Monday 2 October 2023

திருவையாறு அமர தீர்த்தம்

 



ஐப்பசி அமாவாசைத் திரு நாளில்  திருநாவுக்கரசருக்கு  இறைவன் கைலாயக் காட்சி அளித்த திரு நாளாக திருவையாறில் கொண்டாடப்பட இருக்கிறது. அப்பர் என போற்றப்படும் திருநாவுக்கரசர், கைலாயம் சென்று இறைவனை தரிசிக்கவேண்டும் என்ற ஆவலோடு, தன் தள்ளாத வயதில், இமயமலைப் பயணம் மேற்கொண்டார். வயது முதிர்ச்சி காரணத்தால், நடக்க இயலாமல் போனதும், மனதில் பக்தியின் வலிமையால் தவழ்ந்து உருண்டு லட்சியத்துடன் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
அவரது இச்செய்கையால் மனம் நெகிழ்ந்த இறைவனும், சிவனடியாராக வந்து, அப்பனே கைலாயம் செல்வதற்கு இன்னும் நெடுந்தூரம் போகவேண்டும் என பலவாறு எடுத்துக் கூறியும், அவர் கொள்கை உறுதியைக் கண்ட எம்பெருமான், அவருக்காக அங்கு மானசரோவர் போல் ஒரு சிறு ஏரியை உருவாக்கி, அதில் முங்கி  திருவையாற்றில் ஐயாறப்பர் சூரிய புஷ்கரணியில் எழுவாய்! யாம் ! அங்கே உமக்கு கைலாய காட்சி அளிப்போம் என அசரீரியாக உரைத்து அவ்வண்ணமே காட்சியளித்தார். அதனால், திருவையாறு 'பூலோக கைலாயமாக' போற்றப்படுகிறது

நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பவர். நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர் எனப்பட்டார்.

இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது.

தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment