Sunday 1 October 2023

வினாயகரின் அறுபடை வீடுகள்.

 



















தம்பிக்கு மட்டுமல்ல அண்ணனுக்கும் அறுபடை  வீடு .

விநாயகரின்  தம்பி முருகனுக்கு மட்டுமல்ல அவருக்கும் அறுபடை   வீடுகள்   உள்ளன 

அவைகள் முறையே : திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடவூர், மதுரை, காசி அல்லது (பிள்ளையார்பட்டி) மற்றும் திரு நாரையூர் இவைகளே அந்த அறுபடை வீடுகள் ஆகும். 

         திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நுழைவு வாயிலின் அருகே கொலுவீற்றிருக்கும் தொன்மை வாய்ந்த  'வினை தீர்க்கும் விநாயகர்" முதல் படை வீட்டு கணபதி ஆவார். விவேக சிந்தாமணியில்,  இடம் பெறும் "அல்லல்போம் வல்வினை போம்" எனும் பாடல் இவரைப் போற்றிப் பணிந்தே பாடப்பட்டது. 




இரண்டாம் படை வீட்டு கணபதி விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் 18 அடி ஆழத்தில் வீற்றி ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த "ஆழத்துப் பிள்ளையார்". இவருக்கென தனி கொடிமரமும்   அமைக்கப்பட்டுள்ளது. 

       மூன்றாம் படைவீட்டின்  அதிபதியாக அருள் பாலிப்பவர் 'திருக்கடவூர்" "கள்ள வாரணப் பிள்ளையார்" . பொதுவாக எந்தவொரு கோயிலிலும் பிள்ளையார் சன்னதி முதலில் அமைந்திருக்கும். ஆனால் இத்திருத்தலத்தில் மட்டும் சுற்றி வந்தே விநாயகரை தரிசிக்க வேண்டியிருக்கும். இக்கோயில் உருவாவதற்கு முதற் காரணமே இவர்தான் என்று கூறப்படுகிறது. 






தேவர்கள் பாற்கடலை அமிர்தம் கடைந்து எடுப்பதற்காக விழையும் போது இவரை வணங்க மறந்ததால், அமிர்த கலசத்தை கள்ளத்தனமாக எடுத்து, மறைத்து வைத்து திருவிளையாடல் புரிந்தார். இதனால் இவருக்கு "கள்ள வாரணர்" பெயர்க் காரணம் ஆயிற்று. அபிராமி பட்டர்  "இவர் மீது இயற்றியுள்ள "கள்ள விநாயகர் பதிகத்தில்" இந்நிகழ்வை  பதிவிட்டுள்ளார். இவராலேயே அமிர்த கலசம்   லிங்கமாக  இவ்விடத்தில் மாறி சிவபிரான் அமிர்தகடேஸ்வரராக எழுந்தருளக் காரணமானவராயும் விளங்கும் இவரது துதிக்கையில்  அமிர்த கலசத்தையும் காணலாம்.  

         நான்காம் படை வீட்டின் நாயகராக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளியிருக்கும், அருள்மிகு சித்தி விநாயகர். நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இவரை  வழிபட்டே பாண்டிய மன்னனுக்காக குதிரைகளை வாங்கச் சென்றதாக  திருவிளையாடல் புராணம் கூறுகிறது. 

            காசியில் "துண்டி ராஜகணபதியாக" காசி மக்களால் துண்டி மஹராஜ் என போற்றப்படும் இவரே ஐந்தாம் படை வீடாக கொண்டாடப்படுகிறார். காசிக்கு வருபவர்கள் இவரது உத்தரவு இல்லாமல் விஸ்வநாதரை தரிசிக்கவோ அல்லது ஊரை விட்டுச் செல்லவோ கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு வழக்கம். ஆயினும் காசிக்குச் சென்று இவரை வணங்க இயலாதவர்கள், இவருக்கு இணையாகக் கருதப்படும் பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகரை வழிபட காசிக்குச் சென்று வழிபட்ட புண்ணிய பலன் கிட்டும் என்றும் நியதி. கற்பக விநாயகரது கையில் 'சிவலிங்கம்' இருப்பதும் ஒரு சிறப்பம்சமாகும். 




கடலூர் மாவட்டத்தில் உள்ள 'திரு நாரையூரில்' அருளை வாரி வழங்கும் 'பொள்ளாப் பிள்ளையார்' ஆறாம் படை வீட்டின் நாயகர். சிற்பியின் உளியால் செதுக்கப்படாமல், சுயம்புவாக தோன்றியவர் என்ற காரணத்தினால், இவருக்கு இத்திருநாமம் விளங்குவதாயிற்று. நம்பியாண்டார் நம்பி மூலமாக, ராஜராஜ சோழனுக்கு "தேவாரத் திருமுறைகள்" கிடைக்கக் காரணமானவ்ர் இவரே ஆவார்.      

No comments:

Post a Comment