Monday 2 October 2023

காகபுஜண்ட சித்தர்.

 



ஐநூறு வருடங்களுக்கு ஒருமுறை காட்சி தரும் இந்த காகபுஜண்ட சித்தர் மிக மிகச் சிறந்த சிவபக்தர். இவரது பிறப்பை பற்றி பல்வேறுவித கதைகள் கூறப்பட்டாலும் காகபுஜண்டர் சிவபெருமான் ஜடாமுடி மகுடத்தை அலங்கரிக்கும் சந்திரனின் பதினாறு கலைகளில்  ஒரு கலையின் மூலம் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நினைத்த நேரத்தில் காகமாக வடிவெடுக்கக் கூடியவர். ஆதலால் காகபுஜண்டர் என அழைக்கப்பட்டார். 


 இவரது பக்தியின் பெருமையை ஒருமுறை சிவபெருமான் கருடனிடம், கல்ப பிரளய காலத்தில் இவ்வுலகம் அழியும் போது, அந்தந்த கல்பத்திற்கு உரிய பிரம்மன் கூட அழிந்து விடுவார். இப்படி எத்தனை கல்ப பிரளயத்திலும் அழியாதவன் இந்த எனது பரமபக்தனான "காகபுஜண்டன்" என்று எடுத்துரைத்தார்.  இப்படியான பல கல்ப பிரளய காலத்தை உச்சியில் இருந்து பார்த்தவர் இந்த காகபுஜண்டர்.


     இதனைக் கேட்டு அதிசயம் அடைந்த கருடன், அவரைக் காண விழைந்தது. ஆனால் தீவிர சிவபக்தரான இவர் திருமாலை வணங்க மாட்டார். அவரது அடியார்களைக் கூட மதிக்கமாட்டார். இவரது இத்தகைய போக்கில் அதிருப்தி அடைந்த காகபுஜண்டரின் குருநாதர் அவரை கடுமையாக கண்டித்தார். அனைத்து கடவுளர்களையும் வணங்குவதில் தவறொன்றுமில்லை என அறிவுரை கூறினார்.


பதில் ஏதும் கூறாமல் அமைதியாக அங்கிருந்து அகன்ற காகபுஜண்டர், நேராக உஜ்ஜயினியில்  கோயில் கொண்டுள்ள ஈசன் "மகாகாலரை" வழிபாடு செய்யலானார். அப்பொழுது அவரது குருநாதரும் அத்திருக்கோயிலுக்கு வரவும், அவர் தன்னை விஷ்ணுவை வழிபட அறிவுறுத்தியதால், கோபம் கொண்டு குருவுக்கு எழுந்து நின்று உகந்த மரியாதை அளிக்காததோடு அலட்சியமும் செய்தார். 


பெருந்தன்மை கொண்ட குருவோ அவரது இச்செயலை எளிதாக எடுத்துக் கொண்டார். 


      ஆனால், தவறை யார் செய்தாலும் பொறுக்காத ஈசன் வெகுண்டு, காகபுஜண்டா! என அசரீரியாக கர்ஜித்து, குருவின் கட்டளையை ஏற்காததும்,  அவரை அவமதிப்பதும் என்னையே அவமதிப்பது போல் தான்! நீ எனது பரமபக்தன் ஆயினும் தண்டனைக்குரியவனே!!. குருவை அவமதிப்பவன் என் பக்தனாக தகுதியில்லாதவன்.


அதனால் நீ மரணமில்லா பெருவாழ்வு கொண்டவன் ஆயினும் ஆயிரம் பிறவிகள் எடுத்து அல்லலுறுவாய்!!! என சாபம் அளித்தார். 


சிவனாரின் கோபத்தைக் கண்டு நடுநடுங்கினார் காகபுஜண்டர். இதனைக் கேட்ட குருவோ பதறி தன் உன்னத சீடனுக்காக மன்றாடி வேண்டிட, பூவுலக மாயை நிறைந்த அத்துனபங்கள் அவரை பாதிக்காது.அதோடு அவரது நித்ய சிரஞ்சீவி வாசமும் மாறாது என்ற விமோசனமும் அளித்தார் ஈசன். 


  அவ்வண்ணமே, 999 பிறவிகள் எடுத்து சிவபக்தனாகவே விளங்கிய நிலையில், கடைசி ஆயிரமாவது பிறவியில், முற்பிறவியின் பாபத்தை போக்க வேண்டி " ராமபக்தனாக" மாறி அவரை காண தவம் செய்தார். இக் கடைசி பிறவியில் அவர் பற்பல உலகங்களுக்கும் சென்று அதிசயிக்கத்தக்க அற்புதங்களை நிகழ்த்தினார். அதோடு, சிவனருளால் " அவிட்டம்" நக்ஷத்திரமாக மாறியதாகவும் கூறப்படுகிறது. 


கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? அது எத்தன்மையது? என்பது போன்ற விளக்கங்கஙகள் உலகின் தட்பவெப்ப நிலை, பற்பல முக்கிய மூலிகைகளைக் கொண்டு நிகழ்த்திய அற்புதங்கள், அதன் பலன்கள் என பலவற்றையும் அவர்தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


 ஆக இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும், பலப்பல யுகங்களின் காலச்சக்கர சுழற்சியைக் கண்ட இந்த ஞானச்சக்கரமான காக்கை முனியான புஜண்டரின் பொற்பாதத்தை பணிந்து வணங்கிட வேண்டியது வேண்டியபடி அருளி தீவினைகளை நல்வினையாக்கி நம் தலை எழுத்தையே மாற்றி அமைப்பார் என்பது திண்ணம். 



No comments:

Post a Comment