Sunday 1 October 2023

ஏனாதிநாத நாயனார்.புரட்டாசி உத்திராடம்

 



சைவ சமயத்தவர்களான அறுவத்து மூவர் என சிறப்பித்துக் கூறப்படுவோரில் 'ஏனாதி நாத நாயன்மாரும்' ஒருவர். சோழ நாட்டில் 'ஏன நல்லூர்" என்ற ஊரச் சார்ந்தவர். ஊர் பெயரே இவரது சிறப்புப் பெயராகவும் ஆயிற்று. சிவபிரானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்து அவரது அடியார்களுக்கு அருந்தொண்டு புரிந்தார்.

ஏனாதி நாதர் ஒரு தலைசிறந்த போர்வீரர். இவர் பல மாணாக்கர்களுக்கு போர்க்கலை பயிற்சி அளித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சிவனடியார்களுக்கு அருந்தொண்டு செய்து வந்தார். இவர்தம் தாய்வழி உறவினனான "அதிசூரன்" என்பவனும்  இவர் போலவே போர்கலைகளை பயிற்றுவிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்தான்.


   ஆயினும், இக்கலை பயில விருப்பங்கொண்டவர்கள் ஏனையோர் ஏனாதி நாதரிடமே மாணாக்கராக சேர விரும்பினர். இதனால் அதிசூரனுக்கு வருவாய் குறைந்ததால், ஏனாதியாரிடம் கோபம் கொண்டான். நாளடைவில் அதுவே  அவர்பால் வெறுப்பையும் கூடவே பொறாமையும் கொள்ளச் செய்தது. 


   உடன் அவன் தனது படை வீரர்கள் பரிவாரங்களை திரட்டிக் கொண்டு, ஏனாதியாருக்கு போர் அறைகூவல் விடுத்தான். நம் இருவரில் யார் வெற்றி பெறுகின்றனரோ, அவரே,  "போர்க்கலை பயிற்றுவிக்கும் ஆசானாகும்  உரிமையை பெறவேண்டும் என்றான். ஏனாதியாரும் அதற்கு சம்மதித்து தன் மாணாக்கர்கள் மற்றும் தன் சுற்றத்து வாள்வீரர்கள் புடைசூழ அதிசூரனுடன்,


  காளைகள்   புடைசூழ, சிங்கம் வீறு நடை போடுவது போல், எதிரிப் படையுட்ன் மோதினார். 


      அதிசூரனாலும், அவனது படையாலும் இவர்களை வெகு நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் தோற்று ஓடினர். ஆயினும், அதிசூரனால் இந்த அவமானத்தை தாங்கமுடியவில்லை. ஏனாதியாரை வெற்றிகொண்டேயாக வேண்டும் என்ற வேட்கையுடன், அவர்தம் பலம், பலவீனம் இரண்டையும் ஆராய்ந்து திட்டம் ஒன்றும் தீட்டினான். 


அதன்படி, அதிசூரன், நாளை அதிகாலை வேளையில் நம் இருவருக்கும் துணை யாரும் இன்றி கூட்டம் சேர்க்காமல், வேறொரு களத்தில் நாம் இருவரும் தனித்துப் போரிடுவோம்  என ஏனாதியாரிடம் தன் ஏவலாள் மூலம் தகவல் அனுப்பினான். 


    அவ்வண்ணமே! சிந்தையுள் சிவ நாமத்தையே கொண்டு, அதிசூரனுக்காக விடியற் பொழுதில் காத்து நின்றார் ஏனாதியார். அப்பொழுது அதிசூரன், இடக்கையில் கேடயம் கொண்டு முகத்தை மறைத்தவாறும் வலக்கையில் வாள் ஏந்தியவண்ணம் போர்க்களம் புகுந்தான். உடனே ஏனாதியாரும் அவனுடன் மோதி  போர்புரிய ஆயத்தமானார். உடன் அதிசூரன் தன் முகத்தை மறைத்திருந்த கேடயத்தை விலக்கவும், அவனது முகத்தைக் கண்டு அதிர்ந்தவராய்,                     ஐயகோ! கெட்டேன் நான் என்று பதறினார்!! ஏனாதியார்


.



ஆம்! சிவன் பால் அவர் கொண்ட பக்தியை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, அதுவரை 'திருநீறு" கண்டிராத தன் பாழும் நெற்றி நிறைய தூய்மையான வெண் திருநீறு தரித்து ஆனால் உள்ளத்தில் கருமையான வஞ்சக எண்ணத்துடனும் வந்திருந்தான் அதிசூரன்


ஆஹா! சிவனடியாராகி விட்ட இவரை எதிர்க்கத் துணிவது அந்த எம்பெருமானையே எதிர்த்தது போல் ஆகுமே ! நான் எப்படி இவருடன் போரிடுவேன்?. என போர் புரியும் செயலற்று தன் வாளையும் கேடயத்தையும் தன்னிடமிருந்து விலக்க எண்ணினார்  ஆனால், ஆ யுதம் இல்லாமல் நின்றவரை கொன்றார் என்ற பழி சிவனடியாராகிவிட்ட அதிசூரனுக்கு வந்தடையுமே என்றெண்ணி போர் செய்வது போல் பாவனையாக  நின்றார். 


   ஆயினும்  இதை எதிர்பார்த்து காத்திருந்த அதிசூரன், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் எண்ணி வந்த செயலை செய்து முடித்தான்.

எதிரியின் வாள் தன்னை வேரறுக்க வந்த நிலையிலும் பந்த பாசத்தை அறுத்து சிவசிந்தையிலேயே நின்ற ஏனாதியாருக்கு எம்பிரான் காட்சியளித்து, அவர் உயிர் பிரியும் வேளையில் இனி பிறவா நிலையளித்து ஆட்கொண்டார்.

செப்.25. 2023 திங்கட்கிழமை புரட்டாசி உத்திராடம் நக்ஷத்திரத்தன்று ஏனாதியாரின் ஜயந்தி தினமாகும்.





No comments:

Post a Comment