Monday 2 October 2023

அப்பூதியடிகள்

 



நம் குழந்தைகளை யாராவது பாராட்டி அன்பு செலுத்தி கௌரவித்தால், நம்மையே கௌரவித்தது போல் எப்படி அகமகிழ்வோம். அங்ஙனமே இறைவனும் தன்னிடத்தில் பக்தி செய்வதை காட்டிலும், தன் அடியாரை கௌரவித்து அன்பு காட்டினால் மிகவும் அகமகிழ்ந்து ஆட்கொண்டு விடுவார். 


      அப்பேற்பட்ட தன்னலமற்ற அன்பும், பக்தியும் கொண்டு அப்பர் எனும் திருநாவுக்கரசருக்கு தொண்டு செய்து நாயன்மார்களில் ஒருவராக முக்தி அடைந்தவர் " அப்பூதி அடிகள்".


   அன்பே சிவம் என்பதை விளக்க அமைந்ததே பெருந்தகை அப்பூதி அடிகளாரின் சரித்திரம்.


    தை மாதம் சதய நக்ஷத்திரத்தில் அவதரித்த அவரது குருபூஜை ஃபிப்ரவரி 3 ஆம் தேதி வியாழனன்று இவ்வருடம் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரின் வாழ்க்கை வரலாற்றையும்,  சிவதொண்டையும் பலர் வாயிலாக கேள்வியுற்ற அப்பூதி அடிகள், அவர்பால் மாறாத அன்பும் பக்தியும் கொண்டார். அவர்தம் பக்தியை மெய்ப்பிக்கும் வண்ணம் தனது செல்வத்தை கொண்டு மக்களுக்கு செய்யக்கூடிய அறக்கட்டளைகளுக்கும் திருநாவுக்கரசு தண்ணீர் பந்தல், தர்ம சத்திரம், அன்னதானம் என அனைத்தையும் அன்னாரது பெயரிலேயே செய்துவந்தார். 


     பற்பல தலங்களுக்கும் சிவதொண்டு புரிந்தவாறே, அப்பூதி அடிகள் வசிக்கும் 'திங்களூரை' அடைந்தார் நாவுக்கரசர். தெருவெங்கும் தனது பெயரில் பற்பல அறக்கட்டளைகள் நடந்தேறுவதை கண்டு வியப்பு மேலிட,  அது பற்றிய தகவல்களை மக்களிடையே கேட்டறிந்து தன்மேல் பக்தி கொண்டுள்ள அப்பூதி அடிகளை சந்திக்கும் ஆவலுடன் அவர் இல்லம் இருக்கும் வழி கேட்டறிந்து நாடி அடைந்தார். 


     ஆம்! அன்பை நாடி சிவம் சென்றடைவதில் வியப்பில்லையே!?. அப்பூதியாரிடத்தில் நாவுக்கரசர், உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் குடும்பத்தார் பெயரிலோ நற்காரியங்களை செய்யாமல், ஏன்? யாரோ? எவரோ? திருநாவுக்கரசர் பெயரில் நடத்துகிறீர்கள் என வினவினார்.


அப்பூதி அடிகளும் நாவுக்கரசரின் வாழ்க்கை வரலாற்றை கூறி, அப்பேற்பட்ட மகானுக்கு நான் செய்யும் தொண்டு இது என பணிவாக பதிலளித்தார். 


அவரது அன்பில் நெகிழ்ந்து, தானே அந்த திருநாவுக்கரசர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.


    தான் வணங்கும் தெய்வம் தன்னை நாடி வந்து தரிசனம் தந்ததை எண்ணி உள்ளம் உருகினார் அப்பூதி அடிகள்.  தன் இல்லத்தில் உணவருந்த வேண்டும் அவருடன் அவர்தம் துணைவியாரும் பணிந்து வேண்டவே, அவர்கள் அன்பிற்கு கட்டுப்பட்டு இசைந்தார். 


  அமுது தயாரான நிலையில், அப்பூதி அடிகளாரின் மகன் தோட்டத்திற்கு சென்று உணவருந்துவதற்காக வாழையிலையை எடுத்து வரச் சென்ற இடத்தில் பாம்பு தீண்டி இறந்தான். வாராத தன் கண்கண்ட தெய்வம் வீடு தேடி வந்த நிலையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது, அவர் உணவு உண்பதற்கு தடையாகி விடக்கூடாது என்பதற்காக தங்கள் துக்கத்தை மறைத்து      நாவுக்கரசருக்கு   உணவு பரிமாறினர். தன்னுடன் அவர்கள் குழந்தையும் அமர்ந்து சாப்பிட அவர் அன்போடு வேண்டிட, வேறு வழியின்றி தங்கள் குலக்கொழுந்து நாகத்தின் விஷத்திற்கு பலியானதால், அவன் தற்போது உதவமாட்டான் என கதறிட  அதிர்ந்தார் நாவுக்கரசர். 


     இது இறைவனின் திருவிளையாடலே அன்றி வேறென்ன? என்று கூறி சிறுவன் உடலை கொணரச் செய்து இறைவன் மீது  பதிகம் பாடி சிறுவனை உயிர்ப்பித்து அருளினார். அப்பூதி அடிகளார் குடும்பத்தினரின் அன்பும், பண்பும், பக்தியின் மேன்மையையும் மெச்சி ஆசிர்வதித்து விடைபெற்றார். 

"ஒரு நம்பி அப்பூதி அடிகளாரின் அடியார்க்கும் அடியேன் "

என்று பின்னாளில் அவதரித்த சுந்தரமூர்த்தி நாயனாரும் அவர் பக்தியை வியந்து பாடினார். 




No comments:

Post a Comment