Tuesday 3 October 2023

ஆண்டாள் நாச்சியார் முதலாம் திருமொழி.

          முன்னுரை

பக்தியில் பலவகை உண்டு. இறைவனை பரம்பொருளை   அன்னையாக, தந்தையாக, குழந்தையாக, தோழனாக, தோழியாக, தான் தொண்டு செய்யும் அடிமையாக, காதலன் மற்றும் காதலியாக என தங்களுக்கு பிடித்ததாக பலவகையில் அடியார்கள் பக்தி செய்திருக்கிறார்கள். ஏன்? இன்னும் ஒருபடி மேலேயே சொல்வதாக இருந்தால், இறைவன் தன்னை   எதிரியாக    பாவிக்கக்   கூடியவர்களையும் அவர்கள் சதாசர்வ காலமும் தன்னைப் பற்றியே சிந்திக்கிறார்கள் என்ற ஒரேகாரணத்திற்காகவும் ஆட்கொள்ளும் கருணையுள்ளம் கொண்டவனே எம்பெருமான். 

   அந்த வகையில், இறைவனை தன் பக்தியை   காதலாய்    வெளிப்படுத்தி, அவன் கரம் பிடித்து, அவன் கமல மலர்த்தாளினை எப்பொழுதும் பற்றி இருக்கவேண்டுமென்ற ஆவலோடு, கவிச்சுவையோடு காதல் சுவையும் கலந்து, கண்ணனை இப்படியும் பக்தி செய்ய முடியுமென்று உலகுக்கு  உணர்த்திய, ஆண்டாள் நாச்சியாரது திரு மொழியின் அமுதத்தை, என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில், ஆண்டாள் நாச்சியாரது அனுக்கிரஹத்தோடு, "நாச்சியார் திருமொழி" பாசுர    விளக்கத்தினை  தங்களிடம் பகிர வந்துள்ளேன். பிழை பொறுத்து, நிறை கொண்டு எம்மை ஆசிர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.     
   நேற்று அதிகாலை வழக்கம் போல் பூஜையறையில், பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டே, ஸ்வாமி படங்களில் இருந்த பழம் பூக்களை நீக்கி புது மலரை வைக்க விழையும் போது, எம்மிடம் உள்ள சிறு ஆண்டாள் விக்கிரஹத்திற்கு பூ வைக்கும் சமயம், என்னுள் இனம் புரியாத ஒரு உவகை, உணர்வு ஏற்பட்டது. நாச்சியார் ஏதோ என்னிடம் கூறுவது போல் இருந்தது. உலக மாயை என்பார்களே! அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இன்னும் என்னிடம் இல்லை என்றே தோன்றியது. வழக்கம் போல் பூஜை முடித்து நித்யப்படி வேலையில் மூழ்கிவிட்டேன்.
   காலை 10.45 மணிவாக்கில் எங்கள் குடும்ப நண்பர், நலம் விரும்பி ராதிகா அக்காவிடமிருந்து, ஒரு குறுந்தகவல் கிடைக்கப் பெற்றேன். அதைப் படித்ததும் பேச நா எழாமல் நெஞ்சு விம்மி மனம் நெகிழ்ந்தது. 
  அக்குறுஞ்செய்தி என்னவெனில், நாச்சியார் திருமொழி தினம் ஒரு பாசுரம் விளக்கம் சொல்லவும் என்று இருந்தது.
ஆஹா! நாச்சியாருக்கு நான் பூவைக்கும் பொழுது சென்ற வருடம் உன் திருப்பாவையைப் பாடி பதிவு செய்யும்  பேறு கிடைத்தது. இந்த வருடம் அதைத் தாண்டி என்ன செய்ய எனத் தெரியவில்லை அம்மா என்று நான் நினைத்தவாறு பூவை வைத்தேன். அதற்கு ஆண்டாள் நாச்சியார் கூற வந்த விஷயம் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை என்று, ராதிகா அக்கா மூலம் அதை உணரச் செய்துள்ளாள் என்று உணர்ந்து நான் அடைந்த  ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அக்காவிடம் என்னால் பேச இயலவில்லை. அதனால்  இது எனக்குக் கிடைத்த பேறு என்று பதில் தகவல் அனுப்பி விட்டு, பல வேலைகளுக்கு நடுவில், நாச்சியார் திருமொழியை முழுவதுமாக படிக்க படிக்க அப்பப்பா ! என்ன சுவை! என்ன சுவை! இப்படியும் பக்தி செய்யமுடியுமா? என்ற கேள்வி தான் என்னுள் எழுந்தது. ஓ இறைவா! உன்னை பக்தி செய்ய நான் இன்னும் எத்தனை படிக்கட்டுகள் தாண்டவேண்டுமோ எனத் தெரியவில்லையே என்று மனம் விம்மியது. இந்த மஹானுபவத்தோடு என் சிற்றுரையை முடித்து இனி, ஆண்டாள் நாச்சியாரது திருமொழிச் சுவையினை அனுபவிப்போம்!. வாருங்கள்.
        இந்த திருப்பாவையின் முப்பது பாடல்களைத் தொடர்ந்து, தன்னை ஆட்கொள்ளாமல் வாய்மூடி  மௌனியாக கண்டு கொள்ளாமல் போக்கு காட்டும்  அந்த கண்ணபிரானுக்கு, ஜீவாத்மா பரமாத்மாவிடம் அடைக்கலம் புகும் வேட்கையுடன், ச்ருங்கார ரசமாக அதாவது காதல் சுவையாக 
    காமனிடம் விண்ணப்பம், கண்ண்னுக்கு மேகம் விடு தூது, குயில் தூது, அழக்ரிடம் பிரிவாற்றாமை, திருமணம் பற்றிய கனவு, வேட்கை, வேதனை மற்றும் பிருந்தாவனம் சென்ற அடியவர்கள் வந்து கூறும் பதிலில் அப்படியே இறுதியில் முடிப்பது என நாச்சியார் திருமொழி ஒரு பெண்ணின் மெல்லிய மன உணர்வுகளை படம் பிடித்தது போல் வரையறுத்து இருக்கிறார் ஆண்டாள் நாச்சியார்.
 இனி, அடுத்த பதிவில் திருக்கண்ண மங்கையாண்டான் நாச்சியார் பேரில்அருளிச்செய்த தனியனுடன் " நாச்சியார் திருமொழியினை சுவைப்போம். 
பாராயண வகையில் இருக்கும் பாசுரங்களை 'பண்' அமைத்துப் பாடும் வேட்கையில் எனது இம்முயற்சியினை தாங்கள் நல்லதரவு தந்து ஆசியளிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன்.
                             நன்றி. வணக்கம்.
----------×-----------×-------------×----------×------------×-------------×---
                                           தனியன்

          திருக்கண்ணமங்கையாண்டான் ஆண்டாள் நாச்சியார் மேல் அருளிச் செய்த தனியன் பற்றிய விளக்கவுரைக்கு முன்பாக ஆண்டான் கதை பற்றி அறிவோம்.!
திருகண்ணமங்கை என்ற திவ்யதேசத்தில் அவதரித்தவர் இந்த ஆண்டான்.இப்பெருந்தகையினது மேன்மை குணம் உபாயம் மற்றும் உபேயம் என்ற வகையில் உதாரணத் திலகமாக வாழ்ந்து காட்டியுள்ளார். உபாயம் என்பது பகவானை அடைவதற்கான வழி. உபேயம் என்பது பகவத் கைங்கர்யம் ஒன்றே குறிக்கோளாக வாழ்வது. 
  இதற்கான பின்னனிக் கதையினை யாம் கூற வந்தவிடத்து, ஒருமுறை, தெருவில் திரிந்து கொண்டிருந்த நாயை ஒருவன் அடித்து துன்புறுத்தினான். உடனே அந்த நாயின் எஜமானன், அடித்தவனிடத்தில் சண்டைக்குச் சென்றான். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் வாக்குவாதம் வலுத்து, கத்தியை எடுத்து கொலை செய்யும் அளவிற்கு வளர்ந்தது.
 இக்காட்சியைக் கண்ட மாத்திரத்தில், அவருக்கு ஞானோதயம் உண்டாயிற்று.ஆம்! தான் வளர்த்த நாயைக் காப்பாற்றவேண்டி, சக மனிதனை கொல்லும் அளவிற்கு ஒருவன் சென்றானென்றால், அகில உலகையும் காத்து இரட்சிக்கும் எம்பிரான், ஏன் நம்மையெல்லாம் கஷ்டங்களிலிருந்து காத்து ரட்சிக்கமாட்டார்? என்ற கேள்வி அவருள் எழுந்தது. 
அந்த க்ஷணத்திலேயே, என்னை காக்கும் பணி எம்பெருமானது. என்னுடைய பணி, எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வது ஒன்றே என முதலும் முடிவுமான உறுதியுடன், தான், தனது, தன் தேவை,என 
எது பற்றியும் சிந்தனையில்லாமல் எம்பிரானுக்காக தன் வாழ்நாள் முழுவதும் கோயில் கைங்கர்யம் செய்வதிலேயே ஈடுபட்டார். அவரை அப்பேர்ப்பட்ட திருக்கண்ண மங்கை உடையான் ஆண்டாள் நாச்சியாரைப்
 போற்றி அருளிச் செய்த தனியனைச் சுவைப்போம்.     
அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின்  இன்துணைவி
மல்லின டாண்ட மடமையில் மெல்லியியலாள்
வெஆயர் குலவேந்தன்  ஆகத்தாள்  தென் புதுவையர்  பயந்த விளக்கு .
இயல்பிலேயே மிகுந்த மென்மைத் தன்மைக் கொண்ட ஆண்டாள் நாச்சியார், அன்றலர்ந்த தாமரை மேல் வீற்றிருக்கும், பெரிய பிராட்டி என அழைக்கப்படும் இலக்குமி தேவியின் மனதிற்கு நெருக்கமான தோழியாகவும் விளங்குகிறாளாம். அப்படிப்பட்ட இந்த ஆண்டாள் திருமலையை ஆளும் அழகு மயில் என வருணிப்பதோடு, ஆயர்குலத்து வேந்தன் கண்ணனுக்காகவே பிறந்தவள் என்றும், திருவில்லிப்புத்தூர் பிராமணர்கள் குலத் தலைவரான பெரியாழ்வார் கண்டெடுத்த, தெய்வீக ஒளிவிளக்கு என்று போற்றுகிறார். 

கட்டளைக் கலித்துறைப்பா.

2- கோலச்
சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீலத் தனள் தென் திருமல்லி நாடி
செழுங்குழல்மேல்
மாலைத்தொடைதென்
னரங்கருக் கீயும் மதிப்புடைய சோலைக்கிளி, அவள் தூயநற்
பாதம் துணைநமக்கே.



       ஆண்டாள் நாச்சியார், பெருமாள் கையில் இருக்கும் பாஞ்சசன்யம் சங்கிடம், அவர்தம் சிவந்த இதழின் சுவையைப் பற்றி வினவுகிறாள். இப்படிப்பட்ட திருமலையின் நாயகியாம், திருவரங்கனுக்கு சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான சோலைவனக் கிளி போன்றவளான ஆண்டாளது தெய்வீகப் பொற் பாதங்களே நமக்குத் துணை என போற்றித் துதிக்கிறார்.இனி,

நாச்சியாரது திருமொழி பாசுர விளக்கம்.
    
                     முதலாம் திருமொழி

தை ஒரு திங்கள்.........

      மார்கழித் திங்கள் என கண்ணனைப் பாடி மார்கழி மாதம் முழுவதும் நோன்பு நூற்றும் கண்ணன் ஆண்டாளை ஆட்கொண்டபாடில்லை. இதனால் ஆற்றாமையினால், மனம் பொறுக்காதவளாய் 'தையொரு திங்கள்' என திருமொழியை ஆரம்பிக்கிறாள்.இதில், பிரிந்தவர்களை காதலர்களை ஒன்று சேர்க்கவல்லவன் மன்மதன். அதனால் அவனது உதவியை நாடுகிறாள்.தான் கண்ணனிடம் கொண்ட காதல் நிறைவேறும் பொருட்டு அவன் வரவேண்டிய இடங்கள், தெருக்கள் என அனைத்தையும் 'தண் மண்டலம்' தண் மண் தலம்' என பதம் பிரிக்க, மண் நிரம்பிய தெரு வாசலை குளிர்ந்த நீரால் தெளித்து, கோலமிட்டு காமனுடன் அவன் தம்பி சாமனையும் சேர்த்து வணங்குகிறாள். 

அனங்கதேவா ! என மன்மதனை அழைக்கிறாள். அனங்கன் என்றால் உருவம் அற்றவன். முன்பு, சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் அவனை எரித்து, பின் ரதி தேவிக்காக உயிர்ப்பித்துக் கொடுத்தாலும் உருவம் அற்றவனாக இருப்பான் என்றும், பின்னாளில் கிருஷ்ணனுக்கும், ருக்மினி தேவிக்கும் மகனாக 'பிரத்யும்னனாக' பிறப்பான். அதன்பின், அவனுக்கு அருவம் நீங்கி உருவம், அதாவது தேகம் கொண்டவானாவான் என்று வரம் அளித்தார் சிவபெருமான். அதைக் கருத்தில் கொண்டேஅனங்கதேவா என அழைத்தவள், கூடவே தம்பி சாமனையும் வரவேற்கிறாள். இந்த சாமன் என்பவன், கண்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன்.

ஏன் எனில், கண்ணன் தன் அண்ணன்பலராமனிடன் மிகுந்த பிரியம் கொண்டு  எப்பொழுதும் இணை பிரியாமல் இருப்பதால், மன்மதனிடம் தன் தம்பியையும் உடன் அழைத்து வரச் சொல்கிறாள் .

ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

   ---------×-----------×---------×--------×-----------×-----------×--

                பண் : புறநீர்மை  

                            பாசுரம்  2


   வெள்ளை நுண் மணற் கொண்டு         தெருவணிந்து   

வெள்வரைப் பதன் முன்னம் துறை படிந்து

முள்ளுமில் லாச் சுள்ளி  யெரிமடுத்து

முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா

 கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு

கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி

புள்ளினை வாய்பிளந்  தானென்பதோர்

 இலக்கினிற் புகவென்னை யெய்கிற்றியே. 2


சென்ற பாசுரத்தில் அனங்கதேவனை தம்பியுடன் தெரு வாசல்களை தூய்மைப்படுத்தி அழகுற கோலமிட்டு வரவேற்று அழைத்த நாச்சியார், இந்த இரண்டாவது பாசுரத்தில்,

 வெள்ளை நுண் மணற் கொண்டு தெருவணிந்து,

அதாவது, சலித்து எடுக்கப்பட்ட நுண்ணிய மண் துகள் போல் உள்ள வெண்மை நிற கோலமாவினால் தெருவை அலங்கரித்து, என்கிறாள். அவ்வளவு நுண்ணிய துகள் கொண்ட   மாவினால்   கோலம் இடும் பொழுது, ஒவ்வொரு இழைகளும் வெகுஅழகாக அமையும் அந்தக் கோலங்களைப் பார்ப்பதற்கும் கண்களையும் மனதையும்  கவரும் வகையில் இருக்கும் மன்மதனுக்காக தெருவை அலங்கரிக்கிறாளாம்.பின், வெளிச்சம் வருவதற்கு முன் குளத்தில் குளித்து, அதிகாலையில் குளத்தில் இறங்கி நீந்திக் குளிப்பதே ஒரு தனி சுகம். அப்படி குளித்து தலை முழுகி, தூய்மையுடன் முள்ளில்லாத சுள்ளிகளை பொறுக்கி எடுத்து,வேள்வி செய்வதற்காக, மரத்தில் இருந்து விழுந்திருக்கும் சிறு சிறு குச்சிகளை சுள்ளி என்பர். அதைப் பொறுக்கி எடுத்து, "முள்ளுமில்லாச் சுள்ளி எரிமடுத்து" உனக்காக தீ வளர்த்து நோன்பு நூற்கின்றேன் காமதேவா! மன்மதனே... என்று கூறுகின்றாள்.

அப்படி ஆண்டாள் மன்மதனுக்காக  நோன்பு நூற்க, அதற்கு மன்மதன் பிரதியாக என்னசெய்யவேண்டுமாம், அதையும் ஆண்டாள் நாச்சியாரே கூறுகிறார்.


கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு, கள் அவிழ் கள் என்றால் தேன் அவிழ் என்றால் ஒழுகுதல். தேன் ஒழுகும் பூக்களைக் கொண்டு செய்யப்பட்ட கணைகளை, அவன் தன் வில்லினில் இந்த மலரம்பினை ஏற்றி தொடுத்து, கடலின் நீல வண்ணத்தை, தன் திருமேனியின் நிறமாகக் கொண்டுள்ளானே அந்த நீல வண்ணனின் பெயரை எழுதி, அவன் புள்ளினை வாய்பிளந்தான் என்பதோர் மார்பினை இலக்காகக் கொண்டு,அந்த அம்பினில் என்னையும் வைத்து எய்துவிடு என்கிறாள்.


கம்சனால் கண்ணனை கொல்ல ஏவப்பட்டவன் பகாசுரன். கண்ணன் சிறு பிராயத்தில் தன் நண்பர்களோடு மாடு மேய்த்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, பகாசுரன்,பெரிய ராக்ஷத வடிவில்  நாரையாக வந்து கண்ணனை கொல்ல முற்பட்டான். ஆனால் கண்ணபிரானோ, நாரையின் வாயை இரண்டாகப் பிளந்து, அந்த அசுரனை வதம் செய்தான். புள்ளின் வாய்க் கீண்டானை என்றே ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் கண்ணனை போற்றுகின்றாள்.


தன் இளம் பிராயத்திலேயே பெரிய செயலை விளையாட்டாக செய்த அவன் மார்பினை இலக்காக வைத்து, தேனொழுகும் மலரம்புடன் என்னையும் பிணைத்து அவன்மேல் எய்து, என்னை அவனுடன் சேர்த்துவிடு என கண்ணனை அடையவேண்டும் என்ற ஏக்கத்துடன் மன்மதனைவேண்டுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.

ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

---------×---------×-----------×----------×-------------×----‐------×

                                   பாசுரம் 3

ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


மத்தநன் நறுமலர் முருக்கமலர் கொண்டு

 முப்போதும் உன்னடி வணங்கி

தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து

உன்னை வைதிடாமே

கொத்தலர் பூங்கணை தொடுத்துக்

கொண்டு கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி

வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கினில் புக

என்னை விதிக்கிற்றியே. 3


முதல் இரண்டு பாசுரங்களில் ஆண்டாள் நாச்சியார், மன்மதனிடம் தன்னை எப்படியாவது கண்ணனிடம் சேர்த்துவிடவேண்டுமாய் கெஞ்சி கேட்டுக் கொண்டாள். ஆனால் இந்த மூன்றாவது பாசுரத்தில் கொஞ்சம் மென்மையாக மிரட்டுகிறாள் என்றே சொல்லலாம்.

ஊமத்தை மற்றும் முருங்கை மலர்களைக் கொண்டு மூன்று வேளைகளிலும் உன் பாதங்களில் விழுந்து வணங்குகின்றேன். இவ்வளவு செய்தும் நீ என் ஆசையை நிறைவேற்றாமல் இருந்தால், " மன்மதன் எனக்கு உதவுகின்றேன் என்று கூறிவிட்டு, இப்பொழுது கொடுத்த வாக்கைக் காப்பாற்றாதவன், சொன்ன சொல் மீறியவன்" என்று நான் மனதால் நினைத்து உன்னை திட்டிவிடாமல் இருப்பதற்குள், கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கும் மலர்க் கணைகளில் எம்பெருமானின் பல திரு நாமங்களில் ஒன்றான 'கோவிந்தன்' என்ற பெயர் எழுதி, வித்தகனான அதாவது  பல வித்தைகளைக் கற்றவன், வியத்தகு செயல்களைச் செய்பவன், வியத்தகு தன்மை கொண்டவனான, என் வாழ்வின் ஒளி விளக்காய் திகழ்பவனான  திருவேங்கடவனிடம் என்னை சேர்ப்பித்துவிடு என்று சிறிது பொறுமை இழந்தவளாய் மன்மதனை மிரட்டுகிறாள்.

       பொறுமையின் சிகரமான ஆண்டாள் நாச்சியார் மூன்றாவது பாசுரத்திலேயே தன் பொறுமையை சிறிது இழந்தவளாய் மன்மதனை மிரட்டுகின்றாள் என்றால், கண்ணன் மேல் அவள் கொண்ட காதலின் ஆழம் இதன் மூலம் வெளிப்படுகிறதல்லவா!

பொதுவாக, பூஜைக்கு என்று சில பூக்களைத் தான் சேர்த்துக் கொள்வார்கள். சிற்சில பூக்கள் பூஜைக்கு உகந்ததல்ல என்று ஒதுக்குகின்றோம். ஆனால், ஆண்டாள் நாச்சியார் ஊமத்தை முருங்க மலர் என்று இவற்றைக் கொண்டு பூஜிக்கின்றாள் என்றால், பக்தி செய்வதற்கு முக்கியத் தேவை என்ன? என்று சிந்தித்தோமானால், பக்தி செய்யும் தூய மனம் ஒன்றே போதுமானது. எம்பெருமான், அன்புடன் அளிக்கும் எந்தவொரு பொருளையும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் ஏற்றுக் கொள்பவன் என்ற கருத்தை வலியுறுத்துகின்றாள் நாச்சியார் என்றே தோன்றுகின்றது..

ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

----------×-----------×-‐-----×----------×-------------×---------×----

                             பாசுரம் -  4. 

சுவரில் புராணனின் பேரெழுதிச்

சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்

கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்

காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா

அவரைப் பிராயந் தொடங்கி என்றும்

ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே! 4

விளக்கம் :

 என்ன? ஒரு மன தைரியம் பாருங்கள் இந்த ஆண்டாள் நாச்சியாருக்கு!

சுவரில் பிராணனின் பெயரெழுதி, சுவரில் எழுதி உன்னைப் பற்றி அம்பலப் படுத்திவிடுவேன் என்பது போல் மிரட்டுகிறாள். இதில் ப்ராணன் என்பது தன் பிராண நாதன் என்ற வகையில் கண்ணனையும் எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில் என் பிராணன் உன் கையில் தான் இருக்கிறது. அதனால் என் பிராணனைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு என்பதால் உன் பெயரை சுவரில் எழுதி அம்பலப்படுத்தி விடுவேன் என்பது போலவும் கருத்து அமைகிறது.


 ஆம்!  இப்படி சுவரில் பிராணனாகிய கண்ணனின் பெயரை எழுதுவதோடு நில்லாமல், சுறவ நற்கொடிகளும் சுறவ என்றால் மீனெனப் பொருள். துரங்கங்கள் என்றால் குதிரைகள் என்று பொருள். மன்மதனின் அடையாளங்களான அவன் தேரில் பறக்கும் மீன்கொடிகள், குதிரைகள், கவரியால் சாமரம் வீசும் பெண்களும், மன்மதனுக்கே உரித்தான கரும்பு வில்லினையும் சேர்த்து சுவரில் வரைந்து வைத்திருக்கிறாளாம்.  இங்கே பார் காமதேவனே உனது அடையாளங்களை வரைந்து வைத்திருக்கிறேன் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கின்றாள்.


இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா! இதன் உள்ளார்ந்த அர்த்தம் யாதெனில், இரு நாட்டு மன்னர்களிடையே போர் நடக்கிறதென்றால், போரில் வென்ற மன்னன்,  எதிரி மன்னனின் சிறப்புக்களாகக் கருதப்படும் பொருட்களை எல்லாம் எடுத்து வந்து, தான் அவனை வென்றதற்கு அடையாளமாக உலகுக்கே தன் வீரத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக தன் வீட்டின் சுவரிலோ அல்லது பலவகையில் அனைவரது பார்வையில் படும் வண்ணம் கடைபரத்தி வைப்பார்கள்.அல்லவா?

அதே உத்தியைத் தான் ஆண்டாளும் இங்கே அரங்கேற்றி இருக்கிறாள். 

அதாவது உடல் பலம், மனோ பலம் கொண்ட வீரனானாலும்,தவ யோகிகளே ஆனாலும், மன்மதனின் பிடியில் சிக்கி அவனது மென்மையான அம்புகளுக்கு முன் தோற்றுத் தான் போயிருக்கிறார்கள். ஆண்டான், அடிமை என எவரையும் மன்மதனின் அம்புகள் விட்டுவைப்பதில்லை. இப்படி அனைவரையும் வென்ற மன்மதனை தான் வென்று விட்டதாக பறைசாற்றுகின்றாள். எப்படி? 

ஹே! மன்மதனே! உனது அடையாளங்களான உன் சிறப்புக்களான,  அதாவதுஉன் தேரின் உச்சியில் பறந்து கொண்டிருக்கும் உனது மீன் கொடிகள், மனோ வேகத்தை விட மிதமிஞ்சிய வேகத்தில் செல்லும் உனது குதிரைகள், வெண் சாமரம் வீசும் பணிப்பெண்கள் மற்றும் உனது மிக மிக்கிய ஆயுதமான கரும்பு வில்லைனையும் நான் உன்னை வென்றதற்கு அடையாளமாக என் வீட்டின் சுவரில் உலகமே பார்க்கும்படி கடைபரப்பி இருக்கிறேன் பார்!.

தான் கொண்ட காதலில் உறுதியும், அதை நிறைவேற்றுவதற்கு இன்னும் கொஞ்சம் துணிவு கொண்டவளாய், சொன்ன வார்த்தை காப்பாற்றாதவன் மன்மதன் என்று திட்டியதற்கும் மேலாக, உன் மானத்தைக் காற்றில் பறக்க விடுவேன் என்பார்களே அதுபோல் மிரட்டுகிறாள்.

இளம் பிராயம் தொட்டே, அதாவது தனக்கு விவரம் புரிந்த நாள் முதலாக, பெரியாழ்வாரிடம் கண்ணனின் அருமை பெருமைகளை கேட்டே வளர்ந்தவள் ஆதலால் அப்பொழுதில் இருந்தேகண்ணனையே தன் மனதிற்கிசைந்தவனாக, தன் மணாளனாக மனதில் வரித்து விட்டாள். வளர வளர கண்ணனின் மீதான அன்பும் அளவிட முடியாத அளவு வளர்ந்துள்ளது. 

தனது இந்த பிறவி எடுத்ததே கண்ணனைச் சேர்வதற்க்கென்றே,  தன் தேகம் கண்ணனுக்கே உரித்தானது என்பது போல்,, பருவ வயதை அடைந்த மங்கையான ஆண்டாள் நாச்சியார், தன் பெருத்த கொங்கை முலைகள் அந்த துவாரகையின் தலைவனான கண்ணனுக்கே உரியது என்றதோடு அவருக்கே என்னை ஆட்படுத்துவாயாக! அவரிடம் சேர்த்து விடுவாயாக என்று தீர்மானமாக மன்மதனிடம் கூறுகின்றாள்.

அப்படி எனில் சரியான கள்ளி!. மன்மதனது கருவிகளை எல்லாம் ஆண்டாள் நாச்சியார் அபகரித்து விட்டாள் எனில், தன் விருப்பம் நிறைவேறும் பொருட்டு கரும்பு வில்லை மட்டும் போனால் போகிறதென்று திருப்பிக் கொடுத்துவிட்டாள் போலும்!.

               என்னே ஒரு நெஞ்சுரம்!!!

ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

------------×---------×--------×----------×---------×----------×-----

                                  பாசுரம் 5

 வானிடை வாழுமன் வானவர்க்கு

 மறையவர் வேள்வியில் வகுத்த அவி

 கானிடைத் திரிவதோர் நரி புகுந்து

கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,

ஊனிடை யாழி சங் குத்தமர்க்கென்று

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,

மானிட வர்க்கென்று பேச்சுப்படில்

வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5  .

பொதுவாக, நம் வீட்டில் பூஜைக்குத் தேவையான திரவிய பதார்த்தங்களை  நாமும் குளித்து நன்னீராடி அகமும், புறமும்  தூய்மையுடன் விளங்கி தயார் செய்வோம் அல்லவா?. அப்பூஜைப் பொருட்களை, நம் வீட்டாரேயாயினும் தூய்மையற்ற நிலையில் யாரையும் தொட அனுமதிப்பதில்லை .அதையும் மீறி யாரும் தொட்டுவிட்டால், இதை எப்படி இறைவனுக்கு படைப்பது நிவேதனம் செய்வது என்று தயங்குவோம். வேறு புதிதாக நிவேதனப் பதார்த்ததை அவசரம் அவசரமாக சிறிதளவிலாவது நிவேதனம் செய்வதற்கு மட்டும் என்று தயார் செய்வோம் இல்லையா!

  அப்படியிருக்க, யாகம் செய்யும் வேதியர்கள் இந்திரன், வருணன் போன்ற தேவர்களுக்காக யாகத்தில் இட்ட வேள்விப் பொருட்களை அதன் பிரசாதத்தை, காட்டில் அலைந்து திரியும் நரியானது, கடந்து சென்றாலோ அல்லது அதனை முகர்ந்து பார்த்தாலோ அதன் தூய்மை அகன்றுவிடும் . அது தெய்வத்துக்கு என ஆகாதது என்றாகிவிடும்.

அதுபோல், என்று ஒரு பெரிய பீடிகையைப் போடுகிறாள் நாச்சியர்.  என்னவெனில், உன்னித்து எழுந்த என் தட முலைகள் ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று...., அதாவது விம்மி எழுந்த என் பெரிய முலைகள் இரத்தமும்,சதையும் ஆன இவ்வுடம்பும் சங்கு சக்கரத்தினை தன் திருக் கையிலே தாங்கியிருக்கும் அந்த உத்தமனானஎம்பெருமான் கண்ணனுக்கே சொந்தம்.

அதை விடுத்து, சாதாரண மானிடர்க்கென்று பேச்சு வந்தால் வாழகில்லேன் என்கிறாள். 

அப்படி என்றால் தான் வாழமாட்டேன் அதாவது உயிரை விட்டு விடுவேன் என்கிறாளா? என்ற ஐயம் என் மனதில் எழுந்தது.

கண்டிப்பாக இருக்காது. அவள் அப்படிப்பட்ட கோழையும் அல்ல. முதல் பாசுரத்திலே அனங்கதேவன் என்றாளே! ஏற்கனவே சிவபிரானிடம் வம்பு வைத்து உருவம் இழந்து படாதபட்டு திரும்பவும் தேகம் பெற்றுள்ளாய்!. அதனால்,  கவனம் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கின்றாளோ?

சில பொருட்களை நம் முன் பரப்பி, இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள் என்று கூறினால், நாம் அதில் எது சிறந்ததோ அதைத் தானே தேர்வு செய்வோம்.

அவ்வாறிருக்க, பரம்பொருளை அடைவதை விட, திரும்பவும் இந்த மாய உலகில் வாழத் தலைப்படுவாளா என்ன? இந்த ஆண்டாள் நாச்சியார்.. 

அதனால், மன்மதனைப் பார்த்து, ஹே மன்மதனே! கணை உன்னுடையது தான். ஆனால் இலக்கு ...? என்னுடையது 

ஆம்! கணையை இழுப்பதோடு உன் வேலை முடிந்தது. அது சென்றுசேரவேண்டிய இடம், நான் தேர்வு செய்ததாக  சங்கு சக்கரம் தாங்கிய அந்த கண்ணனிடத்தில் தான் இருக்கவேண்டும் என்று சீறுகிறாள். 

கொண்ட கொள்கையில் உறுதி என்பார்களே அப்படி என்னே! ஒரு கம்பீரமாக காட்சியளிக்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

 ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

----------×-----------×----------×----------×-------------×-----------


        பாசுரம் 6 

உருவு உடையார் இளையார்கள் நல்லார்

ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல்

தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள்

திருந்தவே நோற்கின்றேன் காமதேவா!

கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்

கருவிளை போல்வண்ணன் கமலவண்ணத்

திரு உடை முகத்தினில் திருக் கண்களால்

திருந்தவே நோக்கு எனக்கருள் கண்டாய். 6

        தான் இவ்வளவு தூரம் மன்மதனை  கேட்டுக் கொண்டும், மன்மதன் தன்னை  இன்னும், கண்ணனிடம் சேர்ப்பிக்கவில்லை. தை, மாசி இரு மாதங்களும் கடந்த நிலையில் தற்பொழுது பங்குனியும்  வந்தாயிற்று.

ஒருவேளை, தான் அறியாச் சிறுமி ஆதலால், நம் வழிபாட்டு  விரத முறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லையோ? என்ற ஐயம் சந்தேகம் ஆண்டாள் மனதில் தோன்றுகிறது.


  கடவுளை வணங்குவதற்கு அல்லது கடவுளுக்கான யாகத்திற்கு வைதிக, வேதம் இவற்றில்  தலைசிறந்தவர்களைக் கொண்டு அவர்களைப் பணிந்து குருவாக ஏற்றுக் கொண்டு அப்பூசை முறைகளைச் செய்வோமல்லவா?

அங்ஙனம், மன்மதனை நாம் மிகவும் கடிந்து   கொண்டோம்  போலும் என்று தோன்றியதோ என்னவோ! மன்மதனை தக்க மரியாதையுடன் எதிர் கொள்கிறாள் ஆண்டாள் நாச்சியார். எப்படி? எனில்,

       இளமையும் அழகும், அதே சமயம் நன்னடத்தையும் கூடிய , " உருவு உடையார் இளையார் ஒத்துவல்லார்களைக் கொண்டு" வயதில் இளைய அந்தணர்களைக் கொண்டு  அவர்களை தேர்ந்தெடுத்து, விடியற் காலையில் மன்மதன் வரும் வழியில்  வேத கோஷம் முழங்க, எதிர் கொண்டு அழைக்கிறாளாம். 

நம் இல்லம் நாடி வரும் விருந்தினர்களை எதிர் கொண்டு அழைப்பது நம் பண்பு அல்லவா?!  இப்படியாக நம் வாழ்வியல் உயர்ந்த மரபையும் ஆங்காங்கே எடுத்துக் கூறுகின்றாள் நாச்சியார்.

மன்மதனுக்காக தெளிவாக நோன்பு நூற்கின்றாள். பங்குனி உத்திர நக்ஷத்திரத்தன்று நன் நாளாக தேர்ந்தெடுத்திருக்கிறாள். கவனித்துப் பார்த்தோமானால் அனைத்து தெய்வங்களின் திருமண உற்சவமும் பங்குனி உத்திர நக்ஷ்த்திரத்தில் நடைபெறுகிறது.


 ஸ்ரீமஹாலட்சுமி தாயார் கூட பங்குனி உத்திர விரதத்தை கடைபிடித்தே ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மார்பில் உறையும் வரம் பெற்றார்களாம்.

அவ்வண்ணமே ஆண்டாளும் 'ரங்கமன்னார்'  பெருமாளை    கரம்    பிடித்தது    கூட பங்குனி உத்திரத்தில் தான்.

இப்படியாக தெளிந்த சிந்தனையுடன், பங்குனி மாத நோன்பு நூற்த்து, கண்ணனைப் பற்றி வர்ணித்துக் கூறுகின்றாள்.

   கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்


கருமை நிற மேகம் போன்ற நிறத்தவன், காயா வண்ணன்     காயாம்பூ மேனியை உடையவன் என்றும் கூறுகிறாள். காயா மலர் அழகியநீல நிறமாக இருக்கும். இந்த காயா மலர் முல்லை வனத்தைச் சேர்ந்தது. 

தொல்காப்பியரும் "மாயோன் மேயக் காடுறை உலகமும்" என்றே கண்ணனை வருணிக்கின்றார். ஆம்! குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற தமிழின் ஐந்திணைகளில் முல்லையின் தெய்வமாக விளங்குபவர் மாயவன் அதாவது கருமை நிறக் கண்ணன். மாயோன் என்பதற்கு கருமை என்ற பொருளும் உண்டு.

"கருவிளை போல்வண்ணன் " சங்கு விரிந்திருக்கும் வாய் போன்று காட்சி தருவதால் நாம் அதனை தற்காலத்தில் 'சங்குப்பூ' என அழைக்கிறோம்.

இதையே சங்க காலத்தில் 'கருவிளை மலர்' எனப்பட்டது. கருவிளை மலரின் வண்ணம் கொண்ட 

' கமலவண்ணத்திரு உடை முகத்தினில் திருக் கண்களால்'

தாமரை போன்ற அழகிய முகத்தினை உடையவன் அல்லது தாமரை இதழை ஒத்த அழகிய திருக்கண்களால்

"திருந்தவே நோக்கு எனக்கருள் கண்டாய்".

அவனுக்காகவே வளர்ந்து நிற்கும் என்னை, ஏறெடுத்துப் பார்க்கும்படி அருள் செய்வாய் காமதேவனே மன்மதனே என 


கார்மேக வண்ணன், காயாம்பூ வண்ணன், கருவிளை மலரைப் போன்ற நிறத்தவன் என கண்ணனின் அழகு திருமேனியை தன் கவித்துவம் பொங்க வர்ணித்து வேண்டுகிறாள்   ஆண்டாள் நாச்சியார்.


ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.!!!

-------×-----------×--------×---------×--------×--------×---------×--


                             பாசுரம் 7 


காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்துக்

கட்டி அரிசி அவல் அமைத்து

வாய் உடை மறையவர் மந்திரத்தால்

மன்மதனே உன்னை வணங்குகின்றேன்:

தேசம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்

திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்

சாய் உடை வயிறும் என் தட முலையும்

தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே.7


  சென்ற பாசுரத்தில் மன்மதனை எதிர் கொண்டு அழைத்தாள் அல்லவா? நம் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களை தடபுடலாக வரவேற்று,அவர்களுக்கு பிடித்தமான உணவினையே அளித்து மகிழ்விப்போம்! மகிழ்வோம் அல்லவா?! அதை இங்கே பாங்குறச் செய்கின்றாள் . ஆம்! மன்மதனுக்கு பிடித்த ஓங்கி வள்ர்ந்த நன்முறையில் விளைந்த நெல்லையும் கரும்பையும் தோரணமாகக் கட்டி அலங்கரித்திருக்கிறாள். 


அத்துடன் மன்மதனுக்கு மிகவும் பிடித்த உணவான நெல்லிலிருந்து பெறப்பட்ட பச்சரிசியும் அவலும், கரும்பஞ்சாற்று வெல்லக்கட்டியினையும் சேர்த்து சர்க்கரைப் பொங்கல், பாயாசம் இன்னபிற உணவு வகைகளை படையலிடுகின்றாள்.

எவ்வாறெனில், அந்த தூய மனதுடைய இளம் வேதியர்களைக் கொண்டு, மன்மதனுக்கான மந்திரங்களை ஓதச் செய்து, அதாவது மன்மதனின் மனதை மகிழ்விக்கும் படியான புகழை இனிய மொழியை கூறச் செய்கின்றாளாம்.

ஆண்டாள் நாச்சியார் தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கண்ணனை தொடர்புபடுத்தியே உரைக்கின்றாள்.

ஆம்! பாருங்களேன்! ஓங்கி வளர்ந்த செந்நெல், கரும்பு என்றதும் உலகளந்த பெருமாளாக, திரிவிக்ரம அவதாரம் ஞாபகம் வருகின்றது. அதனை எவ்வளவு அழகாக நினைவு கூறுகின்றாள்.

ஆம்! குள்ள உருவமான வாமனானாக வந்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் "மூன்றடி மண்" போதும் என்று யாசகம் கேட்டதும், வெறும் மூன்றடி மண் தானா? என பூமாதேவியான தன்னை அலட்சியமாக குறைத்து மதிப்பிட்டு நினைத்தவன் அல்லவா? அந்த மாபலி! என்ற எண்ணம் உதிக்கின்றது ஆண்டாள் மனதில்.

ஆம் ! பூமித்தாய் தானே ஆண்டாளாக அவதரித்திருக்கின்றாள்.

அங்கே தான் எம்பெருமான் , தன் அகமுடையாளுக்காக தன் பிரிய மனைவிக்காக தான் பழி ஏற்றாலும் பரவாயில்லை என்று குள்ள உருவமாக வந்தவர் நெடுநெடுவென்று நெல்லும், கரும்பும் போல ஓங்கி வளர்ந்து, பூமியையும் ஆகாயத்தையும் அளந்து, மூன்றாவது அடியாக மாபலியின் கர்வத்தை அடக்கி ஆட்கொண்ட கருணையுள்ளம் கொண்டவன் என்கிறாள்.

அதாவது, தன் இல்லாளின் அவமானத்தையும் தனதாக எண்ணி அதற்கு தீர்வு கண்ட தன் ஐயனின்  பெருமையையும் விண்ணையும் மண்ணையும் அளந்ததன் மூலம் இவை அனைத்துமே   தனக்குச்    சொந்தம் என தன் பாத இலச்சினை முத்திரையை பதித்துவிட்டார் என இங்கே பொருள்படக் கூறி பூரிப்படைகிறாள் ஆண்டாள் நாச்சியார். 


 மூன்று பாத பெயரினை உடையவனான பெருமாள் மூன்று பாதங்களால் இவ்வுலகை அளந்து ஆட்கொண்டான் என்கிறாள். அதாவது 'நாராயனாய' என்ற அவர் நாமத்தை பதம் பிரிக்க நார+ அயன்+ ஆய-  நார என்பது நரன் மனிதனைக் குறிக்கும். அயன் பிரம்மாவைக் குறிக்கும் ஆய என்பது ஆராய்தல் எனும் பொருள் கொள்ள, பரப்ரம்ம ரூபமாக விளங்கும் இறைவனை ஆராய்ந்து அறிந்து திருவடி அடைதல்   என்பதே   அவரது    நாமத்தின் ஆழமான அர்த்த விளக்கம். 


இப்பூவுலகின் தாயாக  ஆண்டாள்  நாச்சியார்  விளங்குவதால், தாய்மையின்  உன்னதமாக  விளங்கக்கூடிய பேறாகத் திகழும், உலக ஆன்மாக்களைத் தாங்கும் தன் தாய்மையின் சாய்ந்த  மணி வயிறும், தன் குழந்தைகளின் பசி போக்கும் அமுதம் சுரக்கும்  முலைகளையுடைய தன் கொங்கைகள் அதாவது மார்பகங்கள் உலகத் தந்தையான நாராயணனின் திருக்கைகளில் தாங்கப்படவேண்டும்.

தாய்மையின் சிறப்பான உன்னத அங்கங்கள் உயர்ந்த இடத்தை அடையும் பொழுது, அதன் காரணமாக உருவான தம் குழந்தையான ஜீவன்களும் உயர்வடையுமே என்று ஆதங்கத்தில், தன் நாயகனான கண்ணனை வணங்குவது போலவே, மன்மதனையும் வணங்கி என்னை எவ்வகையிலாவது அவரிடத்தில் சேர்ப்பித்துவிடு எனக் கேட்கின்றாள் ஆண்டாள் நாச்சியார்.

என்னே ஆண்டாள் நாச்சியாரின் தாயுள்ளம்

ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

----‐-------×-----------×--------×---------×-----------×---------×---

                          பாசுரம் 8

மாசு உடை உடம்பொடு, தலை உலறி

வாய்ப்புறம் வெளுத்து, ஒரு போதும் உண்டு,

தேசு உடை திறல் உடைக் காமதேவா!

நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள், கண்டாய்,

பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்!

பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்

கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்

என்னும் இப் பேறு எனக் கருள் கண்டாய்.  8

மாசு உடை உடம்பொடு, தலை உலறி

வாய்ப்புறம் வெளுத்து, ஒரு போதும் உண்டு,

 தன் இதயம் கவர்ந்த  தலைவனான  கண்ணனை அடைவதற்கு ஆண்டாள்  நாச்சியாரின் பெரு முயற்சிகளில் தன் வயதிற்கு மீறிய கடுமையான நோன்பினை   விரதத்தை  கடைபிடிக்கவும் துணிகிறாள்.

பொதுவாக  இளம் பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருப்பர். ஆண்டாள் நாச்சியார் தான் மேற்கொண்ட  விரதத்தின்    காரணமாக  அழுக்கடைந்து கருத்த தன் உடலையும், எண்ணெய் தடவாததால் உலர்ந்து வறண்ட கூந்தலுமாய், தாம்பூலம் தரிக்காததால் வெளுத்துப் போயிருக்கும் தன் உதடுகளும், ஒரு பொழுது மட்டுமே உண்பதால் உடல் மெலிந்தும் காணப்படும் தன் தோற்றத்தைக் காண்கிறாள்.

ஆனால், தனக்கு நேரெதிராக இயல்பிலேயே அழகுடன் விளங்கும் மன்மதன், பிரிந்த காதலர்களை ஒன்று சேர்ப்பதாலும், அவர்களிடையே ஏற்பட்ட சிறு சிறு பிணக்குகள் ஊடல்கள் இவற்றை அகற்றுவதாலும்,  மன்மதனது அழகு மேலும் மிளிர்ந்து, மிடுக்கான தோற்றமுமாய் காணப்படுகிறதாம்!. 

 உடன் ஆண்டாள் நாச்சியார் முதலில் தங்கள் இருவர்  தோற்றத்தையும் ஒப்பீடு செய்து, மன்மதனை நோக்கி , நான் உன்னைக் குறித்து நோன்பிருப்பதால், இப்படி உடல் வெளிறி தோற்ற சுகம் குறைந்து  காணப்படுகிறேன். நீ அதற்கு பிரதியாக, உன்னை விட பன்மடங்கு அழகான என் கேசவனுடன் என்னைச் சேர்ப்பித்து விட்டாயானால், நானும் அகமகிழ்ந்து பழைய தோற்றப் பொலிவுடன் விளங்குவேன் என்கிறாள்.

பெண்கள் தன்னை யார் குறைத்து மதிப்பிட்டாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால், தன் கணவனை யாரும் குறைத்து மதிப்பிட விரும்பவும் மாட்டார்கள். அதை அனுமதிக்கவும் மாட்டார்கள். அதனால், மன்மதனிடம் தன் தோற்றப் பொலிவு குறைந்ததை பணிந்து ஒப்புக் கொண்டவள், தன் கணவனான கேசவன் உன்னை விட மிகுந்த அழகானவன் என்று சிலிர்த்து பெருமை பேசுகின்றாள். 

தன் உலர்ந்த கூந்தலைக் கண்டதும் ஆண்டாளுக்கு அழகிய முடியை உடையவன் என பொருள் தரும் கண்ணனின் 'கேசவன்' என்ற நாமமே அவளுக்கு நினைவுக்கு வருகிறது. 'கேசவன்' என்ற பெயருக்கு மூன்று வித அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன.  

நாரஸிம்ஹ: வபு: ஸ்ரீமான் கேசவ: புருஷோத்தம:| 

என்று விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மூன்றாவது ஸ்லோகத்தில் மஹாவிஷ்ணுவின் நரஸிம்ஹ அவதாரத்தின் சிங்கத் தலையின் அழகிய பிடரி முடியின்' வர்ணனை இடம் பெறுகிறது. குழலழகர்' என்றே ஆழ்வார்களும் கண்ணனைக் கொண்டாடுகின்றனர்.

இது தவிர கண்ணனைக் கொல்ல கம்சனால் ஏவப்பட்ட 'கேசி' என்ற அரக்கன் குதிரை உருக் கொண்டு தன் பிடரி மயிர் பறக்க, கண்ணனைக் கொல்ல கோரமாகத் தாக்க முற்படுகிறான். ஆனால், கண்ணன் அவன் வாயைப் பிளந்து கேசியைக் கொன்று    மண்ணில் சாய்த்து விடுகிறான்.  இந்நிகழ்வினை,  கேசியைக் கொன்றவன் என்ற பொருளில் ;கேசவ:கேசிஹா ஹரி:'  என்றே 69 ஆவது வரியில்  விஷ்ணு சஹஸ்ரநாமமும் வர்ணிக்கின்றது.                       இதையடுத்த மூன்றாவது விளக்கமாக

            'க, அ, ஈச, வ'

ஆகிய கூட்டெழுத்தே 'கேசவன்" என்றாகியது. இவை முறையே பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன்  என மும்மூர்த்திகளைக்    குறிக்கும். வ என்பது மூவரின் அம்சங்களையும் தன் வசமாகக் கொண்டவன் எனும் உயர்ந்த பொருளையும் தருகிறது.

இப்படிப்பட்ட உயர்ந்தவனிடத்தில் தானும் வசப்பட்டோமானால், அந்த கேசவனின் பாதகமலங்களைப்பணியும் பேற்றினைப் பெற்றால், 

பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்

கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்

என்னும் இப் பேறு எனக் கருள் கண்டாய்.  8

தன் பெண்மையும் உயர்ந்ததாகும் எனக் கூறுகிறாள். ஆம்!தானும் பெண்களில் உயர்ந்தவள் தான். கண்ணனுக்கு மனைவியாகும் தகுதியும் தனக்கு இருப்பதாகவும் அதனால் அனைத்து மானுடப் பெண்களின் பெண்மையும் போற்றப்படும் என்றே கருத்தை உள்ளடக்கி மன்மதனிடம் தன் வேண்டுகோளை முன் நிறுத்துகின்றாள்.

பெண்மையைப் போற்றுதும் என்ற ஆண்டாள் நாச்சியாரின் திடம் இங்கே புலப்படுகிறது.          

ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

------------×--------×---------×---------×--------×--------×---------

                               பாசுரம் 9

தொழுது முப்போதும்  உன் அடி வணங்கித் 
தூமலர் தூய்த்தொழுது ஏத்துகின்றேன்
பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே 
பணி செய்து வாழப் பெறாவிடில் நான் 
அழுது அழுது அலமந்தம் அம்மா வழங்க 
ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய். 
உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்த 
ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே. 9

தினமும் கண்ணனையே எப்பொழுதும் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் கோதை நாச்சியார், மன்மதனை மூன்று வேளையும் தூய்மையான மலர்களைக் கொண்டு பூஜித்து மன்மதனின் புகழைப் பாடுகின்றாள். 

அதாவது, கண்ணனை பக்தி செய்வது எளிது. அவர்தம் திருவடியினை  எப்பொழுதும் மனதில் சிந்தித்தவண்ணம் தான் இருப்பாளாம். தனியாக பூஜை முறைகள் எதுவும் செய்ததில்லை. அப்படிப்பட்ட நீளாதேவியான நிலமகளான ஆண்டாள் நாச்சியார், கண்ணனிடம் தன்னை சேர்ப்பிக்கவேண்டி மன்மதனை மூன்று வேளையும் தூயமலர்க் கொண்டு பூஜிக்கிறாளாம்.
இத்தனை சிரமங்களையும் இன்பமாக மனம் விரும்பி ஏன்? எதற்காக? நாச்சியார் செய்கின்றாள் என்றால், பாற்கடல் வண்ணனான தன் கணவன் கண்ணனுக்கு ஒரு குறைவின்றி   பாதங்களை வருடி சேவை புரிவதற்காகத் தான்!.
  "பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே" 
 என்கிறாள். ஆக பெருமாளின் நிறம் இங்கே வெண்மை என்பது புலனாகிறது. பால் போன்ற வெண்மையான கடலில் பள்ளி கொண்டுள்ள எம்பெருமானும்  பால் வண்ணன் அதாவது வெண்மை நிறத்தவன் என்கிறாள். திருப்பாற்கடலுக்கு "வெள்ளையன் தீவு" என்றே பெயர்.


   அதாவது, "வைணவ 108 திவ்ய தேசங்களில்" 106 இம்மண்ணுலகில் உள்ளன. 107 வது திவ்ய தேசமாக திருப்பாற்கடலும், 108 ஆவது திவ்ய தேசமாக 'பரமபதமும்" விண்ணுலகில் அல்லது பிரபஞ்சத்தில் அமைந்துள்ளன. 

இவ்விரண்டு இடத்திற்கும் இந்த மானுட உடம்புடன் செல்லமுடியாது.

 அதாவது, எம்பெருமான் ஐந்துவித ரூபங்களுடன் திகழ்கிறான்.அவைகள், பரம், வ்யூகம், அந்தர்யாமி, விபவம்  மற்றும் அர்ச்சை என்பதாகும். இதில் முத்ல் நான்கும் நம்மால் காண இயலாது. இவைகளைப் பற்றிய விளக்கங்கள் யாதெனில்,

முதலாவதாக, பரம் என்பது பரமபதம் அதாவது வைகுண்டம். . 

பரமபதத்தில் எம்பெருமான் பரவாஸுதேவனான பரந்தாமனுக்கு ஆதிசேஷன் 'சிம்மாசனம் போல் திகழ்கிறான். 

பரமபதம் என்பது இன்பம் துன்பம் அனைத்தையும் சமமாக பாவிக்கும் எப்பொழுதும் பகவத் சிந்தனையிலேயே இருந்து முக்தியை பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே உரித்தான இடம். வைணவர்களின் உயர்ந்த லட்சியமாக பரமபதம் அடைவதே குறிக்கோளாக இருக்கும்.

இரண்டாவதாக, வ்யூகம். வியூகம் என்றால் அணிவகுப்பு என்று பொருள்.

இப்பூவுலக மக்களையும் தேவர்களையும் காக்கும் எண்ணம் கொண்ட பெருமான் 'திருப்பாற்கடலில்' எழுந்தருளினார். அதாவது வைகுண்ட நாதனான பரவாஸுதேவனுக்கு பரமபதத்தில் சிம்மாசனமாக இருந்த ஆதிசேஷன் இங்கே படுக்கையாக சயனகோலத்தில் எம்பெருமானை தாங்குகின்றான்.   

முத்தொழிலான படைத்தல், காத்தல், அழித்தலில், படைக்கும் தொழிலுக்காக தன் நாபிக் கமலமான தொப்புள் கொடியிலிருந்து 'பிரம்மாவை' உருவாக்கினார். 

உலக உயிர்கள் அனைத்தும் மண்ணில் நல்லவண்ணம் வாழ வைக்கும் உறுதியை உள்ளத்தில் கொண்டவராய், உணர்வு அகலாமல், சயன கோலத்தில் அரைக் கண் மூடிய நிலையில், நிலமகளும், திருமகளும் பாதங்களை வருட பள்ளி கொண்டுள்ளார். இதனையே 'அரிதுயில்'என்கிறோம்.

   திருப்பாற்கடலுக்கு எழுந்தருளிய பரந்தாமன் கிழக்கு நோக்கி சிரித்த முகத்துடன் வாசுதேவன் ஆகவும், தெற்குதிசை நோக்கி  சங்கர்ஷணன் ஆகவும், வடக்குமுகமாக   பிரத்யும்னன் மற்றும் மேற்கு திசை நோக்கி அநிருத்தன் ஆகவும் பக்தர்களின் குறிப்பாக தேவர்களின் குறை தீர்க்கவும் என்று நான்கு திசைகளையும் காக்கும் திருவுளம் கொண்டு தன்னையே பலவடிவமாக வியூக நிலையில் மாறி உருவெடுத்துள்ளார். 

    ஆம்! குறைகளைத் தீர்ப்பதற்காகவே திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

     ஏனெனில், பரமபதத்திற்கு தேவர்கள் கூட செல்ல முடியாது தேவர்களுக்கு துயரம் என்றால், அதை தீர்க்க வேண்டி திருப்பாற்கடலின் கரையருகே, பகவானைத் துதித்து எழுப்பி தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். அதனால், திருப்பாற்கடலை கூப்பாடு கேட்கும் உலகு' என்பர்.
மூன்றாவதாக அந்தர்யாமி:  அந்தர்யாமி என்பது உள்ளிருந்து செயலாற்றுவது இயக்குவது ஆகும். இது நமக்குள்ளேயே கட்டைவிரல் அளவே இருக்கும் ரூபம். யோக சாதனையால் மட்டுமே காண இயலும்.
   அந்த பரவாஸுதேவன், மும்மூர்த்திகளில் படைக்கும் தொழிலைச்  செய்யும் பிரம்மனின் அந்தர்யாமியாக பிரத்யும்னனாகவும், காக்கும் தொழிலைச் செய்யும் விஷ்ணுவின் அந்தர்யாமியாக அநிருத்தனாகவும், அழித்தல் தொழிலைச் செய்யும் சிவனின் அந்தர்யாமியாக சங்கர்ஷணனாகவும் இயக்குகிறார். அதுமட்டுமின்றி அனைத்து ஜீவன்களின் உள்ளிருந்து இயக்கும் சக்தியாக ஆத்மாவகவும் இருக்கிறார். ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா.!
அடுத்து நான்காவதாக விபவம், என்பது பகவான் எடுத்த பத்து   அவதாரங்களைக் குறிக்கும். அவதாரம் என்றால் இறங்கி வருதல் எனப்படும். உலக உயிர்களைக் காக்க பகவான் தானே இறங்கி வருவதே அவதாரம் ஆகும். இந்த அவதாரங்கள் நிகழ்ந்து முடிந்து விட்டபடியால் இந்த விபவ வடிவத்தையும் நம்மால் காண இயலாது.
கடைசியாக, ஐந்தாவது திருமேனியாக அர்ச்சை: 
சாமானியனுக்கும் உய்வைத் தரவேண்டி பேரின்ப நிலையை அளிக்கும் திருவுளம் கொண்டு அர்ச்சாவதாரமாக அதாவது, எல்லோரும் எளிதாக வணங்கி மகிழும் நிலையே அர்ச்சை.
இது பூவுலக ஆலயங்களில் உள்ள பகவானது திருவுருவச் சிலைகளே ஆகும். இதனையே சாதாரண ஜீவன்களாலும் கண்டு இன்புற முடியும். இதையே, ஏற்கனவே கோதை நாச்சியாரும் திருப்பாவையில்  பெருமானை கூடி இருந்து குளிரக் குளிரக் காணவேண்டும் என்கிறாள்.
  எம்பெருமானின் பாற்கடல் வாசம் பிரளய காலம் வரை தான். பிரளயம் நிகழ்ந்து முடிந்ததும் மீண்டும் பரமபதம் தான்.
இதில் மச்சம், கூர்மம், வராக அவதாரங்கள் அவசர அவசரமாக திருமாலால் பாற்கடலிலிருந்தே எடுக்கப்பட்டவை. இவற்றில் திருமகளான மஹாலட்சுமி தாயார் இணைந்து தோன்றவில்லை. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பின்னர், மஹாலட்சுமி தோன்றினாள். அப்பொழுது திருமால் திருமகளைத் திருமணம் செய்து கொண்டார்.
   இவ்வாறு கோதை மன்மதனிடம், எம்பெருமானின் ஐந்து திவ்ய ரூபங்களை நினைவு கூர்ந்து, இவ்வாறு தன்னால் தன் கணவனுக்கு தான் செய்த முந்தைய பணிகள் செய்து வாழ முடியாமல் போனால், அம்மாவென்று, அழுது அழுது அலறி தடுமாறி விழுவேன் என்கிறாள். 
எவ்வாறு ஒரு தலைவன், தன் நிலத்தை உழுது பாடுபடும் எருதிற்கு உணவளிக்காமல், நுகத்தடி கொண்டு பூட்டி கடுமையாக வேலை வாங்கி ஊட்டமளிக்காமல் இரக்கமின்றி அதைக் கொல்வதனால் தன் செல்வங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவானோ? அது போன்ற ஒரு பாவத்திற்கு நீயும் ஆளாவாய்!
ஆகவே மன்மதனே!  நீ என்னை என் பெருமானுடன் என்னை சேர்த்து வைப்பாய் என்று உன்னையே நம்பி உன் பெருமைகளைப் பரவச் செய்ய நான் கடுமையாக விரதமிருந்து பாடுபட்டதெல்லாம் பலனில்லாமல்,என்னைத் துடிக்க வைத்தால், சாஸ்திரங்கள் கூறுவது போல், உனது புண்ணீயங்கள் என்னைச் சேர்ந்து , எனது பாவங்களும் சாபங்களும் உன்னை வந்தடையும். அப்பொழுது தான் நீ உண்மையை அறிவாய் என கதறி அழுது வேண்டுகிறாள்
 இங்கே மன்மதனுக்கு விளக்குமுகமாக எம்பெருமானின் ஐந்து திவ்ய ரூபங்களின் பெருமைகளை பறை சாற்றும் கோதை நாச்சியார் புகழ் ஓங்குக! 

  ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

----------×-----------×-------------×-----------×-----------×---------

                        பாசுரம் 10

கருப்பு வில் மலர்க் கணைக் காம

வேளைக் கழலிணை பணிந்து அங்கோர் கரி அலற

மருப்பினை ஒசித்துப் புள் வாய்

பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடென்று

பொருப்பன்ன மாடம் பொலிந்து

தோன்றும் புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை

விருப்புடை இன்தமிழ் மாலை வல்லார் விண்ணவர்

கோன் அடி நண்ணுவரே.

ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் முதல் திருமொழியான "தையொரு திங்களின் பாசுர வரிசயின் கடைசி பத்தாவது பாடலான கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளை என்ற பாசுர விளக்கத்தினை இப்பொழுது காணலாம்.

ஆண்டாள் நாச்சியார், மலரம்பினையும் கரும்பு வில்லினையும் ஏந்தியிருக்கும் மன்மதனைப் பணிந்து, தன் மணாளனின் பெருமைகளை இன்னும் சிறப்புற எடுத்துக் கூறுகிறாள். 

கம்சன் கண்ணனையும், பலராமனையும் கொல்வதற்காக மதுராவிற்கு தந்திரமாக 'தனுர்யாகத்திற்க்காக' என்று வரவழைக்கிறான். கண்ணனும் பலராமனும் அங்கே மதுராவின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த வானவில் போன்ற தனுசு வில்லை மிக லாவகமாக எளிதாக முறித்து, மல்யுத்தம் நடக்கும் அரங்கத்திற்கு செல்கின்றனர். 

அப்பொழுது, அங்கே நின்று கொண்டிருந்த ஆயிரம் யானைகளின் பலத்தை தன்னகத்தே கொண்டிருந்த 'குவலயாபீடம்' என்ற யானையை, அதன் பாகன், கம்சனின் கட்டளைக்குப் பணிந்து கண்ணனைக் கொல்ல ஏவுகிறான். கம்சனின் வஞ்சக எண்ணத்தை ஏற்கனவே கண்ணன் அறிந்தவன் ஆகையால், யானைக்கு பலவிதமாக போக்கு காட்டி நிலைகுலைய வைத்து, அந்த யானையின் பெருமையாகக் கருதப்பட்ட 'மருப்பு' எனும் அதன் தந்தத்தை ஒடித்து அதற்கு முக்தியை அளித்தான்.

அங்ஙனமே, கம்சனால் கண்ணனைக் கொல்ல ஏவப்பட்ட கொக்கு வடிவில் வந்த பகாசுரனின் பெருமையாகக் கருதப்பட்ட, அதன் அலகினை பிளந்து கொன்றவன். இவ்வாறு பயங்கரமான பகைவர்களையும், நிமிட நேரத்தில் எளிதாக தன் பலங்காட்டி வெற்றி கொண்டவன் என பெருமை பேசியவள், 

அது மட்டுமல்லாது தன் நாயகனான கண்ணன் பழி பாவத்திற்க்கும் அஞ்சுபவன். அதாவது, சத்ரஜித எனும் அரசன் கண்ணனை விட தன் புகழ் ஓங்கியிருக்க வேண்டும் என்பதற்காக, சூரிய தேவனைக் குறித்து தவம் செய்து, நம் மனதில் நினைத்த மாத்திரத்தில் செயல்படுத்தக்கூடிய  அற்புத 'சியமந்தகமணியை' பெற்றுக் கொள்கிறான். ஆனால், அதை நற்செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். தீய எண்ணத்துடன் அந்த மணியைக் கையாண்டால், அது அவருக்கே தீங்காக அமையும். சத்ரஜித்தின் தம்பி தீய எண்ணத்துடன், தன் அண்ணனிடமிருந்துஅந்த மணியைப் பெற்று அணிந்து கொண்டு, வேட்டைக்குச் சென்றான். இதனால், அங்கு சிங்கத்திற்கு இரையானான். ஆனால் கண்ணன் தான், அந்த மணிக்காக ஆசைப்பட்டு தன் தம்பியைக் கொன்றுவிட்டான் என சத்ரஜித் பழி சுமத்தினான். இப்பழியினை துடைக்கும் பொருட்டு,கண்ணன் மணியைத் தேடி காட்டுக்குச் செல்ல, அந்த சிங்கத்தைக் கொன்று ஜாம்பவான் கரடி அதை எடுத்துச் சென்றதை அறிந்து, ஜாம்பவானை வென்று, அந்த மணியை மீட்டு, சத்ரஜித்திடம் ஒப்படைக்க, தான் கண்ணன் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சியை எண்ணி வெட்கித்து, அதற்கு பிராயசித்தமாக தன் மகளான 'சத்யபாமாவையும்' திருமணம் செய்து தருகிறான். 

அப்படிப்பட்ட "மணிவண்ணற்கு என்னை வகுத்திடென்று" நினைவு கூறுகிறாள். 

சரியான கள்ளி! என்றே ஆச்சரிய உணர்வு தான் என்னுள் ஏற்படுத்தியது.

ஆம்! பூமித்தாய் தானே சத்யபாமாவாக அவதரித்தாள். அதனாலேயே மன்மதனிடம் இந்தக் கடைசிப் பாடலில் தனக்கு கண்ணனிடத்தில் இருக்கும் உரிமையை  நிலைநாட்டும் விதமாக தான் ஏற்கனவே கிருஷ்ணாவதாரத்தில், அவர் கரம் பற்றியவள்.  என்பதை மன்மதனுக்கு உணர்த்துவதாகவே பட்டது.

இப்படி த்வாபர யுகத்தில் கண்ணனின் மனைவியாக, சத்யபாமாவாக அவதரித்த பூமித்தாய், இந்த கலியுகத்தில் மலைகளைப் போன்று மாடங்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரின் தலைவனான விட்டுச்சித்தனான 'பெரியாழ்வாரின்' மகளாக 'ஆண்டாள்' எனும் திரு நாமத்துடன்  விளங்குகிறாள். இன்னும் சொல்லப்போனால், வராக அவதாரம், வாமன அவதாரம் என்று எங்களின் பந்தம் இன்று நேற்றல்ல! மன்மதனே! யுகம் யுகமாகத் தொடர்கிறது என்று கூறுவது போல் உள்ளது.

புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை விருப்புடை இன்தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே. என்று முடிக்கிறாள்.

எப்பொழுதும் திருமாலையே நினைத்திருக்கும் காரணத்தால் பெரியாழ்வாருக்கு 'விஷ்ணுசித்தன்' என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. அப்படிப்பட்ட பெரியாழ்வாரின் மகளாக அவரிடம் கண்ணனின் பெருமைகளைக் கேட்டே வளர்ந்த ஆண்டாள், அவரைக் காட்டிலும் ஒருபடி மேலே சென்று கண்ணனைத் தன் மணாளனாகவே வரித்துக் கொண்டதில் வியப்பு! என்ன இருக்கமுடியும்.

இதில் கோதை நாச்சியாரின் உன்னதமான உயர்ந்த பண்புகளைக் கண்டிப்பாக கூறியே ஆகவேண்டும்.

முதலாவதாக விட்டுச்சித்தன் கோதை என்றே தன்னை அடையாளப்படுத்துகிறாள், அதன் உள் அர்த்தம் என்னவெனில், என்ன தான்! பெண்கள் தன் கணவனிடத்தில் மிகுந்த காதல் கொண்டிருந்தாலும், அவர்கள் மனதில் தந்தைக்கே முதலிடம் இருக்கும். இங்கே விட்டுச்சித்தனாகிய பெரியாழ்வார் கோதைக்கு தந்தையும் குருவாகவும் விளங்கியவர். அல்லவா?!. அதனால் இங்கே ஆண்டாளின் தன் தந்தையின் மேல் கொண்டிருக்கும் பாசத்தையும், குரு பக்தியையும் ஒருங்கே ! விட்டுச்சித்தன் கோதை என்பதன் மூலம் வெளிப்படுத்துகின்றாள்.

இரண்டாவதாக, கண்ணனின் நிறத்தினை நினைவூட்டும் கரும்புவில், மலர்க் கணைகளை தாங்கியிருப்பவன் என்பதால் தன் நாயகனான கண்ணனைவிட சிறிய தெய்வம் மன்மதன், ஆயினும் தன்னை கண்ணனிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறாள். அதாவது, சிறியோரையும் எளியோரையும் மதிக்கும் பாங்கு புலப்படுகிறது.

அடுத்து, தன் விருப்பமாகப் பாடிய இப்பாசுரங்களை பாடினாலே போதும். அவர்களுக்கு தேவர்களின் தலைவனான திருமாலின் திருவடியினை எளிதாக அடையும் பேற்றினைப் பெறுவார்கள் என்கிறாள். பொதுவாக, நம் இயல்பு வாழ்க்கையிலேயே, ஒருவன் தன் தாயிடம் அம்மா உனக்கு என்னவேண்டும் என்று கேட்டால், எனக்கு என்ன? நீ எந்த குறைவும் இல்லாமல் நலமாக உயர்வொடு இருந்தாலே எனக்கு நிம்மதி என்பாள் அல்லவா!. அதுபோல்,

கோதை நாச்சியார் தன் குழந்தைகளான நமக்காகவே நாம் உய்யவேண்டும் என்பதற்காக தன் கணவனைப் பிரிந்து, இம்மண்ணுலகில் உழன்று, பாடிய இப்பாசுரங்களை நாம் இசைத்தாலே போதும்! உனக்கு முக்தி நிச்சயம் என்கிறாள். 

சென்ற 9 ஆவது பாசுரத்தில் எம்பெருமானின் ஐந்து திவ்ய ரூபங்களை விளக்கினாள் அல்லவா! அந்த ஐந்து ரூபங்களில் உயர்ந்ததும் முதன்மையுமான பரமபதத்தையே  அதாவது, எம்பெருமானின் திருவடிகளை அடையும் முக்தியை தரவல்லது என்றால் அது நாச்சியாரது  கருணையுள்ளத்தை வெளிப்படுத்துகிறது. எவ்வளவு அழகாக ஒவ்வொரு நிகழ்வையும் எளிமையாகவும் பாசுரமாக கோர்த்துக் கொடுத்திருக்கிறாள் என்ற, வியப்பில் இருந்து நம்மால் மீளவே இயலவில்லை.

ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

----------×---------×-----------×---------------×-----------×-----------×----- 

           முதலாம் திருமொழி முற்றிற்று


No comments:

Post a Comment