தாலும் போர் எண்ணம் இல்லாது இறை பெருங்கருணையால் பகைவரை வென்று, திரு நீற்றுத் தொண்டே தனது வாழ் நாள் பயனாக வாழ்ந்தவர். சிவாலயங்களில் சிவன் சொத்துக்களை நன்கு பராமரித்து அதை பலமடங்காகப் பெருக்கியதோடு, நித்ய பூஜைகள் நல்ல முறையில் நடத்திவைப்பதிலும் மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டிருந்தார்

. சிவனுக்கு உகந்தது 'திருவாதிரை' நக்ஷத்திரம். ஒவ்வொரு மாத  திருவாதிரை அன்றும்  'திரு நீறு' தரித்து வரும் சிவனடியார்களுக்கு அன்னதானமிட்டு, நூறு பொற்காசுகள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  


   ஒரு சமயம், நெறி தவறிய வாழ்க்கையால் கொடும் நோய்க்கு ஆளான தூர்த்தன் ஒருவன்,இவரது இத்தொண்டைப் பற்றி அறிந்தவனாய், தானும் நெற்றி நிறைய திருநீறு பூசி, சிவனடியார் போல் வந்து அடியார்கள் வரிசையில் நின்றான். அவனைக் கண்டதும் மற்ற அடியார்கள் முகம் சுளித்து வெறுத்து ஒதுங்க, அங்கு நடப்பதை அறிந்த மன்னன், வெகு வேகமாகச் சென்று, சிவனடியார் போல் வந்துள்ள அந்த தூர்த்தனை, சிறிதும் முகம் சுளிக்காமல் வரவேற்று அன்போடு ஆரத் தழுவி, அவருக்கு அமுது அளித்து, தேவையான உதவிகளையும் செய்து, வழக்கத்துக்கு மாறாக 200 பொற்காசுகளை அளித்தார். 


அதாவது, இதன் உள்ளார்ந்த அர்த்தம் யாதெனில்,ஒருவன் எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும் அவன் தாங்கி இருக்கும் உயர் பதவிக்காக நாம் அவருக்கு மரியாதை செலுத்துவோம் அல்லவா?!. அதுபோல் தான்.  


  அவன் குணம் கெட்டவனாக இருந்தாலும், அவன் தாங்கி வந்த சிவச்சின்னத்திற்கு மரியாதை செய்வது, சிவபெருமானுக்கு ஆற்றும் தொண்டாகக் கருதுவது. அத்துடன், நல்லொழுக்கம் இல்லாதவனாயினும்  அனைவரையும் ஒன்று போல் பாவிக்கவேண்டும் என்பதே அடியார்களின் குண நலனாக இருப்பது. அதுதான் பக்குவம் அடைந்த நிலை. ஆனால் மற்ற அடியார்கள் அந்த பக்குவம் இல்லாததால், அந்த தூர்த்தனை வெறுத்து ஒதுக்குவதால், அவர்களுக்கும் பாவம் வந்து சேருமே என ஐயமுற்றார் முனையரையர். இதன் காரணமாக அவர்களது அறியாமையின் பிராயச்சித்தமாக இரண்டு மடங்காக பொற்காசுகள் அளித்து உபசரித்தார்.


மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட, தான் அதுபோல் நடந்து செய்து காட்டுவது மற்றவர்கள் மனதில் இன்னும் ஆழமாகப் பதியும் இல்லையா! 


அன்னாரது குருபூஜை  புதன்கிழமை புரட்டாசி சதய நக்ஷத்திரத்தன்று (செப்.27.2023) .







No comments:

Post a Comment