Monday 2 October 2023

யுகாதி எனும் தெலுங்கு வருட பிறப்பு

 



யுகாதி என்பது புது வருடத்தின் முதல் நாளாகும். நாம் பிறந்த நாள் கொண்டாடுவது போல், வருடத்தின் முத்ல் நாளை, புதியதாகத் தொடங்கும் அவ்வருடம் நல்ல முறையில் எல்லா வளங்களையும் பெற்று வாழ வழி செய்யவேண்டும் என்ற வேண்டுதலின் நோக்கமாக கொண்டாடப்படுகிறது. 


 சந்திரஉதயத்தினை அடிப்படையாகக் கொண்டு, தெலுங்கு, கன்னட மற்றும் மராத்திய மக்களின் காலக் கணிப்பு இருப்பதால், தமிழ் வருடப் பிறப்பிற்கு முன்னதாகவே, தெலுங்கு வருடப் பிறப்பின் கால அட்டவணை வித்தியாசப்படுகிறது. இதன் காரணமாகவே அமாவாசை அடுத்த சந்திரனின் உதய தொடக்க நாளான பிரதமை தினத்தில் 'சைத்ரம்' முதல் மாதம் துவங்குகிறது. இதில் அமாவாசையின் மீதி சிறிதளவு அடுத்த நாள் இருந்தால் கூட, அதற்கும் அடுத்த நாளிலேயே யுகாதி வருடப் பிறப்பினை கொண்டாடுகின்றனர். 


அதனால் இவ்வருடம் செவ்வாய் இரவு 12 மணி வரை அமாவாசை முடிந்து அதன் பிறகு பிரதமை திதி துவங்குகிறது. அதாவது சூரிய உதயத்திற்கு முன்பே அமாவாசை முடிவுற்று, புதன்கிழமை 22 ஆம்தேதி இரவு கிட்டத்தட்ட 10.30 மணி வரை இருப்பதால் 22.3.2023 யுகாதியின் முதல் நாளாக தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. 


இந்த ஒரு யுகாதியில் தான் கலியுகம் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட இந்த மஹாயுகங்களின்  வரலாற்றையும் நாம் தற்பொழுது எந்த காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது பற்றியும் அறிவோமா?! 


  தற்பொழுது நடந்து கொண்டிருப்பது, ஸ்வேத வராஹ கல்பாதி வைவஸ்வத மன்வந்தர யுகாதி. 


   அதாவது, ஒரு மஹாயுகம் என்பது சத்ய அல்லது கிருதயுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் என நான்காக உள்ளன. இதுபோல் ஆயிரம் மஹாயுகங்கள் கொண்டது ஒரு "கல்பம்" ஒரு கல்பம் பிரம்மனின் ஒரு பகல் பொழுது. 


 இந்த ஒரு கல்ப காலத்தில் 14 மனுக்களும், 14 இந்திரர்களும் ஆட்சி மாறுவார்கள்

மனு என்பவர் பூமி அனைத்தையும் ஆட்சி செய்யும் மன்னர். அதுபோல் இந்திரன் தேவலோகத்தின் மன்னன். நாம் அனைவரும் மனுவின் புதல்வர்கள் என்பதால் " மானிடன் அல்லது மனிதன்" என அழைக்கப்படுகின்றோம். இப்படியாக 'மனு மற்றும் இந்திரனின்' வாழ் நாள் கால அளவு 71 மஹாயுகங்களாகக் கூறுவர். 

   ஒரு மனுவிற்கு 71 மஹாயுகங்கள் வீதம் 14 மனுக்களின் மஹாயுகம் நிறைவுறும் பொழுது பிரம்மனின் ஒரு பகல் பொழுது ஆகிறது. இந்த பகல் பொழுது முடிந்து பிரம்மனுக்கு இரவுப் பொழுது ஆரம்பிக்கும் பொழுது பிரம்மன் தூக்க நிலையில் இருக்க, எந்தவொரு மனுவோ, இந்திரனோ உலகமோ எதுவும் இன்றி பிரளயத்தால் அனைத்தும் இறைவனுள் ஒடுங்கிவிடும். பின், அடுத்த நாள் அவரது பகல் பொழுதில் கண்விழித்து தன் படைக்கும் தொழிலை திரும்பவும் ஆரம்பிப்பார்.
இப்படி ஆயிரம் மஹாயுகம் முடிந்ததும் பிரம்மனும் மிகப் பெரிய பிரளயத்தால் இறைவனிடம் ஒடுங்கி விடுவார். பிரம்மனின் ஒரு பகல் பொழுது ஆயிரம் மஹாயுகங்களைக் கொண்டது என பகவத் கீதையில் கிருஷ்ணரும் வலியுறுத்துகிறார். 
   அதாவது, இது காலத்தின் பதிவு ஆகும். விளக்கமாகக் கூறவேண்டுமெனில், நாம் எந்தவொரு நிகழ்விற்க்கும் இன்ன தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் நல்லது, கெட்டது என அந்த நிகழ்ச்சிக்கான பதிவாக பத்திரிகை அடிக்கிறோம் அல்லவா?  அத்துடன் பூஜை காலங்களில் சங்கல்பம் செய்து கொள்வது போன்றவை எல்லாம் நம்மைப் பற்றிய ஒரு முகவரி ஆகும்.



நீங்கள் கோயிலில் சங்கல்பம் செய்யும் பொழுது, அர்ச்சகர் கூறும் மந்திர மொழியினை கவனித்து இருப்பீர்கள்.   

"மமோபாத்த ....  என்று ஆரம்பித்து. ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ஸதி தமே   கலியுகே  ப்ரதமே  பாதே ஜம்பு த்வீபே பாரத வர்ஷே பரத கண்டே மேரோ : தஷிணே பார்ஸ்வே .....ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் .....என்று இப்படியாக சொல்லும் மந்திரத்தைக் கேட்டிருப்பீர்கள்.


அதாவது இதன் பொருள் யாதெனில், ஸ்வேத வராஹ கல்பத்தில் ஏழாவது மனு அரசனான  வைவஸ்வத மனுவின் ஆட்சியில் 28 {அஷ்டாவிம்ஸதி என்பது சமஸ்கிருதத்தில் 28 என்ற எண்ணிக்கையைக் குறிக்கும்} ஆவது மஹாயுகத்தின் கலியுகத்தில் பரத கண்டத்தில் 'ப்ரபவாதி' ஆண்டை முதலாகக் கொண்டு துவங்கும்  60 ஆண்டுகளில் சோபகிருது   வருஷத்தில் இந்த மாதத்தில் இன்ன தேதியில், இன்ன வம்சம் வழி வந்த இன்னாரது பேரன், மகன் அல்லது மகள் ஆகிய 'நான்' என நம்மைப் பற்றிய அடையாளத்தையே கூறி, குறிப்பிட்ட இந்த  நிகழ்ச்சியை நடத்துவதாக சங்கல்பம் செய்கின்றோம்.







No comments:

Post a Comment